Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

Jun 11, 2022, 19 tweets

எழுதாத ஓலை....

ராதே கிருஷ்ணா...

துவாரகை அரண்மனையில், கண்ணன் அருகே அமர்ந்திருந்தார் உத்தவர்.

உத்தவர் மிகுந்த யோசனை செய்தவாறு இருந்தார் .

“உத்தவரே! என்ன யோசனை காரணம்
தெரிந்துகொள்ளலாமா?” என்றார் கிருஷ்ணர்.

“கிருஷ்ணா நானும் எத்தனையோ ஜபதபங்கள் செய்துவிட்டேன்.

என்னை எல்லோரும் ரிஷி என்றே அழைக்கிறார்கள். ஆனால், மகரிஷி என்ற பட்டம் மட்டும் இன்னும் எனக்குக் கிடைக்வில்லை. முனிவர்களிடையே நானும் ஒரு மகரிஷி என்ற அந்தஸ்தைப் பெற விரும்புகிறேன்” என்றார்.

“உத்தவரே! நான் வேறொரு விசயமாக உங்களோடு பேச இருந்தேன் அதற்குள் மகரிஷி பட்டம் பேச்சில் குறுக்கிட்டு விட்டது. என தூபம் போட்டார்.

மேலும் கிருஷ்ணர்

நான் அவசரமாக பிருந்தாவனத்தில் இருக்கும் ராதைக்கு ஒரு செய்தி அனுப்ப வேண்டும். நீங்கள் செய்தியைக் கொடுத்துவிட்டு வர இயலுமா?”

என்ன பேச்சு இது,
செய்தியைக் கொடு. இப்போதே தேரில் கிளம்புகிறேன் என்றார்
உத்தவர்

அருகிலிருந்த பேழையிலிருந்து ஒரு பனையோலையை எடுத்து, உத்தவரிடம் கொடுத்தார்.

ஜாக்கிரதையாக அந்த ஓலையை ராதையிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

உத்தவர் ஓலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். அதன் இருபுறங்களிலும் ஆராய்ந்தார். அதில் ஒரு செய்தியும் இல்லை! ஓர் எழுத்துக் கூட எழுதப்படவில்லை!

“ எழுதாத ஓலையில் உள்ள செய்தியைப் படிக்காமலே ராதை தெரிந்துகொள்வாள். நீங்கள் இந்த ஓலையை அவளிடம் கொடுத்தால் போதும்!”

“நீங்கள் ராதையிடம் ஓலையைக் கொடுக்கும்போது அதில் செய்தி எதுவும் தானாய்த் தோன்றாது! அப்போதும் இது வெறுமையாய்த்தான் இருக்கும். ஆனாலும் என் ராதைக்கு எழுதாத ஓலையை வாசிக்கத் தெரியும்”.

உத்தவர், செய்தி ஏதும் எழுதாத ஓலையில் உள்ள செய்தியை எடுத்துக் கொண்டு

பிருந்தாவனம் நோக்கித் தேரில் பயணமானார்.

தேரில் போகும்போது தான் உத்தவருக்கு அந்த எண்ணம் எழுந்தது. “செய்தியே இல்லாத ஓலையைக் கண்ணன் அனுப்பியுள்ளது பற்றி ராதாதேவி கவலை கொள்வாளோ? கண்ணன் தன்மேல் சரிவர அன்பு செலுத்தவில்லை என்று எண்ணுவாளோ?

ஒரு காதலன் தன் காதலிக்கு இரண்டுவரி கூட எழுதாமலா ஓலையை அனுப்புவது?

உண்மையிலேயே அன்னை ராதையின் பொருட்டாக உத்தவரின் உள்ளம் பாடாய்பட்டது

கண்ணன் எழுதியதுபோல் நாமே ஓரிரு வார்த்தைகள் எழுதி விட்டால்தான் என்ன?

நல்ல நோக்கத்தில் தானே இதைச் செய்கிறோம்? கண்ணன் இதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வான்”.

உத்தவர் எழுத்தாணியை எடுத்தார்.

“அன்பே ராதா! உன் நினைவு அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறது. அன்பன் கண்ணன்,” என்று எழுதினார்.

பிருந்தாவனத்தில் ராதையை கண்டு தன் வசமிருந்த ஓலையை ராதையிடம் கொடுத்தார்.

அதை படித்த ராதை கலகலவென்று சிரித்தாள்

ஏன் இப்படி எழுதி தந்தீர்கள் என கேட்டார்.

“தாயே! செய்தி எழுதாத ஓலையைப் பார்த்து உங்கள் மனம் வருந்தக் கூடாது என்றுதான் நானாக எழுதிச் சேர்த்தேன்.

மன்னிக்க வேண்டும். அதுசரி. இதைக் கண்ணன் எழுதவில்லை என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

எப்படிக் கண்டுபிடித்தேனா?

இதைக் கண்ணன் மட்டும் எழுதி அந்த மாயக்கண்ணன் என் நேரிலும் இருந்தால்,

நான் போடும் சண்டையில் ஓர் யுகப் பிரளயமே இங்கு தோன்றியிருக்கும்!

என்னை அடிக்கடி நினைத்துக் கொள்வதாக அல்லவா ஓலை தெரிவிக்கிறது?

அப்படியானால் அடிக்கடி மறப்பதால் அல்லவா அடிக்கடி நினைவு வருகிறது?

என்னைக் கண்ணன் மறக்க முடியுமா? மறக்க விடுவேனா நான்?

எப்போதும் கண்ணன் நினைவாகவே நான் இருப்பது மாதிரி, கண்ணனும் என் நினைவாகவே இருப்பதுதானே சரி?

கண்ணனையே நினைத்து நினைத்து நான் கண்ணனாகவும், என்னையே நினைத்து நினைத்து கண்ணன் ராதையாகவும் மாறினால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். எங்கள் அன்பு அத்தகையது”.

”உங்கள் மனம் எழுதப்படாத ஓலைபோல், பட்டம் பதவி போன்றவற்றில் பற்றில்லாமல் ஆகவேண்டும் என்பதையும்,

அதற்கான அறிவுரையை நான் உங்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் கண்ணன் அதன் மூலம் தெரிவிக்கிறார்.

உத்தவரே! ஏதோ துவாரகையில் இருக்கும் கண்ணனை பிருந்தாவனத்தில் இருக்கும் நான் பிரிந்துள்ளதால், பிரிவுத்துயர் என்னை வாட்டுவதாக நீங்கள் தவறாக நினைத்தல்லவோ இந்த வாக்கியத்தை எழுதினீர்?

நான் என்றும் கண்ணனைப் பிரிந்ததே இல்லை. என் உள்ளத்தில் கண்ணன் நிரந்தரமாய்க் குடியிருக்கிறான். என் உள்ளத்தின் உள்ளேயே எப்போதும் கண்ணனைக் குடிவைத்திருப்பதுதான் அவனை நான் என்றும் பிரியாமலிருக்கும் உத்தி.

கண்ணனுக்கு எழுப்பப்படும் கற்கோயில்களை விட,

அவன் மேல் அன்பு செலுத்துபவர்களின் உள்ளக் கோயில்களில் தான் அவன் அதிகம் மகிழ்வடைவான். உள்ள கோயில்களிலெல்லாம் உயர்ந்தது உள்ளக்கோயில் தான் உத்தவரே!

கண்ணனோடு இணை பிரியாமல் இருப்பது என்பது அப்படித்தான். வெறுமே கண்ணன் அருகே இருப்பதல்ல.

அந்த நிலை வந்துவிட்டால் பட்டங்களும் பதவிகளும் துச்சமாகிவிடும்!”

உத்தவர் நெகிழ்ச்சியுடன் ராதையின் பாதங்களில் தலைவைத்துப் பணிந்தார்.

தேர் துவாரகைக்குத் திரும்பியது.

உத்தவரின் முகத்தில் தென்பட்ட அசாத்தியமான ஒளி அவர் இறைவனுடன் இணைவது என்றால் என்ன என்று உணர்ந்துவிட்டார் என்பதைப் புலப்படுத்தியது.

கண்ணன், “வாருங்கள் மகரிஷி!” என அவரை வரவேற்றான்.

என்னை உத்தவரே என்றே கூப்பிடுங்கள்!

அதுபோதும். பட்டங்களைச் சுமக்க நான் விரும்பவில்லை. நீங்காமல் எப்போதும் என் நெஞ்சில் நீங்கள் இருக்கும் வரத்தைக் கொடுத்தால் அது மட்டும் போதும் எனக்கு!” என்ற உத்தவர் கண்ணனின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.

கண்ணனின் கரம் மகரிஷி உத்தவரை ஆசிர்வதித்தது.

#ராதே_கிருஷ்ணா

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling