கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்றைய நன்னாள். ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்த திருமங்கையாழ்வார் திரு அவதார தினம். இவர் பக்தி நெறியில் திளைப்பதற்கு முன் பெரும் வீரராய்த் திகழ்ந்தார். கலியன், மங்கையர் கோன் என்ற பெயர்களாலும் அறியப்படுபவர் - 1/n
காஞ்சி வரதராஜ பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் இவரை ஆட்கொண்டு மிக உயர்ந்த ப்ரஹ்ம ஞானத்தை ஆழ்வாருக்கு வழங்கி அருளினர். இறைவனின் அருள் பெற்று திருமால் விஷயமாகவும், மறை பொருளை விளக்கும்படியும் எளிய தமிழில் 6 ப்ரபந்தங்களாக செய்து அருளினார் - 2/n
வேதங்கள் நான்கு. வேதங்களுக்கு ஆறு அங்கங்கள். ஆழ்வார்களில் முதலில் அவதரித்த நம்மாழ்வார் நான்கு வேதங்களின் பொருளை எளிய தமிழில் நான்கு ப்ரபந்தங்களாக அருளினார் என்றும், பின் அவதரித்த திருமங்கையாழ்வார் அவற்றுக்கு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களை அருளினார் என்று பூர்வர்கள் நிர்வாகம் - 3/n
கவிகள் ஆசு கவி, மதுர கவி, சித்ர கவி மற்றும் விஸ்தார கவி என நான்கு வகைப்படும். ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வாருக்கு ஒரு தனிச்சிறப்பு. இந்த நான்கு வகை கவிகளை பாடுவதில் இவர் வல்லவராதலால் "நாலுகவிப்பெருமாள்" என்ற பட்டம் பெற்றவர் - 4/n
திருமங்கையாழ்வாருக்கு மற்றுமொரு பெயர் பரகாலன். தர்மத்துக்குப் புறம்பானவர்களை அழிக்கும் வகையில் அவர்களுக்கு காலனாய் விளங்குபவர் ஆழ்வார். பின்னாளில் வந்த பகவத் ராமானுஜர் இந்த ஆழ்வாருக்கு தனியன் இயற்றுகையில், 'பரகாலன்' என்றே தொடங்குகிறார் - 5/n
ஆயுதம் பகைவர்களை அழிக்க மட்டும் அல்ல, அடியவர்களை காத்து தர்மத்தை ரக்ஷிக்கவும் தான். பகைவர்களின் காலனாய், கலி யுகத்தின் தோஷங்களை நீக்கி ஆஸ்திகர்களை காக்கும் கலியனின் வேல் நம் அனைவரையும் காக்கட்டும். தர்மம் தழைக்கட்டும்.