திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு ஆகும். 247 தேவாரத் திருத்தலங்களில் ஒன்று ஆகும். நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த தலத்தைப் பாடி உள்ளனர்.
இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் இருப்பது வேறு எந்த முருகன் திருக்கோவில்களிலும் காண இயலாத காட்சி ஆகும்.
திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். துர்க்கையின் சன்னதி எதிரிலேயே கொடிமரமும், கோபுரமும் இருந்து தலத்தின் சிறப்பை அதிகரிக்கின்றன. கருவறையில் துர்க்கைக்கு இடது புறம் கற்பக விநாயகர் அருளுகிறார். கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர்
மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். இதுவும் ஒரு சிறப்பு ஆகும். இந்த கோவிலில் கருவறைக்கு மேலே விமானம் இல்லாததால் மலையையே விமானமாக வணங்குகின்றனர். சிவபெருமானே மலை வடிவில் அருளுகிறார். திருப்பரங்குன்றம் கோயிலில்
மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார்.