22-6-2022 - புதன் #ஏயர்கோன்_கலிக்காம_நாயனார்_குருபூஜை
#சைவசமயம் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் கலிக்காம நாயனாரும் ஒருவர். காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்ற ஊரில் வேளாண்மைக் குடியில் அவதரித்தவர். சிவபக்தியில் சிறந்தவர்.
சிவனடியார்களைப் போற்றுவதில் சளைக்காத ஊற்றமுள்ளவர். சிவநிந்தையார் செய்தாலும் பொறுக்காதவர். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகில் திருப்புன்கூர் திருத்தலப் பெருமானுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர். ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றைக் கேட்டவர்,
அவர் தன்னுடைய காதலுக்காக சிவபெருமானை தூது விட்டதாக அறிந்து, அவர் மீது கடும் கோபம் கொண்டார். ‘‘ஆண்டவனுக்கு நாம் தொண்டு செய்யவேண்டும். தன்னுடைய தொண்டுக்கு ஆண்டவனை தூது விடுவதும் ஏவி விடுவதும் முறையாக இருக்குமா?
பெண்ணாசை காரணமாக அப்படிச் செய்தால், அப்படிச் செய்தவரை, நான் காணும் போது என்ன நடக்கும் என்பது தெரியாது?”
இந்தச் செய்தி சுந்தரருக்கும் தெரிந்தது. அவர் தன் பிழையை உணர்ந்து, இப்படிப்பட்ட சிவனடியாரின் கோபத்தைத் தீர்க்கும்படி சுவாமியைக் வேண்டிக் கொண்டார்.
சிவபெருமான் வன்தொண்டரையும் மென்தொண்டரையும் இணைக்கத் திருவுள்ளம் கொண்டார். கலிக்காம நாயனாருக்கு கடுமையான சூலை நோய் கொடுத்தார். கலிக்காம நாயனார் வயிற்று வலியால் துடிக்க, சிவபெருமான், இந்த நோயை தீர்க்க வல்லவர் வன்தொண்டன் ஆகிய சுந்தரமூர்த்திநாயனார் என்று சொல்ல,
‘உன்னையே தூது செல்லச் சொன்ன அவரால், என் நோய் தீர வேண்டிய அவசியமில்லை. அதைவிட இந்த நோயால் நான் படுகின்ற துன்பமே சரி” என்று சொல்ல சிவபெருமான் சுந்தரரிடம் சென்று, ‘‘ஏயர் கோன் நாயனார் சூலை நோயால் அவதிப்படுகின்றனர். நீ சென்று தீர்ப்பாய்” என்று சொல்லி அருளினார்.
நம்பியாரூரரும் விரைந்து, தாம் வருகின்ற செய்தியை
கலிக்காம நாயனாருக்குச் சொல்லி அனுப்பினார்.
இதை அறிந்த கலிக்காம நாயனார் கடும் கோபம் கொண்டார். ‘‘சிவ நிந்தை கொண்ட வன்தொண்டர் வந்து தன்னுடைய நோயைத் தீர்க்கும் முன், இந்த நோயையும்,
இந்த நோய் கொண்ட உடலையும், என்னுடைய வாளால் கிழித்துக் கொள்வேன்” என்று உடைவாளால் தம்மைத் தாமே கிழித்துக் கொண்டு, சரிந்து விழுந்தார்.
அவர் நிலையைக் கண்டு மனைவியார் அழுதார். தானும் உடன் உயிர் விட துணிவு கொண்டார். அப்போது சுந்தரர் அந்த ஊருக்கு அருகில் வந்துவிட்டதை மற்றவர்கள் சொல்ல,
கணவன் இறந்தாலும் தம் ஊரை நாடிவரும் சிவனடியாரை வரவேற்பது முறை என்று, தன் உறவினர்களை, சுந்தரரை வரவேற்கும்படி சொல்லி அனுப்பினார்.
சுந்தரர் வந்தவுடன் அவரை எதிர்கொண்டு அழைத்துவந்துவணங்கி அவருக்குரிய ஆசனத்தில் அமர்த்தினார்.
அப்போது சுந்தரர் ‘‘நான் வந்தது கலிக்காம நாயனாரோடு நட்புறவு கொள்ளவே.
அவர் எங்கே?” என்று கேட்க, மற்றவர்கள் திகைத்து, அவர் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று அப்போதைக்கு சமாதானமாக சொல்லினர்.
அது கேட்ட சுந்தரர், உடனே அவரைக் காண வேண்டும் என்று உள்ளே செல்ல,
அங்கே கலிக்காமர் குடல் சரிந்து, உயிர் மாண்டு கிடப்பதைக் கண்டு துடித்துப் போனார்.
‘‘ம்... இதுவரை நிகழ்ந்தது நன்று தான்... இனி நானும் இறப்பதே நலம்” என்று தன்னுடைய உடைவாளை பற்றினார். அப்பொழுது ஒரு அதிசயம் அங்கே நடந்தது.
சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர் பெற்றார். உடனே எழுந்து சுந்தரர் கையிலுள்ள வாளைப் பிடித்துக் கொள்ள, ஆரூரர் விழுந்து வணங்கினார்.
கலிக்காமரும் சுந்தரரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். ஒருவரை ஒருவர் அன்பினால் ஆரத்தழுவிக்கொண்டு பிரியா நண்பர்களாக மாறினர்.
திருப்புன்கூர் திருத்தலம் சென்று அப்பெருமானை வணங்கிப் போற்றினர். அவருடைய பூசை நாள் ஆனி மாதம் ரேவதி, இன்று.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.