அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

May 30, 2023, 20 tweets

#மத்தூரு_உக்ர_நரசிம்மர்_ஆலயம்
கர்நாடக மாநிலத்தில் பல நகரங்கள், கிராமங்களில் நரசிம்ம பெருமானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. நரசிம்ம பெருமான் அவற்றில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் மற்றும் உக்ர நரசிம்மர் எனும் பெயரில் அவதாரம் எடுத்து அமர்ந்துள்ளார். இப்படியான ஓர் ஆலயம் உகர நரசிம்மர்

ஆலயம் எனும் பெயரில் மத்தூரில் வைத்யநாத ஸ்வாமி ஆலயத்தின் அருகில் உள்ளது. இதுவும் மஹாபாரத கதையுடன் இணைந்த கோவில் ஆகும். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. துவாபர யுகத்தில் பல மைல் தூர பரப்பளவில் இருந்ததாக கூறப்படும் மத்தூர் அன்று அர்ஜூனாபுரி என்று அழைக்கப்பட்டது.

அங்கு மஹாபாரத போரின் இறுதி கட்ட முக்கியமான சண்டை பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் இரு தரப்பிலும் பல உயிர்கள் செடிகொடிகள் வெட்டி சாய்ப்பதை போல வீழ்ந்து மரணம் அடைவதைக் கண்ட அர்ஜுனனின் மனம் தளர்ந்து போயிற்று. இறப்பவர்கள் எதிரிகளாக

இருந்தாலும் ரத்த சம்மந்தம் கொண்ட உறவினர்களே என்பதினால், இழந்த மன அமைதியை திரும்பப் பெற்று யுத்தத்தில் முழு மனதுடன் ஈடுபட, மனபலம் அதிகரிக்க வேண்டும் என எண்ணிய அர்ஜுனன் கிருஷ்ணனிடம் அவர் ஒருமுறை எடுத்த உக்ர நரசிம்ம அவதாரத்தைத் தனக்குக் காட்டுமாறு வேண்டினான். நரசிம்மர் சிங்க

முகத்தையும் மனித உடலையும் கொண்டவர் என்றாலும் தீமைகளை அழித்து நன்மைகளை அளிக்கவே அந்த பயங்கரமான உருவைக் கொண்ட அவதாரத்தை எடுத்தவர். லட்சுமி நரசிம்மர் அல்லது யோக நரசிம்மர் என்ற நிலையில் அவரை ஆராதிக்கும்போது நம் பாவங்கள் தொலைந்து துன்பங்கள் நீங்கும். நரசிம்ம பெருமானை வணங்கி

துதிப்போர்க்கு மன அமைதி கிடைக்கும், வளமான வாழ்க்கை அமையும், தீயவை விலகும், துன்பங்கள் மறையும் மற்றும் மனதில் பயமின்மை போன்ற நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏன் எனில் அவர் தீமைகளை அழித்து நன்மைகளை அளிப்பவர். அவர் தருவது வெளிப்

பார்வைக்கான மன அமைதி மட்டுமே அல்ல, அது உளமாற கிடைக்கும் ஆழ்ந்த மன அமைதி ஆகும். இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவரே நரசிம்மத் பெருமான் என்பதால் தான் அர்ஜுனன் தனக்கு அந்த அவதார கோலத்தை காட்டுமாறு பகவானிடம் வேண்டுகோள் வைத்தான். கிருஷ்ண பகவானுக்கு அர்ஜுனனின் மனம் புரிந்தது. தனது

உற்றாரும் உறவினரும் செடிகொடிகள் போல சாய்ந்து விழுவது அவன் உள்ளத்தில் தளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது,அதை அப்படியே விட்டு விட்டால் நடைபெறும் யுத்தத்தின் முடிவே மாறிவிடும் என்பதை உணர்ந்தார். அதே நேரத்தில் தான் அர்ஜுனனுக்கு நேரடியாக நரசிம்ம அவதாரத்தின் உக்ர கோலத்தைக் காட்டினால், அந்த

பயங்கரக் காட்சியைக் காணும் அவன் உடைந்து போன மனது மேலும் பயம் கொண்டு அவன் வீரத்தை தளர்ச்சி அடைந்து விட வைத்து விடும். ஆகவே அவனுக்கு முன் நேரடியாக அந்த காட்சியில் தான் தோற்றம் எடுக்கக் கூடாது என முடிவு செய்தார். அவன் வேண்டுகோளை ஏற்று அவன் முன் அந்த கோலத்தில் தான் தோன்றி விட்டால்

உடனடியாக சில காலம் தான் அவனுக்கு யுத்தத்தில் உதவிக்கொண்டு இருக்கும் கிருஷ்ணர் என்ற நிலையில் இருந்து விலகி நிற்க நேரிட்டு விடும் என்ற நியதியும் இருந்தது. ஆகவே தன்னால் எந்த உதவியையும் அர்ஜுனனுக்கு செய்ய இயலாமல் போய் விடும் என்பதாக அவனிடம் எடுத்துரைத்தார். அதே சமயம் அர்ஜுனனின்

ஆசையை நிராகரிக்க விரும்பாததால் அந்த கோலத்தை பிரும்மா மூலம் காட்டுவதாக அவனை சமாதானப் படுத்தினார். பிரும்மாவும் கிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று அதே இடத்தில் உக்ர நரசிம்மர் ஹிரண்யகசிபுவை எவ்வாறு அழித்தாரோ அதே கோலத்தில் தத்ரூபமாக நரசிம்மரின் சிலா ரூபத்தை நிர்மாணித்தார். எட்டு கைகள்

3 கண்களைக் கொண்ட த்ரிநேத்ர நரசிம்ம விக்கிரகத்தில் இரு கைகளினால் ஹிரண்யகசிபுவை தனது தொடையில் அழுத்தி வைத்துக் கொண்டு இன்னும் இரு கைகளினால் அவனது குடலைப் பிடுங்கி மாலையாக போட்டுக் கொண்ட காட்சி இருந்தது. அவனை வதம் செய்யும்போது மூன்றாவது கண்ணை திறந்து காட்டுகிறார் என்று அர்ஜுனனுக்கு

கேட்கும் வகையில் அசரீரி ஒலியை எழுப்ப வைத்தார். மற்ற நான்கு கைகளிலும் ஆயுதங்கள் இருக்க அவர் காலடியில் இடப்புறம் கருட பகவான் மற்றும், வலப்புறத்தில் பிரஹலாதன் காணப் பட்டார்கள். சாதாரணமாக சிவபெருமானுக்கு மட்டுமே 3 கண்கள் உண்டு என்பதினால் அந்த த்ரிநேத்ர நரசிம்ம பெருமான் மேன்மை

பெற்றவராக உள்ளார். அந்த கோலத்தில் அவரை தரிசிக்கும் பக்தர்கள் மன அமைதி பெற்று மன பலத்தையும் பெறுகின்றார்கள். இப்படிப்பட்ட மேன்மையான கோலத்தில் நரசிம்ம பெருமானை தரிசனம் செய்த அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருந்தான். அவன் மீண்டும் கண் விழித்தபோது புதுப்பொலிவோடு

யுத்தத்தில் ஈடுபடும் மன உணர்வைப் பெற்று இருந்தான். அவனுடைய மனோதிடம் அதிகரித்து இருந்தது. அவன் எதிரில் கிருஷ்ண பகவான் சிரித்துக் கொண்டு நின்று இருந்தார். காலப்போக்கில் அந்த இடமே அதே விக்ரகத்துடன் கூடிய உக்ர நரசிம்மர் ஆலயமாயிற்று. பிரும்ம பகவான் நிர்மாணித்த சிலையைக் கொண்ட ஆலயத்தில்

பிற்காலத்தில் தனித் தனி சன்னதியில் கிருஷ்ண பெருமான் குழந்தை கோலத்தில் இருக்க அவரை தனது மார்போடு அழுத்தி வைத்துக் கொண்டு அவருக்குத் தன் மடியில் இருந்து பால் தரும் காட்சியில் தேவகி யசோதா இருக்க, ஸ்ரீனிவாசப் பெருமான் இன்னொரு சன்னதியிலும், நரசிம்ம பெருமானின் மனைவிகளான பூதேவி மற்றும்

ஸ்ரீதேவி எனும் தாயார்கள் சௌம்யா நாயகி மற்றும் நரசிம்ம நாயகி எனும் பெயர்களிலும், இன்னொரு சன்னதியில் ராம-லக்ஷ்மண சீதா சமேத சிலைகளும் அமைக்கப்பட்டன. அந்த ராம-லக்ஷ்மண சீதா சமேத சன்னதியில் ஆஞ்சநேய பகவான் கைகளைக் கூப்பி ராமபிரானை வணங்கி நிற்கும் காட்சியில் விக்ரகம் உள்ளது. ஹோய்சால

மன்னர்கள் ஆட்சி காலத்தில் நலிவடைந்து இருந்த இந்த ஆலயத்தை புதுப்பித்து உள்ளார்கள். இந்த இடம் கடம்ப முனிவர் காலத்தில் #கடம்பஷேத்ரா என அழைக்கப்பட்டு அந்த முனிவரும் இங்கு தங்கி இருந்து ஆலயத்தில் வழிபட்டு வந்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. குழந்தை செல்வம் அற்ற தம்பதிகள் இங்கு வந்து

திருமஞ்சனம் செய்து மஞ்சள் காப்பு சாத்தி அந்த திருமஞ்சனத்தை நீரை கலந்து அந்த தண்ணீரில் குளித்தால் அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும், மற்றும் ஸ்வாமிக்கு திருமஞ்சனம் சாத்தி வேண்டுதல்கள் செய்தால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது ஆலய நம்பிக்கை. இந்த ஆலயம் அற்புதமான ஆலயம் என்பதில்

சந்தேகமே இல்லை.
மாண்டியாவிற்கு 22 கிமீ, பெங்களூரிலிருந்து மைசூரு பேருந்து வழித்தடத்தில் மத்தூரு உள்ளது. மத்தூரு மாண்டியாவிலிருந்து 22 கிமீ மைசூரிலிருந்து 72 கிமீ, பெங்களூருவிலிருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது.
ஜெய் நரசிம்ம
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling