அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது?
புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள்.
அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள்.
இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.
ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள்.
அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.
பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியது தான் திருமுருகாற்றுப்படை.
செந்தமிழ்க் கடவுளாம் செந்திலங்கடவுளின் செம்மையான பண்புகளைப் பாராட்டி அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை.
தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு.
சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.
ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள்.
ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார்.
அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.
அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள்.
அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால்
ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.
சரி. நக்கீரர் எந்த வரிசையில் ஆற்றுப்படை வீடுகளை பட்டியல் இடுகிறார்?
முதற் படைவீடு – திருப்பரங்குன்றம்
இரண்டாம் படைவீடு – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
மூன்றாம் படைவீடு – திருவாவினன்குடி (பழனி)
நான்காம் படைவீடு – திருவேரகம் (சுவாமிமலை)
ஐந்தாம் படைவீடு – குன்றுதோறாடல் ( திருத்தணி )
ஆறாம் படைவீடு – பழமுதிர்ச்சோலை
மேலே குறிப்பிட்டிருப்பதுதான் நக்கீரர் பாடிய ஆற்றுப்படை வீடுகளின் வரிசை.
பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்புபடுத்தப்பட்டன.
காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப் பெருமான் தமிழர்களுக்குச் சொந்தப் பெருமானாய் ஆறுபடைவீடுகளிலும் வீற்றிருந்து அன்பு மாறாமல் அருள் புரிந்து கொண்டிருக்கிறான்.
கால மாற்றத்தில் தமிழ்நாடு என்று மாநிலம் உருவான போதும் ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அமைந்ததும் தற்செயல் அல்ல முருகனின் தமிழ்த் தொடர்பே என்பதும் கருதத்தக்கது.
தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும் நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.
கல்லணைக்கு கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி.
ஒரு காலத்தில் வரலாற்று புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்து தான் சோழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அச்சமயம் அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன.