ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
"தூக்கு தண்டனை தேவை இல்லை" என்று நீதிபதி தாமஸ் கூறினார். அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது:- "நளினிக்கும், முருகனுக்கும்.குழந்தை இருக்கிறது. பெற்றோரை இழந்து அந்த குழந்தை அனாதை ஆகிவிடக்கூடாது. தந்தையை தூக்கில் போடுவதால் தாய்க்கும் அதே தண்டனை அவசியமில்லை.
நளினி படித்த பெண். ராஜீவ் காந்தி கொலை சதியில் அவள் அங்கம் வகித்து இருந்தாலும் முக்கிய நபராக பங்கு வகிக்கவில்லை. இலங்கையில் இந்திய அமைதிப்படை கொடுமை செய்ததாக கூறி நளினியை முருகன் மூளை சலவை செய்துள்ளான்.
அதை உண்மை என்று நம்பி, கொலை சதிக்கு அவள் பங்கு வகித்து இருக்கிறாள். தனது தம்பியிடம் பேசும்போது, "இப்படி ஒரு ஆபத்தான சதியை நான் உணராமல் போய்விட்டேன். இனிமேல் இந்த கும்பலை விட்டு விலகமுடியாது.
அதற்கான காலம் கடந்து விட்டது" என்று கூறி இருக்கிறாள். இதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தபோது அவளுக்கு தூக்கு தண்டனை தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறேன்." இவ்வாறு நீதிபதி தாமஸ் கூறி உள்ளார். மற்ற இரு நீதிபதிகளும் இதற்கு நேர் மாறாக தீர்ப்பு கூறினார்கள்.
"நமது நாட்டின் முக்கியமான தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி தானாக முன்வந்து பங்கு வகித்து இருக்கிறாள். அவளுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கா விட்டால் அது நீதிக்கு விரோதமானது" என்று அவர்கள் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
மெஜாரிட்டி தீர்ப்பின்படி, நளினியின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. நளினியை தவிர இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த சாந்தி, செல்வலட்சுமி, ஆதிரை, பத்மா (நளினியின் தாய்) ஆகிய 4 பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு
8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீர்ப்பு கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை செய்யப்பட்ட 19 பேர் மீதும் தடா சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
ஆனால் ஒருசிலர் மீது தொலை தொடர்பு சட்டம், பாஸ்போர்ட் சட்டம், ஆயுத தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.
இந்த குற்றங்களுக்காக தடா கோர்ட்டு வழங்கிய தண்டனை காலத்தை அவர்கள் ஏற்கனவே அனுபவித்து முடித்து இருந்தால் உடனடியாக அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஜெயில் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி 19 பேரும் உடனே விடுதலை செய்யப்பட்டனர்.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்பட 4 பேரும், கவர்னரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். கவர்னர் பாத்திமா பீவி, இந்த கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.
கவர்னர் தனது முடிவை அறிவிக்கும் முன்பு அரசின் கருத்தை கேட்கவேண்டும் என்றும், அமைச்சரவையிடம் எந்தவித கருத்தையும் கவர்னர் கேட்கவில்லை என்றும் 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
பின்னர் இந்த கருணை மனுவை தமிழக அமைச்சரவை பரிசீலனை செய்து நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று பரிந்துரை செய்தது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியாவும் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கவர்னர் ஆயுள் தண்டனையாக குறைத்தார். மீதி 3 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனுவை தாக்கல் செய்தனர். தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுக்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன. நளினியும், முருகனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். கைது செய்யப்படும்போது, நளினி கர்ப்பிணியாக இருந்தாள்.
1992-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந்தேதி செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு "ஹரித்ரா" என்று பெயர் சூட்டப்பட்டது.
2 ஆண்டுகள் நளினியுடன் இருந்த அந்த குழந்தை, பிறகு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பப்பட்டது. இப்போது அந்த சிறுமி, சுவிட்சர்லாந்தில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்து வருகிறாள்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.