நூறு நாளில் நீங்களும் மென்பொருள் வல்லுநர் ஆகலாம். நிரல் இல்லா மென்பொருள் கருவிகளின் தொகுப்பு, 100 நாளைக்கு. தினமும் நான் சொல்லும் விஷயங்களை பயின்றால், 100 நாட்களின் முடிவில், உங்களால் ஒரு நிரல் எழுதும் மென்பொருள் வல்லுநர் செய்யும் அத்தனை பணிகளையும் செய்ய இயலும். என்ன தயாரா ?
இந்த பயிற்சிகளில் நிரல் எழுதுவது இல்லை என்றாலும், முதலில் நாம் நிரல்களை பார்வையிட கற்பதும், கோப்புகளை சேமிப்பதும் செய்ய வேண்டும். அதற்காய் நீங்கள் உருவாக்க வேண்டியது ஒரு கிட் கணக்கு.
கிட் என்பது ஒரு நிரல் சேமிப்பு கிடங்காக பல நிறுவனங்களில் பயன்படுத்த படுகிறது. இதில் பல கோப்புகளும் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை 2018 ஆம் ஆண்டு 7.5 பில்லியன் டாலர் செலவில் தனதாக்கி கொண்டது.
இதில் ஒரு கணக்கை உருவாக்கி கொள்வதும், தினமும் இதில் உங்கள் பயிற்சி கோப்புகளை இடுவதும் தொடர்ந்து நான் செய்ய சொல்ல போகிறேன். இதோ முகவரி : github.com
இதனை பற்றி தமிழில் ஒரு சின்ன வீடியோ பாருங்க
கிட் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளவும்
மென்பொருள் வல்லுநர்கள் நிறைய இருக்கும் நிறுவனத்தில் வரைகலை வடிவமைப்பாளர்கள் இருப்பார்கள். ஒரு படம், லோகோ, ஐக்கான், பேம்ப்லெட் எல்லாம் இந்த வரைகலை வடிவமைப்பாளர்கள் செய்து கொடுப்பார்கள்.
இந்த வடிவமைப்புகள் முன்பு எல்லாம் போட்டோஷாப் போன்ற கருவிகள் பயன்படுத்தி செய்தார்கள். இப்போது இன்னும் எளிதாக பல கருவிகள் வந்து விட்டன. அதை போன்ற ஒரு கருவி இப்போது உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அது தான் அடோப் எக்ஸ்பிரஸ். adobe.com/express/
இந்த தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கிக்கொண்டு உங்களுக்கு தேவையான லோகோ, பேனர், பிளையர் எல்லாம் செய்துகொள்ளலாம்.
இதில் பணம் கட்டி இணைந்தால் பல மாதிரி வடிவமைப்புகள் கிடைக்கும், ஆனால் பணம் காட்டாமல் இலவச மாதிரி வடிவமைப்புகள் மூலமாகவே உங்களுக்கு தேவையான அத்தனை வரைகளைகளையும் செய்ய இயலும். முயன்று பாருங்கள்.
இந்த இலவச மென்பொருள் அண்டிராய்ட் அலைபேசிக்கு, ஐபோனுக்கும் கூட உள்ளது. அங்கே தேடி தரவிறக்கம் செய்து கொள்ளவும். சில மாதிரிகள் செய்து பழகவும். இந்த பேப்பர் ப்ரோகிராமர் படம் கூட அதில் இலவசமாக செய்தேன். கவனிக்க, நான் வரைகலை வல்லுநர் இல்லை.
இன்ஸ்டாகிராம் என்றால் தனி அளவுகள், பேஸ்புக் முகப்பு பக்கம் என்றால் தனி அளவுகள் என தனி தனியாக செய்ய முடியும்.
பெரிய மென்பொருட்கள் நிறுவாமல் உங்கள் இணைய உலாவியிலேயே இந்த பணிகள் அனைத்தையும் செய்ய இயலும். அதனால் மிக விரைவாக இந்த பணிகளை செய்ய முடியும்.
கொசுறு:
உங்கள் படங்களை, கோப்புகளை சேமிக்க மிக சிறந்த இடம் கூகிள் டிரைவ். இங்கே நீங்கள் தனி தனியாக கோப்புறைகளை (Folders) உருவாக்கி அதில் உங்கள் கோப்புகளை வைக்கலாம். ஜிமெயில் கணக்கு மூலம் நுழைவதால், கணினியில் இடும் கோப்பு உங்கள் அலைபேசியில் ஒத்திசைவாகி (sync) வந்துவிடும்.
இந்த மூன்றாம் நாளில் Figma எனப்படும் மாதிரி வடிவமைப்பு (Mock-Up) இணைய செயலி பற்றி விரிவாக தெரிந்துகொண்டு, அதில் ஒரு சின்ன பிராஜக்ட் உருவாக்குவோம்.
Figma பற்றி முழுதாக பார்க்க போகிறோம், ஆனால் தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கும் பால்சமிக், முழுதாக இலவசமாக கிடைக்கும் திறந்த மூல பென்சில் புராஜக்ட் பற்றி கூட தெரிந்து கொள்ளுங்கள். வயர்பிரேம் சிசி கூட நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
அது என்ன வயர் பிரேம் என்ற கேள்வி வரும். ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு போகும் போது அந்த வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும், என்று முழுமையாக மேப் போட்டது போல இந்த மென்பொருட்களை வைத்தது செய்யலாம்.
முன்பு எல்லாம் வரைந்து காட்டிக்கொண்டு இருப்பார்கள். அதை எளிமைப்படுத்தி WireFrame (வரையறு பாடங்கள்) ஆக தர இயலும்.ஒரு உதாரண வயர் பிரேம் கொடுத்து இருக்கிறேன். லாகின் செய்த பயனர் அடுத்து எங்கே செல்ல வேண்டும், அதன் பின் என்ன அவர் பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக வரையறுத்து விட வேண்டும்
இப்படி வரைந்த மென்பொருள் நிகழ் சாத்தியங்களை பிரதி எடுத்து, சுவரில் ஒட்டி, அதில் கூட வரைந்து, விவாதித்து வரைகலை நிபுணரின் கருத்துக்களை கேட்டு மென்பொருள் திட்டம் இப்படி அமையலாம் என முடிவு செய்வார்கள்.
இந்த நேரத்தில் பென்சில் புராஜக்ட் மென்பொருளை நாம இப்ப இன்னொரு உலாவி இடைமுகத்தில் (Interface) தரவிறக்கம் செய்யலாம். இடம் pencil.evolus.vn/#google_vignet… (இதில் படங்களை வைக்க, அதில் பல விஷயங்களை வைக்க செய்யலாம்).
UX டிசைனர் ஆக நீங்கள் விரும்பினால் உங்கள் பணி Wireframes, Mockups மற்றும் Prototype எனப்படும் முன்மாதிரிகளை செய்வது ஆகவே இருக்கும். சில சமயம், நான் இது போல காகிதத்தை வெட்டி முழு திட்டத்தை முன்மாதிரி ஆக கொடுத்து அசத்தி இருக்கிறேன். நீங்களும் செய்யலாம். இதன் பெயர் Paper Prototype.
இந்த மூன்று நாள் வகுப்பை வைத்து பிளிப் கார்ட் - அமேசான் மாதிரி இரு தளத்தை வடிவமைப்பில் அல்லது பேப்பரில் கொண்டு வாருங்கள். இது தான் மினி புராஜெக்ட் 1.
1. முதலில் என்ன இருக்கவேண்டும் ? உள்நுழைய பயனர் இடைமுகம் (Username, Password).
2. அடுத்த பக்கத்தில் பொருள் படம், விலை, குறிப்பு
அங்கே Buy Now பட்டன் இருக்க வேண்டும். அதை பயனர் கிளிக் செய்தால் அது CheckOut பகுதிக்கு செல்ல வேண்டும் .
அங்கே முகவரி, அலைபேசி எண், வங்கி / கிரெடிட் கார்டு எண், முடிவுறும் தேதி, ரகசிய எண் இருக்க வேண்டும்.
அதை கொடுத்து "வாங்குக" என அழுத்தினால், பயனருக்கு ஒரு செய்தி வரவேண்டும்.
இது தான் உங்கள் மினி புராஜெக்ட்.
இதனை
Canva, Figma வைத்தோ
அல்லது
வெறும் காகிதத்தில் பேப்பர் புரடோடைப் ஆக வரைந்தோ பாருங்கள்.
என்னிடம் காட்டினால் அதில் உள்ள தவறுகளை நான் திருத்துவேன்...
Day 5
இந்த நாளில் நான் அறிமுகம் செய்ய நினைப்பது Notion. இதை உங்கள் அலைபேசிகளில் கூட தரவிறக்கம் செய்து நிறுவி கொள்ளலாம்.
இதில் உங்கள் பணியை, வேகமாக சிறப்பாக செய்ய கூடிய வகையில் அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டு உள்ளது. நிறுவி பயன்படுத்த ஆரம்பியுங்கள்...
இன்று நீங்கள் உங்களுக்கு என சொந்தமாக ஒரு இணைய தளம் தொடங்க போகிறீர்கள்.
இணைய தளம் என்பது உங்கள் உலாவியில் உள்ளிடும் தளத்தின் முகவரியில் இருந்து, அந்த தளம் இருந்து செயல்படும் ஹோஸ்டிங் (hosting) வரை பல விஷயங்களை உள்ளடக்கியது.
இணைய தளம் இருந்து செயல்படும் ஹோஸ்டிங் இடத்தை தனியாகவும் விற்கிறார்கள்.
உங்கள் இணைய தளத்தின் பக்கத்தையும், அது இருந்து செயல்படும் ஹோஸ்டிங் Space ஐயும் நாங்கள் இலவசமாகவே தருகிறோம் என்று கூகிள் Blogger என்ற வசதியை கொடுத்து அதில் இன்று கூட நீங்கள் உங்கள் பெயரில் தளம் தொடங்கலாம் என இருக்கிறது.
அதே போன்ற இலவச தளம் Wordpress. Blogger தளத்துக்கு போட்டி ஆக வந்தாலும் இன்று வரை பல வசதிகளை கொடுத்து ராஜாவாக இருந்து வருகிறது.
அதன் பின் வந்த Medium, Tumbler ஐ விட எனக்கு விருப்பமானது வேர்ட்பிரஸ். இதில் உங்களுக்கு ஒரு சொந்த தளத்தை காட்டுவது தான் 6 ஆம் நாள் பயிற்சி..
உங்கள் சொந்த வலைப்பதிவில் இந்த ஐந்து நாள் என்ன என்ன பயின்றீர்கள் என்று தனி பதிவுகளாக எழுதி வையுங்கள்.
அதில் என்ன என்ன வசதிகள் இருக்கிறது என அதில் உள்ள கோப்புகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இது இன்றைய டாஸ்க். ஆறு நாள் முடிவில் இந்த பயிற்சியை பற்றி விரிவாக எழுதி அனுப்பவும்.
இதில் நிரல் சாத்தியங்கள் பல உள்ளது. கூகிள் முதல் மைக்ரோசாப்ட் வரை நிரல் வல்லுனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
உங்கள் எல்லா கோப்புகளையும் இதில் திறக்கலாம்.
SEO போன்ற பணிகள் (பின்னால் விவரம் வரும்) செய்ய கூகிள் அனாலிடிக்ஸ் (இது பற்றியும் இன்னொரு நாள் சொல்கிறேன்) பயன்படுத்தும் போது, ஒரு சிறிய நிரலை சேமித்து, அதனை உங்கள் இணைய தளத்தின் நிரல் பகுதியில் இணைக்க வேண்டிய தேவை இருக்கும்.
அப்போது தான் கூகிள் அனலிடிக்ஸ் வேலை செய்யும்.
அப்படியான தேவை வரும் பொது, நிரல்களை முழு அளவில் பார்வை இட, அதில் திருத்தம் செய்ய, இந்த சிறிய மென்பொருள் ரொம்ப உதவி செய்யும்.
இதில் பல்வேறு வசதிகளை கொடுத்து இருக்கிறார்கள், கொஞ்சம் தோண்டி பார்த்தால் பல புதையல் எடுக்கலாம். இப்போதைக்கு உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்தவும்.
இது ஒரு Artificial intelligence காப்பி ரைட் கருவி.
மின் அஞ்சல் எழுதும்போது அல்லது சில பத்திகளை ஆங்கிலத்தில் எழுதும்போது இன்னும் கூட எனக்கு பல தடுமாற்றங்கள் வரும்.
ஆனால் இந்த கருவியை பயன்படுத்தி பார்த்த பிறகு, எலி படத்து வடிவேல் போல how do I tell you மோடுக்கு போய் விட்டேன்.
ஆங்கிலத்தில் உள்ள எழுத்து பிழைகள், இலக்கண பிழைகளை எல்லாம் திருத்தி, நம்மை ஷேக்ஸ்பியர் ஆக்கும் கருவி இது. அதனால் இதை பற்றி யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.
முற்றிலும் இலவசமாக இருக்கும் இந்த கருவியில் நாம் நாலு வரி எழுதினால்..
மானே தேனே போட்டு அதை பத்து வரியாக கொடுத்து விடுகிறது.
அதிலும், நீங்க எப்படியான tone இல் அந்த விஷயத்தை (அலுவல் ரீதியாக / நட்பாக / நகைச்சுவையாக) என்று கேட்டு அதையும் கணக்கில் கொண்டு..
பெரிய ஆங்கில மொழி அறிவு இல்லாத ஒருவர் கூட
1. ஒரு நிறுவனத்தில் காப்பிரைட்டர் ஆக
2. இணையத்தில் வீட்டில் இருந்து பணி செய்ய கூடியவராக
3. தன் சொந்த நிறுவன காப்பிரைட் பணிகளை தானே செய்து செலவை மிச்சம் பிடிப்பவராக
அவதாரம் எடுக்கலாம். பணம் சம்பாதிக்கலாம், சேமிக்கலாம்.
நாள் 9 இல் சிந்தனை செயலாக்க கருவியான @MiroHQ பற்றி விரிவாக சொல்ல போகிறேன்.
கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளலாம். அதன் பின் உங்கள் குழுவை பற்றி சொல்லுங்கள். இப்போதைக்கு பெப்பர் புரோகிராமிங் தான் உங்கள் குழு. மற்ற விவரங்களை உள்ளிட்டு கணக்கை துவக்குக
நமது பெப்பர் புரக்கிராமிங் மிரோ குழுவில் இணைய இந்த சுட்டியை பயன்படுத்துக்க. miro.com/welcome/ZFVKNT…
என்ன என்ன விஷயங்களை இதில் செய்யலாம் என ஒரு பட்டியல் இருக்கு.
அஜைல் - இது பற்றி ஒரு நாள் விரிவாக பார்க்கலாம். எல்லா நிறுவனங்களிலும் பயன்படுத்துவது இது. இது ஒரு பணி சூழல் வரைமுறை வாழ்வியல் முறை.
பின் உங்கள் சிந்தனை செயலாக்கம் (brainstorming), திட்ட வடிவமைப்பு (strategy and planning) எல்லாம் செய்யலாம். அதை மற்றவருடன் பகிரலாம்.
ஒவ்வொரு திட்ட பணி, அதன் நுணுக்கம் என அனைத்தையும் இங்கே திட்டமிடலாம், வரைபடம் இடலாம், நமது குழுவுடன் பகிரலாம்.
இது போன்ற நுணுக்க வரைபடம் (Mind Map) கூட செய்து ஒரு பிரச்சனை வந்தால் எப்படி சமாளிப்பது என்பதை சொல்லலாம். இங்கே உதாரணமாக செஸ் ஒலிம்பியாட் வந்த ஒரு வீராங்கனையின் பெட்டிகள் வரவில்லை என்றால் என்ன செய்வது என திட்டம் கொடுத்து இருக்கிறேன்.
இப்படியான வரைகலைகளை கூட செய்து உங்கள் திட்டப்பணிகளை விரிவாக எடுத்து சொல்லலாம். இந்த வரைகலை செய்ய 3 நிமிடம் ஆனது, நம்ம முடிகிறதா ?
அஜைல் எனப்படும் அலுவலக செயல்பாட்டு முறை பற்றி விரிவாக பார்க்கும்போது, இப்பொது நான் சொன்ன விஷயங்களை எல்லாம் உங்களால் உங்கள் மனச்சங்கிலிக்குள் இணைத்து பார்க்கக் முடியும். இப்போதைக்கு இந்த மென்பொருளில் விளையாடுங்க.
இன்றைய கொசுறு: தகவல் என்பது கொட்டி கிடக்கு. அந்த தகவல்களை, தரவுகளை உங்கள் அறிவு கொண்டு, சிறந்த கருவிகள் கொண்டு இணைப்பது தான் நீங்கள் செய்ய வேண்டிய பணி.
நாள் பத்து, இன்று பார்க்க இருக்கும் எளிய மென்பொருள் பி.டி.எப் கோப்புகளை விரைவில் திருத்தி உங்கள் பணிகளை வேகமாக செய்து முடிக்க உதவும் PDF Escape.
இந்த இணைய தளம் சென்று இலவசமாக இணையத்தில் பணிகளை செய்ய அழுத்த வேண்டிய பொத்தான் வரைபடத்தில் இருக்கு.
ஒரு மாதிரி பி.டி.எப் கோப்பை இதில் உள்ளுக்கு இழுத்து விளையாடலாம் வாங்க.
இதில் இருக்கும் WhiteOut கருவியை வைத்து எந்த பகுதியையும் / அதில் உள்ள எழுத்துக்களையும் கிளியர் செய்துகொள்ளலாம். உதாரணமாக இந்த சப்ஜெக்ட் லைன் இருக்கும் பகுதியை நீக்கி புதிய சப்ஜெக்ட் லைன் போடலாம்.
அதன் பிறகு, அங்கே வலது பக்கம் இருக்கும் Text பொத்தானை அழுத்தி, புதிய எழுத்துக்களை எழுதி இருக்கிறேன். பாண்ட் பகுதியும் உள்ளது, பெரிய எழுத்துக்களாக மாற்றி இருக்கிறேன்.
இதில் இருக்கும் Freehand வசதியை பயன்படுத்தி என்னுடைய ஒப்பம் கூட இட்டு இருக்கிறேன் பாருங்கள். எந்த கோப்பையும் திறந்து அதில் தேவையான மாற்றங்கள் செய்து உங்கள் பணியை எளிதாக்கி கொள்ள உதவும் இந்த கருவியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பத்து நாள் பட்டைய கிளப்பியாச்சு. (சிலர் இந்த பத்து நாள் பாடத்தையும் ஒரே நாளில் முடித்து இருக்கலாம்.) என்னை பொறுத்த வரை நீங்க இன்னும் ஆழமாக நான் இந்த பத்து நாளில் சொன்ன கருவிகளை பழக வேண்டும், குறிப்பாக கான்வா, பிக்மா, மிரோ. இன்று 11 ஆவது நாள். மிக முக்கியமான நாள்.
நான் சொல்லும் இரண்டு இணைய தளங்களையும் தினமும் திறந்து பார்த்து அதில் உள்ள புதிய செய்திகளை விரிவாக படித்து ரொம்ப அப்டேட் ஆக நீங்க இருக்க வேண்டும்.
பொதுவாக தொழில் நுட்ப விவரங்கள் வரும் தளம் இது. தினமும் பல நல்ல கட்டுரைகள் வெளியாகும். தொழில் நுட்ப சந்தையில் நடைபெறும் விவரங்கள் உங்கள் விரல் நுனியில்.
ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் முதல் அடுகளைக்கு வரும் புதிய கருவி வரை எல்லா விவரமும் இதில் இருக்கும்
எனக்கு விருப்பமான இந்த தளத்தை தினமும் வாசித்து அதில் இருக்கும் செய்திகளை தெரிந்து கொள்வது என் வழக்கம்.
இந்த பல ஆண்டுகால தகவல் தொழில் நுட்ப பணியில் இந்த இரு தளங்களும் பல வகையில் எனக்கு உதவியாக இருந்தது. நீங்களும் இதை படித்து உங்களை அப்டேட்டட் ஆக வைத்துக்கொள்ள வேண்டும்.
கிட்ஹாப் (GitHub) எனப்படும் நிரல் மூல சேமிப்பு - விநியோகம் - பயன்பாட்டு செயலி / தளம் பற்றி சொல்லி இருந்தேன் அல்லவா. உடைமை தளத்தில் ஒரு விலையில்லா வகுப்பு பற்றிய தகவல் கிடைத்தது. உங்களிடம் உடைமை தளத்தின் கணக்கு அல்லது அலைபேசி செயலி இருந்தால் தேடி பாருங்க. மிக சிறப்பாக உள்ளது.
பயிற்சிகளில் நிரல் எழுதுவது இல்லை என்று சொல்லி விட்டேன். உங்களை மென்பொருள் வல்லுளர்களாக உட்கார வைக்க வேண்டும் என்பது எனக்கிட்ட பணி. இந்த மென்பொருள் துறையில் உங்களுக்கான இடத்தில் நீங்க அமர்வதற்கு இன்னொரு பயிற்சிகள் இன்று.
கூகிள் வழங்கும் 40 மணி நேர பயிற்சி (சான்றிதழும் கிடைக்கும்) பற்றி தான் இன்று பேச இருக்கிறோம்.
மொத்த பாடங்களின் எண்ணிக்கை 26. நீங்கள் செலவு செய்ய வேண்டிய நேரம் 40 மணி, உங்கள் வேகத்தை பொறுத்து விரைவாகவே கூட முடித்து விடலாம். இதற்கு இணைய தொழில் நுட்ப விவரங்கள் பற்றி பெரிய அனுபவம் தேவை இல்லை.
கூகிள் கணக்கு மட்டும் இருந்தால் உள் நுழைந்து பயிற்சிகளை ஆரம்பித்து விடலாம்
சின்ன டீஸர்
நாள் 13 : அஜெயில் / கன்பன்
நாள் 14 : மின்னஞ்சல் எழுதுவது எப்படி
நாள் 15: அலுவலக குழு கூட்டங்கள்
நாள் 16: SEO
நாள் 17: சாப்ட்வேர் டெஸ்டிங் துறை (Manual Testing)
நாள் 18: சோஷியல் மீடியா மேனேஜர்
நாள் 19: எக்ஸல் ஷீட்
நாள் 20: இ-பப்ளிஷிங்
இன்றைய கொசுறு:
அறிமுகம் கூகிள் டிரெண்ட்ஸ். எந்த விஷயம் அதிகமாக பேசப்படுகிறது, உங்கள் துறையில் எது டாப், எந்த இடத்தில் எது டாப் டிரெண்ட் என இதில் பார்க்கலாம். உதாரணமாக உணவையும் யோகாவையும் எடுத்து செய்திருக்கேன். நீங்க முயலுங்க.
கூகிள் டிரைவ் டெஸ்க்டாப். இதனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் உங்கள் கூகிள் டிரைவில் இருக்கும் கோப்புகள் எல்லாம் உங்கள் கணினிக்கு வந்துவிடும். எளிதாக Sync ஆகிவிடும். பயன்படுத்தி கொள்ளவும்.
வேளையில் சேர்ந்த உடன், அஜைல் மீட்டிங், ஸ்க்ரம் மீட்டிங் என்று சொல்வார்கள். இப்ப எல்லாம் இது எல்லா நிறுவனத்திலும் இருக்கிறது. அதை பற்றிய ஒரு அறிமுகம். படங்களை பாருங்க.
இந்த அஜைல் மேனிபெஸ்டோ வெப்சைட் கூட பாருங்களேன். பத்து பதினைந்து ஆண்டா பார்க்கிறேன் எந்த மாற்றமும் இல்லை, தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு மாதிரி
ஒரு சின்ன 15 நிமிட ஸ்டாண்ட் அப் மீட்டிங். ஒரு தலைவர் இருப்பார். அவர் தான் ஸ்க்ரம் மாஸ்டர். மூன்றே கேள்வி. வரிசையா ஒவ்வொரு ஆளிடமும்..
(நீங்க சொல்லணும்)
1. நேத்து என்ன பண்ண ? 2. இன்னைக்கு என்ன பண்ண போற ? 3. இன்னைக்கு பண்ண போற வேலையில ஏதாவது பிரச்சனை இருக்கா (impediments)
அவ்ளோ தான். அப்புறம் போக போக நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
இதை ஒரு போர்ட்ல , செய்ய வேண்டிய பணி பட்டியல் (TODO), இன்று நடைபெறும் வேலை (IN PROGRESS), முடிந்து போன வேலை (DONE) என்று எழுதினால் அது தான் Scrum போர்ட். புரிஞ்சுதா ?
ஸ்பிரிண்ட் என்பார்கள். இது ஒரு கால அளவு. ஒரு திட்ட பணியை ஸ்பிரிண்ட் ஸ்பிரிண்ட் ஆக பிரித்து ஒரு ஸ்பிரிண்ட் 2 அல்லது 3 வாரம் என ஸ்ரம் மாசுடர் முடிவு செய்து, அதற்குள் என்ன என்ன செய்ய முடியுமோ அதை செய்து முடித்து டெமோ காட்டி விடுவார்கள்.
உதாரணமாக ஒரு கார் செய்ய வேண்டும்.
இந்த முதல் மூணு வாரத்தில் நாலு சக்கரம் மட்டும் செய்யலாம் என குழு தலைவர் முடிவு செய்து, அதை செய்யும் பணி. வேலப்பா, நீ ரப்பரை உருட்டு, கொட்டாச்சி நீ ரிம் பெயிண்ட் அடி, ரெண்டு அப்ரசண்டிக டியூப்ல காத்தை ரொப்பட்டும் என்பது போல.
முதல் ஸ்ப்ரின்ட் சக்கரம்.
அடுத்த ஸ்ப்ரின்ட் ஸீட்டு.
அடுத்தது எஞ்சின்.
அடுத்தது தேஷ் போர்ட்.
அப்படி 6-10 ஸ்பிரிண்ட் இல் மொத்த கார் வேலையும் முடியும். தினமும் சந்தித்து பிரச்சனைகளை பேசுவதன் மூலம், தொய்வு இல்லாமல் பணியை தொடர முடியும்.
8 வாரம் கழித்து அப்ரசண்டி வந்து கார் டயருக்கு காத்து அடிக்க பம்ப் இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்க்கவும்.
நீ புடுங்குறது பூரா தேவை இல்லாத ஆணி தான். வடிவேலு தி ஸ்க்ரம் மாசுடர்.
கொசுறு: பதிவு ஆரம்பிக்கும்போது முதலில் கிட் பற்றி சொல்லி இருந்தேன் அல்லவா. அதை தொடர்ந்து பயிற்சி செய்ய விரும்புபவர்கள் இந்த இரண்டு பக்கங்களையும் பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
உங்களிடம் 1000 மின்னஞ்சல் முகவரி இருக்கு அவர்கள் அனைவருக்கும் உங்கள் நிறுவனத்தின் ஒரு பொருளை வாங்க சொல்லி மின்னஞ்சல் போட வேண்டும்.
இதை நீங்க செய்தால் 100 பேர் கூட அதை திறந்து படிக்க மாட்டாங்க
10 பேர் கூட வாங்க முயல மாட்டாங்க
மின்னஞ்சல் என்பது மிக நல்ல தொடர்பு சாதனம் அதனை சரியாக பயன்படுத்தும்போது. இல்லை என்றால் just spam.
அதனால் தான் MailChimp போன்ற கருவிகளை இன்று சந்தையில் பயன்படுத்துகிறார்கள்.
நீங்க அனுப்பிய மின் அஞ்சலை
1. எத்தனை பேர் திறந்து படித்தார்கள் 2. அவர்களில் எத்தனை பேர் அதில் இருந்த சுட்டியை கிளிக் செய்தார்கள் 3. அவர்களின் வயது என்ன வாங்கும் திறன் என்ன, கல்வி தகுதி என்ன.
என்று அனைத்தையும் விரிவாக ஆராய முடியும்.
எந்த வகையான தலைப்பு இட்டால் பயனர்களை மின்னஞ்சல் திறந்து பார்க்க ஆர்வப்படுத்த முடியும்..
என்ன வகையான நிறங்களை விரும்புகிறார்கள்..
என்று A/B Testing செய்ய முடியும். இது என்ன புது வார்த்தை என குழம்ப வேண்டாம். இது பற்றி விரிவாக நாளை பார்க்க போகிறோம்.
வெறும் ஆங்கில அறிவை பயன்படுத்தி ஒரு டிவிட்டர் BOT ஐ கட்டி இருக்கிறார் பாருங்கள் ஒரு தம்பி. இவருக்கு எந்த நிரல் எழுதும் பயிற்சியும் இல்லை என்பது வியப்பு. இவர் பயன்படுத்தியது OpenAI வழங்கிய ChatGPT !!
முதலில் docs.google.com ஐ திறந்து கொள்ளுங்கள். அதில் உங்கள் கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளலாம்.
அதில் ஒரு blank document ஐ திறந்து கொள்ளுங்கள்.
ஒரு தலைப்பு கொடுத்து கொள்ளுங்கள்.
அதில் இன்சர்ட் என்ற மெனு ஆப்சன் பயன்படுத்தி உங்கள் கணினியில் இருந்து அப்லோடு செய்தால் அந்த படம் உள்ளே வரும்.
Insert - Image - Upload from Computer
அவ்வளவு தான். அதில் நீங்கள் இணையத்தில் இருந்து நேரடியாக தேடியோ, உங்கள் கூகிள் டிரைவில் இருந்தோ கூட படத்தை கொண்டு வரலாம்.
இப்போது நீங்கள் பைல் மெனு சென்று, டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் என்ன வகையான கோப்பாக தரவிறக்க வேண்டும் என்பதை சொல்லும். அதில் பிடிஎப் கோப்பை தேர்ந்து எடுத்து தரவிறக்கம் செய்தால் உடனே உங்கள் டவுன்லோடு பகுதிக்கு வந்து விழுந்துவிடும்.
மென்பொருள் துறையின் மிக முக்கியமான ஒரு விஷயம் நல்ல அழகான மின்னஞ்சலை எழுதுவது. சேல்ஸ் மார்க்கெட்டிங் மட்டும் அல்ல, சாதாரணமான விஷயங்களுக்கு கூட மேனேஜருக்கு ஒரு மின்னஞ்சலை எழுத நான் ஆரம்ப காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன்.
இன்று வார்மர் ஏ.ஐ போன்ற செயற்கை நுண்ணறிவு மின்னஞ்சல் எழுதி ஸ்பெல்லிங் கிராமர் தவறுகள் எதுவும் இல்லாமல் அசத்தலாம்.
உளவியல் ரீதியான மின்னஞ்சல் மூலம் உங்கள் செய்தி இன்னும் சிறப்பாக சென்று சேருவதை பாருங்கள்.
இந்த கம்போஸ் ஏய் (AI) ஐ பயன்படுத்தி மின்னஞ்சல் எழுதி பாருங்கள். இலவச குரோம் எக்ஸெடென்ஸன் ஆக கிடைக்கிறது. முயற்சி பண்ணி பாருங்க.
வாய்ப்பு கிடைக்கும்போது இது போன்ற சிறப்பான கருவிகளை பயன்படுத்தி நமது பணியை சிறப்பாக செய்ய தடையேதும் இல்லை. இது போன்ற கருவிகள் கடந்த ஆண்டு கிடையாது, இந்த ஆண்டு வந்துவிட்டது. செயற்கை நுண்ணறிவியல் நமது பணிகளை ரொம்ப எளிதாக்க போகிறது என நினைக்கிறேன்.
கல்வி துறையில் இருப்பவர் தனக்கு ஒரு புக்கிங் சிஸ்டம் செய்து கொடுக்க சொல்கிறார். ஆன்லைன் புக்கிங் எடுக்க வேண்டும், பேமண்ட் எடுக்க வேண்டும். நிரல் இல்லாமால் எப்படி செய்யலாம் ?
Zoho Booking
Setmore
காலெண்டெலி போன்ற இணையத்தில் கிடைக்கும் அப்பாயின்மென்ட் சிஸ்டம் மூலம் செய்யலாம்/
இதில் இருக்கும் வசதிகள். (உதாரணமாக இணையத்தை மட்டும் மையமாக வைத்து ஒரு தமிழ் ஆசிரியர் குழந்தைகளுக்கு zoom செயலி மூலம் சொல்லி கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த zoho புக்கிங் இல் உள்நுழைந்து ஒரு கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். பிறகு எந்த எந்த நேரத்தில் நீங்கள் இந்த பயிற்சி கொடுக்கிறீர்கள் என்பதை அதில் செட்டிங் செய்யலாம்.
என்ன பயிற்சி, என்ன நேரத்தில் செய்ய போறிங்க ? எப்ப விடுமுறை. ஒரு வகுப்புக்கு என்ன தொகை, என எல்லாம் முடியும்.
உங்களுக்கு ஒரு பே பால் கணக்கு இருந்தால், பணம் நேரடியாக உங்கள் வாங்கி கணக்குக்கு வரும்படி செய்யலாம்.
இதன் மூலம் வெறும் இணையத்தையும், உங்கள் திறமையையும் வைத்து உலகம் எங்கும் வகுப்பு நடத்தலாம்.
30 நிமிட வகுப்பு 1000 ரூபாய் என்றால் 60 நிமிட வகுப்பு 2000 ரூபாய் என சேவைகளை பிரித்து வைத்து கொள்ள முடியும்.
முதல் 15 நாளுக்கு இது இலவசம். ஆகவே முறையாக ஒரு வகுப்பை நீங்கள் உருவாக்கினால் / உருவாக்கி தந்தால் மாதம் 6 டாலர் என்பது சிறிய தொகை தான். அந்த தொகையையும் சேர்த்து உங்கள் வாடிக்கையாளர் அல்லது நீங்கள் பயனர்களிடம் வசூலித்து விட முடியும்.
இதன் மூலம்
- இணையம் மூலம் தமிழ் பயிற்சி
- இணையம் மூலம் மருத்துவம்
- இணையம் மூலம் சோதிடம்
- இணையம் மூலம் வணிக ஆலோசனை
என யார் வேண்டுமானாலும் ஒரு தொழிலை இணையத்தில் தொடங்கலாம். வெற்றி அடையலாம்.
இந்த நாளில் இணையம் மூலம் அப்பாயின்மென்ட் புக்கிங் செய்யும் மென்பொருளை எப்படி நாம் கட்டுவது அல்லது பிறருக்கு கட்டி தருவது என்பதை பார்த்தோம். இன்னொரு நாள் இன்னொரு வகுப்பில் ச(சி)ந்திப்போம்.
இயந்திரவியல் துறையில் - ரோபோட்டிக்ஸ் - விருப்பம் இருப்பவர்கள் பயன்படுத்த புரோகிராமிங், சிமுலேஷன் பற்றிய பதிவு. (செயற்கை நுண்ணறிவு நுட்பம் அடுத்து அங்கே தான் போகும் - ஐ படத்தில் பார்க்கும் சிட்டி ரோபோ செய்ய, அதை சிந்திக்க வைக்க).
இந்த இணைய தளத்தில் திறந்தமூல மென்பொருட்கள் பற்றிய தகவல் - உதாரணமாக நிரல் எழுத, மென்வடிவாக்க (சிமுலேஷன்), உள் வெளி இணைப்புகள் செய்ய (interoperate) நேரடியாக ஆங்கிலத்தில் சொன்னால்
Program your robots with ROS simulate them with Gazebo, interoperate your systems using Open-RMF.
இதில் ROS இலோ அல்லது Gazebo சிமுலேஷன் மென்பொருளிலோ அல்லது Open Robotics Middleware Framework (Open-RMF) நல்ல பயிற்சி, இருந்தால் உலகம் எங்கும் போக இலவச விசா டிக்கெட் கிடைத்தது போல.
வெறுமனே இந்த மென்பொருட்கள் மட்டும் பழகாமல் அதில் இருக்கும் குழுவில் (community) உங்கள் பங்களிப்பு மிக அதிகமாக இருக்க வேண்டும்.
இன்றைக்கு லட்சங்களில் ஆகும் ரோபோட் கை போன்ற வன் பொருட்கள் (hardware) வரும் காலத்தில் 20 ஆயிரம் ரூபாயில் கிடைக்கும். அப்போது அந்த கையை பயிற்சி கொடுத்து தொழில் சாலைகளில் என்ன என்ன கடுமையான, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய முடியும். அப்படி செய்ய வேண்டும் என்றால் காஸீபோ போன்ற சிமுலேஷன் மென்பொருட்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு தேவை.
நான் சொன்ன மூன்று விஷயங்கள் பற்றிய முழு தகவல்கள், சுட்டிகள் இந்த இணைய தளத்தில் இருக்கிறது, கெட்டியாக பிடித்து கொள்ளவும்.
ரோபோட் செய்து அதுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி கொடுக்க ஐஐடி யில் படித்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை பள்ளி கல்லூரி மாணவர்கள் கூட செய்யலாம் என்பதை இந்த தளத்தை பயன்படுத்தினால் - அதில் இருக்கும் கம்யூனிட்டி இல் செயல்பட்டால் தெரிந்துகொள்வோம். வாழ்த்துக்கள்.
இன்றைக்கு இருக்கின்ற சூழலில், நேரடி கேம்பஸ் / Off கேம்பஸ் இண்டர்வியுவிலும் - ஒரு நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியில் இணைத்துக்கொண்டு பணியாற்றிய சூழலிலும், அல்லது 10-15 ஆண்டு அனுபவம் நிறைந்த சூழலிலும் சிலர் அடுத்த பணி வாய்ப்பை நோக்கி போகிறார்கள்.
பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்த - புதிய கமிட்மெண்ட்ஸ் மீட் செய்ய - இருக்கும் பணி வாய்ப்பில் மேலே உயர எந்த வாய்ப்பும் இல்லாத சூழலை எதிர்கொள்ள - கேரியரில் எடுத்த பிரேக் முடிந்து மீண்டும் பணி சூழலுக்கு திரும்ப - என பல காரணங்கள் இருக்கலாம்.
அதைவிட என்ன படித்து எப்படி எந்த வேலைக்கு போவது என்ற குழப்பத்திலேயே படிப்பை முடித்து 3 - 4 ஆண்டுகள் ஆகி இருக்கலாம், போட்டி தேர்வுக்கு தயார் செய்ய முயன்று, அது முடியாமல் ஒரு வேலைக்காவது போய் விடலாம் என்று முயலலாம், அல்லது தொழில் தொடங்கி அதில் பெரிய வெற்றி ஏற்படாமல் போய் இருக்கலாம்
கடுமையான டிராபிக் ஜாம் இல் சிக்கி இருப்பவர்கள் மட்டும் படிக்கவும்.
சென்னையின் துணை நகரம் திட்டம் கைவிடப்பட்டது எப்படி ?
கலைஞர் 4 ஆவது முறை ஆட்சிக்கு வந்த போது நிறைவேற்றப்பட்ட திட்டங்களான இலவச டிவி இன்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று பேசப்படுகிறது.
ஆனால் அந்த தேர்தல் அறிக்கையில் இன்னும் ஒரு மாபெரும் திட்டம் ஒளிந்திருந்தது. சென்னைக்கு அருகில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் துணை நகரம் உருவாக்கப்படும் என்பது தான் அது.
தென் கொரிய நாடு இந்த ஆண்டு (2023), 1300 சர்வதேச மாணவ மாணவிகளுக்கு முழு கல்வி உதவி கொடுக்க இருக்கிறது. இந்த கல்வி உதவியில் கல்வி கட்டணம், வாழும் கட்டணம், விமான கட்டணம், மருத்துவ காப்பீடு கட்டணம் அனைத்தும் அடங்கும்.
இதில் தேர்ந்து எடுக்கப்படும் மாணவ மாணவிகள் கொரியன் எம்பசி மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் (இதற்கு நான் உதவ முடியும்). இதில் மாஸ்டர் டிகிரி 3 ஆண்டுகள் (முதல் ஆண்டு கொரிய மொழி, மற்ற இரண்டு ஆண்டுகள் கல்வி). கொரிய மொழி கற்க எளிதானது.
நான் 4 ஆண்டுகள் கொரியாவில் இருந்ததால் கொரிய மொழி பழக வேண்டியதாக இருந்தது, 3 மாதத்தில் ஓரளவு பேச கற்று கொண்டேன். (பல வார்த்தைகளில் தமிழின் தாக்கம் இருக்கும்)
ஆடி கார் நிறுவனம் Audi Hungaria Faculty of Vehicle Engineering ஹங்கேரியில் நடத்தும் இளங்கலை பட்ட படிப்பு (12 வகுப்பு படித்தால் இணையலாம்). மொத்தம் 7 செமஸ்டர். வேலை வாய்ப்பு உறுதி என்பதை சொல்ல தேவையில்லை.
விண்ணப்ப கட்டணம் 100 யூரோ , ஒரு செமஸ்டருக்கு 2600 யூரோ கட்டணம். வேலை பார்க்கும்போதே பார்ட் டைம் வேலை பார்த்து சம்பாதித்து மிக எளிதாக கட்டிவிடலாம். விசா போன்ற விவரங்களை நானும் முல்லை அக்கதமியும் இணைந்து செய்கிறோம்.
இதில் முதுகலையும் இருக்கிறது (இந்தியாவில் பி.இ படித்தவர்களுக்கு). மொத்தம் 4 செமஸ்ட்டர், செமஸ்டருக்கு 3200 யூரோ கட்டணம். (விண்ணப்ப கட்டணம் 100 யூரோ)
Launching MadeInIndia ecom B2B / B2C in Scandinavia / Nordic to Identify new markets for Tamil Nadu!
தமிழ் நாட்டில் தயாராகும் உடைகள், மற்ற பொருட்களை ஸ்கண்டிநேவியாவில் சந்தைப்படுத்த ஒரு இணைய தளத்தை கட்ட வேண்டும் என்பது என் கனவு.
இதில் முக்கியமாக நான் கொண்டுவர விரும்பியது உடைகள்.
சுவீடனில் பத்து மில்லியன் மக்கள் - மற்ற ஸ்காண்டிநேவிய நாடுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் (டென்மார்க் - பின்லாந்து - நார்வே), அல்லது மொத்த நார்டிக் நாடுகளும் என்றால் ஐஸ்லாந்து கூட இதில் வரும், ஆக 25 மில்லியன் மக்கள் தொகை. இது தான் நான் டார்கெட் செய்ய நினைக்கும் சந்தை.
கடந்த ஆண்டு நான் கேள்விப்பட்ட வரை, திருப்பூர் / கோவை / கரூர் போன்ற ஊர்களில் கடந்த சில ஆண்டுகளில் டெக்ஸ்டைல் துறை கடந்த காலங்களில் இருந்ததை போல இல்லாமல் சற்று மந்தமான நிலையில் - வெளிப்படையாக சொன்னால் சோடை போய் - இருப்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.