அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Feb 25, 2022, 17 tweets

#ஶ்ரீஆதிசங்கரர் துதி
ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் | |
திருவள்ளூர் அருகே #திருப்பாச்சூர் என்ற இடத்திலுள்ளது அருள்மிகு #தங்காதலி_வாசீஸ்வரர் என்ற மிகப் பழமையான கோவில். இந்த கோவிலின் வரலாறு ஆச்சர்யங்கள் நிறைந்தவை. இக்கோவிலில்

ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாக வரலாறு. தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி, சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள். இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாக

பிறக்கும்படி செய்தார் சிவன். பூலோகத்தில் சிவபெருமானை திருமணம் முடிக்க எண்ணி, வேண்டி தவம் செய்த இடமே திருப்பாச்சூர். தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப் படுகிறார். இந்த அன்னையை வழிபடும் தம்பதியரிடையே ஒற்றுமை கூடி அன்னியோன்யம்

அதிகரிக்கும். ஒரு சமயம் திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். இதனால் வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்து விட்டது. அத்தோடு ஒரு சபையை அமைத்த விநாயகர், ‘தம்மை வணங்காமல் சென்றது ஏன்?’ என்று சிவபெருமானிடம் விசாரணை செய்தார். அதனடிப்படையில்

இவ்வாலயத்தில் 11 விநாயகர்கள் வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ இருக்கிறது. இந்த ஏகாதச விநாயகர் சபை வழிபாடு மிகுந்த பலனளிக்கக்கூடியது. மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான்

கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன் தீர்ந்ததாக ஐதீகம். இக்கோவிலில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளே தான் சிவன் சுயம்புவாகத் தோன்றினார். இந்த ஊரில் சிறு மன்னன் குறும்பன் ஒழுங்காக வரி கட்ட தவறியதால் கரிகால் அரசன் பெரும் படையெடுத்தான்.

ஆனால் போரில் சிறு மன்னனை வெற்றி பெற செய்வதற்காக காளி வானில் இருந்து அம்புமழை பொழிந்ததால் சோழப் பெரும்படைகள் அழிந்தன. கரிகாலன் சிவனை வேண்டினான். போரில் கரிகாலனை வெற்றி பெறச் செய்வதற்காக காளியை தனியே விநாயகர் மூலம் தங்கச் சங்கிலி கொண்டு கட்டிவைக்க வைத்தார் சிவபெருமான். அந்தக்

காளியின் பெயர் சொர்ண காளி, தனி சந்நதி உள்ளது. உன்னை இங்கு வரவழைக்கவே போரில் உன்னை ஜெயிக்க வைத்தேன் என கரிகாலனிடம் சிவன் அசரீரியாகக் கூற, அப்படி சொன்ன சிவன் எங்கே உள்ளார் என்று மூங்கில் காட்டுக்குள் தேடியலைந்தான். எங்கு தேடியும் ஈசன் தென்படவில்லை. அங்கிருந்த மூங்கில் புதருக்குள்

வசித்த காட்டுவாசிகளிடம் கேட்டான். அவர்கள், ‘சிவலிங்கம் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு புதருக்குள் பசு மாடு செல்லும். அப்போது மூங்கில் மரங்கள் விலகி நிற்கும். மாடு திரும்பிச் சென்றதும் மூங்கில் மரங்கள் தானாக மூடிவிடும்’ என்றுகூறி அந்த புதரைக் காட்டினர். அங்கு சென்று

மூங்கில் வெட்ட பயன்படுத்தப்படும் ‘வாசி’ என்ற அரிவாளால் வெட்டிக் கொண்டே இருந்தான் மன்னன். அப்போதும் லிங்கத்தைக் காணாது சலிப்படைந்த கரிகாலன் ஆவேசமாக ஒரு மூங்கில் மரத்தை வெட்டினான். திடீரென ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. திடுக்கிட்டு அருகில் சென்று பார்த்தான். சுயம்புலிங்கம்

நெற்றியில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உள்ளம் உருக ஈசனிடம் மன்னிப்புக் கேட்டதும் ரத்தம் வடிவது நின்றது. இறைவனின் கருணைக்கு தாம் முற்றிலும் ஆட்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த கரிகாலன், அவ்விடத்திலேயே ஈசனுக்கு ஆலயம் நிர்மாணித்தான். இத்திருத்தலத்தில் அம்பாள் தினமும்

ஈசனுக்கு அபிஷேகம்செய்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே பிரதோஷத்தின் போதும், இதர உற்சவங்களின்போதும் முதலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறும். அம்பாள் சிவனுக்கு வலப்புறம் உள்ளதால், இத்திருக்கோவில் திருமணத்தடை நீக்கும் சேத்திரமாக விளங்குகிறது. இதை

அடுத்து 11 விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ உள்ளது. அருகில் பெருமாளின் வினைதீர்த்த ஈஸ்வரனும் எழுந்தருளியுள்ளார். மூன்று சன்னிதிகளையும் கடந்து சென்று சுயம்புவாய் வீற்றிருக்கும் திருப்பாசீஸ்வரரை வழிபடலாம். கஜ பிருஷ்ட விமானம் கொண்ட கருவறையில், சதுரவடிவ பீடத்திலுள்ள

சுயம்புலிங்கத்தின் தலையில் வெட்டுப்பட்ட தடம் உள்ளதைக் காணலாம். சிவலிங்கத்தின் மேற்பகுதி சற்று இடப்புறத்தில் நகர்ந்த நிலையில் உள்ளது. காயம்பட்ட லிங்கம் என்பதால் தொட்டுப் பூஜை செய்வதில்லை. அலங்காரங்கள் பாவனையாகத் தான் நடக்கின்றன. இம்மூர்த்தியைத் ‘தீண்டாத் திருமேனி’ என்றும்

அழைக்கிறார்கள். இவ்வாலயத்தில் ஐயாயிரம் வருட பழமையான மூங்கில் மரம், தல விருட்சமாக உள்ளது. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. வெளிப் பிரகாரத்தில், வடமேற்கில் சொர்ண காளி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அருகே வசந்த மண்டபம் செல்லும்வழியில் இரட்டைக்

காளியும், மண்டபத்தினுள் மிகப்பெரிய குபேரலிங்கமும் உள்ளது. இக்கோவிலின் சொர்ணபைரவர் தெற்கு பார்த்து இருப்பார். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம் இது. இக்கோவிலில் சிவராத்திரி அன்று மட்டும் இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்துப்

பூஜை செய்கின்றனர். இந்த பூஜையை தரிசனம் செய்தால் ஆணவம், பொய் சொல்லும் குணம் நீங்கிவிடும். இது ஒரு கேது ஸ்தலமும் கூட. மிக மிக அருமையான கோவில். தெய்வமில்லை என்பவர்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக தெய்வத்தை காணலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🏻
ஓம் நமசிவாய🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling