Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture
Poet, Author, Writer, Samskritam Teacher, Temple Architecture and Cultural Science Researcher, and a Proud SANADHANA BHARATHY... MODI KA PARIWAR👍

Jul 12, 2020, 48 tweets

🌺Bharatha Varsham and Sanadhana Dhamram🌺

#BharathVruksh

🌱2) லக்ஷ்மணன் வாழ்க்கை🌱

இவர் ஆதிசேஷனின் அம்ஸம் எனக் கூறுகிறார் வால்மீகி. சிறு வயது முதலே ராமரைப் பிரியாதவர். இவரும் அனைவரையும் மதிக்கும் குணம் உடையவரே. ஆனாலும், சிறிது முன்கோபம் கொண்டவர்.

தமையன் ராமர் மீது அளப்பரிய பக்தி கொண்டவர்.

ராமரையும் ஸீதையையும் தாய் – தந்தை ஸ்தானத்தில் வணங்கியவர். ராமரைப் போலவே, தனது மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணின் முகத்தையும் நிமிர்ந்தும் பார்க்காதவர்.

ஸீதையின் அணிகலன்களைப் பார்க்கச் சொல்லி ராமர் கூறிய போதும்,

தினமும் அவர் பாதம் பணிவதால், காலின் மெட்டியைத் தவிர வேறேதும் தெரியாது எனத் தமையனிடம் கண்ணீர் உகுத்தவர்.

சிவதனுஸை உடைப்போரில்லை என ஜனகன் கூறியபோதும், கானகம் செல்லத் தந்தை கைகேயிக்கு வரமளித்த போதும், அவர்கள் இருவரையும், தனது தமையன் பேரில் கொண்ட பக்தியால் எதிர்த்தவர்.

தனது தமையனுக்கு வலக்கரமாக, அவரது நிழலாக வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவர். ராமருக்கு முன்னரே ஜலஸமாதியை அடைந்து, மீண்டும் அவர் வருகைக்காகக் காத்திருந்தார்.

🌱அது கூறும் தர்மம் 🌱

மூத்தோர் என்பவரது முக்கியம் இவ்ரால் உலகுக்குத் தெரிகிறது. தன்னை நெறிப்படுத்தும் தமையனுக்கு துன்பம் எனில்,

தான் முன்னின்று அதனை ஏற்பது தான் தர்மம் என்பது கூறப்பட்டுள்ளது. அதர்மம் செய்கினும் மூத்தோரிடம் கோபம் காட்டுதல் ஆகாது என்பதும் தர்மமானது.

இதனால் அவர் பல நன்மைகளை இழப்பார் என்பது, ராமருக்கு விஸ்வாமித்ரர் அளித்த சில விசேஷ அஸ்த்ரங்களை லக்ஷ்மணனுக்குப் பயிற்றுவிக்காததில் தெரிகிறது.

இதை அவர் இழந்ததன் காரணம் அவரது முன்கோபம். எனவே ஒரு மனிதன் கோபத்தால், நன்மைகளையும் இழக்க நேரிடும் என்பதற்கு இவர் உதாரணம்.

🌱3) தஸரதனின் வாழ்க்கை 🌱

முதல் க்ஷத்ரியன் முதல் துவங்கி, அரசர்கள் அனைவரும் பிற மன்னர்களை நட்பு முறையிலோ, போரில் வென்றோ தனது ராஜ்யத்துடன் இணைப்பதன் மூலம்;

ஒருவன் மன்னனாகி, பேரரசனாகி, இறுதியில் சக்ரவர்த்தி ஆகிவிட்டான். சக்ரவர்த்தி என்றால், அவன் வென்ற அனைத்து ராஜ்யங்களுக்கும் தனி அதிகாரம் இல்லை; அவையும் இவன் கீழே வந்துவிடும்.

இன்றைய முதல்வர் – ப்ரதமர் போல. தஸரதன், சுற்றியுள்ள தேசங்களை வென்றோ அல்லது நட்பு கொண்டோ, தனதுடன் இணைக்கையில்,

அவர்களது மகள்களையும் மணந்து விடுவார். 4 மகள் இருந்தால், நால்வரையும் மணப்பார். ஏனென்றால், நாளை வேறொருவன் ஒரு பெண்ணை மணந்தால், அவள் தகப்பன் போரென வருகையில் யார் பக்கம் நிற்பது எனும் ப்ரச்சனை வரும்.

மேலும், எதிரிகளே உருவாகக் கூடாது என்பதால் தான் மன்னர்கள் அவ்வாறு திருமணம் செய்தனர்.

ஆனால், முறையாகக் கரம் பிடித்த முதல் மனைவிக்கே சக்ரவர்த்தினி (அ) ராஜமாதா என்னும் மரியாதை இருக்கும்.

தஸரதனுக்கு 60,000 மனைவிகள் என்பர். அப்படியெனில் அது சரியான எண்ணிக்கையில் அல்ல. அத்தனை மனைவிகள் என்பதை பெரிதாகக் காட்டவே 60,000 எனக் கூறினர். இதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தஸரதர் கைகேயியிக்கு கொடுத்த வரத்தை அவள் கேட்டபோது, அதைத் தரமுடியாமல் அவர் தவிக்கின்றார். அப்போது வஸிஷ்டர் அவர்களிடத்தே வந்து பேசுகிறார்.

கைகேயி சமாதானமாகாத போது, தஸரதன் அவ்வரங்களை திரும்பப் பெறுவதாகக் கூறுகின்றார். அப்போது வஸிஷ்டர்,

”ஒரு மனிதன் தான் செய்வதாகச் சொன்ன தர்மம் ஒன்றைச் செய்யாமல் விட்டால், அவன் வாழ்வில் செய்த எல்லா தர்மங்களும் பயணற்றுப் போகும்” என்கிறார்.

🌱அது கூறும் தர்மம் 🌱

மண்ணின் மேல் அரசர்களுக்கு ஆசை அதிகமானது. அது, இந்த புவிமுழுதும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.

இந்த மாற்றத்தின் செயலே, சக்ரவர்த்தி எனும் பதவி உருவாகக் காரணமானது.

தான் இறந்த பிறகு, தனது வாரிசுகளில், தனக்கு அடுத்து நாட்டை நிர்வகிக்க வல்லவன் யார் என்பதை ஒரு மன்னன் முடிவு செய்து, அதை அறிவிப்பது போல யுவராஜன் என்னும் பட்டம் தந்து,

அதை ஊர்ஜிதப்படுத்திப் பொறுப்பளிக்க, பட்டாபிஷேகம் செய்து வைக்க ஆரம்பித்தான். அதனால், அரச பதவிக்கு சண்டை இல்லாமல் இருக்கவும், அரசாட்சியில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கவுமே இந்த ஏற்பாடு எனப் புரிகிறது.

அரசர்கள் சம்மந்தம் செய்து கொண்டாலும், பெண் வீட்டார் என்பதால்

ஒருவரை இழிவாகப் பேசவில்லை. அரசர்கள் நாட்டு மக்களுக்கு என்ன விருப்பம் என்பதை கவனித்தே காரியங்களைச் செய்தார்கள்.

அரசர்களின் தர்மம் மக்களைச் சார்ந்தே இருந்தது. உயிர் போகும் நிலையிலும், எப்படிப்பட்ட கஷ்டத்திலும், கொடுத்த வாக்கைக் காக்க வேண்டும் என்ற ராஜ தர்மம்

இங்கே வஸிஷ்டரால் வலியுறுத்தப் படுகின்றது.

🌱4) ராவணன் வாழ்க்கை 🌱

ப்ரஜாபதி புலஸ்தியரின் பெயரன் (பௌத்ரன்).
விஸ்ரவஸ் முனிவருக்கும் அஸுரகுலத் தலைவர் ஸுமாலியின் மகள் கேகஸிக்கும் பிறந்தவன்.

உத்ரப்ரதேசம் மாநிலம் நொய்டாவிலிருந்து
10 Km தொலைவில் உள்ளது பிஸ்ரக்.

விஸ்ரவஸ் முனிவரின் பெயரில் ’விஸ்ரஸ்' என அழைக்கப்பட்டு, பின்னர் பிஸ்ரக் என மருவியதாகத் தெரிகிறது. ஜலால்பூர் என்பது இஸ்லாமிய வருகையின் போது இணைக்கப்பட்டு, தற்போது பிஸ்ரக் ஜலால்பூர் என வழக்கில் உள்ளது.

நல்ல அழகன். மந்திர – தந்திர – தாந்த்ரீகங்களில் கை தேர்ந்தவன்.

மிகப் பெரிய சிவ பக்தன். தனது தவவலிமையால் சிவனையே ஸ்தம்பிக்க வைத்தவன் ஆதலால் ராவணேஸ்வரன் (ராவண + ஈஸ்வரன்) என்னும் பட்டம் பெற்றவன்.

யாழ் / வீணை என்னும் இசைக்கருவி வாசிப்பதில் வல்லவன். ஸாம கானம் பாடுவதில் சிறந்தவன். நடனக் கலையிலும் தேர்ச்சி பெற்றவன். மிகுந்த பராக்ரமசாலி.

நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்து நாட்டை நிர்வாகம் செய்தவன். குபேரனின் ஒன்று-விட்ட சகோதரன்.

அவனது ஆட்சியைக் கைப்பற்றி, குபேரனிடம் இருந்து புஷ்பக விமானத்தையும் கைப்பற்றியவன். ஆறு வகை சாஸ்த்ரங்களும் நான்கு வகை வேதங்களும் நன்கு கற்றவன்.

எனவே தான் பத்து தலை ராவணன் எனப்பெயர் என்றும் கூறப்படுகிறது. க்ஷத்ரிய – ராஜ்ய தர்மம் நன்கு அறிந்தவன்.

அவனது 3 மனைவிகள்

மண்டோதரி (மந்த + உதரம் = சிறுவயிறு – மெல்லிடையாள்).
மாயா
தாண்யமாலினி.

Raavana shaking Mount Kailash, the Abode of Siva - Bas-relief, Banteay Srei, Cambodia

ஏழு மைந்தர்கள்

யுவராஜன் மேகநாதன் (இந்த்ரஜித்),
அதிகயா,
அக்ஷய குமாரா,
தேவந்தகா,
நரந்தகா, (நராந்தகா – தேவாந்தகா – இரட்டையர்கள்)
திரிசிரா
பிரஹஸ்தா.

லங்காபுரி என்னும் தேசத்தை ஆண்டு வந்ததால், லங்கேஸ்வரன் என்னும் பெயர் கொண்டவன்.

இத்தனை நல்ல குணங்கள் இருந்தும், காமாந்தகனாக இருந்ததால், வாழ்வில் அழிந்தவன்.

குபேரனின் மருமகளான ரம்பையிடம் தவறாக நடக்க முயன்றதால், அவள் “சுய விருப்பமற்ற எந்தப் பெண்ணை நீ தீண்டினாலும், உன் தலை சுக்கல்களாகச் சிதறும்” எனச் சாபமிட்டாள். அதாவது, தீண்டுதல் என்பது தொடுதல் அல்ல…

அவர்களிடம் காம இச்சை அனுபவித்தல்.

மேலும், காளகேயர்களை வெல்லும் போது, தனது தமக்கை ஸூர்ப்பனகையின் கணவன் வித்யுஹ் ஜிக்வன் என்பவனைக் கொன்றான்.

அவன் தனது தேசத்தின் அருகிருந்த பத்து தேசங்களுக்கு அரசனாக இருந்ததால், பத்து ராஜக்ரீடம் தரித்தவன் என்னும் பொருளில் தான்,

பத்துத் தலை ராவணன் எனப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. இது போன்ற, மறை பொருள் கொண்ட பூடக வார்த்தைகளைத் தான் பழைய எழுத்துக்கள் எல்லாவற்றிலும் பயன்படுத்தியிருப்பர்.

🌱ராவணனும் கோண்டு மக்களும்🌱

மத்தியப் பிரதேசம், குசராத், மஹாராஷ்ட்ரா, மற்றும் ராஜஸ்தானில் வசிக்கும்

கோண்ட் (Gond or Gondi) என்ற பழங்குடி மக்கள் ராவணனின் பிறந்த இடமான பிஸ்ரக் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். இது தில்லியின் கிரேட்டர் நொய்டா அருகில் உள்ளது.

ராவணனுடைய மனைவி மண்டோதரி, மத்தியப் பிரதேசத்தில் விதர்ப்ப தேசம் என்றழைக்கப்பட்ட விதிஷாவில் பிறந்தவர்.

ராவணனனைத் தங்கள் பரம்பரையில் வந்தவர் என்பதால், கோண்ட் இனத்தவர்கள், தாங்கள் குடியேறும் இடங்களில் ராவணனுக்குச் சிலையெழுப்பி, தஸரா காலத்தில் துக்கம் அனுஷ்டித்து கடைசி நாளில் ராவணனுக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர்.

ராவணன் கோவில், பிஸ்ரக், கிரேடர் நொய்டா, உத்தர பிரதேசம்,

ஆகிய இடங்களில் இந்தியாவில் உள்ளது.

மத்தியப் பிரதேசம், விதிஷா மாவட்டம், ராவண கிராமம் எனுமிடத்திலும் ராவணன் கோவில் உள்ளது. இந்த கிராமத்திலுள்ள ஆயிரகணக்கான கன்யா குப்ஜா பிராமண பிரிவை சார்ந்தவர்களால் இங்குள்ள ராவணன் கோவிலில் பூசைகளும் ,நெயவேத்தியங்களும் தினமும் அனுசரிக்கப்படுகின்றன.

உத்தர பிரதேசம், கான்பூரில் ராவணன் கோவில் உள்ளது. சில நுற்றாண்டுகளுக்கு முன் சிவஷங்கர் என்னும் மன்னனால் இது கட்டப்பட்டது.

இது வருடத்திற்கு ஒருமுறை தஸரா தினமன்று திறக்கப் படுகின்றது. அன்று ராவணனின் நலனுக்காக சிறப்பு இங்கு பூஜைகளும் சடங்குகளும் செய்யப்படுகின்றன.

குஜராத், ஜோத்பூர் / மண்டூர் ஆகிய இடங்களில் ராவணன் கோவில் உள்ளது. தேவ் பிராமண இனத்தவர்களால் இந்த கோயிலில் பூஜை மேற்கொள்ளபடுகின்றன.

இவர்கள் தாங்கள் ராவணனின் வழிதோன்றல்கள் என கூறுகின்றனர், மேலும் ராவணன் இறந்த தினமான தஸரா அன்று ராவணனுக்கு துக்கம் கடைபிடிப்பதோடு,

அன்றைய தினம் பிண்டம் வைத்து தென்புலத்தார் கடனையும் தவறாமல் செய்து நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

🌱அது கூறும் தர்மம் 🌱

மனித உருவில் இருந்தாலும், அஸுரர்கள் கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்களாக, அதிகார ஆசை கொண்டவர்களாக, காமாந்தகர்களாக இருந்தனர்.

ஈஸ்வரனெனப் பெயர் பெற்ற மன்னன் ராவணனும், பெண் ஆசை என்னும் மோகத்தால் தவறிழைத்தான்.

அவர்களில் பக்தி என்பது இருந்தாலும், செயல்களில் பக்தர்களின் மேல் ஒரு குரூரம் இருந்து கொண்டு தான் இருந்தது. ’தான்’ என்ற சுயநலம் மிகவும் அதிகமாக இருந்தது.

இதற்காக, அவர்கள் எப்பேர்ப்பட்ட சொந்தங்களையும் இழந்தார்கள் தயக்கமின்றி.

எனவே காலமாற்றம் இவன் வாழ்க்கை மூலம், உடல் வலிவைத் தாண்டி, தர்மப்படி வாழ வேண்டும், நம் பந்தங்களின் அன்பை அனுசரித்துப் போக வேண்டும், பிறன்மணை விழையாமை என்பது வேண்டும் என்பதைக் கூறிவிட்டது.

எனவே, பிறன் மனை தீண்டல் என்பது அதர்மம் என்பது ஆரம்பித்து விட்டது என்பதும் புரிகிறது. 'தான்’ என்ற அஹங்காரம் அளவுக்கு மீறி ஆணவமாக மாறிவிடக் கூடாது.

இப்படிப்பட்ட காரணங்களால் தான் ராவணன் அழிந்தான். அன்றில் இருந்தே தர்மத்தைக் காக்கப் போராட்டம் ஆரம்பம் ஆனது.

🌱5) பரதன் வாழ்க்கை 🌱

உறவின் மதிப்புகள் பெரிதும் பெருமை கொண்டது இவனால். சிறு பிராயம் முதலாக, பெற்றோர், ஆச்சார்யன் இவர்களது வாக்கை மீறாது நடந்தவன்.

தாயின் மேல் அதீத பக்தி கொண்டவன். தமையன்களிடத்து அபரிமிதமான பாசம் உடையவன். ராமர், லக்ஷ்மணனுக்கு வழிகாட்டியது போல;

சத்ருக்ணனுக்கு வழிகாட்டியாக இருந்தவன். மிகவும் அமைதியான குணம் உடையவன். தீமைக்குப் பொங்குபவன். தர்ம நெறி தவறாதவன்.

ஸுகபோக வாழ்க்கை கிடைத்தும், பிறர் உரிமை மேல் ஆசைப்படாது இருந்தவன்.அதை வாயால் மட்டும் கூறாமல், வாழ்க்கையில் 14 ஆண்டுகள் வாழ்ந்தும் காட்டியவன்.

ஸுகபோகம் துறந்து அரச பதவியில் அமரவில்லை ஆயினும், தமையன் இல்லாப் பொழுதில், தனது கடமையை உணர்ந்து அதன் காரியங்களை நந்திக்ராமத்தில் துறவிக் கோலத்தில் இருந்தே ஆற்றியவன்.

தர்மம் தவறியதற்காக, தான் பக்தி கொண்ட அன்னையையும் ஒதுக்கியவன். அவனது நற்குணத்தால் அனைவராலும் ஆசீர்வதிக்கப்பட்டு,

காலம் உள்ளவரை அழியாப் பெயர் பெற்றவன்.

🌱அது கூறும் தர்மம் 🌱

தந்தை வாக்கே தெய்வ வாக்கு என்னும் தர்மத்தில் ஆரம்பித்து, பின்னர் அதையும் தாண்டி, குடும்பத்தின் அனைத்து உறவுகளுக்கும் மதிப்பு உண்டானது. பெற்றோருடன் மூத்த சகோதரர்களும் அதீதமாக மதிக்கப் பட்டனர்.

அதற்காக தந்தையின் வாக்கு தவறெனில், சுட்டிக்காட்டும் நிலை ஆரம்பித்தது. தந்தைக்கு நிகராக மூத்த தமையன் மதிக்கப் பட்டான்.

வனவாசத்திலும், பாதரக்ஷை என்பது கூட யுவராஜனாக அறிவிக்கப்பட இருந்தவருக்கே உரித்தானது. க்ஷத்ரிய தர்மம் அரசர்களால் மீறப்படவில்லை.

தனக்கு உரிமை அற்றதன் பேரில் ஆசையற்று இருக்கும் பண்பு வளர்ந்திருந்தது. வாக்குகள் பெரிதாக மதிக்கப்பட்டன. அதை மீறுவது அதர்மம் எனப்பட்டது.

🌱6) குஹனின் வாழ்க்கை 🌱

குஹன் ராமரின் பால்ய ஸ்நேகிதன் ஆனாலும், அவன் நதிகளை ஒட்டிய காடுகளில் வாழ்ந்து வந்த,

*நிஷாதர்கள்* என்னும் வகையைச் சார்ந்த காட்டுவாசிகளின் அரசன்.

அடுத்து, கம்பன் தனது காவியத்தில், “குஹன் ராமனுக்குத் தேனும், மீனும் அளித்தான். ராமர் அதை ஏற்றுக் கொண்டார்” எனக் கூறுவது, கம்பனின் குஹனைப் பற்றிய கற்பனைக்கான விளைவே அன்றி உண்மையில்லை.

ஏனெனில், அன்றைய மனிதர்கள் அனைவரும் சைவ உணவே உண்டனர். அசைவம் உண்பவர், அஸுரர் மற்றும் ராக்ஷஸர்கள் மட்டுமே.

எனவே, காட்டின் அரசன் குஹன். மேலும் கங்கையின் அருகே குடியிருந்து, படகோட்டி வாழ்க்கை நடத்தினான் ஆதலால், காட்டிலிருந்து தேனும், ஆற்றிலிருந்து மீனும் கொடுத்தான் என

கம்பர் கற்பனை செய்து பாடியிருக்கிறார்.

🌿கம்பராமாயணம்–குகன் படலம்–பாடல் 14🌿

”இருத்தியீண்டு என்னலோடும் இருந்திலன் எல்லைநீத்த
அருத்தியன் தேனுமீனும் அமுதினுக்கு அமைவதாகத்
திருத்தினென் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் – என்னவீரன்
விருத்தமாதவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான்”

ஆனால், வால்மீகியின் ஸ்லோகத்தில், குஹன், சாதம், கிழங்கு, பழம், பழரஸம், நீர் முதலியவை தருவதாகத்தான் குறிப்பிட்டுள்ளார். எனவே, ராமனின் காலத்திலேயே வாழ்ந்த வால்மீகியைப் பின்பற்றி எழுதும் ராம ஸரித்திரத்தில், அவர் வார்த்தையை எடுத்துக் கொள்வதே சரியெனப் படுகின்றது.

🌱அது கூறும் தர்மம் 🌱

இவன் ராமனுக்கு ஆத்ம ஸ்நேகிதன் என வால்மீகி கூறுவதில் இருந்து, அரசன் என வந்துவிட்டால், க்ஷத்ரியன் என மட்டுமே கொள்ளப்பட்டது என்பதும், அவனும் குருகுலத்தில் இருந்திருக்கிறான் என்பதும் புரிகிறது.

இங்கு நிஷாதர்கள் என அவர்களைக் குறிப்பிடுவது மூலம்,

அவர்கள் வாழும் இடத்தை ஒட்டிய அடையாளப் பெயர் எனத்தெரிகிறது.

எனவே, இவர்களும் படித்திருக்கிறார்கள் என்கையில், சில நூறு வருடங்களுக்கு முன்னர் வரை ப்ராமணரைத் தவிர யாருமே படிக்கவில்லை என்னும் தற்போதைய சில வஞ்சகர்களின் கூற்று முற்றிலும் பொய்யானது என்பது புரிகிறது.

வேண்டுமானால், அவரது சுற்றுச்சூழலுக்கேற்ற அஸ்த்ர ஸாஸ்த்ர பயிற்சிகளில் வித்தியாசம் இருந்திருக்கலாம், அல்லது அது தாண்டி யாரேனும் மன்னன் படை எடுத்தால் எதிர்க்கும் அளவுக்குப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கலாம்.

இவர்கள் கண்டிப்பாக குறுநில வேந்தர்கள் கணக்கில் வருவார்கள்.

இவர்களையும் காப்பது சக்ரவர்த்தியின் கடமை என்கையில், அவர்களது வாழ்வுநிலைக்கு ஏற்ற பயிற்சிகள் அதிகமாகத் தரப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது.

மேலும், இங்கும் பெண்களும் கல்வி கற்றிருப்பார்கள். ஏனெனில், தர்மம் என்பது அனைவராலும் கட்டாயமாக அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக

அன்றைய காலம் கருதப்பட்டதால், அவர்களும் படித்திருப்பர் என்பது புரிதலாகிறது.

அடுத்த தொடரில் அக்காலப் பெண்கள், அவர்கள் சார்ந்த தர்மம் எல்லாம் பார்ப்போம்.

வாசகர்கள் தங்கள் மனதிலிருக்கும் நியாயமான சந்தேகங்களைக் கேட்கக் கோருகிறேன்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁

@threader_app compile

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling