#சிற்பியின்_பெயரில்_ஓர்_ஆலயம்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல்லில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பாலம்பேட் கிராமத்தில் #ராமப்பா_கோயில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி, காகதீய மன்னர் கணபதி தேவாவின் தளபதி ரெச்சர்ல ருத்ராவினால் பொ.ஆ. 1213-இல் கட்டப்பட்டது. எந்த ஒரு
ஆலயக் கட்டுமானமும், பிரதான தெய்வத்தின் பெயரைக் கொண்டே அழைக்கப் படுவது வழக்கம். அநேகமாக, உலகில் சிற்பியின் பெயர் தாங்கி, படைப்பாளிக்கு உயரிய கௌரவம் அளித்த ஆலயம் இதுவாகவே இருக்க முடியும். ஹொய்சாள நாட்டை சேர்ந்த ராமப்பா என்ற சிற்பியின் தலைமையில் திட்டமிடப்பட்டு, 14 வருடங்களில்
கட்டப்பட்ட இந்த சிவாலயம் (இராமலிங்கேஸ்வரர்), கடவுளின் பெயர் கொண்டு அழைக்கப்படாமல், சிற்பியின் பெயர் சூட்டப்பட்டு ராமப்பா ஆலயம் என்றழைக்கப் படுவதால் சிறப்பிடம் பெறுகிறது. 13-ஆம் நூற்றாண்டில் காகதீய பேரரசுக்கு பயணம் மேற்கொண்ட இத்தாலிய வணிகரும், பயணியுமான மார்கோ போலோ (Marco Polo),
இக்கோயிலைப் பற்றி “கோயில்களின் விண்மீன் மண்டலத்தில், இக்கோயில் ஒரு பிரகாசமான நட்சத்திரம்” என்று தனது பயணக் குறிப்புகளில் புகழ்ந்துள்ளார். 6 அடி உயர நட்சத்திர வடிவ மேடையில், ஹொய்சாள பாணியில் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோயில், நுணுக்கமாக வடிவமைக்கப் பட்ட தூண்கள், புராண நிகழ்வுகளை
விவரிக்கும் அற்புதமான சிற்பங்கள், பேரழகு மதனிகா சிற்பங்கள் ஆகியவற்றால் செழுமைப் படுத்தப் பட்டுள்ளது. சிவப்பு மணற்கல் கொண்டு சுவர் கட்டுமானம் செய்யப் பட்ட இக்கோவிலில் பயன்படுத்தப் பட்ட கற்கள் மிகவும் லேசானவை. அவை நீரில் மிதக்கும் தன்மை கொண்டவை. அதனால் மரத்தில் செய்யப்படுவது போல
நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள், சிற்பங்கள் போன்றவை மட்டும் கறுப்புநிற பஸால்ட் (black basalt) கற்களால் செதுக்கப்பட்டு நுணுக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.
#மதனிகா_சிற்பங்கள்
இவ்வாலயத்தில் காகதீய கலையின் தலை சிறந்த படைப்புகளான மதனிகா சிற்பங்களின் பேரழகு காண்போரின் கண்களுக்கு
விருந்து. மெல்லிய உடல்களும், நளின விரல்களும் கொண்ட உடல் அமைப்புடன், காதல், கூச்சம், காமம், சிந்தனை, கோபம், வலி என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகபாவனைகளுடன் மதனிகா சிற்பங்கள் ராமப்பா கோயிலின் வெளிப்புறச் சுவர் தூண்களில் செம்மையாகச் செதுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு மதனிகாவும்
வெவ்வேறு முகபாவனைகள், மெல்லிய உடல் அமைப்பு, தலை அலங்காரங்கள், காதணிகள், ஆபரணங்கள், நகைகள், நிற்கும் பாங்கு, உடைகள் போன்றவற்றுடன் தனித்துவமாக, வேறுபாடுகளுடன் செதுக்கப்பட்டு உள்ளன. பிரதிபலிக்கும் வண்ணம் பளபளப்பு ஏற்றப்பட்ட கற்களில், இன்றைய நவீனத்துவத்துடன் போட்டி போடும் வகையில்
கூடுதல் உயரம் கொண்ட காலணிகள்
(high heel) அணிந்த மதனிகா சிற்பம் உலகப்புகழ் பெற்றது. இன்று எம்பிராய்டரி செய்த பூக்கள் போன்ற அலங்காரக் குட்டைப் பாவாடை (mini skirt) அணிந்து கையில் வில்லுடன் வேட்டைக்குச் செல்லும் பெண்ணின் சிற்பமும் குறிப்பிடத்தக்கது. தன் காலில் இருந்த முள்ளை அகற்றும்
போது ஏற்படும் வலியை முகத்தில் வெளிப்படுத்தும் சிற்பம் சிற்பியின் சீரிய திறனுக்கு சிறந்த எடுத்துக் காட்டு. மேலும் பாம்புடன் நாகினி, நடனம், அழகுபடுத்துதல், இசைக்கருவி வாசிப்பது என்ற பல்வேறு தோற்றங்களில் மதனிகா சிற்பங்கள் தூண்களை அலங்கரிக்கின்றன. ஹைதராபாத் நிஜாம்களின் அரண்மனைகளை
அலங்கரிக்க சில மதனிகா சிலைகள் அகற்றப்பட்டன. பின்னர், அவை அங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டு தற்போது மீண்டும் பொருத்தப்
பட்டுள்ளன. நிறவேறுபாடு மற்றும் சிமென்ட் வேலைகள் மற்றவற்றிலல் இருந்து அந்த சிற்பங்களை வேறுபடுத்தி அடையாளம் காண உதவுகின்றன. யுனெஸ்கோ இக்கோவிலை உலகப் பாரம்பரிய கோவிலாக
அறிவித்துள்ளது. இக்கோவிலில் குடி கொண்டிருப்பவர் ராமலிங்கேஸ்வரர். நம் கோவில்கள் வழிபாட்டுத் தலமாக இருப்பதோடு அவை கலை கலாசாரத்தின் களஞ்சியமாக உள்ளன. கோவில்களை பேணி பாதுகாப்போம். நம் பண்பாட்டினை தொடர்ந்து கடைபிடிப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.