#கோகுலாஷ்டமி
#பட்டத்ரியும்_குருவாயூரப்பனும்
"தாத்தா.. தாத்தா.. எழுந்துக்கோ..விடியப்போறது.."
"ஓ.. நாழியாயிடுத்தா.. செத்த கண் அசந்துட்டேன்.."
"நாராயணீயம் எழுதணுங்கற எண்ணமே மறந்துடுத்தா.. அப்புறம் எப்படி கண் அசறும்.."
"இல்லடா கிருஷ்ணா.. ராத்திரி ரொம்ப நேரம் விளக்கு வெளிச்சத்தில் எழுதினேனோன்னோ.. அதான்.."
"சரி சரி.. போய் குளிச்சுட்டு வா.."
"தோ.. இப்பவே.."
"தாத்தா.. நீ இப்ப பூஜை பண்ணனுமா.. எனக்கு பசிக்கறது.."
"அனுஷ்டானம் பண்ண வேண்டாமா.. கொஞ்சம் பொறுமையா இரு.. நைவேத்தியம் பண்றேன்.."
"நான்தான் உன்னோடயே இருக்கேனே.. அப்புறம் எதுக்கு பூஜை.."
"கொழந்தே... அதுக்கெல்லாம் அப்பாற்பட்டவனடா நீ.. பூஜை என்பது உனக்கு அல்ல.. எங்களுக்கு.. எங்கள் மனம் என்னும் கோவிலை தூய்மைப்படுத்தி அதில் பரிசுத்தமான உன்னை குடியமர்த்த.."
"நன்னா பேசற.. ஆனா நான் எவ்ளோ நேரம் பசி பொறுக்கறதாம்.. முன்னாடி வெண்ணெய வச்சுட்டு சாப்டாதங்கறே.."
"நீ கொடுத்ததுதானே.. அதுவும் உன்னோடதுதானே.."
"ஆங்.. சரி.. இப்போ நீ எழுத ஆரம்பி.. நான் பார்க்கணும்.."
"இரு.. அப்படி உட்காரு.. நான் எழுத எழுத காட்டறேன்.."
"அதெல்லாம் முடியாது.. நான் உன் பக்கத்துல நின்னுண்டு எட்டிதான் பார்ப்பேன்.."
"ச்சமத்தோன்னோ... சொன்னா கேளுடா கண்ணா.."
"சரி.. நான் ஊஞ்சல்ல உக்காண்டுக்கறேன்.."
"ஜாக்கரதை.. வேகமா ஆடினா கீழே விழுந்துடப்போறடா குட்டா.."
"சரி.. நான் தூண்ல ஏறட்டா.."
"வேணான்டா தங்கம்.. வழுக்கி விட்டுடும்.."
"சரி தாத்தா.. இந்த குடைய எடுத்துக்கட்டுமா.. "
"ஓ.. எடுத்துக்கோயேன்.. ஒரு ஓரமா உக்காந்து விளையாடு.. நான் அதுக்குள்ள இன்னிக்கு எழுத வேண்டியத எழுதறேன்.."
"ம்ம்ம்.."
"கிருஷ்ணா... விளக்குகிட்ட விளையாடாதடா செல்லம்.. கை சுட்டுடும்.."
"இல்லை தாத்தா.. திரியை நிமிண்டினேன்.. உனக்கு வெளிச்சம் வேணுமே.."
"தெய்வமே.. நீ குழந்தையா.. என் அப்பனா.."
"நீ எப்படி பார்க்கறியோ.. அப்படி.."
"ஆஹா.. உண்மைதான்டா கண்ணா.. உன்னை நான் வாரி அணைக்கும்போது என் குழந்தையாகிறாய்.. என்னை நீ அரவணைக்கும்போது என் தந்தை ஆகிறாய்.."
"சரி.. சரி.. எழுது.. நான் எட்டிப்பார்த்து ரசிக்கறேன்.. "
"நீ இப்படி அழிச்சாட்டியம் பண்ணின்டு இருந்தா நான் எப்படிடா தங்கம் எழுதுவேன்.."
"நான் அழிச்சாட்டியம் பண்றதே.. அந்த அழிச்சாட்டியத்தை நீ அழகா எழுதணுங்கறதுக்காகத்தானே தாத்தா.."
நாராயண பட்டத்ரிக்கு விளங்கியது.. பிறவிப்பயனை அறிந்தார்..
"நீ ஆடுடா கண்ணா.. உன் ஆட்டமெல்லாம் என் எழுத்தில் வரும்.. உன் அருளால்..|
#ஸர்வம்_ஶ்ரீ_க்ருஷ்ணார்ப்பணமஸ்து
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.