🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺
#BharathVruksh
3 : 4 : 3 : 2
🙏வாஸகர்களுக்கு ஒரு வேண்டுகோள்🙏
ராமர் அவதாரம் ஒரு இதிஹாஸம். இதைப் பற்றிப் பழைய புத்தகங்கள், வால்மீகி ராமாயணம் அறிந்தோர் ஆகியோர் கருத்துக்களோடு, எனது எண்ணங்கள் பெரும்பாலும் ஒத்துப்போயிருப்பது
திரு. சோ. ராமஸ்வாமி அவர்களின் எண்ணங்களோடு என்பதால், அவரது வால்மீகி ராமாயணப் புத்தகத்தையும் சான்றாதாரத்திற்காக எடுத்துக் கொண்டேன்.
இதில் உள்ள வரலாற்று நிகழ்வுகள் தவிர, சில இடங்களில் அவை வரலாற்றில் எதற்காக கூறப்பட்டுள்ளது என்பதற்கான எனது கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளேன்.
எனவே, எனது கருத்துக்களை வரலாற்றுக் கருத்துக்கள் எனக்கொள்ளாது, அவர்களின் வாழ்வியலை விளக்கும் ஒரு புரிதலுக்கான கருத்து எனப் பார்க்க வேண்டுகின்றேன்…🙏
"ஹே ராமா! உனது ”ராம” எனும் இரண்டெழுத்தை முப்போதும் ஜபித்தாலே அது
நன்மையும் செல்வமும் நல்கும்;
தீமையும் பாவமும் சிதைந்து தேயும்; மறுஜென்மமும் மரணமும் இன்றிப் போகும்... என்கிறார் கம்பர்.
அத்தகைய முக்தியை அளிக்கும் ராம நாமத்தை நாள்தோறும் ஜபித்து, பகவான் ஸ்ரீ ராமன் அவனது ஸரிதையை நல்வழியில் உரைக்க அவன் கடைவிழி அருள்மட்டும் வேண்டுகின்றேன்… 🙏🙏
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்தே தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண் டெழுத்தினால்!
(கம்ப ராமாயணம் – 13ம் ஸ்லோகம்)🙏
🌱ஸ்ரீ ராமர் அவதாரம் 🌱
பகவானின் ஏழாவது அவதாரம் ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தி என்னும் ஸ்ரீராமர்.
ஸூர்ய குலத்தில் ரகு வம்ஸத்தில், அவரது மகன் அஜன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் தஸரதன். இவர் ஸரயு நதிக்கரையில் அமைந்த கோஸல தேசத்தில், அயோத்தியில் சக்ரவர்த்தியாக இருந்து பாரத வர்ஷத்தை ஆண்டு வந்தார்.
கோஸலம் என்னும் நகரில் இருந்த ஒரு சிற்றரசன் மகளான இளவரசி கோஸலைக்கும் (கௌஸல்யா)
தஸரதனுக்கும் திருமணம் நடந்தது. அடுத்தது, கேகய தேசத்து இளவரசி கைகேயிக்கும் தஸரதனுக்கும் திருமணம் நடந்தது. இறுதியாக, மகர தேசத்து இளவரசி ஸுமித்ரைக்கும் தஸரதனுக்கும் திருமணம் நடந்தது.
ஆனால், மன்னனுக்குப் பல ஆண்டுகளாக மக்கட்பேறு இல்லாததால் வருந்தினான்.
தனது மந்திரிகள் மற்றும் குலகுரு வஸிஷ்டரின் ஆலோசனையின் படி, *ருஷ்யஷ்ருங்கர்* என்னும் முனிவரை அணுகி, அவர் துணையால், *அஸ்வமேத யாகமும்*, அதர்வ வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் *புத்ர காமேஷ்டி யாகமும்* செய்தான்.
அதிலிருந்து கிடைத்த அமிர்தத்தை (பாயஸம்), பாதி கோஸலைக்குத் தந்தான்.
அடுத்து இருந்ததில் பாதியை கைகேயிக்கும் ஸுமித்ரைக்கும் தந்தான். இன்னும் மீதமிருந்ததால், அதையும் இளையவளான ஸுமித்ரைக்கு தந்துவிட்டான்.
யாகம் முடிந்து பண்ணிரண்டு மாதம் கழித்து, கோஸலை பகவானின் அம்ஸத்தில் பாதியான ஸ்ரீ ராமர் என்பவரை ஈன்றாள்! மானுட வம்ஸத்தின் முதல் காவியம் பிறந்தது....
இவர் பகவானின் பாதி அம்ஸம் என்றே வால்மீகி கூறுகிறார். (கோஸல நகரம் என்பது தற்போதைய ஒரிஸ்ஸா/ஒடிஸா).
கைகேயிக்குப் பிறந்த குழந்தை பகவானின் கால்வாசி அம்ஸத்தைக் கொண்டு பிறந்த பரதன். (கேகய நாடே தற்போதைய கஸகஸ்தான்).
ஸுமித்ரைக்கு லக்ஷ்மணன் சத்ருக்ணன் என்னும் இருவரும் பகவானின் கால்வாசி அம்ஸங்களாகப் பிறந்தனர். ( மகர தேசத்தின் தற்போதைய பெயர் தெரியவில்லை. இவளுக்கு, ஆதிசேஷனான லக்ஷ்மனன் மற்றும் பகவான் கையிலுள்ள சக்கரத்தின் அவதாரமாக சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர் என்பது கம்பன் கூற்று.
வால்மீகி அவ்வாறு குறிப்பிடவில்லை.)
ஆறு வயதில், அவர்களது குலகுருவான வஸிஷ்ட முனிவரின் குருகுலம் சென்று சேர்ந்து, அவர்களிடம் வேத பாடத்தையும், க்ஷத்ரிய பாடத்தையும், க்ஷத்ரிய தர்மத்தையும் ராஜ்ய தர்மத்தையும் பயின்றனர்.
அங்கே அவர்களுக்கு, மந்த்ரங்கள் மூலம் அஸ்த்ரங்களைப் ப்ரயோகிக்கவும், பலவித சக்தியாகிய இறைவனிடத்து, ஒவ்வொரு மந்த்ரம் மூலம் தேவைப்படும் நேரத்தில் அஸ்த்ரங்களைப் பெறவும் கற்பிக்கப் பட்டது.
12 வருஷம் குருகுலம் முடிந்து முழு க்ஷத்ரியர்களாக, தஸரதன் முன் நிறுத்தினார் குரு வஸிஷ்ட முனிவர்.
(இதில் ஒரு சிறு விஷயம்… ராம ராஜ்யம் 1100 ஆண்டுகள் நடந்தது என்கிறார் வால்மீகி. க்ருத யுகமும், த்ரேதாயுகமும், மிக நீண்டவையாக இருந்திருக்கின்றன.
அப்படி இருக்கையில், இன்றைய வாழ்நாளை வைத்து, அன்று இத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க முடியாது என்பது மூடத்தனம்.
பிக்மீஸ் என்னும் குள்ள மனிதர்கள் 1-1 ½ அடி உயரம் கொண்டவர்கள். இன்றும் ஆஃப்ரிக்காவில் உகாண்டாவின் காடுகளில் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்நாளும் மிகக் குறுகியதே.
அதைக் கொண்டு நம் உயரத்தையோ, இன்று கிட்டத்தட்ட 100 வருடம் வரை நாம் ஆரோக்கியத்துடன் இருந்தால் வாழ முடியும் என்பதையோ
அவர்கள் கேலி செய்தால் அது அறிவொத்த செயலா? அது போலத்தான் இன்றைய நிலையை வைத்து, அக்காலத்தைக் கணக்கிடுவதும் நகைப்புக்கு உரியதாகும்.
மேலும், யுகங்கள் மாற மாற, மனிதன் உயரம் குறையும் என்கின்றன சில புராண நூல்கள். அதன்படி, அன்று 18 முதல் 24 அடி வரை மனிதன் உயரமாக இருந்தான்
எனக் கூறுவதையும் பொய் என நிரூபிக்க ஆதாரம் இல்லை. அகழ்வாய்வில் தற்போது பல இடங்களில் 8-12 அடி உயர எலும்புக் கூடுகள் எல்லாம் கிடைத்துள்ளன.
ஹனுமன் பாதம் எனக் கூறப்படும், மலையில் பதிந்த மனிதனின் பாதச் சுவடுகள் ஆதாரமாகக் கிடைக்கின்றன. எனவே, ஆதாரம் கிடைக்காத ஒன்றை,
பொய் எனக்கூறுவதை விடுத்து, ”பொய் என்பது இல்லாமல் இருந்த அன்றைய யுகங்களில், அதுவும் வால்மீகி என்னும் முனிவரால் எழுதப்பட்டது” என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வாக்கை விதண்டாவாதம் இன்றி ஏற்பது சரியாக இருக்கும் என நம்புகிறேன்….)
பின்னர், ஒரு நாள் விஸ்வாமித்ர முனிவர், தான் நடத்தும் யாகத்தில் சில அஸுரர்கள் தொந்திரவு செய்வதால் அவர்களிடமிருந்து யக்ஞத்தைக் காக்க ராம-லக்ஷ்மணர்களை தன்னுடன் அனுப்பும்படி வேண்டினார். முதலில் பயந்த தசரதன்,
”அவருடன் போவதால் ராமனுக்கு நன்மையே ஏற்படும்…. எனவே தயங்காமல்
ராமனை விஸ்வாமித்ரருடன் அனுப்புவாயாக தஸரதா….” என்னும் குரு வஸிஷ்டரின் புத்திமதியின் பேரில் ராமனுடன் லக்ஷ்மணனையும் அனுப்பி வைத்தான். அவர்களும் யக்ஞத்தைக் காக்கச் சென்றனர்.
🌱ராமாயணத்தில் அகஸ்த்ய முனிவர்🌱
ராமன் விஸ்வாமித்ரருடைய யக்ஞத்தைக் காக்கச் செல்லும் வழியில்,
சரயூ நதியின் தென்கரையில் அமைந்திருந்த தாடகா வனம் என்னும் இடத்திற்கு அவர்களை விஸ்வாமித்ரர் அழைத்துச் சென்றார். தாடகை என்னும் யக்ஷப் பெண், அவளது கொடூரமான புத்தியால் அகஸ்த்ய முனிவரத் தொந்தரவு செய்தாள்.
அதனால் சினமுற்ற அவர், “நீ கொடூர உருவத்துடன் அரக்கியாக ஆகக்கடவது”
என சபித்து விட்டார். அதனால் ஆத்திரம் கொண்ட தாடகை, எல்லா முனிவரையும் யக்ஞம் செய்ய விடாது துண்புறுத்தி வந்தாள்.
அவளை அழித்து யக்ஞத்தை ரக்ஷிக்கும்படி விஸ்வாமித்ரர் கூறவும், லக்ஷ்மணன் அவளின் அங்கங்களை அறுத்தெரிய, அவள் பல மாய வித்தைகள் செய்து மறைந்து தாக்குதல் நடத்தினாள்.
அவள் யக்ஞத்தைக் காக்க வந்தவர்களைக் கண்டு கோபமுற்று, கல்மழை பொழிந்து தொந்தரவு தந்தாள். அவளைத் தடுத்துக் கொண்டிருந்த ராமரிடம், அவளைக் கொல்லச் சொல்லி விஸ்வாமித்ரர் சொன்னதும் ராமர் தயங்கினார்.
Relief. Ramayana. Candi Parambanan, Indonesia
அதைக் கண்டு முனிவர் அவருக்கு தர்மத்தை எடுத்துக் கூறினார்.
स्वबाहु बलम् आश्रित्य जहि इमाम् दुष्टचारिणीम् | १-२४-३०
मत्नियोगात् इमम् देशम् कुरु निष्कण्टकम् पुनः ||
ஸ்வபாஹு பலம் ஆஸ்ரித்ய ஜஹி இமாம் துஷ்டசாரிணீம் |
மத்நியோகாத் இமம் தேஷம் குரு நிஷ்கண்டகம் புன: ||
Source : வால்மீகி ராமாயணம் – பால காண்டம் – ஸர்க்கம் 24.
(உனது வீரத்தின் பேரில் உனக்கு இருக்கும் தன்னம்பிக்கையைக் கொண்டு, அதர்மம் புரிபவரை நீ அழிக்க வேண்டும். என் வாக்கை ஏற்று, அவர்களை அழித்து தேசத்தை ரக்ஷிக்க வேண்டும்)
மேலும், பெண்ணைக் கொல்வதா எனத் தயங்காதே ராமா!
தாடகை பெண் என்றாலும், அதர்மம் புரிபவள். எனவே அவளை வதைப்பதே தர்மம் என்று கூறுகிறார். அவளை ராமர் வதம் செய்தார்.
அதுவே ராமரின் முதல் வதம். தாடகையை ராமர் வதம் செய்தது, அவரின் குரு விஸ்வாமித்ரரின் உபதேசத்தால் என்று வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
அவள் வதம் முடிந்ததும் விஸ்வாமித்ரர் ராமரிடம்,
“தர்ம சக்ரம்; காலச் சக்ரம்; விஷ்ணு சக்ரம்; இந்த்ராஸ்த்ரம்; வஜ்ராயுதம்; பாஸுபதாஸ்த்ரம்; தேவ சக்ரம்; ப்ரம்மசிரஸ்; ஆகியவற்றோடு மிக உத்தம ஆயுதமான ப்ரம்மாஸ்த்ரத்தையும் உனக்கு அளிக்கிறேன்….
மிக வல்லமை பொருந்திய மோதகி, ஸிகரி
ஆகிய கதாயுதங்களை அளிக்கிறேன்…. மேலும் தர்ம பாஸம்; வருண பாஸம்; பினாகம்; நாராயணாஸ்த்ரம்; ஆக்னேயாஸ்த்ரம் ஆகியவற்றையும் அளிக்கிறேன்….”
என ஆஸீர்வதித்து, மேலும் எண்ணற்ற அஸ்த்ரப் ப்ரயோகங்களையும் போதித்தார். பின்னர் மறு நாள் யக்ஞம் தொடங்கியது.
ஆறு நாள் நடந்த யக்ஞத்தின் இறுதி நாளில் மாரீசன், ஸுபாஹூ என்னும் இரு ராக்ஷஸர்கள் யக்ஞத்தைக் கெடுக்க பலவிதமாக தொந்திரவு செய்தனர்.
அவர்களுடன் போரிட்ட ராமர், மானவாஸ்த்ரம் என்னும் அஸ்த்ரம் கொண்டு, மாரீசனை தொலைவில் உள்ள ஸமுத்ரத்தில் வீழ்த்தினார்.
(இதில் ஸுபாஹூவைக் கொன்ற ராமர் மாரீசனை மட்டும் ஏன் கொல்லவில்லை?? இதற்கான பதிலைப் பின்னால் வரும் சரித்ரத்தில் பார்ப்போம்….)
ராம – லக்ஷ்மணர்களை ஆஸீர்வதித்த முனிவர்,
“ராமா! இந்த இடத்தின் பெயர் *ஸித்தாஸ்ரமம்*. ஸித்தி என்றால் கைகூடுதல். அதற்கேற்றபடி, நீ நினைத்து வந்த காரியம்
இங்கே கைகூடியது. உங்களது வீரத்தால் இப்பெயர் உறுதி செய்யப்பட்டதாகிறது.”
என்றார். பின்னர் விஸ்வாமித்ரர், ஜனகன் மிதிலையில் நடக்கப்போகும் யாகத்திற்குத் தாங்கள் செல்லப்போவது பற்றிக் கூறினார். மேலும், ஜனகர் பெற்ற சிவதனுஸு பற்றியும், அதை தேவ, கந்தர்வ, அரக்க, ராக்ஷதர்கள் முதற்கொண்டு
யாராலும் தூக்கக்கூட இயலவில்லை என்பதையும் கூறி, பல மன்னர்கள் அதில் நாணேற்ற முயன்று தோற்றதையும் கூறினார். மேலும், யாகத்திலும் இருந்து, அப்பேர்ப்பட்ட சிவதணுஸையும் பார்க்க வரும்படி ராமரை அழைத்தார்.
முனிவரின் உபதேசத்தால் அவர்களும், ஜனக மஹாராஜா ஆளும் மிதிலைக்குப் புறப்பட்டனர்.
வழியில் விசாலை நகரின் எல்லையில் ஓய்வுக்குத் தங்கினர். தனது நகர எல்லையில் மஹரிஷி வந்திருக்கும் செய்தி அறிந்த விசாலை நகர மன்னன் ஸுமதி, ஓடிவந்து அவரை வரவேற்று, அவருக்கு ஸ்ரமப்பரிஹாரப் பணிவிடை செய்தான்.
முனிவர் ராம – லக்ஷ்மணர்களை அவருக்கு அறிமுகம் செய்தார்.
அன்று இரவு அங்கே கழித்தனர். அப்போது முனிவர் அவர்களிடம்,
“மரீசி முனிவரின் மகன் கஷ்யப முனிவருக்கு திதி – அதிதி என இரு மனைவிகள். இதில் அதிதியின் மக்கள் மிகவும் தர்மவான்களாக, ஸுரர்களாகவும், திதியின் மக்கள் தீய புத்தியுடன், அஸுரர்களாகவும் இருந்தனர்.
இதனால் ஸுரர்கள் பாற்கடலின் அமிர்தத்தை உண்டால் நித்யவாழ்வுடன் நல்விதமாக வாழலாம் என்பதறிந்து, அஸுரர்களையும் உதவிக்கு அழைத்தனர்.
மந்தார மலையை மத்தாகவும், வாஸுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடைய, முதலில் ஹாலஹால விஷம் வந்தது. அதைத் தாங்கக் கூடியவன் சிவனே என்பதால்
விஷ்ணு பகவான் சிவனிடம் கூற, அவர் அதை உள்ளங்கையில் ஏந்தி விழுங்கினார். அதைப் பார்வதி கண்டத்தின் முன் அழுத்தியதால் அங்கே நின்றுவிட்டது.
(ஆண்களுக்கு கழுத்தில் கண்டம் நன்கு தெரியும். அதன் காரணம் சிவனை நாம் மறவாதிருக்க எனவும் கூறுவார்கள்.)
பின், காமதேனு, ஐராவதம், கற்பக வ்ருக்ஷம் என எல்லாம் வந்தது. மஹாலக்ஷ்மி தோன்றி விஷ்ணுவின் மார்பில் ஐக்கியமானாள்.
இறுதியில் அமிர்தகலசம் வந்தது. அதைத் தட்டிப்பறித்த அஸுரர்களிடமிருந்து, மோகினி வடிவில் வந்த விஷ்ணு அதை வாங்கி, ஸுரர்களுக்குத் தந்து விட்டார்.
பின் நடந்த ஸுர – அஸுர யுத்தத்தில் அஸுரர்கள் அழிந்தனர்.
இதனால் கோபமான திதி, இந்த்ரனை அழிக்கும் புத்ரன் வேண்டி கடுந்தவம் இருந்தாள். இந்த்ரன் அவளுக்கு வந்து பணிவிடைகள் எல்லாம் செய்து வந்தான். அதனால் மனம் குளிர்ந்தவள் ஒருமுறை சிறிது கண்ணயர்ந்தாள்.
அந்த சமயம் பார்த்து, இந்த்ரன் தனது வஜ்ராயுதத்தால் அவள் கர்பத்தை ஏழாகச் சிதைத்துவிட்டான். இதன் காரணத்தைக் கேட்ட போது, ”அயர்கையில் உங்கள் தலைமுடி காலில் பட்டு, தவத்தில் தீட்டு உண்டானது. அதனால், அந்நேரத்தில் அக்கருவை சிதைத்தேன். இது லோகத்துக்கு நாஸம் தரும் முடிவு.
எனவே இந்த தவத்தை ஒழித்திடுங்கள்” என வேண்டினான். அவள் தன் தவறுணர்ந்து, சிதைந்த கரு ஏழு புதல்வர்களாக வரவேண்டும், அவர்கள் நிரந்தரமாக தேவலோகத்தில் இருக்க வேண்டுமென வேண்டினாள்.
அதன்படி ஏழு ம்ருத்யுக்கள் தோன்றினர். பின்னர் தேவலோகத்தில் சஞ்சரிக்கத் துவங்கினர்.
அந்த திதி தவம் புரிந்த இடத்தில், *விசாலன்* எனும் மன்னன் ஒரு நகரை நிர்மாணித்தான். அவன் வம்ஸத்தில் வந்த *ஸுமதி* என்னும் மன்னன் தான் நம்மை வந்து பார்த்தவர்” என அவ்விடத்தின் வரலாற்றைக் கூறினார்.
மறுநாள், விசாலை நகரம் நீங்கி, மிதிலை நகர் நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அழகிய அந்நகரம் நோக்கி, ஒரு வனத்தின் வழியே போகையில், ஒளிமயமான சிறு குடில் ஆளரவமின்றி இருந்தது. விஸ்வாமித்ரர் ராமரிடம்,
“இது கௌதம ரிஷியின் குடில். அவர் மனைவி அஹல்யை அழகு பொருந்தியவள். ஒரு முறை கௌதமர் ஸ்நானம் செய்யச் சென்றபோது, இந்த்ரன் அவளை அடைய எண்ணி, கௌதமர் வடிவில் வந்தான்.
வந்தது யார் என அஹல்யை அறிந்து விட்டாள்.
ஆனாலும், “இந்த்ரனே ஆசைப்படும் அழகியாக இருக்கிறேன்” என்னும் அஹங்காரம், அவனது அழைப்புக்கு இசைய வைத்தது.
அவனுடன் கூடிய அஹல்யை, தன் கணவர் திரும்பி வருவதற்குள் சென்றுவிடும்படி இந்த்ரனைக் கூறுகிறாள். தனது தபோ பலத்தால், இங்கே நடப்பவற்றை
உணர்ந்த முனிவர், இந்த்ரன் திரும்புவதற்குள் அங்கே தோன்றுகிறார்.
இந்த்ரனைப் பார்த்து, “ரிஷி பத்னி எனத் தெரிந்தும், தகாத முறையில் நடந்த நீ ஆண்மை இழந்து போவாய்” எனச் சபித்தார்.
அஹல்யையைப் பார்த்து, “ஒழுக்கம் தவறிய நீ, உண்ண உணவின்றி, காற்றை மட்டுமே ஸ்வாஸித்து,
யார் கண்ணிலும் படாமல், புழுதியில் புரண்டு வாழ்வாய். உன் தவறை உணர்ந்து தவம் இயற்றினால், இந்த யுக முடிவில், தூயவனான ராமன் இங்கே வருவான்.
அவனைப் பூஜிக்க, உனது மனம் பரிஸுத்தம் அடையும். அதனால் நீ பழைய உருவை அடைந்து, பின்னர் என்னை வந்து சேருவாய்.”
எனச் சபித்து,
இமயத்தில் தவம்புரியச் சென்று விட்டார். பல்லாயிரம் வருஷங்களுக்கு முன் அவர் வாழ்ந்த குடில், அவரது தவ வலிமையால் இன்றும் அப்படியே இருக்கிறது. ராமா! வா, அதில் உள்ளே நுழையலாம்…”
எனக்கூறி, ராம-லக்ஷ்மணர்களுடன் உள்ளே போகிறார். அவரது பாதம் குடிலில் பட்டதும், உருவமின்றி இருந்த அஹல்யைக்கு
பழைய உருவம் கிடைக்கிறது. அவள் மஹரிஷியையும் ராமரையும் வணங்கி, தன் பாவத்திலிருந்து விடுபடுகிறாள். விடுபட்டு, மீண்டும் கௌதமரைச் சென்று அடைகிறாள்.
(கம்ப ராமாயணத்தில் கல்லான அகல்யை எனப் பாடுவார். இது கம்பனின் கற்பனையே.)
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
