Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

Jul 24, 2022, 16 tweets

#முண்டாசு_கவி_பாரதி

இவரின் பேனாவுக்கு அல்லவோ சிலை வைக்க வேண்டும்....

காலக்கொடுமை பாரீர்........

உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம்.

குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.

பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்!

சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்.

கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார்.

அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான்.

வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.

பாரதி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றுக் காலமானதாக இக்கணம் வரை பள்ளிப்பாடங்களிலும் தவறாகச் சொல்லப்படுகிறது.

அத்துயர நாளில் பாரதி யானைக்குத் தேங்காய் பழம் கொடுக்கச் சென்ற போது பலரும் தடுத்து எச்சரித்தார்கள்.

ஆனால் பாரதி நெருங்கிய போது யானை அமைதியாகவே இருந்தது.

ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே வீசியது..

கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதரான அந்த புண்ணிய ஆத்மா, தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து, குனிந்து பாரதியை தன் தோளில் போட்டுக் கொண்டார்.

யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும்.

ஆனால் தான் பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப் பிறகு அதனிடத்தில் எந்த சலனமும் இல்லை.

கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது.
ஆனால் கட்டாந்தரையில் விழுந்ததில் முகம், மூக்கு, தோள்பட்டை, முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக்காயத்தோடு பாரதி மயங்கினார்.

காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச் சேர்த்தார்.

பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை பழித்தாரா? இல்லவே இல்லை!

கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம்,
''யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது. என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான். இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா?''

அங்கங்களின் காயம் ஆறத் தொடங்கியது.

பாரதியும்
சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு சென்று வந்தார்.

காயம் ஆறியதே தவிர, அந்த அதிர்ச்சியோ அவசர வியாதிகளை அழைத்து வந்தது.

சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது.

மீண்டும் அதே ராயப்பேட்டை ஆஸ்பத்திரி.

செப்டம்பர் 11, அதிகாலை இரண்டு மணி.

வெளியேறத் துடிக்கும் உயிரோ பாரதியின் உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது.

சில நிமிடங்களில் அந்த 39 வருஷக்
கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.

ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ?

ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ?

குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெஞ்சு கனத்துப் போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம் நோக்கி நடந்தன.

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று, சுமந்தவர்களையும் சேர்த்து.

மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ?

அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் வரவில்லையே.

இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமன்றோ.

தூக்கிச் சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள். ஆனால் துயரத்தின் சுமையை?

எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்...

பாரதியின் கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க, ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.

ஓராயிரம் கவிதைகளை
உச்சரித்த உதடுகளை
ஞான வெளிச்சம் வீசிய
அந்த தீட்சண்ய விழிகளை
ரத்தம் வற்றினாலும்
கற்பனை வற்றாத
அந்த இதயத்தை...

தேடித்தேடித் தின்றன
தீயின் நாவுகள்.

மகா கவிஞனே!
எட்டையபுரத்து கொட்டு முரசே!

உன்னைப் பற்றி உள்ளூரே புரிந்து
கொள்ளாத போது,
இவ்வுலகதிற்குப் புரிவது ஏது?

உன் எழுத்துக்களை வாழ்க்கைப் படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை தான் ஏது?

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling