Prabhushankar T Gunalan Profile picture
IAS Officer, Tamilnadu/ Executive Director @CHN_Metro_Water/ Medico~Public Health~Teacher~Change Agent(மாற்றம்,not சில்லறை)/PGI Chandigarh Alumnus/ மதுரைக்காரன்

Nov 6, 2021, 25 tweets

இருளரும் இந்திய ஆட்சிப் பணியும் -
அதிகாரத்துவத்தின் 'ஜெய் பீம்' முழக்கம்!
திரு.@Suriya_offl நடித்த '#ஜெய்பீம்' திரைப்படம், நம் சமூகமும் அதிகாரத்துவமும் இந்த மண்ணின் பூர்வக்குடி மக்களுக்கு இழைக்கும் அநீதி குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளது. அதை கண்டிப்பாக மறுக்க இயலாது. (1/n)

அதிகாரத்துவம் முற்றிலும் மோசமானதல்ல, இந்நிலையை மாற்ற தொடர்ந்து முயன்று வருகிறது என்பதை பதிவு செய்வது அவசியமாகிறது.அதற்கு சான்றாக இருளர் மக்களுடனான எனது அனுபவங்களை பகிர விழைகிறேன்.இது கண்டிப்பாக தற்பெருமை பறைசாற்றும் பதிவு அல்ல. இது அதிகாரத்துவத்தின் 'ஜெய்பீம்' முழக்கமாகும். (2/n)

இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தமிழ்நாட்டில் நான் முதன்முதலில் சார் ஆட்சியராக திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கோட்டத்தில்1.5 ஆண்டுகளும்,விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டத்தில் 5 மாதங்களும் பணியாற்றினேன். இவ்விரு பகுதிகளிலும் இருளர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். (3/n)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இருளருக்கு ஏற்படுத்தியுள்ள சமூக நீதியை நிலைநாட்ட ST சமூகச் சான்று அவசியமானதாகும்.அதை வழங்கும் அதிகாரியாக நாங்கள் ஒவ்வொரு இருப்பிடமாக சென்று செய்யாரில் 3000 பேருக்கும் திண்டிவனத்தில் 2300 பேருக்கும் வருவாய்த்துறையால் ST சான்று வழங்கப்பட்டது. (4/n)

இருளர் அதிகளவில் கொத்தடிமைகளாக செங்கள்சூலைகளிலும் மரம் வெட்டுவதற்கும் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனது பணிக்காலத்தில் 25 நபர்களை விடுவித்துள்ளேன். எனினும் போதிய அடிப்படை வசதிகளும், அரசுநலத்திட்ட உதவிகளும் சரிவர கிடைக்காததால் மீண்டும் அதே தொழிலிற்கு திரும்பும் நிலை ஏற்படுகிறது. (5/n)

இதற்கு தீர்வுகாணும் நோக்கில் வந்தவாசி அருகிலுள்ள மீசனல்லூர் கிராமத்தில் 'அப்துல்கலாம்புரம்' என்று இருளர்களுக்கான Smart Colony-பசுமை வீடுகள்,சாலைகள்,மழைநீர் வடிகால்,குடிநீர், சமுதாய கூடம்,குழந்தைகள் மையம், சிறுவர் பூங்கா,பால் பண்ணை, செங்கல் சூளை ஆகியவற்றை கொண்டு உருவாக்கினோம்(6/n)

நான் பணியில் சேர்ந்த இரண்டாம் நாளான 3.12.2015 அன்றே இத்திட்டத்திற்கு அடித்தளம் இடப்பட்டது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் பெருமளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அன்று நான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த  ஒரு நிவாரண மையத்தில் ஆய்வு மேற்கொண்டேன். (7/n)

அங்கிருந்த இருளர் மக்கள் கேட்டுக்கொண்டதால் அவர்களின் குடிசைகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.ஏரிக்கரையில் உள்ளதால் அவர்களின் குடிசைகள் நீரில் முழுவதுமாக மூழ்கியிருந்தன.அவர்கள் தங்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை மட்டும் வழங்க கோரினர்.அவர்களின் நிலைமை என்னை மிகவும் உலுக்கியது.(8/n)

நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியரிடம் அறிவுறுத்தி விட்டு அலுவலகம் திரும்பினேன்.அன்றே அப்துல்கலாம்புரம் குறித்து திட்டம் தீட்டி, நாளடைவில் செம்மைப்படுத்தினேன்.சார் ஆட்சியர் பதவி மாவட்ட ஆட்சியர் போல் அன்றி வருவாய்த்துறை பதவியாகும். வளர்ச்சி பணிகளை நேரடியாக மேற்கொள்ள இயலாது. (9/n)

இருப்பினும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நான் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை ஒன்றிணைத்து குழு அமைத்தேன். அவர்களின் பணிச்சுமை அதிகரிக்காத வகையில் அவர்களின் தினசரி பணியுடன் இந்த திட்டம் இணைக்கப்பட்டது. (10/n)

எடுத்துக்காட்டாக ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வீட்டுமனை வழங்குதல்,  வட்டாட்சியரின் பணியாகும். இத்திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கான பணி இலக்கை அடைய இயலும் என கீழ்நிலை அலுவலர்களை திட்டத்திற்கு பணியாற்ற வைத்தோம். ஆனால் அனைவரும் நாளடைவில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.(11/n)

மீசநல்லூர் கிராமத்தில் உள்ள 10 ஏக்கர் பரப்பளவில் ஒரு கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் தீர்வை ஏற்படாத தரிசு நிலமாக வகைமாற்றம் செய்யப்பட்டு முதல்கட்டமாக 43 இருளர் குடும்பங்களுக்கு தலா 2.75 சென்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. (12/n)

திட்டத்திற்கான நிதியை பெற நானே பல முயற்சிகளை மேற்கொண்டேன்.ஒன்றிய அரசின் பழங்குடி நலத்துறையின் PVTG திட்டத்தில் 1.59 கோடி ரூபாய் நிதி கோரி நேரடியாக விண்ணப்பித்தேன்.திட்டம் குறித்து துறையின் இணைச்செயலருடன் நேரில் விவரித்து திட்ட அனுமதி குழுவின் அனுமதியை 2 மாதங்களில் பெற்றேன்.(13/n)

நகர்ப்புறங்களில் உள்ள Gated Communities போன்றே இந்த இருளர் ஸ்மார்ட் காலனி, QUN Designs என்ற நிறுவனத்தால் இலவசமாக  வடிவமைக்கப்பட்டது.தலா 2.5 லட்சம் ரூபாய் செலவில் சூரிய சக்தி  பொருந்திய தனி வீடுகள் கட்டப்பட்டன. மேலும் SBM திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டன. (14/n)

மேலும் சிமிண்ட் சாலைகள், மழை நீர்வடிகால் வசதி, குடிநீர் மேல்நிலை தேக்கத்தொட்டி, குழந்தைகள் மையம், சமுதாய கூடம், சிறுவர் பூங்கா, மாட்டுக் கொட்டகை, பால் பண்ணை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கட்டப்பட்டன. (15/n)

கூட்டுறவு பால் சங்கம்  தொடங்கப்பட்டு ஆவின் நிறுவனத்துடன் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வீட்டிற்கு தலா 2 கறவை மாடுகள் வழங்கப்பட்டு பராமரிக்கும் பயிற்சி கால்நடைத்துறையால் வழங்கப்பட்டது.அசோலா தீவனம் வளர்க்கவும், MGNREGS திட்டத்தின் கீழ் மாட்டு கொட்டகை அமைத்து தரப்பட்டது.(16/n)

பழங்குடி மக்களுக்கு தோள் கொடுக்கும் வகையிலும் சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் International Justice Mission என்ற தன்னார்வ அமைப்பும் Madras Christian College-Social Work துறையும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த திட்டம் வெற்றிபெற அவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.(17/n)

ஆரம்பம் முதலே திட்டத்தை செயல்படுத்த பல்வேறு சவால்கள் இருந்தன.பயனாளிகள் தேர்வு வெளிப்படையாக நடந்ததால் எவ்வித சர்ச்சையும் எழவில்லை.தரமான கட்டமைப்பிற்காக அரசு நிறுவனமான 'கட்டிட மையம்' மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.மணல் உட்பட கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு மிகவும் இருந்தது (18/n)

பல ஊர்களில் வசித்து வந்த இருளர்களை ஒரே இடத்தில் குடியமர்த்தியதால் பழங்குடியினரின் Clan Mentality காரணமாக அடிக்கடி அவர்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டன. IJM மற்றும் MCC யின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மூலம் நாளடைவில் சீராகி ஒற்றுமை ஏற்பட்டது. (19/n)

இத்திட்டம் வெற்றி அடைந்ததால் அடுத்த கட்டமாக 100 வீடுகள் கொண்ட திட்டத்தை முன்மொழிந்தேன். மீண்டும் PVTG திட்டத்தில் 6.91 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்றேன். இம்முறை செங்கல் சூளை மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற்றன. (20/n)

இருளர் நலன் குறித்து நான் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வலியுறுத்தினேன். அதன் விளைவாக கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வுக்கான மாநில செயல்திட்டத்தில் மீசனல்லூர் திட்டம் முன்மாதிரியாக சேர்க்கப்பட்டது. (21/n)

எனது முயற்சிகளுக்கு மகராஷ்டிர மாநில பெண்கள் ஆணையம் "Public Justice Champion" விருது வழங்கி கௌரவித்தது. மாண்புமிகு கோவா மாநில ஆளுநர் அதை வழங்கினார். (22/n)

இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. நாடு முழுவதும் பல்வேறு அதிகாரிகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருகிறார்கள். அவை தாமதமானதாகவும் அளவில் சிறியவையாகவும் தோன்றலாம், ஆனால் கண்டிப்பாக நேர்மையானவையாகும். (23/n)

இந்த நீண்ட நெடிய பயணத்தின் முடிவில் நிச்சயம் ஒளி பிறக்கும், இருளர் வாழ்வில் உள்ள இருள் நீங்கும். அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கடமையாகும். இதுவே எங்களின் 'ஜெய் பீம்' முழக்கம். (24/24)

மீசநல்லூர் இருளர் Smart Colony - அப்துல்கலாம்புரம் க்கான Google Maps Location
maps.app.goo.gl/chV3QfV6LXDAcA…

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling