கண்வ நதிக்கரையில் அமைந்துள்ள தொட்டா மல்லூர் ஸ்ரீ அப்ரமேயசுவாமி மற்றும் தவழும் நவநீத கிருஷ்ணர் கோயில் (அம்பேகாலு நவநீத கிருஷ்ணா) மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள பிரதான தெய்வம் ஶ்ரீ அப்ரமேயசுவாமி உடனுறை அரவிந்தவல்லி தாயார். அப்ரமேய பெருமாள் நான்கு கரங்களில் சங்கம், சக்கரம், கதை,
பத்மத்துடன் அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் உள்ள சன்னிதிகள் ஸ்ரீ வைகுண்ட நாராயணசுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி, ராமானுஜர் மற்றும் ஆழ்வார்கள். இக்கோவிலில் உள்ள குழந்தை கிருஷ்ணரின் வசீகரிக்கும் கண்கள், அழகான தோரணை நம் மனத்தை மயக்கும். நவநீத கிருஷ்ணரை முழு வெண்ணெய்
காப்புடன் அல்லது நகைகள், ஆபரணங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் கோலங்களில் தரிசிக்கலாம். பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிமீ தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா. அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் உள்ளது. புத்திர பாக்கியம் இல்லாதோர்
இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிடைத்ததும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன்
சமர்ப்பித்து மகிழ்கிறார்கள். கையில் வெண்ணெயுடன் தவழும் குழந்தை குருஷ்ணன் சன்னிதி இங்கு மட்டும் தான் உள்ளது. இங்குள்ள கருடனும் அழகு! ஶ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் கீர்த்தி அதிகம். ஶ்ரீ புரந்தரதாசர் ‘ஜகதோதாரண’ என்ற புகழ்பெற்ற கிருதியை இவரின் மேல் தான் இயற்றியுள்ளார்.
11ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் ராஜேந்திர சிம்மனால் கட்டப்பட்டது. கண்வ நதிப் படுகையில் அமைந்திருப்பதால் இவ்விடத்திற்கு முதலில் மணலூர் என்ற பெயர். பின் மருவி மல்லூர் என்று ஆகிவிட்டது. இந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம்,
பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடைபெறுகிறது. இன்றும் அர்த்தஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது. நாமும் வணங்கி நற்கதி அடைவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.