அண்ணாவுக்குப் பின் திமுகவின் தலைமைப் பொறுப்பேற்று ஐம்பதாண்டுகள் அதை வழிநடத்தியவரும் தமிழ்நாட்டின் அதிக நாள் முதல்வருமான கருணாநிதி தன்னுடைய கடைசிக் காலத்தில் குடும்ப மருத்துவருமான எழிலனிடம் ஒருநாள் அண்ணாவைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கிறார்.
“இன்னும் இருபதாண்டுகள் உயிரோடு அண்ணா இருந்திருந்தால் திமுக எப்படி இருந்திருக்கும்?”
கொஞ்ச நேரம் மௌனமான கருணாநிதி நிதானித்துச் சொல்கிறார், “திமுக ஒரு சர்வதேச முன்மாதிரிக் கட்சியாக மாறியிருக்கும்; தமிழர்கள் சர்வதேசத்தால் பேசப்படும் சமூகமாக மாறியிருப்பார்கள்!” 1/6
அண்ணாவுக்குப் பின் திமுகவிலிருந்து பிரிந்து, அண்ணாவின் பெயரையும் சேர்த்து அதிமுக எனும் கட்சியைத் தொடங்கி, தன்னுடைய மரணம் வரை முதல்வர் பதவியிலிருந்த எம்ஜிஆரும் இதையேதான் சொன்னார், தனக்கேயுரிய சாமானிய வார்த்தைகளில்: “அரசியல் உலகில் அண்ணா நமக்கு அறிவூட்டும் கடவுள்!” 2/6
தமிழன் யாருக்கும் தாழாமல் யாரையும் தாழ்த்தாமல் யாருக்கும் எஜமானனாக இல்லாமல் யாருக்கும் அடிமையாகவும் இல்லாமல் யாரையும் சுரண்டாமல் யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே என் குறிக்கோள் என்ற அண்ணாவின் கனவு, மனிதன் கடவுளுக்குக்கூட அடிமையாகக் கூடாது என்றும் நீள்வது. 3/6
தமிழன், தமிழ்நாடு வரையறைகளைத் தாண்டிவிட்டால் அந்தக் கனவு உலகிலுள்ள ஒவ்வொரு இனத்துக்குமான கனவாகவும், ஒவ்வொரு சமூகத்துக்குமான கனவாகவும் பரிணமிக்கக்கூடியது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஓருலகமாக உறவாடச் சாத்தியமுள்ள அரசியல் வாகனம் அது. இந்தியாவை உண்மை குடியரசு ஆக்கும் கனவுமது!4/6