ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என பாஜக அரசு கொண்டுவரவுள்ள திருத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அழைப்பதென்றால் மாநில அரசின் சம்மதத்தோடு அதைச் செய்து கொள்ளலாம் என இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954 இல் விதி-6 குறிப்பிடுகிறது.
இதுவரை அதுவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே ஒன்றிய அரசு இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என விதி-6 இல் திருத்தம் செய்வதற்கு பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அவ்வாறு செய்வது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். அதுமட்டுமின்றி எப்போது நம்மை டெல்லிக்கு மாற்றல் செய்வார்களோ என இந்த அதிகாரிகளை அச்சத்திலேயே வைத்திருப்பதாகவும் இருக்கும்.
ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சி அல்லாத வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளை சீர்குலைப்பதற்கும் இது கருவியாக அமைந்துவிடும்.எனவே இந்த ஆபத்தான நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
மாணவி லாவண்யா தற்கொலை:
மதமாற்றம் என்ற பெயரில் வெறுப்புப் பிரச்சாரம்!
தமிழ்நாட்டைப் பாதுகாத்திட சனாதன சக்திகளை ஒடுக்க வேண்டும்! #வெறுப்புப்_பிரச்சாரத்துக்கு_எதிராகச் சட்டமியற்ற வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதயமேரி பள்ளியில் பயின்று வந்த மாணவி லாவண்யா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மாணவி லாவண்யாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.