#ஓதிமலை_முருகன்_கோவில் 3000 அடி உயரம் கொண்ட மலையில் அமைந்துள்ளது இரும்பறை (கோவை மாவட்டம்). அங்கிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் உள்ளது ஓதிமலை முருகன் கோவில். முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் மலைகளிலேயே மிக உயரமானதாகவும், செங்குத்தானதாகவும் இருப்பது இந்த மலை ஒன்றே. இந்த மலையில்
வீற்றிருக்கும் ஓதிமலையாண்டவரை காண, 1,800 படிகள் எறிச்செல்ல வேண்டும். படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனிடம், “உயிர்களின் உருவாக்கத்திற்கு மூல ஆதாரமாக விளங்கும் பிரணவத்தின் பொருள் என்ன?” என்று முருகப்பெருமான் கேட்டார். ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை பிரம்மனால் கூற
முடியவில்லை. இதனால் அவரை சிறையில் அடைத்த முருகப் பெருமான், பிரம்ம தேவரின் படைப்புத் தொழிலை இந்த ஆலயம் இருக்கும் மலையில் இருந்து சில காலம் செய்து வந்தார். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. வேறு எங்கும் காண முடியாத அற்புதமான கோலம் இது. முருகப்
பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறந்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பதால், அனைவரும்
சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் முருகப் பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். சுவாமி மலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப் பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை
சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மலைக்கு #ஓதிமலை என்று பெயர் வந்தது. மேலும் பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் #இரும்பறை என்றானது. சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மனை சிறையில் இருந்து விடுவித்தார் முருகப்பெருமான். பின்னர் அவருக்கும்
பிரவணவத்தின் பொருளை உணர்த்தி, படைப்புத் தொழிலை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தார் என்கிறது கோவில் தல வரலாறு. இத்தல முருகனுக்கு ‘கவுஞாச வேத மூர்த்தி’ என்ற பெயரும் இருக்கிறது. முருகனை தரிசிப்பதற்கு முன்பு, மலையடிவாரத்தில் வீற்றிருக்கும், சுயம்பு விநாயகரை வழிபட வேண்டும். படைப்புத் தொழிலை
மீண்டும் பிரம்மனிடமே கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காக, கயிலையில் இருந்து தனியாகத்தான் ஓதிமலைக்கு வந்தார், சிவபெருமான். எனவே மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு மட்டுமே சன்னிதி உள்ளது. அம்பாளுக்கு சன்னிதி இல்லை. ஆனால் மலையின் மேல் உள்ள கோவிலில் காசி விஸ்வநாதர், காசி
விசாலாட்சி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. பழனியில் ஆண்டிக்கோலம் பூண்டிருந்த முருகனை தரிசிப்பதற்காக, இந்த வழியாகச் சென்றார், போகர் சித்தர். ஆனால் அவருக்கு வழி தெரியவில்லை. இதனால் இத்தலத்தில் உள்ள முருகப் பெருமானை நினைத்து யாகம் செய்தாராம். அப்போது இந்த ஆலயத்தில் இருந்து
ஒரு தலையோடு வெளிப்பட்ட முருகப்பெருமான், போகருக்கு பழனி மலைக்குச் செல்லும் வழியைக் காட்டி அருளினார். அப்படி வழிகாட்டிய அந்த முருகப்பெருமான், ஓதிமலையில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் #நாகநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கிறார். ஆதி காலத்தில் ஓதிமலை முருகன், ஆறு
முகங்களுடன் காட்சியளித்ததாகவும், போகர் சித்தருக்கு வழிகாட்டு வதற்காக ஒரு முகத்துடன் சென்று குமாரபாளையத்தில் அமர்ந்து விட்டதால், ஓதிமலையில் ஐந்து முகத்தோடு காட்சியளிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்
பட்டதாகவும் சொல்லப்படுகிறது இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது #பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம். இங்கு மண்ணே
விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் #விபூதிக்காடு - தான் காலப்போக்கில் 'பூதிக்காடு' என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்வுகள்
செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையவும் இத்தல முருகப்பெருமானை வேண்டிக் கொள்ளலாம். இந்த ஆலயத்தில் சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதே போல் திங்கள், வெள்ளி, அமாவாசை
நாட்களிலும் வழிபாடுகள் நடை பெறுகின்றன. இதுபோன்ற விசேஷ தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் ஆலயத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து விட்டுச் செல்வதே நல்லது. 1800 செங்குத்தான படிகளை கொண்டதால் மலையேற சற்று சிரமமாக இருக்கும். கைப்பிடி
இல்லை. வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.
1.ஈரோட்டிலிருந்து – ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும்.
2.கோவையிலிருந்து -கோவை > அன்னூர் > ஒதிமலை வரவேண்டும்.
3. மதுரையில் இருந்து மதுரை – பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி > புளியம்பட்டி > ஓதி
மலை வரவேண்டும்.
இங்கு சென்று வந்தால் சித்தர்களின் அருளும், முருகபெருமானின் பரிபூரண கடாட்சமும், அருமையான அனுபவங்களையும் நாம் பெறுவோம் என்பது உறுதி.
முகவரி:
அருள்மிகு ஓதிமலை ஆண்டவர் திருக்கோவில்,
புஞ்சைபுளியம்பட்டி வழி,
இரும்பரை-638 459,
மேட்டுப்பாளையம் தாலுகா, கோவை மாவட்டம்.
தொலைபேசி:
+91-4254-287 428, 98659 70586.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.