Sasithra Profile picture
அம்மாக்களை பெற்றுக் கொடுப்பவள்.!

Sep 15, 2020, 12 tweets

#SavidhaDiary
#September15
#திரும்பிப்பார்க்கிறேன்

சாலையில் தூரத்தில் பயணிக்கும்போதே வெண்ணிறக் கட்டிடமாக "சவிதா" நீலநிற LED விளக்குகள் ஒளிர, மருத்துவமனையாக சவிதா இயங்கத் துவங்கி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன..
1/n

ஆறு வருடங்களுக்கு முன்பு, வெற்றிடமாக இருந்த ஒரு சிறிய இடம்.. இன்று மூன்று மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்க..
அதன் முகப்பில் ஒளிரும் "சவிதா மருத்துவமனை" பெயர்ப் பலகை, பல நினைவலைகளை அள்ளி வீசுகிறது..
2/n

அப்போது இதே முகப்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓலைக் குடிசை ஒன்றில், ஒரு சிறிய மேஜையின் முன்னால், கைகளில் பெரிய வரைபடத்தோடும், கண்களில் பெருங்கனவோடும் அமர்ந்திருப்பார் ஆர்க்கிடெக்ட் மனோகரன் சார்..
அவருடன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயர் சகாயராஜ் மற்றும் கட்டிட கட்டுமானி பாரதி..
3/n

தேக்கி நிறுத்தப்பட்டிருக்கும் தண்ணீர். ஊன்றி நிறுத்தப்பட்டிருக்கும் கம்பிகள், குச்சிகள், பலகைகள் என அனைத்தையும் நான் பயத்துடன் கடக்கும்போது,
"மேடம், இது ரிசப்ஷன் லவுன்ஞ்..
இது உங்க ரூம், இது பிரசவ வார்ட்,
இது ஆபரேஷன் தியேட்டர், இது டீலக்ஸ் ரூம் என சவிதாவை மனதில் முன்னிறுத்துவார்

மாதங்கள் செல்லச் செல்ல, அவரது வரைபடமும், எங்களது கனவும் மெல்ல மெல்ல,
அடிக்கற்கள், செங்கல், சிமெண்ட் என அரிதாரம் பூசிக் கொண்டு,
"சவிதா" என்று அவதாரம் எடுத்துக் கொண்டிருந்தது.
வரைபடமாக இருந்தது, வடிவமாக உருவெடுக்க..
#June6, 2016ல் கட்டிடத் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது..

#September15, 2016 முதல், மருத்துவப் பணியை சவிதாவில் துவங்கியாகிவிட்டது..
இன்று காலை ரிசப்ஷனிஸ்ட் திவ்யா, எனது அறைக்குள் நுழைந்து,
"மேடம், உங்களைப் பாக்க மனோகரன்னு ஒருத்தர் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காரு. இஞ்சினியர்ன்னு சொன்னாரு..
அனுப்பவா மேடம்..?" என்று கேட்டாள்..

"உடனே அனுப்பும்மா" என்றேன்..

ஒரு பெரிய பூங்கொத்துடன் நுழைந்த ஆர்க்கிடெக்ட் மனோகரன் சார்,
"வாழ்த்துகள் மேடம்.." என்றார்..

"சார்.. இது உங்க பில்டிங்..
நீங்க போய் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணலாமா..?" என்று நான் கேட்க..

"கட்டடம் கட்டற வரை தான், அது எங்க பில்டிங்..
இப்ப இது உங்க ஹாஸ்பிடல்..
சவிதா ஹாஸ்பிடல்.."
என்றார் புன்சிரிப்புடன்..

"அடிக்கற்கள் இல்லாமல்,
கோபுரங்கள் இல்லை சார்.."
என்று அவரை கைகூப்பி வணங்கினேன்..

கண்ணை மூடித் திறப்பதற்குள் நான்கு வருடங்கள் ஓடிவிட, மனோகரன் சாருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க, "இன்னிக்கு பொறியாளர் தினம்..
"Happy Engineers' Day சார்" என்று நினைவு படுத்தியபடி உள்ளே நுழைந்தார் எனது அன்புக் கணவர்...

ஆம்..
இன்று அடிக்கற்களின் தினம்..
ஒரு காட்டையே நாடாக சமைத்துத் தந்துவிட்டு, அதன் சுவையைக் கூட தூரத்தில் நின்று ரசித்தபடி,
அடுத்த காட்டை சமைக்க ஓடிக்கொண்டிருக்கும் பொறியாளர்களின் தினம் இன்று..

சான்றோர் அனைவருக்கும்
இன்றைய தின நல்வாழ்த்துகளும், நன்றிகளும்..!!
#September15
n/n

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling