#வெள்ளைவிநாயகர்
கல்லால், மரத்தால், சுதையால், உலோகத்தால் அமைக்கப்பட்ட விநாயகரை பார்த்திருப்போம். கடல் நுரையால் ஆன விநாயகரைக் காண வேண்டுமா?கும்பகோணத்திலிருந்து சுமார் 6கிமீ தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார்.
இங்கு கபர்தீஸ்வரர் எனும் பெயரில் ஈசன் இருக்க, அவருக்கு முன்புறமாக பெரிய பிராகாரத்தினுள் தனிக்கோயில் கொண்டுள்ளார் ஸ்வேத விநாயகர். இவரின் மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது. இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்ட பாற்கடலைக
கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன. விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால் தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால் ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது. இந்த விநாயகரை வழிபட அனைவரும் போட்டி போட்டார்கள். இறுதியில
கிருத யுகத்தில் திருக்கயிலையிலும், திரேதா யுகத்தில் வைகுண்டத்திலும், துவாபர யுகத்தில் சத்ய லோகத்திலும், கலியுகத்தில் பூலோகத்திலும் வழிபடுவதென தேவர்கள் முடிவு எடுத்தார்கள். அதன்படி இந்த விநாயகர் தற்போது இங்கு அருள்புரிகிறார். கடல் நுரையாலான இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக்
கற்பூரம் மட்டுமே சாற்றுவர். இவ்வாலய உற்சவ விநாயகப் பெருமான், வேணி- கமலை எனும் இரு சக்திகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ளார். காவிரியின் தென்கரை தேவாரத் தலங்களுள் இது 25வது தலம். கும்பகோணத்தின் மேற்கு வாயில் எல்லைகளான இரு கிளை ஆறுகளின் கரைகளில் முருகப்பெருமானுக்கு ஒரு கரையிலும்
(சுவாமிமலை), விநாயகப் பெருமானுக்கு ஒரு கரையிலும் (திருவலஞ்சுழி) ஆலயங்கள்! கோவிலின் இரண்டாவது பெரிய பிராகாரத்தில், மூலவரின் கோபுரத்திற்கு முன்பாக ஸ்வேத விநாயகருக்கென்று தனிக்கோயில். இக்கோயிலுக்கென கொடி மரம், நந்தி மண்டபம் எல்லாம் உண்டு. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட 36 தூண்கள் அமைந்த
மண்டபம், விநாயகர் கோயிலுக்கு தனி அழகைத் தருகின்ற ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட பலகணி சிற்பியின் கலைத் திறனைக் காட்டுகி்ன்றன. இந்த விநாயகரின் கருவறையை இந்திரன் விருப்பத்திற்கு ஏற்ப தேவலோக சிற்பி விஸ்வகர்மாவே கட்டினார் என்று ஐதிகம். விநாயகர் கோயில் மூலஸ்தானம் காயத்ரி மண்டபம்
என்றழைக்கப்படுகிறது. காயத்ரி மந்திர 24 அட்சரங்களுக்கு ஏற்ப 24 தூண்கள். எல்லாம் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை காண்போரை வியக்கச் செய்பவை. கருவறையில் கலச நிலைப்படி, கலசத்தேர் மாடம், கலச மஞ்சம் ஆகியவற்றின் மேல் விநாயகர் தந்தம், அங்குசம், பாசம், மோதகம் ஏந்திய நிலையில்
வெண்மையான தோற்றத்தில் ஒரு முழ நீளமே கொண்டவராக அமர்ந்துள்ளார். ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஐந்து சுற்றுகள் கொண்ட கோவில் இது. மனிதர்கள் கட்டியதா, பூதங்களும் சிவ கணங்களும் சேர்ந்து கட்டியதா என்று வியப்படைச் செய்யும் விதமாக அமைந்துள்ளது. ஏராளமான இறைவன் இறைவிகளை
கொண்டுள்ள இக்கோவிலில் மூலவர் கபர்தீஸ்வரர் லிங்க வடிவில் கருவறையில் எழுந்தருளியுள்ளார். தெய்வ சாந்நித்யம் பரிபூரணமாகத் திகழும் சந்நதி. இவர் வலஞ்சுழி நாதர் என்றும் அழைக்கப் படுகிறார். அம்பாள் பெரிய நாயகி எனும் பெயரில் தனிச் சந்நதியில் உள்ளார். அஷ்டபுஜ காளியும் எட்டுக் கரங்களுடன்
தனிக்கோயில் கொண்டுள்ளார். காவிரியும் அரிசிலாறும் இத்தலத்தில் இரண்டு புண்ணிய தீர்த்தங்கள். கோயிலுக்குள் இருக்கும் திருக்குளம் ஜடா தீர்த்தம், சிவனின் ஜடாமுடியுள் உள்ள கங்கையின் பெயரால் அமைந்தது. கோயிலில் நான்கு கால பூஜை நந்திக்கு பின்புறம் இருந்தே ஆராதனை நடத்துகின்றன. பத்து நாள்
பிரமோற்சவம் உண்டு. ஒன்பதாம் நாள் விழாவில் இந்திரனுக்கென தனி பூஜை உண்டு. பத்தாம் நாள் பஞ்சமூர்த்தி ஊர்வலம் சென்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. அருகிலுள்ள அறுபடை தலமான சுவாமி மலைக் கோயிலின் உபகோயில் இது. திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்திலும் பாடல்
பெற்ற தலம். சம்பந்தர் இத்தலத்து ஈசனை வணங்கும்போது 'என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சே' என்று மனமுருகிப் பாடுகின்றார். ராஜராஜ சோழன் வழிபட்ட திருவலஞ்சுழிநாதரை வணங்கி வேண்டிக் கொள்ளத் திருமணப்பேறு கிட்டும். வெள்ளை விநாயகரை வணங்க மன விருப்பங்கள் நிறைவேறும். பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள்
நீங்கி, போட்ட பந்தயங்களில் வெற்றி கிட்டும் என்கின்றனர் பக்தர்கள்.
தரிசன நேரம்: காலை 6-12; மாலை 4-8
இத்தனை பெருமைகளை உடைய கோவிலுக்குச் சென்று தரிசித்து நாமும் அருள் பெறுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.