வைசாக மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு "மோகினி ஏகாதசி" என்று பெயர்.
இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பவரும் படிப்பவரும் ஓராயிரம் கோ ( பசு ) தானம் செய்த புண்ணியத்திற்கு இனையான புண்ணியத்தை பெறுவர்.
விஷ்ணு பகவான் வைசாக மாத வளர்பிறை ஏகாதசியின் போது தான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
அதனால் தான் இதற்கு "மோகினி ஏகாதசி" என்ற பெயர் வந்தது.
பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியது போல்,
இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பதும் இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பதும் ஐதிகம்.
ஏகாதசி விரதம் பல புண்ணிய பலன்களை அருள வல்லது.
பாவங்கள் போக்கி, நல்லருள் தருவது.
அதிலும் மோகினி ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை அனுஷ்டித்தால் கருத்து வேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள்.
சீதைப் பிராட்டியைப் பிரிந்து வாடிய ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி,
தன் துன்பம் தீர்க்கும் வழியைத் தனக்கு உபதேசம் செய்யுமாறு, வசிஷ்ட முனிவரிடம் கேட்டார்.
இந்த உலகிற்கு மோகினி ஏகாதசியின் சிறப்பை உணர்த்தவே,
ராமபிரான் இவ்வாறு கேட்பதை உணர்ந்த வசிஷ்டர், குருவின் ஸ்தானத்தில் இருந்து ராமருக்கு மோகினி ஏகாதசியின் மகிமையை எடுத்துச் சொல்லி ராமபிரானை ஏகாதசி விரதம் அநுஷ்டிக்க உபதேசித்தார்.
கிருஷ்ணாவதாரத்தில், இந்த நிகழ்வினை தர்ம புத்திரருக்கு எடுத்துக்கூறும் பகவான் கிருஷ்ணர், மோகினி ஏகாதசியின் மகிமைகளையும் எடுத்துரைத்தார்.
சரஸ்வதி நதிக் கரையில் இருந்த பத்ராவதி நகரத்தை, சந்திர வம்சத்தைச் சேர்ந்த த்ருதிமான் என்ற மன்னன் ஆண்டு வந்தான்,
அந்த நகரில் தனபாலன் என்றொரு வியாபாரி இருந்தான். அவன் சிறந்த விஷ்ணு பக்தன், மனதாலும் யாருக்கும் தீங்கு நினைக்காதவன்.
அவனுக்கு சுமனஸ், த்யுதிமான், மேதாவி, சுக்ருதன், த்ருஷ்ட புத்தி என்று ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.
இவர்களில் த்ருஷ்டபுத்தி, துஷ்ட குணம் கொண்டவன்.
எப்போதும் போதையில் இருப்பது,
மாற்றான் மனைவியிடம் முறைகேடாக நடப்பது,
தெய்வமே கிடையாது என்று வாதாடுவது,
பக்தர்கள் மற்றும் பெரியவர்களை அவமானப்படுத்துவது போன்றவையே அவனது இயல்புகள்.
மகனது செயல்கள் தன பாலன் மனதை வருந்தச் செய்தது.
எனவே, அவனை வீட்டை விட்டு விரட்டினார் தனபாலன்.
அப்பாடா…. இனி நம்மைக் கேள்வி கேட்க யாரும் இல்லை.
இஷ்டம் போல் இருக்கலாம் என்று மனம் போனபடி வாழ ஆரம்பித்தான் த்ருஷ்ட புத்தி.
ஆனால், செலவுக்குப் பணம் வேண்டுமே! அதனால் திருடத் தொடங்கினான்.
களவாடிய செல்வத்தை தவறான செயல்களில் செலவழித்தான்.
அதனால், அவ்வப்போது காவலர்களிடம் சிக்கிக் கடும் தண்டனையும் அனுபவித்தான்.
ஆனாலும், அவன் திருந்துவதாக இல்லை.
வினை விதைத்தவன் வினையை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.
காலப்போக்கில், அவனது உடலில் பல நோய்கள் உண்டாகி, உயிர் வாழவே மிகவும் சிரமப்பட்டான்.
ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கழித்துக் கொண்டிருந்தவன்,
ஒரு நாள் காட்டில் கௌண்டின்ய முனிவரின் குடிலைக் கண்டான்.
முனிவர் கங்கையில் நீராடிவிட்டு குடிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருடைய ஈர ஆடையிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் சில திரிஷ்தபுத்தியின் மேல் விழுந்தன.
உடனே, அவன் மனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது.
அவன், தான் செய்த தவறுகள் அனைத்துக்கும் பிராயச்சித்தம் தேட நினைத்து முனிவர் காலடியில் விழுந்தான்.
திரிஷ்தபுத்தியின் கதையைக் கேட்ட முனிவர், “நான் எனக்கு தெரிந்த மிகக்குறைந்த நேரத்தில் உனது பாவங்களை அழிக்கக்கூடிய ஒரு முறையைக் கூறுகிறேன்.
பாவங்கள் செய்யப் பல வழிகள் இருப்பது போல,
அவற்றிலிருந்து விடுதலை பெறவும் பல வழிகள் இருக்கின்றன.
அவற்றுள் தலைசிறந்தது மோகினி ஏகாதசி விரதம்.
அன்றைய நாளில் விரதமிருந்து மனம், மொழி, மெய் ஆகியவற்றால் பெருமாளை வழிபாடு செய்.
அவ்வாறு பெருமாளை வழிபாடு செய்தால் உனக்கு,
உன் பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்” என்றார்.
திரிஷ்தபுத்தியும் தன் உயிர் பிரியும் நாள் வரை,
ஒவ்வொரு வருடமும் மோகினி ஏகாதசி நாளில் முனிவர் சொன்ன வண்ணமே விரதம் இருந்தான்.
இறுதியில் ஆயுள் முடியும் போது பாவங்கள் அனைத்தும் நீங்கி கருட வாகனமேறி, வைகுண்ட பதம் அடைந்தான்.
மோகினி ஏகாதசியின் பெருமையை உணர்த்தும் இந்தக் கதை ஏகாதசி மகாத்மியத்தில் உள்ளது.
இந்த நாளில் விரதமிருந்து, எட்டெழுத்து மந்திரத்தை ஸ்மரணம் செய்து,
நாளை துவாதசி திதியன்று பாரணை செய்து விரதம் முடிக்க வேண்டும்.
இந்த ஏகாதசியின் பலன், அதைக் கவனிக்கும் அதிர்ஷ்டசாலி ஆன்மாவை மாயையின் வலையிலிருந்து விடுவிக்கிறது.
இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் செய்து வர,
பிறவிப் பிணி நீங்கி இறைவனின் திருவடிகளைச் சேரலாம் என்பது நம்பிக்கை.
இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பவரும் படிப்பவரும் ஓராயிரம் கோ ( பசு ) தானம் செய்த புண்ணியத்திற்கு இனையான புண்ணியத்தை பெறுவர்.
பொதுவாக அஷ்டமி, நவமி திதிகள் மற்றும் கரி நாட்களில் தொட்டது துலங்காது என்பர்.
மேலும் இந்நாட்களில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது.
தொடர்ந்து கொண்டே போகும் என்பர்.
*அஷ்டமி :*
அஷ்டமி திதிகளில் சுப காரியங்களான திருமணம், கிரப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆனால் இந்நாள் தெய்வீக காரியங்களுக்கு தீட்சை பெறுவது,
மந்திரங்கள் ஜெபிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உகந்த நாளாகும்.
குறிப்பாக செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்றவையாகும்.