#goofybooks
#மகாபாரதம்
"இந்தியாவில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அத்தனை வகை மகாபாரதம் இருக்கிறது." என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து வடிவிலும், செவி வழியாகவும் பல வடிவங்கள் கூறப்பட்டு வந்துள்ளன.
எண்ணற்ற கதாபாத்திரங்களையும், பல சிக்கல்களையும் காரண காரியத்தோடு கதைகள், உபகதைகள், கிளைக்கதைகள், பின்கதை என பல அடுக்குகளினூடு குழப்பம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தொகுப்பு இது.
1. வெண்முரசு: ஜெயமோகன்
7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது.
மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.
முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில்நகரம், இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்களம், சொல்வளர்காடு, கிராதம், மாமலர், நீர்க்கோலம், எழுதழல், குருதிச்சாரல், இமைக்கணம், செந்நா வேங்கை, திசைதேர் வெள்ளம், கார்கடல், இருட்கனி,
தீயின் எடை, நீர்ச்சுடர், களிற்றியானை, கல்பொருசிறுநுரை, முதலாவிண் ஆகிய 26 நூல் வரிசையை கொண்டது.
கீழ் உள்ள இணையதளத்தில் இலவசமாக வாசிக்கலாம்.
venmurasu.in
2. கௌரவன்: ஆனந்த நீலகண்டன்
முதல் பாகம்: உருண்டன பகடைகள்
இரண்டாம் பாகம்: பிறந்தது கலி
நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்ட துரியோதனனின் காவியம். பாண்டவர்களின் பார்வையில் இல் எழுதப்பட்ட மாகாபரத்தில் சொல்லப்படாத துரியோதனனின் பக்கங்களை பேசுகிறது இந்த நாவல்.
3. இரண்டாம் இடம்: எம்.டி. வாசுதேவன் நாயர்
அபரிமித கற்பனையும் மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து மனித குண இயல்புகளை கொண்ட கதாபாத்திரங்களால் படைத்து பீமனின் பார்வையில் பீமனே சொல்வது போல் வடிவமைக்கப்பட்ட நாவல்.
4. உப பாண்டவம்: எஸ். ராமகிருஷ்ணன்
இந்த நாவல் மகாபாரத காலத்திய மக்களைப் பேச வைக்கிறது. அரசர்களையும் அவர்களின் போர்களையும் அதிகம் தொடாமல் சாதாரணமானவர்களின் உள்மனப் போராட்டங்களையும் அவர்களின் வாழ்வியலையும் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.
5.பருவம்: எஸ்.எல்.பைரப்பா
கன்ன்னடதில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்: பாவண்ணன்.
மகாபாரத கதாபாத்திரங்கள் யாவும் சாதாரணர்களாகவும், கதையில் வரும் நிகழ்வுகளையும், சம்பவங்களையும் யதார்த்த தளத்தில் நிகழ்த்தி, மகாபாரத கதைகளில் பேசப்படாத பல நடைமுறை சிக்கல்களை பற்றி இந்த நாவல் பேசுகிறது.
6.கிருஷ்ணா கிருஷ்ணா : இந்திரா பார்த்தசாரதி
ஜரா என்கிற வேடன், மரணத்தின் வாசலில் இருக்கும் கிருஷ்ணனுக்கும் தனக்கும் நடந்த உரையாடலை நாரதரிடம் சொல்ல, நாரதர், அதைத் தம்முடைய நடையில், வாசகர்களாகிய நம்மிடம் சொல்வது போல் இந்த நூல் அமைந்துள்ளது.
7. இனி நான் உறங்கட்டும்: பி.கே. பாலகிருஷ்ணன்
கர்ணனின் மொத்த வாழ்வும், குந்தி, தர்மன், திரௌபதி, கிருஷ்ணன், சஞ்சயன் என வெவ்வேறு பாத்திரங்களின் நினைவுகளால் இந்த நாவலில் முன்வைக்கப்படுகிறது.
8. யயாதி : வி.காண்டேகர்
இரு பாகங்கள்.
மகாபாரதத்தில் வரும் ஒரு முக்கிய பகுதியான யயாதியின் வாழ்க்கை. யயாதியின் மகன் புரு வழியாகத்தான் பாண்டவர்கள், கெளரவர்களின் வம்சம் வளர்கின்றது. அச்சிறிய பகுதியை இரண்டு பாகங்களாக விரியக் கூடிய பெரிய நாவலாக எழுதியிருக்கிறார் காண்டேகர்.
9.கிருஷ்ணன் என்றொரு மானுடன்: ப. ஜீவகாருண்யன்
கிருஷ்ணன் என்கிற ஒரு மானுடப் பிறவியின் இன்ப துன்பங்களை, அவனின் வாழ்க்கையில் நேர்ந்த வெற்றி தோல்விகளை, மானுடனாகப் பிறந்தாலே இறப்பும் உண்டு என்கிற யதார்த்தத்தை எளிதான மொழி நடையில் சொல்கிறது.
10.கர்ணன் : சிவாஜி சாவந்த்
மகாபாரதத்தை முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் எழுத்தாளர் அணுகியுள்ளார். இதில் கர்ணனின் மனதை உணர்ச்சிகரமாகப் படம்பிடிக்க முயன்று அதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். இப்புதினம், ‘நான் யார்?’ என்ற கர்ணனின் கொந்தளிப்பான சுயதேடல் பயணமாக அமைந்துள்ளது.
11. கொம்மை: பூமணி
மகாபாரத கதை மாந்தர்களான
சத்தியவதி, குந்தி, காந்தாரி, திரௌபதி, இடும்பி, உத்தரை என விழைவுகளின், விதியின் விசையில் துன்புறும் பெண்களின் கதைகளை கரிசனத்துடன் அணுகி இருக்கிறார் பூமணி.கரிசல் மொழியில் மகாபாரத கதை சொல்லப்படுகிறது.
12. நித்ய கன்னி: எம். வி. வெங்கட்ராமன்
மகாபாரதக்கதையில் ஆறேழு பக்கங்களில் வரும் நித்ய கன்னியின் கதையின் விரிவே இந்த நாவல். யயாதியின் புதல்வியான மாதவியை பற்றியது.
13.யுகத்தின் முடிவில்.../ 14.யுகாந்தா : ஐராவதி கார்வே
மகாபாரத பாத்திரங்களான காந்தாரி, குந்தி, திருதராட்டிரன், திரௌபதி, கிருஷ்ண வாசுதேவன் ஆகியோரின் எண்ணங்களாக விரிந்து செல்கிறது.
15. கதா காலம்: தேவகாந்தன்
பெண் பாத்திரங்களான சத்தியவதி, காந்தாரி, குந்தி, மாத்ரி, அம்பை, துரோபதை ஆகியவர்களை மையப்படுத்தி, ஆண் பாத்திரங்களை பின்னகர்த்தி, அவர்களுக்கும் அனைத்துப் பாத்திரங்களுக்குமே மானிடத்தன்மையைக் கொடுத்து இந்நாவலை படைத்துள்ளார்.
16. பெண்ணாசை: பாலகுமாரன்
அத்தனை உறுதியான பீஷ்மர் எப்படி உருவானார் என்பதையும், அவருடைய வாலிபப் பருவத்தையும் பெண்ணாசை நாவலில் விவரித்திருக்கிறார்.
17. தனிமைத் தவம்: பாலகுமாரன்
பாண்டவர்கள் 12 வருட வன வாசத்திற்கு பிறகு, ஒரு வருடம் விராட நாட்டில் அஞ்ஞான வாசம் இருக்கும் விராட பருவக் கதைதான் தனிமைத் தவம் நாவல். சகாதேவன் கதை கூறுவதாய் அமைக்கப்பட்டுள்ளது.
18.முழுமகாபாரதம்: அருட்செல்வப் பேரரசன்
திரு.கிசாரிமோஹன்கங்குலி 1883-1896ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த
"The Mahabharata" நூலின் தமிழாக்கம்.
mahabharatham.arasan.info/2021/03/conten…
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.