#KB_சுந்தராம்பாள் நமக்கு ஔவையாராக மட்டுமே அறிந்த கொடுமுடி பாலம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பற்பல துறைகளில் புகழ் ஈட்டியவர். அவர் கொடுமுடி கோகிலம் என்ற சிறப்புப்
பெயருடனும் அழைக்கப்பட்டவர் ஆவார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில்
பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு, 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 11ல் சுந்தராம்பாள் பிறந்தார். அவருக்கு
கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம் வயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாள், தாயார் ஆதரவில் வளர்ந்தார். லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி பயின்றார். குடும்ப வறுமைநிலை காரணமாக
இவர் ரயில்களில் பாடி பிச்சை எடுத்து வந்ததாகவும், அப்போது ஒரு நாள் நடேசையர் என்பவர் இவரது பாடும் திறமையைக் கண்டு இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டதாகவும் சுந்தராம்பாள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். பாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த சுந்தராம்பாள்,இளம் வயதிலேயே பாடும்
ஆற்றலை வளர்த்துக் கொண்டார். வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் #நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்ல தங்காளின் மூத்தப் பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று, ஆண் வேடத்தில் முதன் முதலாக நடித்தார்.
அந்நாடகத்தில் பசிக்குதே வயிறு
பசிக்குதே என்றப் பாட்டை, மிக அருமையாகப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தனக்கிருந்த ஆற்றலினால் சொந்தக்
குரலிலேயே பாடி நடித்தார்.
அதனைத் தொடர்ந்து 1920 களில் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின்
பல
ஊர்களிலும் அவர் நடித்த நாடகங்கள் நடைபெற்றன. 1925 இல் தாய்நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், பவளக்கொடி, ஞானசெளந்தரி போன்ற அக்காலத்தில் புகழ் பெற்ற பல்வேறு நாடகங்களில் சுந்தரம்பாள் நடித்தார். இந்நிலையில் மீண்டும் சுந்தராம்பாள் 1926 இல் தனது நாடகக் குழுவுடன்
கொழும்பு சென்றார். அவரின்
நாடகப் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா தனது குரல் வளத்தாலும், நடிப்பாலும் பலரது கவனத்தை ஈர்த்து, புகழுடன்
விளங்கி வந்தார். கொழும்பில் சுந்தரம்பாளுடன் இணைந்து நடிப்பதற்கு கிட்டப்பாவுக்கு வாய்ப்பு கிட்டியது. 1926 ஆம் ஆண்டு
சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த
வள்ளி திருமணம் நாடகம் அரங்கேறியது. நாடகங்களில் இணைந்து நடித்த இருவரும்,
பின்னர் திருமண பந்தத்திலும் இணைந்து தம்பதிகளாகினர்.
நாடகங்களில் சுந்தரம்பாள் பாடிய சுந்தரத் தமிழ்ப் பாடல்கள், இசைத் தட்டுகளில் பதிவாகி எங்கும் ஒலிக்கத் தொடங்கின. இந்நிலையில்
1933 டிசம்பர் 2 கிட்டப்பா அகால மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 28 சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து சுந்தராம்பாள் வெள்ளை சேலை கட்டத் தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் இணை சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி
வரை காப்பாற்றி வந்தார். பின்னர்
நெடுங் காலமாக பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் 1934ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவற்றில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து, பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தி செயல்பட்டார். 1935 இல் நந்தனார் நாடகம் பக்தநந்தனார்
என்றப் பெயரில் திரைப் படமான போது, அப்படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். அவற்றில் அவர் பாடியவை 19 பாடல்கள். அடுத்ததாக மணிமேகலை என்றப் படத்தில் நடித்தார். 1938ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940இல் அப்படம் வெளிவந்தது. அப்படத்தில் 11
பாடல்களை அவர் பாடியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 1953 இல் ஜெமினி பட நிறுவன தயாரிப்பில், ஔவையார் என்றப் படத்தில் அவர் அபாரமாக நடித்தார். அப்படத்தில் அவர் பாடியப் பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் ஒலித்தன. பாமரர்கள் பலரும் அவரின் பாடல்களால் பரவசமடையும்
நிலை உருவானது. பொறுமை
என்னும் நகையணிந்து, கன்னித் தமிழ் நாட்டிலே,வெண்ணிலவே, போன்றப் பாடல்கள் அப்படத்தில் புகழ் பெற்றவை. ஒளவையார்
படத்தில் 48 பாடல்கள். அவற்றில் அவர் பாடியவை 30. 1964ல் சிலப்பாதிகாரம் கதையைத் தழுவிய கலைஞர் கருணாநிதியின், பூம்புகார்
படம் வெளி வந்தது. இப்படி பக்திப் படங்களில் நடித்துப்
பாடல்கள் பாடி நன்னெறியைப் பரப்பிவந்த சுந்தராம்பாளின் வைராக்கியம் பெரிது. ‘பணத்துக்காக எந்த வேடத்தையும் ஏற்க மாட்டேன்’ என்று கொள்கையோடு இருந்தவர் சுந்தராம்பாள். அதற்கு உதாரணமே கலைஞர் கருணாநிதி அளித்த பட வாய்ப்பை மறுத்த நிகழ்வு. பிறகு கடவுள் மறுப்பு வசனம் எதுவும் பேச மாட்டேன் என்று
ஒப்பந்தத்தில் எழுதி கையெழுத்து இட்ட பிறகு கவுந்தி அடிகளாக நடிக்க ஒப்புக் கொண்டார். தொடர்ந்து,
திருவிளையாடல்- 1965
மகாகவி காளிதாஸ்-1966
கந்தன் கருணை-1967
உயிர் மேல் ஆசை-1967
துணைவன்-1969
சக்தி லீலை-1972
காரைக்கால் அம்மையார்-1973
திருமலை தெய்வம்-1973
மணிமேகலை உள்ளிட்ட 12 படங்களில்
சுந்தராம்பாள் அடுத்தடுத்து அபாரமாகப் பாடி நடித்தார். அரசியல் ஈடுபாட்டில் காங்கிரஸ் பிரசாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியப் பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில்,
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். பத்மஸ்ரீ விருதுடன் இசைப் பேரறிஞர் விருதும், சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதும் அவருக்குக் கொடுக்கப்பட்டன. சுந்தராம்பாள் 1980 செப்டம்பர் 19, 72வது வயதில் வானகம் எய்தினார். நான் கண்ட நாடக கலைஞர்கள் என்ற புத்தகத்தில்
பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள்,
“நடிப்பதில் மிகவும் திறமை யுடையவர். ஆயினும் இவருடைய பெயரினை தமிழ் நாடெங்கும் பரவச் செய்தது இவருடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக, தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை என்னவென்றால் பக்க வாத்தியங்கள்
இல்லாமலே மிகவும் இனிமையாகப் பாடும் திறமே யாம். அநேக சங்கீத வித்வான்கள் பக்க வாத்தியத்தோடு பாடுவது ஒரு மாதிரியாக இருக்கும். பக்க வாத்தியம் இல்லாமல் பாடுவது வேறு ஒரு மாதிரியாய் இருக்கும். இவரது பாட்டில் அப்படியில்லை. பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் காதுக்கு மிகவும் இனிமையாக
இருக்கும். இது ஒரு அரிய குணம்.” என்று சுந்தராம்பாள் பற்றி குறிப்பிட்டிருப்பார்.
இன்றும் மங்கா புகழுடன் இப்பூவுலகில் வாழ்கிறார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.