நம்பி Nambi - Vote for INDIA Profile picture
திராவிடன் | Dravidian | நாளும் ஒரு திருக்குறள் | Fitness | IT Infrastructure | Heritage | தமிழ் | உணவு | Food | ஊர் சுற்றல் | Travel

Jan 20, 2022, 16 tweets

#நீதிக்கட்சி
#தியாகராயநகர்

திராவிட இயக்கத்தின் தொட்டிலான நீதிக்கட்சி உருவாக்கிய தியாகராயநகரைச் சுற்றி வருவதன் மூலம் அவ்வியக்கத்தினைப் பற்றியும் முன்னோடிகளைப் பற்றியும் அறிவோம்.

1920களில் நீண்ட ஏரியாக இருந்தப் பகுதியை ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி குடியிருப்பாக மேம்படுத்தியது +

பனகல் பூங்காவின் மேற்குப்புறத்திலிருந்து நம் கற்பனைப் பயணத்தைத் துவக்குவோம். இந்த சாலை சுமந்து நிற்கும் பெயர்க்குச் சொந்தக்காரர் - டாக்டர்.உஸ்மான். தஞ்சையைச் சேர்ந்த யுனானி மருத்துவர்; அரசு செயற்கவுன்சிலின் உறுப்பினர்; ஆங்கிலேயர் மட்டுமே வகித்திருந்த "கவர்னர்"-ஆக இருந்தவர் +

அண்மையிலிருக்கும் பூங்கா வாயிலிற் சென்று பனகலரசரின் சிலை முன் நிற்கிறோம். 1920 தேர்தலில் வென்று இவர் முதல்வராகி செய்தவை
- முதல் Communal G O கொண்டுவருதல் (Reservation)
- மருத்துவம் படிக்க வடமொழித் தகுதி விலக்கல்
- மதத்தலைவர்களைக் கலந்தாலோசித்து இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தல் +

இதோ, பூங்காவின் வெளியே அதன் கிழக்குச்சுவரின் மையத்தினின்று பார்க்கிறோம்; வடகிழக்கு (GN Chetty Rd), கிழக்கு (Pondy bazaar), தென்கிழக்கில் (Venkatanarayana Rd) செல்லும் சாலைகள் நீதிக்கட்சியின் சின்னமுமான "உதயசூரியனை" நினைவுறுத்துகின்றன +

எளிய மக்களையும் பேருந்தில் ஏற்றிச் செல்லவில்லையென்றால் லைசன்சை ரத்து செய்துவிடுவதாக எச்சரித்த தென்தமிழ்நாட்டின் நீதிக்கட்சி முன்னோடியான WPA சவுந்தரபாண்டியன் அவர்களின் பெயரிலேயே "பாண்டி பஜார்" அழைக்கப்படுகிறது +

பூங்காவின் வடகிழக்கில் கோபதி நாராயணசாமிச் (GN) செட்டி சாலை உள்ளது. நீதிக்கட்சியைச் சேர்ந்த இவர் சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்ததோடு, இந்திய ரிசர்வ் வங்கி உருவாகக் காரணமான குழுவில் முக்கிய அங்கம் வகித்தவர் +

தியாகராயநகர் உருவாக்கப்பட்டிருக்கும்போது நடந்த விபத்துகளில் இறந்த இரு கடைநிலை ஊழியர்கள் - நாதமுனி மற்றும் கோவிந்து. இவர்களின் பெயர்களில் இங்கு இரு தெருக்கள் உள்ளன +

சற்றே முன் சென்று சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தின் முன் நிற்கிறோம்.

பெரிய வணிகரான தியாகராயர் நண்பர்களுடன் இணைந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற ஒன்றைத் தொடங்கிப் பின் நீதிக்கட்சியை உருவாக்கினார். இவர்தான் ஆயிரம்விளக்குப் பள்ளியில் இலவச மதிய உணவுத்திட்டம் துவக்கினார் +

அடுத்த சந்திப்பில் வடக்கு நோக்கிய சாலையின் பெயரிலிருக்கும் அன்றைய மாநகராட்சித் தலைவராக இருந்த திருமலைப்பிள்ளை அவர்களை நினைவுகூர்ந்து தெற்கே திரும்புகிறோம் +

திராவிட லெனின் என்றழைக்கப்பட்ட T M நாயரின் பெயரிலுள்ள சாலை இதோ.

லண்டனில் மருத்துவராகத் தொழில் செய்தவர். நீதிக்கட்சியின் முக்கிய மூவரில் ஒருவர். +

இன்னும் தெற்கு நோக்கிவந்து தணிகாசலம் சாலையில் நிற்கிறோம்.

நீதிக்கட்சியில் இருந்த முன்னணி வழக்கறிஞர் தணிகாசலம். சமூகநீதிக்கான முதல் Communal GO கொண்டுவரப்பட முக்கியக் காரணமானவர். நீதிக்கட்சியின் ஆட்சியை எதிர்த்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதனைத் தகர்த்தவர் +

தியாகராயநகரின் தென்கிழக்கு மூலைக்கு வந்து, மீண்டும் பூங்கா நோக்கிச் செல்லும் வெங்கட்நாராயணா சாலையில் நாம்...

இவரின் முழுப்பெயர் வெங்கட்நாராயணா ராவ் நாயுடு. வழக்கறிஞரான இவர் திருவாங்கூர் திவானாக இருந்தபோது நாயர் மட்டுமல்லாத மற்றவரையும் பாதுகாப்புப் படையில் சேர்த்தார்.

இதே சாலையில் சற்று முன்னுள்ளது நடேசன் பூங்கா.

நீதிக்கட்சியின் டாக்டர்.நடேசன் என்பவரே பார்ப்பனரல்லாத மாணவரின் நலனுக்காகத் தனியாக விடுதி ஏற்படுத்தியவர். தெலுங்கரும் மலையாளிகளும் இருந்த நீதிக்கட்சியின் தமிழ்முகம்.

முன் நடந்து பனகல் பூங்காவின் தென்மேற்கு மூலை சேர்வோம்

இங்கிருந்து அசோக் நகர் நோக்கி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையும் இன்னும் தெற்கே CIT நகரிலிருந்து மேற்கு சைதையை இணைக்கும் சுரங்கப்பாதையும் மொழிப்போர் தியாகிகள் முறையே சிவலிங்கம் மற்றும் அரங்கநாதன் பெயர் கொண்டவை+

தெற்கு உஸ்மான் சாலையில் நடந்து பேருந்து நிலைய சந்திப்பை அடைவோம்.

1939-இல் நீதிக்கட்சியின் தலைவராகி அதன்பின் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்து தன் வாழ்நாள் முழுவதும் தமிழர்தம் வாழ்வில் ஏற்றம் காணப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் கடைசியாகப் பேருரை நிகழ்த்தியது இங்குதான்

சமூகநீதிக்காகவும் எளியோர் ஏற்றம் காணவும் பாடுபட்ட நீதிக்கட்சி நிறுவிய தியாகராயநகரினை இனி முழுப் பெயரிட்டே அழைப்போம்

என்னுடன் வந்து சுற்றிப் பார்த்து முன்னோடிகளைப் பற்றி அறிந்துகொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியும், அன்பும், மகிழ்வும்...

தொடர்ந்து இணைந்து பயணிப்போம்...🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling