My Authors
Read all threads
ஆழ்வார்களுள் மூத்தவரில் ஒருவரான குலசேகர பெருமாள் (ஆழ்வார்) இயற்றியது #முகுந்தமாலா
தேன் சொட்டும் மதுர கீதம்🙏🏻
பாடல்களும் பொருளும்
1.
வந்தே³ முகுந்த³மரவிந்த³த³லாயதாக்ஷம்

குந்தே³ந்து³ஶங்க²த³ஶனம் ஶிஶுகோ³பவேஷம் ।

இந்த்³ராதி³தே³வக³ணவந்தி³தபாத³பீட²ம்

வ்ருʼந்தா³வனாலயமஹம் வஸுதே³வஸூனும்
வந்தே முகுந்தம் அரவிந்த தலாய தாக்ஷம்’ – ‘முகுந்த:’ என்றால் முக்தியை அளிப்பவன் என்று பொருள். அரவிந்தம் என்றால் தாமரை. அரவிந்த தளம். தாமரையையுடைய இதழ்களைப் போன்ற அக்ஷம். அக்ஷம் என்றால் கண். ஆயதாக்ஷம் என்றால் நீண்ட கண்கள். தாமரை இதழ்களைப் போன்ற நீண்ட கண்களை படைத்த முக்தியை அளிக்கும்
முகுந்தனை ‘வந்தே’ நான் நமஸ்கரிக்கறேன். குந்தேந்து சங்கதசனம் – தசனம் என்றால் பல். குந்த புஷ்பம் என்று ஒன்று உள்ளது. அது வெள்ளையாக இருக்கும். இந்து என்றால் சந்திரன். சங்கம் என்றால் வெண் சங்கு, இவை எப்படி வெள்ளையாக இருக்குமோ அந்த மாதிரி வெண்மையான வரிசையான அழகான பற்களைக் கொண்ட
கிருஷ்ணன். சிஷுகோப வேஷம். பிருந்தாவனத்தில் இடையர்களுக்கு நடுவில் இடையர் குழந்தை போல வேடம் போட்டுக் கொண்டு இடையர் குலத்துல அவதாரம் பண்ணினவன். இந்திராதி தேவகண வந்தித பாத பீடம் – இந்திரன் முதலான தேவகணங்கள் எல்லாம் எவரை வணங்குகிறார்களோ அந்த குழந்தை இந்த கோவர்தனகிரிதாரி. இந்திரனுக்கு
வழிபாடு பண்ணிக் கொண்டு இருந்ததை மாற்றி கிருஷ்ணர், கோவர்தன மலைக்கு செய்வோம் என்று சொன்னார். இந்திரனோட அகந்தையை அடக்குவதற்கு அப்படி செய்தார். அப்பொழுது இந்திரன், 7 நாட்கள் தொடர்ந்து மழையை கொட்டுகிறான். உடனே கோவர்தன மலையை தூக்கி கையில பிடித்துக் கொண்டு அதற்கு அடியில் ஆயர்குலத்தில்
எல்லோரையும், மாடுகள் கன்றுகளோட, கோபர்களை நிறுத்தி காப்பாற்றுகிறார் கிருஷ்ணர். பிறகு இந்திரன் வந்து மன்னிப்பு கேட்டு வணங்கி காமதேனுவை கொண்டு பாலபிஷேகம் செய்கிறான். அதற்கு கோவிந்த பட்டாபிஷேகம் என்று பெயர். இப்படி இந்த்ராதி தேவகண வந்தித பாத பீடம். அப்படி எல்லாரும் வணங்கிய அந்த
பாதங்கள் படைத்தவர். ப்ருந்தாவனாலயம் – பிருந்தாவனத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டவர். வசுதேவஸூனும், வஸுதேவருக்கும், தேவகிக்கும் குழந்தையா பிறந்தவர்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை
2.
ஸ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி

ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।

நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி

ஆலாபனம் ப்ரதிதி³னம் குரு மே முகுந்த³ ॥

‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிற மாதிரி குலசேகர ஆழ்வார் பகவானை ரூப தியானம் செய்தார். அந்த கோகுல கிருஷ்ணனை, பிருந்தாவனத்து இடைச்
சிறுவனாக அவனுடைய நாமங்களை எல்லாம் சொல்றார். கூடவே ‘ஹே முகுந்தா முகுந்தா’ என்று கூப்பிடுகிறார். பிரதிபதம் என்றால் அடிக்கடி என்று பொருள். வாயை திறந்து பேச வந்தாலே உன் நாமங்களை மட்டுமே பேச வேண்டும். உலக விஷயங்களை பேசுவதால் வரும் பாவத்தைத் துடைக்க இறைவனின் நாமங்கள் என்கிற கங்கா
தீர்த்தமே வழி. அதனால் உன் நாமங்களை என் நாவில் வர வை என்று கேட்டுக் கொள்கிறார். ஆலாபனம் என்றால் வாயால் சொல்வது. பிரதிபதம் குருமே முகுந்தா. அந்த நாமங்கள் ஸ்ரீவல்லபேதி – ஸ்ரீதேவியினுடைய அன்புக்குரியவனே. வரதேதி – வரங்கள் கொடுப்பவர். தயாபரேதி – கருணை புரிபவர். பக்தப்ரியேதி –
பக்தர்களுக்குப் பிரியமானவன். பவலுண்டனகோவிதேதி – சம்ஸார துக்கத்தை போக்க வல்லவன். நாதேதி – எல்லாருக்கும் தலைவன் கிருஷ்ணன்தான். நாக சயன– அந்த பாற்கடலுக்கு நடுவில் ஆதிசேஷன் பாம்பு படுக்கையில் நீல மேக சியாமளனாக, நான்கு கரங்களோடு, தொப்புள் கொடியில் தாமரையில் பிரம்மாவுடன்
திருவனந்தபுரத்து பத்மநாப சுவாமி போல தியானம் செய்கிறார். ஜகன்னிவாஸேதி – ஜகத்தில் உள்ளும் புறமும் எங்கும் வசிப்பவர் விஷ்ணு பகவான். இப்படி இந்த நாமங்களை நான் அடிக்கடி சொல்லும்படியாக என்னை வை என்கிறார்.
#முகுந்தமாலா
3.
ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥

இறைவனின் பெயர்களை சொன்ன உடனே முகுந்தன் பக்தனுக்கு தரிசனம் கொடுக்கிறார் என்று குலசேகர ஆழ்வாருடைய மனதில்
தோன்றிவிட்டது. அதனால ஆழ்வார் பெருமாளுக்குக் கண் திருஷ்டி பட்டு விட கூடாதே என்று பல்லாண்டு பாடுகிறார். ஜயது ஜயது-பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! கிருஷ்ணன் வெற்றியோடு விளங்கட்டும் என்கிறார்.
ஜயது ஜயது தேவோ தேவகி நந்தநோயம். தேவ:படைத்தல், காத்தல், அழித்தல் என்கிற மூன்று செயல்களையும்
விளையாட்டாக செய்யக் கூடிய தெய்வம் என்று பொருள். கம்ப நாட்டாழ்வார் கூட

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும், நீங்கிலா

அலகிலா விளையாட்டுடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
என்று முதல் பாடலிலேயே சொல்றார்! அந்த தெய்வம் தேவகீநந்தன: தேவகியின் குழந்தையாக
வந்த அந்த கண்ணன் தான் பரம்பொருள் என்று முதல் வரிக்கு பொருள். தேவகீ நந்தனனாக வந்த கிருஷ்ணன் படைத்தல், காத்தல், பாவத்தை அழித்தல் ஆகியவைகளை செய்யும் பரம்பொருளாகும்.
ஜயது ஜயது கிருஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீப: வ்ருஷ்ணி வம்சத்தின் குலவிளக்காக வந்து பிறந்த கிருஷ்ணன் வெற்றியோடு விளங்கட்டும்
ஜயது ஜயது மேகச் சியாமள: கோமளாங்க: ரொம்ப அழகான அங்கங்கள். அந்த அங்கங்களையும், மேகச்சியாமள: மேகத்தைப் போன்ற கரிய நிறத்தைக் கொண்ட மிருதுவான அங்கங்களைக் கொண்ட கிருஷ்ணன் என்று அந்த வடிவத்தை தியானம் செய்கிறார்.
ஜயது ஜயது ப்ருத்விபாரநாஷோ முகுந்த: முக்தியை தருபவன் என்று பொருள். அவனையே
என்றும் தியானித்திருப்போம்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
4.
முகுந்த³ மூர்த்⁴னா ப்ரணிபத்ய யாசே
ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³
ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த் ॥
ஹே முகுந்தா ‘மூர்த்நா ப்ரணிபத்ய’ உன்னுடைய பாதங்களில் என்னுடைய தலையை வைத்து வணங்கி நான் ஒன்று வேண்டி கேட்டுக்
கொள்கிறேன். ‘பவந்தம் யாசே’-ஒரே வேண்டுதல். ஏகாந்தம்–இதோட பலன், முடிவு எல்லாமே ஒண்ணுதான். ஒரே ஒரு பிரார்த்தனை தான்.
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³
ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த் ॥
உன்னுடைய தயவினால் எனக்கு வேண்டிய வரம் ஒன்று தான். போன ஸ்லோகத்தில் கிருஷ்ணனை தரிசனம் செய்ததால்
அந்த கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்கறார்.
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே – உன்னுடைய பாதத் தாமரைகளை என்றும் மறவாமல் இருக்க வேண்டும். இந்த ஒரு வரம் கொடு என்று கேட்கறார். முகுந்தன் என்றால் முக்தியை கொடுப்பவன். ‘நீ முக்தியை கொடுப்பவனாய் இருப்பாய். ஆனால் எனக்கு வேண்டியது எத்தனை பிறவி
எடுத்தாலும் உன்னை மறவாமல் இருக்க வேண்டும். அவிஸ்ம்ருʼதி என்கிற சொல்லுக்கு ‘இந்த உடல் என்பது வந்து போய்கொண்டே இருக்கும். எத்தனையோ பிறவிகள் எடுக்கறோம். ஆனா பகவான் இடம் பக்தி செய்வது என்கிற அந்த ஞானம் எல்லா பிறவியிலும் இருக்கவேண்டும் என்று உபநிஷத்யில் சொலப்பட்டுள்ளது.
‘புழுவாய் பிறக்கிகினும் புண்ணியா நின் பொன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்’ என்று அப்பர் ஸ்வாமிகள் வேண்டியது போல மகான்கள் தனக்கு இது கடைசி பிறவி என்று நினைத்துக் கொள்வது இல்லை. ஒருவன் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டும் என்பது இறைவன் விருப்பம். ஆனால் எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் இறைவன் பால் பக்தியை கொடு என்பதே அவர்கள் வேண்டுதல். #முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
5.
ஸ்ரீ முகுந்த பதாம்போஜ மதுன: பரமாத்புதம் |

யத்பாயினோ நமுஹ்யந்தி முஹ்யந்தி யதபாயின: ||

ஸ்ரீ முகுந்தனுடைய திருவடித் தாமரைகளில் உள்ள மது எப்படிப்பட்டது? ‘பதாம்போஜம்’–திருவடித் தாமரை. தாமரை என்றால் அதில் தேன் இருக்கும். அந்த முகுந்தனுடைய பாதத் தாமரையில்
உள்ள தேன் மிகுந்த அதிசயம் கொண்டது. ‘பரமாத்புதம்’ – ரொம்ப அற்புதமாக உள்ளது. என்ன அற்புதம் என்றால் ‘யத் பாயினோ ந முஹ்யந்தி:’ – இந்த மதுவை எவர்கள் குடிக்கிறார்களோ அவர்கள் மயக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். ‘முஹ்யந்தி யதபாயின:’ – இதை யார் குடிக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மயக்கத்துடன்
இருக்கிறார்கள் என்று சொல்றார். மதுவை குடித்தால் தான் மயக்கம் வரும். ஆனால் ஸ்ரீ முகுந்த பதாம்போஜ மது எப்படி இருக்கும் என்றால் இதை யார் குடித்தார்களோ அவர்கள் மிகத் தெளிவாக இருப்பர். இதை அருந்தாதவர்கள் மிகுந்த கலக்கத்துடன் இருப்பர் என்கிறார். தான். ‘படகு தண்ணியில் போகலாம்.
படகுக்குள் தண்ணி வரக் கூடாது’ என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார். அது போல் உலக வாழ்க்கையில நாம் உள்ளோம். ஆனால் அதுவே வாழ்க்கை என்று ஆகிவிட்டால் கலக்கம் அதிகமாகிவிடும். அதே நேரத்தில் பகவானுடைய பாதத் தாமரைகளில் மனத்தை ஈடுபடுத்தி அந்தத் தேனைப் பருகினால் சாந்தம், தெளிவு, மிகுந்த
மகிழ்ச்சி உண்டாகும் என்கிற உயர்ந்த உண்மையை இந்த ஸ்லோகத்தில் எளிமையாகவும் கவிதை போலவும் சொல்றார் குலசேகர ஆழ்வார்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
6.
நாஹம் வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வமத்³வந்த்³வஹேதோ:
கும்பீ⁴பாகம் கு³ருமபி ஹரே நாரகம் நாபனேதும் ।
ரம்யாராமாம்ருʼது³தனுலதா நந்த³னே நாபி ரந்தும்
பா⁴வே பா⁴வே ஹ்ருʼத³யப⁴வனே பா⁴வயேயம் ப⁴வந்தம் ॥ 6 ॥

ஹே முகுந்தா! நான் உன்னுடைய இரண்டு திருவடிகளையும்
வணங்குகிறேன். தவசரணயோ: த்வந்த்வம் அஹம் வந்தே–நான் வணங்குகிறேன். எதற்காக என்று கேட்கிறாயா? முன்பே கூறியிருந்தேனே எனக்கு ஒரு வரம் தான் வேண்டும் என்று. எத்தனை பிறவி எடுத்தாலும் உன் திருவடித் தாமரைகளை நான் மறவாமல் இருக்கும் வரத்தை மட்டும் கொடு என்று கேட்டேன், அதற்காக. உடனே பகவான்
கேட்கிறார், ‘உனக்கு இதனால் என்ன இலாபம்? நீ என்னை வணங்கி ஒன்று முக்தியை கேட்கணும். அல்லது செய்த பாவத்துக்கு பலனாக எந்த கஷ்டமும் என்னை பாதிக்காமல் தயவு செய்து என்னுடைய வினைகள் எல்லாம் போக்கி கும்பிபாகம் என்கிற பயங்கரமான நரகத்தில் விழாமல் என்னை காப்பாற்று என்று கேட்கலாம்.
அத்வந்த்வம் என்றால் முக்தி. அல்லது நரக வலி இல்லாமல் இருக்க, நலமுடன் வாழ, சொர்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ என்று எத்தனையோ இருக்கு கேட்க என்று அவர் சொல்ல, அப்படி நீங்க சொல்கிறீர்களா என்று பகவானை குலசேகர கவி கேட்டுக் கொண்டு ‘எனக்கு அதெல்லாம் வேண்டாம். நான் என் மனத்தில் முகுந்தனை
எழுந்தருளப் பண்ணி, தியானம் பண்ணி, அந்த ‘அவிஸ்ம்ருதி’ உன்னை மறக்காத அந்த ஒன்றைத்தான் கேட்கறேன். ஏனென்றால் எனக்கு அது கிடைத்துவிட்டால் இந்த சுகமோ, துக்கமோ மோக்ஷமோ என்னை எதுவுமே செய்யாதே. அதனாலே ‘ஹ்ருதய பவனே’ – என் மனக் கோவிலில் உன்னை எழுந்தருளப் பண்ணி பாவயேயம் பவந்தம் – உன்னை
தியானம் செய்துகொண்டே இருக்க வேண்டும். எனக்கு வேற எதுவுமே வேண்டாம் என்று இன்னொரு தடவை சொல்றார்.
இது தான் உத்தம பக்தி.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
7.
நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் ।
ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரேऽபி
த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 7
‘நாஸ்தா தர்மே. ‘ந தர்மே ஆஸ்தா’ – ‘எனக்கு நிறைய
தர்மம் செய்யவேண்டும், புண்ணிய காரியங்கள், அன்னதானம் செய்வது பள்ளி கட்டுவது, பசுக்களை காப்பாற்றுவது, என்பதில் ஈடுபாடில்லை. அப்படி செய்து நல்ல பெயர் வாங்குவதில் விருப்பமில்லை. ‘ந வஸு நிசயே’ – நிறைய பணத்தை சேர்ப்பதிலேயும் ஆசை இல்லை. ‘நைவ காமோபபோகே’ காம போகங்கள் அனுபவிக்கணும்
என்பதில் ‘நைவ ஆஸ்தா; எனக்கு துளியும் ஆசையே இல்லை என்கிறார். ‘யத் யத் பவ்யம் பவது பகவன் பூர்வ கர்மானு ரூபம்’ என்னுடைய பூர்வ வினைப்படி தர்மார்த்தகாமங்கள் எல்லாம் எது எது வரவேண்டுமோ அது அது அந்த அந்த நேரத்தில் வரட்டும் என்கிறார். இப்படிப்பட்ட பக்தனுக்கு எந்த முயற்சியும் இல்லாமலே
அனைத்தும் வரும். அவன் பாடுபட்டுத் தான் பணம் வரணும் என்பது இல்லை. அவன் முயற்சி பண்ணித் தான் புண்ணியத்தை தேடணும் என்கிறதும் இல்லை. அப்படி அது நடக்கும் போது, இந்த பக்தன் அதை கொண்டு பெருமிதம் படமாட்டான். குறையும் பட மாட்டான். அவன் மனம், எப்படி ஒரு தாயின் மனம் எவ்வளவு வேலை செய்து
கொண்டிருந்தாலும் குழந்தை மேலேயே கவனம் இருக்குமோ அது போல இந்த பக்தனுடைய மனம் பகவான் இடத்திலேயே லயித்து இருக்கும். உலக இலாப நஷ்டங்களை அவன் கணக்கில் வைத்துக் கொள்ளமாட்டான். அவனுக்கு பகவானை தியானம் செய்வதில் கிடைக்கற சுகமே போதுமாக உள்ளது.
‘ஏதத் ப்ராத்யம்’–ஆனால் நான் ஒன்று வேண்டிக்
கொள்கிறேன்.
‘ஏதத் ப்ராத்யம் மம பஹுமதம்’ நான் எதை ஒன்றை பஹுமதமாக மிக முக்கியமாக பயனுள்ளதாக நினைக்கிறேனோ அந்த ஒன்று, ‘ஜன்ம ஜன்மாந்திரரேஷு’ எத்தனை பிறவி எடுத்தாலும் ‘த்வத் பாதாம்போருக யுக கதா’ – உன்னுடைய இரண்டு திருவடித் தாமரைகளில் ‘நிஸ்ச்சலா பக்திரஸ்து’. அசையாத பக்தியை எனக்கு கொடு
என்று கேட்கறார். இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கு ஒரு தேவை. எனக்கு இது தான் தேவை என்கிறார்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
8.
தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரிதஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேऽபி சிந்தயாமி ॥

திவி-மேல் உலகம். புவி என்றால் இந்த உலகம். இந்த பூ உலகத்திலேயோ சொர்க்கத்திலேயோ, நரகத்திலேயோ ப்ரகாமம்: மமாஸ்து வாஸ: எத்தனை நாள்
வேண்டுமானாலும் நான் வசிக்கறேன். எனக்கு அதில் ஒன்றும் குறை இல்லை. எனக்கு வேண்டியது ஒன்றே ஒன்று தான். என்னுடைய வாழ்க்கை சுகமா கழிய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கையில் கஷ்டங்கள் வரட்டும். இல்லை சுகங்கள் வரட்டும். மரணேபி–கடைசி நாள் வரையில், என்னுடைய மரணம்
ஏற்படும் வரைக்கும் உன்னுடைய திருவடிகளை நான் சிந்தனை செய்யவேண்டும். இந்த இடத்தில் நரகாந்தக: என்பதற்கு நரகனை கொன்றவர் விஷ்ணு பகவான், சத்யபாமா தேவியைக் கொண்டு நரகனை கொன்றார் என்று பொருள் வருகிறது. வேறு ஓர் அழகான பொருளும் உண்டு. ‘நரர்களுடைய விஷயப் பற்றுகளைப் போக்கடித்து
காப்பாற்றுபவன்’ -நரகாந்தக:
பிறவி பெருங்கடலில் இருந்து உலக பற்றுகளிருந்து, விஷய பற்றுகளிருந்து பக்தர்களை காப்பாற்றுவேன் என்று கீதையில கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதைக் கொண்டு இந்த நரகாந்தக: என்பதற்கு இந்த அழகான பொருள் வருகிறது. ‘அவதீரித சாரதாரவிந்த:’ -சரத் காலத்தில் தாமரைப் பூ
நிறைய இதழ்களுடன் மிக அழகாக மலர்ந்து இருக்கும். அதன் அழகை தோற்கடிக்கும்படியான உன்னுடைய இரண்டு திருவடிகளையும் நான் உயிர் போகிற வரையில் தியானம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார். Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
9.
க்ருʼஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்த:

அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ: ।

ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை:

கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥

என் மனமாகிய ராஜஹம்ஸத்தை உன்னுடைய பாதத் தாமரை என்ற கூண்டில் இப்பொழுதே ‘அத்³யைவ’ கொண்டு போய் அடைத்துவிடுகிறேன்.
கிருஷ்ணா, ‘ப்ராணப்ரயாண ஸமயே’ என்னுடைய உயிர் போகும்போது ‘கப²வாதபித்தை:’ – கபம், வாதம், பித்தம் எல்லாம் மாறி மாறி இருக்கும். கண்டா²வரோத⁴னவிதௌ⁴ – என்னுடைய தொண்டையை அது அடைத்து உன் நாமத்தைக் கூட சொல்ல விடாம செய்துவிடும் நிலைமையில் ‘ஸ்மரணம் குதஸ்தே’ – உன்னை நினைக்கும் எண்ணம்
ஏற்படுமா என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் ‘அத்³யைவ மே விசது மானஸராஜஹம்ஸ:’ என்னுடைய மனம் என்ற ராஜஹம்ஸத்தை உன்னுடைய திருவடி தாமரை என்ற கூண்டில் கொண்டு போய் இப்பொழுதே அடைத்துவிடுகிறேன் என்று சொல்கிறார். மனம் இறைவனின் பாதத்தில் இருந்துவிட்டால் உடல் எங்கிருந்தால் என்ன என்று முந்தைய
ஸ்லோகத்தில் சொன்னார்.

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।

மத்த யோகங்கள் எல்லாம் செய்ய வேண்டும் என்றால், ஞானயோகம்- உடனே காட்டில் போய் தவம் செய்ய வேண்டும், கர்மயோகம்- யாகம் செய்ய சுத்தமான இடம் வேண்டும். ஆனால் மனசை பகவான் கிட்ட வைக்க வேறு எந்தத் தேவையும்
இல்லை. ‘அவிஸ்மிருதி’ உன்னை மறவாமை வேண்டும் மிகவும் எளிமையான வழி. அதை கேட்கறார் குலசேகர பெருமாள்.

#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
10.
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம்

நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம் ॥

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் – நான் ஹரியையே எப்பவும் இடைவிடாமல் நினைக்கிறேன். அவர் எப்படி இருக்கார் என்றால், மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம் –
அவருடைய முகத் தாமரையில் மந்தஹாசம் இருக்கு. அந்த முகத்தை நான் எப்பவும் தியானம் செய்கிறேன். நந்த³கோ³பதனயம் பராத் பரம் – அவர் நந்தகோபனுடைய குழந்தை. எல்லாவற்றுக்கும் மேலான வஸ்து. நாரதா³தி³முனிவ்ருʼந்த³வந்தி³தம் – நாரதர் முதலிய முனிவர்களால் வணங்கப் படுபவர். அப்பேற்பட்ட அந்த ஹரியை நான்
இடைவிடாமல் தியானிக்கறேன் என்று சொல்றார். எண்ணையை மேலிருந்து விட்டால் எப்படி ஒழுகி கீழே வந்து கொண்டே இருக்குமோ அது போல நமக்கு இறைவனீடு நினைவு இருந்து கொண்டே இருப்பதற்குப் பேர் தான் பக்தி. உன்னை நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று இங்கு குலசேகர ஆழ்வார் வேண்டிக் கொள்கிறார்.
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம்

நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிவ்ருʼந்த³வந்தி³தம் ॥ என்று இந்த ஸ்லோகத்தை நாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம். நம் நாக்கை கொண்டு சொல்லிண்டிருந்தோம் என்றால் இறைவன் நம்மை பிடித்து வைத்துக் கொள்வார். வேற விஷயங்களில்,
புலன் இன்பங்களில் நம் மனம் போகாமால்/மாட்டி கொள்ளாமல் காப்பாற்றி கொடுப்பார்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
11.
கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே

ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।

ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்

ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥

இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணனுடைய திருவுருவத்தை ஒரு ஏரியாக (ஸரஸாக) நினைத்து அந்த ஏரியில நன்கு முங்கி
குளித்து அவரின் ரூபத்துல இருந்து வெளிப்படும் ஒளி என்கிற தீர்த்தத்தைப் பருகி என் சம்ஸார தாபத்தை போக்கிக் கொள்வேன் என்று சொல்றார். இறைவனின் ப்ரம்ம ஸ்வரூபம் எல்லையற்று எங்கும் வியாபித்து விளங்குகிறது. மஹான்கள் அவர்களின் பக்தியினால அதை நமக்கு காட்டுகிறார்கள். முகுந்தமாலை மாதிரி
ஸ்தோதிரங்கள், பார்த்தசாரதி கோயில், வெங்கடாசலபதி சந்நிதியில நின்றால் நமக்கு ஏற்படும் திருப்தியை தருகிறது. அது எல்லா களைப்பையும் போக்கிவிடுகிறது.
ஒரு மடு என்றால் அதில் என்னவெல்லாம் இருக்கும்? தாமரை பூக்கள் இருக்கும். அலைகள் இருக்கும். மீன்கள் இருக்கும். இந்த கிருஷ்ணனுடைய திவ்ய
மங்கள விக்ரகத்தில் ‘கர சரண சரோஜே’ – இறைவனுடைய திருக்கைகள், திருவடிகள் இதெல்லாம் தாமரைப் பூ மாதிரி உள்ளன. ‘ஹரிஸரஸி’ – ஹரி என்கிற குளத்தில் இந்த தாமரைகள் உள்ளன. ‘காந்திமந் நேத்ர மீனே’ ரொம்ப அழகுடன் இருக்கக் கூடிய அவரோட கண்கள் மீன்களைப் போல இருக்கு. ‘ஸ்ரமமுஷி புஜவீசி’–நம்முடைய
துன்பத்தை போக்குவதான தோள்கள் ‘வ்யாகுலேऽகா³த⁴மார்கே’- நம்முடைய வ்யாகுலங்களையும், துன்பங்களையும் போக்கக் கூடிய தோள்கள். அந்த குளம் “அகாத மார்க்கே” ஆழமாக உள்ளது. பகவான் எவ்வளவு ஆழமானவர்! ஆழமான அந்த ஹரிசரஸி விகாஹ்ய நன்னா முங்கி குளித்து, ‘ஆபீய தேஜோ ஜலௌகம்’ – பொங்கி வரும் தேஜஸ் என்ற
அந்த நீரை, ‘ஆபீய’ –குடித்து, ‘பவமரு பரிகின்ன:’–இந்த சம்ஸாரம் ஒரு பாலைவனம் போல் உள்ளது. இந்த பாலைவனத்துல அலைந்துஅலைந்து நான் ரொம்ப தாபத்தோட உள்ளேன். அந்த அயர்ச்சி அனைத்தையும் “கேதமத்ய த்யஜாமி” இன்று நான் போக்கிக் கொள்ளப் போகிறேன் என்று சொல்கிறார்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
12.
ஸரஸிஜனயனே ஸஶங்க²சக்ரே முரபி⁴தி³ மா விரம ஸ்வ சித்த ரந்தும் ।

ஸுக²தரமபரம் ந ஜாது ஜானே ஹரிசரணஸ்மரணாம்ருʼதேன துல்யம் ॥

முகுந்தமாலையில் ஒன்பது விதமான பக்தி சொல்லியிருந்தாலும் பாதஸ்மரணம், நாம சங்கீர்த்தனம் இந்த இரண்டையும் ரொம்ப அதிகமாக குலசேகர ஆழ்வார்
சொல்கிறார். ‘ஸரஸிஜனயனே’ என்றால் தாமரைக் கண்ணனே ‘ஸசங்க சக்ரே’ கைகளில் சங்கும் சக்ரமும் வைத்துக் கொண்டு இருக்கும் ‘முரபிதி முரனை சம்ஹாரம் பண்ணின அந்த விஷ்ணுவிடத்தில் ‘மா விரம ஸ்வசித்த ரந்தும்’ – தன்னுடைய மனதையே கூப்பிட்டு ஏ நெஞ்சமே அந்த இறைவனை நினைப்பதை மறந்து விடாதே.
இரமித்து இரு. எப்பவும் நினைத்துக் கொண்டே இரு. ‘ஸுகதரமபரம் நஜானேதுஜானே’ இதை காட்டிலும் சுகமான விஷயம் வேறு ஒன்றும் கிடையாது. ஹரி சரண ஸ்மரணம் என்கிற அந்த அமுதத்துக்கு இணையான இன்னொரு பொருள் உலகத்தில் கிடையாது. அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள் என்று சொல்கிறார். நம்ம மனம் தான் நமக்கு
நண்பன், நம்ம மனம் தான் நமக்கு எதிரி. அதனால மனதையே கூப்பிட்டு சொல்கிறார். உனக்கு நன்மையான செயலையே செய். விஷ்ணுவினிடத்திலயே இரமித்துக் கொண்டு இரு என்கிறார். இதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் வேறு இல்லை என்று குலசேகர மன்னரே சொல்கிறார். எல்லா இராஜ போகங்களை காட்டிலும் பகவானோட பாத
ஸ்மரணம் தான் ‘சுகதரம்’ – எல்லா சுகத்துக்கும் மேலான சுகம் என்கிறார்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
13.
மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:

நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।

ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்

லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥

இறைவனிடத்தில் பக்தி செய்தோம்
என்றால் யமனிடம் பயப்பட வேண்டாம் என்கிறார் குலசேகர ஆழ்வார். மந்தமன: – பலவிதமான கவலைகளை பட்டுக் கொண்டிருக்கிற மனமே உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள். ‘யாமீஸ்சிரம் யாதனஹா’ – யமனுடைய பலவிதமான யாதனைகள் அவன் கொடுக்கக் கூடிய தண்டனைகள். வயது ஏற ஏற பண்ண பாவங்கள் எல்லாம் சேர்ந்து இந்த ஜரா
என்கிற முதுமையே ஒரு பெரிய தண்டனையைப் போல் காட்சித் தரும். இதுக்குப் பிறகு செய்த பாவங்கள் அனைத்துக்கும் நரக வேதனை படப் போகிறோம் என்பதை நினைக்கும்போது வயதான காலத்தில் பல கவலைகள் சேர்ந்து கொண்டு விடுகின்றன. அப்படி இருக்கையில் மரணம் வரும்போது அந்த மரண வேதனை இறுதியில் மிகுந்த துன்பம்
அளிக்கிறது. குலசேகரர் சொல்றார் இந்த யாதனைகள் பற்றி நினைத்து ‘மாபீஹி; – நீ பயப்படாதே. ஏனென்றால் நீ பக்தி செய்கிறாய். நீ இந்த உலகத்தவர்களுக்கு வேலை செய்தால்தான் பலவிதமான பாவங்கள் செய்ய வேண்டும். அதுனால் நரக துன்பங்கள் ஏற்படும். நீ பகவானோட பஜனத்தை வாழ்க்கையில் செய்துகொண்டே வந்தால்
‘ஸ்வாமி நனுஸ்ரீதரஹ’ – உனக்கு ஸ்வாமி யார்? உன் முதலாளி யார்? ‘ஸ்ரீதரஹ’ – லக்ஷ்மிபதியான விஷ்ணு பகவானே! உன்னைத் தன்னைச் சேர்ந்தவனாக நினைத்து அவர் காப்பற்றப் போகிறார். அதனால மாபீஹி: – இந்த யமனுடைய தண்டனைகள் எல்லாம் நீ நினைத்து பயப்பட வேண்டாம். “நாமீ ந: ப்ரபவந்தி பாபரிபவ:”
பாவிகளுக்குத் தான் இந்த யமதூதர்கள் எதிரிகள். ‘ந அமி ந: ப்ரபவந்தி’ – அந்த துக்கம் பக்தர்களான நம்மை பாதிக்காது. ‘ஸ்வாமி நனுஸ்ரீதரஹ’
ஸ்ரீதரஹ- அப்படி ஏதாவது பகவான் இவன் ரொம்ப பாவி என்று உதாசீனம் செய்ய நினைத்தால் கூட தாயார் லக்ஷ்மி தேவி நமக்காக சிபாரிசு செய்து ‘இந்த குழந்தையை
காப்பாற்றுங்கள். உங்கள் பெயரைச் சொன்னானே என்று பரிந்துரைப்பாள், அதனால் ஸ்ரீதரஹ என்று கூப்பிடுகிறார்.
‘ஆலஸ்யம் வ்யபநீய பக்தி சுலபம்’ -இந்த பகவான் பக்திக்கு கட்டுப் படுகிறான். ‘த்யாஸ்வ நாராயணம்’ நாராயண: நரர்கள் அடைய வேண்டிய ஒரு பதம் என்று பொருள். அதை எப்படி அடையலாம் என்று
பக்தர்களுக்கு மிக எளிய வழியை சொல்கிறார். ‘ஆலஸ்யம் வ்யபநீய’ உன்னுடைய சோம்பலை ஒழித்து ‘த்யாஸ்வ நாராயணம்’அவனோட தியானத்தை நீ செய். தூங்கிக் கொண்டு இருக்காதே. சஹஸ்ரநாமம் சொல். இறைவனை வழிபடு. இப்படி செய்தால் ‘லோகஸ்ய வ்யஸனாபனோத³னகர:’–அவதாரம் எடுத்து ராக்ஷதர்கள் இடமிருந்து பூமியை மீட்டு
கொடுத்தான். அப்படிப்பட்ட பகவான் ‘தா³ஸஸ்ய கிம் ந க்ஷம:’–உனக்கு வருகிற துன்பத்தை போக்க மாட்டானா? மார்கண்டேயனுக்காக பரமேஸ்வரன் யமனை காலால் உதைத்தார், அது போல நீ விஷ்ணு பக்தி செய்து வந்தால் யமனுடைய வாதனைகள் உன்னை நெருங்காது. இறைவன் உன்னை தன் பாதங்களில், மடியில் ஏற்றுக் கொள்வார்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை
14.
ப⁴வஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்

ஸுதது³ஹித்ருʼகலத்ர த்ராணபா⁴ரார்தி³தாநாம் ।

விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்

ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥

சுத, துஹித்ரு, களத்ரம் – மகன், மகள், மனைவி இவர்களை காப்பாற்றப் போகிறோம் நாம் என்ற ‘
த்ராணபா⁴ரார்தி³தாநாம்’ பாரத்தை நாம் சுமக்கிறோம். என்னுடைய குழந்தைகள், என்னுடைய பணம், என்னுடைய வீடு என்ற பாரத்தை சுமந்து அதனால் மிகவும் தவித்துப் போகிறோம். ‘பவ ஜலதி கதானாம்’ – இந்த சம்ஸார கடலில் இருக்கும்போது தலையில ஒரு பாரம் வேற. ‘த்வந்த்வ வாதாஹதானாம்’ – இதில் எனக்கு இவனைப்
பிடிக்கும், அவனைப் பிடிக்காது என்கிற எண்ணங்கள்! காலையில் நஷ்டம் வந்தது. இரவில் இலாபம் வந்தது. இது போல சுகதுக்கங்கள் நம்மை காற்று போல் அலைக்கழிக்கிது. இதன் நடுவில் ‘விஷம விஷய தோயே’ – இந்த சம்சாரக் கடல் என்கிற விஷய சுகம் மிகவும் நன்றாக உள்ளது என்று நினைத்து அனுபவிக்கிறோம். ஆனால்
அது விஷ மயமானது. புத்தியை கெடுக்கக் கூடியது. இந்தக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த கடலில் போக அல்லது கடக்க எளிய வழி ஒன்றை சொல்கிறேன் என்கிறார் குலசேகர ஆழ்வார். ‘மஜ்ஜதாமப்லவாநாம் ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம்’ – இப்படிபட்ட நரர்களுக்கு அடைக்கலம், அவர்களை
காப்பாற்ற ஒரே ஒரு வஸ்துதான் உள்ளது. அதன் பெயர் விஷ்ணு என்கிற கப்பல் என்கிறார். ‘விஷ்ணு போதோ நராணாம்’ – ஒரு நல்ல கப்பல் கிடைத்துவிட்டதானால் நீ உன் பாரத்தை கொண்டு போகலாம். அந்த கப்பலில் ஏறி உட்கார்ந்து எவ்வளவு காற்று அடித்தாலும், கடல் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் ஒன்றுக்குமே கவலைப்பட
வேண்டாம். ‘விஷ்ணு போத: விஷ்ணு என்ற கப்பலில் ஏறிக்கொண்டால் சம்சாரக் கடலை பற்றி கவலைப் படவேண்டாம். என்னுடயது என்கிற மமதை விலகினால் நமக்கு வாழ்க்கையில நிம்மதி கிடைக்கும் என்கிறார்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
15.
ப⁴வஜலதி⁴மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்

கத²மஹமிதி சேதோ மா ஸ்ம கா:³ காதரத்வம் ।

ஸரஸிஜத்³ருʼசி தே³வே தாவகீ ப⁴க்திரேகா

நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவச்யம் ॥

ஸம்ஸார ஸாகரம். ‘பவ ஜலதிம் அகாதம்’–தாண்ட முடியாத பெரிய ஆழமான கடல் போல் உள்ளது. ‘
துஸ்தரம்’–இதை கடக்க முடியாது என்று தோன்றுகிறது. ‘நிஸ்த்ரேயம்’– இதை நான் எப்படி கடப்பேன்? ‘இதி சேதஹ’–என்று மனமே ‘மாஸ்ம கா காதரத்வம்’–பயப்படாதே. கோழைத்தனத்தை அடையாதே. ஏனென்றால் ‘ஸரஸிஜத்³ருʼசி தே³வே’–தாமரைக் கண்ணனான ‘நரகபிதி’– நரகனை வதைத்த கிருஷ்ணனிடத்தில் ‘தாவகீ பக்திரேகா’–உனக்கு
இருக்கிற பக்தி. அது ஒண்ணே இந்த பவக் கடலை ‘தாரயிஷ்யதி அவஷ்யம்’– நீ உன் மனத்தை பகவான் இடம் வைத்திருந்தால், அந்த பக்தி ஒன்றே உன்னை பவக்கடலை தாண்ட வைக்கும் என்கிறார். இங்க ‘நரகபிதி’ என்கிற நாமம் நரகாசுரனை வதைத்த கிருஷ்ணன் என்று பொருள். நரகாசுரனையே வதைத்த அவருக்கு உன்னை இந்த
ஸம்ஸாரத்தை தாண்ட வைப்பது பெரிய விஷயமா என்று அவருடைய பெருமையை சொல்கிறார். ‘ஸரஸிஜத்³ருʼசி தே³வே’ தாமரைக் கண்ணன் என்று சொன்னதால் இறைவனின் அருட் பார்வை பக்தன் மேல் விழும் என்கிறார். அதன் பிறகு வைராக்கியம் வந்து, சம்ஸாரத்தை எளிதாக தாண்டிவிடலாம் என்கிறார்.
‘பக்திரேகா தாரயிஷ்பதி’ – பக்தி ஒன்றே உன்னை தாண்ட செய்து விடும் என்று சொல்றார்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
16.
த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே

தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।

ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்

பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ||

‘த்ருஷ்ணா’-உலக விஷயங்களை அனுபவிக்கவேண்டும் என்கிற ஆசை.
த்ருஷ்ணா என்கிற சம்ஸ்க்ருத சொல்லுக்கு தாகம் என்று பொருள். விஷய சுகங்களில் அடங்காத ஆசை இருக்கக் கூடிய தாகத்துக்கு த்ருஷ்ணா என்று பெயர். இந்த பவக்கடலில் இந்த பொருளின்பத்தில் இருக்கிற அந்த இச்சை தான் நீராகும். ‘மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே’ நம்முடைய காமம் என்ற காற்றினால் கிளப்பப்
பட்ட மோஹ அலைகள் இந்த பவக்கடலில் வீசிக்கொண்டிருக்கிறது. ‘தாரவர்த்தே’–மனைவி என்கிற சுழல் இருக்கு. ‘தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச’ தனயன் என்றால் பிள்ளை சஹஜன் என்றால் கூட பிறந்தவர். இந்த முதலை கூட்டங்கள் உள்ளன. இது ஒரு பெருங்கடல். இதில் நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்.
மனைவி, மக்களோ, கூட பிறந்தவர்களோ ஆபத்தில்லை. நாம் அவர்கள் மேல் வைக்கும் பாசம் தான் ஆபத்து. அது நமக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறது. பக்தி பண்ணினால் நாம் தெளிவாக இருக்கலாம். ‘ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴’ சம்ஸாரம் என்றா பெயருடைய இந்த பெரிய கடலில் ‘மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்’ – மூழ்கிக்கொண்டு
இருக்கக் கூடிய த்ரிதா⁴மன் எங்கிற நாமத்தை சொல்றார். மூன்று இடங்களில் இருப்பவர் என்று பொருள். திருப்பாற்கடலிலும் ஸ்ரீ வைகுண்டத்திலும் இந்த பூமியில் கோவில்களிலும் இருக்கிறார். அதற்கும் மேல் அகார, உகார, மகாரங்களில் உள்ளார். அதாவது பிரணவ ஸ்வரூபமாக உள்ளார். மேலும் விழிப்பு, தூக்கம்,
நித்திரை என்கிற மூன்று ஸ்தானங்களில் உள்ளார். பூர் புவஸ் ஸ்வாஹ என்கிற மூவுலகங்களில் இருக்கிறார் என்று த்ரிதா⁴மன் என்பதற்கு பல பொருள்கள் கொடுத்திருக்கிறார். அப்படி மூன்று இருப்பிடங்களைக் கொண்ட நாராயணா! பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தி நாவம் ப்ரயச்ச² உன்னுடைய பாத தாமரைகளில் வரத!
வரம் அருளுபவனே ப⁴க்திநாவம் ப்ரயச்ச² – பக்தி என்ற படகை கொடு. நீ வரம் கொடுப்பவன். அதனால் உன்னிடம் இந்த வரம் கேட்கிறேன். உன்னுடைய பாத பக்தி என்ற அந்த படகை கொடுத்தால் அந்த படகில் ஏறிக்கொண்டு இந்த ஸம்ஸாரக் கடலை நான் தாண்டிவிடுவேன் என்று சொல்கிறார்.
‘ப⁴க்திநாவம் ப்ரயச்ச²’ கேட்டதுனால்
பக்தியை இறைவன் தான் கொடுக்கவேண்டும். அவனருளாலே அவன் தாள் வணங்கி! மகான்கள் ‘தைலதாரை மாதிரி ஒரு க்ஷணம் கூட பகவானை மறக்காத நிலைமை தான் பக்தி’ என்று define செய்கிறார்கள்.
குலசேகராழ்வார் நமக்காக அதை வேண்டியிருக்கிறார். அந்த ஸ்லோகத்தை சொல்லி நாமும் வேண்டிக் கொள்வோம். Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
17.
மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய
அன்யதா³க்²யானஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே
சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரேऽபி ॥
ஹே மாதவா! ஹே லோகநாதா! புவனபதே! மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான்க்ஷணமபி ப⁴வதோ ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே உன் திருவடியில் பக்தி இல்லாத க்ஷீணபுண்யாஹா- புண்ணியம் இல்லாத அந்த பாவிகளை நான் ஒரு கணம் கூட ‘க்ஷணமபி மாத்ராக்ஷம் பார்க்க மாட்டேன் என்று சொல்றார். உன்னிடம் பக்தியுள்ள அந்த பக்தர்களிடம்
மட்டுமே நட்பு பாராட்டுவேன். மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்யான்யதா³க்²யானஜாதம் – உன்னுடைய சரிதம் ‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோன்னு’ நம்மாழ்வார் பாடுகிறார். அது போல கிருஷ்ணருடைய கதையோ, ராமருடைய கதையோ, இல்லை பக்தர்களுடைய சரித்திரமோ இவை மட்டுமே நான் கேட்பேன்.
உன்னுடைய சரிதம் அல்லாத வேற எந்த ப்ரபந்தமாக இருந்தாலும் அது ‘ச்ராவ்யப³ந்த⁴ம்’–கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தாலும் மனத்தை கவரக் கூடிய விதத்தில் கதை சொன்னாலும் அந்த கதைகளை ‘மாஸ்ரௌஷம்’–நான் கேட்க மாட்டேன் என்று சொல்கிறார். ‘மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே சேதஸாபஹ்னுவானான்’
மனதால் உன்னை நினைத்துக்கொண்டே இருக்கவேண்டும். உன்னை தன் உள்ளத்தில் வைக்காதவனை ‘மாச்மார்ஷம்’ – நான் நினைக்கக் கூட மாட்டேன். உன்னை நினைத்துக் கொண்டு இருப்பவர்களை மட்டுமே நான் நினைப்பேன். ‘மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ ஜன்மஜன்மாந்தரேऽபி’ உன்னை பூஜை செய்யாமல் ஒரு நாளும் இருக்க
மாட்டேன் என்கிறார். இதில் மாட்டேன், மாட்டேன் என்று சொன்னாலும் பொருள் என்னவென்றால் ‘எப்பொழுதும் உன் அடியார்களுடன் கூட இருந்து, உன்னுடைய சரிதங்களை கேட்டு, உன்னை தியானிக்கும் பக்தர்களையே நான் மனத்தில் தியானிப்பேன். இப்படி என் வாழ்நாளை உன்னை பூஜித்தே கழிப்பேன். வீணான பேச்சுகளை
பேசுகிறவர்களுடன் நான் பழக மாட்டேன் என்று சொல்கிறார். இது ஒரு முக்கியமான பரிபாகம் பக்தியில.
இந்த மாதிரி நான் வெறும் பஜனை செய்துகொண்டு பாராயணம் பண்ணிக்கொண்டு இருப்பேன், இம்மாதிரி மனிதர்களுடன் மட்டுமே பழகுவது என்று வைத்துக்கொண்டால் தனிமை வந்து வட்டாதா என்று தோன்றும்.
ஆனால் எவனொருவன் நேர்மையாகவும் மனத்தில் கருணையோடும் அதே நேரத்தில் உலகப் பற்றும் இல்லாமல் இருக்கிறானோ, அவனிடத்தில் அனைவரும் மிகுந்த அன்புடன் இருப்பர். தன்னோட பெற்றோரிடத்திலும், கூட பிறந்தவர்களிடமும், கணவன் மனைவியிடத்திலும், மனைவி தன் கணவனிடத்திலும், தன் குழந்தைகளிடமும் இருப்பதை
விட ஒரு பக்தனிடத்தில் எல்லாரும் அன்பாக இருப்பார்கள்.

#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
18.

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷணாத் அகணிதஷ்ரேய:பதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||

இறைவனின் ஆறு குணங்களை சொல்லி, ஆறு பேரை
அதுக்கு சாட்சியாக வைக்கிறார்.
‘வாத்ஸல்யாத்’ – பகவான் அன்பே வடிவமாக உள்ளார். வாத்ஸல்யம். அது பிரஹ்லாதன் மூலமாக தெரிகிறது. பிரஹ்லாதன் ‘ஹரி எங்கும் இருப்பான்’ என்று சொன்ன உடனே அவர் எல்லா இடத்திலேயும் காத்துக்கொண்டு இருந்தார். ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்று
குழந்தை சொன்ன உடனே, ஒவ்வொரு துரும்பிலும், ஒவ்வொரு தூணிலும் எல்லா இடத்துலேயும் இருந்தார். பிறகு ஹிரண்யகசிபுவை வதம் பண்ணி, பிரஹ்லாதனை மடியில வைத்துக் கொண்டு அன்பு பாராட்டினார். பிரஹ்லாதன் அவரை துதித்தவுடன் அவனுக்கு அருள் பாலிக்கிறார். பொதுவாக நரஸிம்மர் என்றால் சிறிது பயம் வரும்.
ஆனால் குலசேகரர் வாத்ஸல்யத்துக்கு நரஸிம்ஹ ஸ்வாமி என்று சொல்றார்.
‘அபய ப்ரதான ஸமயாத்’–அபயமளிப்பது என்ற அந்த கொள்கை. அதுக்கு விபீஷணன் சாட்சி. இராமர் அவனுக்கு அபயம் கொடுத்தார். சுக்ரீவன் மற்றும் வானரர்கள் எல்லாம் வேண்டாம் என்கிறார்கள். ஹனுமார் மட்டும்தான் ‘அவன் நல்லவன் தான் என்று
நான் நினைக்கிறேன், சேர்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்கிறார். ராமர் ‘ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீ திச யாசதே | அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம || எவன் என்னை வணங்கி உன்னை சேர்ந்தவனாக வைத்துக்கொள் என்று கேட்டாலும் யாராக இருப்பினும் நான் அபயம் கொடுப்பேன். இது என்னோட விரதம்
என்கிறார்.
‘ஆர்தார்த்திநிர்வாபணாத்’ – கஷ்டத்திலிருப்பவர்களுடைய துயரத்தை போக்குபவன் இறைவன். அதற்கு கரிராட் கஜேந்திரன் சாட்சி. “நாராயணா அகில குரோ பகவன் நமஸ்தே” என்ற உடனே கருட பகவானை இழுத்துக் கொண்டு வந்து கஜேந்திரனுக்கு துன்பத்தில் இருந்து விடுதலை அளிக்கிறார்.
‘ஔதார்யாத்’–தாராள
தன்மைக்கு த்ரௌபதி சாட்சி. ஒரு பருக்கை அரிசியை சாப்பிட்டு அந்த துர்வாச மகரிஷிகளோட கோபத்துக்கு பாண்டவர்கள் ஆளாகாமல் காப்பாற்றினார். சபையில துகிலைக் கொடுத்தார்.
‘அகஷோஷனாத்’ – பாவங்களைப் போக்குபவர் பகவான் என்பதற்கு அகல்யா சாட்சி.
‘அகணிதஷ்ரேயபதப்ராபணாத்’ – இவ்வளவு தான் என்று சொல்ல
முடியாது, அவ்வளவு உயர்ந்த பதவியை கொடுப்பார் என்பதற்கு துருவன் தான் சாட்சி என்கிறார். துருவ நட்சத்திரத்தை நாம இன்றும் பார்க்கும்படி பதவி குடுத்தார். அந்த குழந்தை அப்பா மடியில உட்கார முடியவில்லையே என்று காட்டுக்குப் போய் தவம் செய்ததற்கு பகவான் நினைத்துக்கூட பார்க்க முடியாத உயர்ந்த
நிலையை கொடுத்தார். “ஸ்ரீபதிரேகஏவ ஸேவ்ய:” இந்த பகவான் ஒருவனே வழிபடத் தக்கவர் என்பதற்கு இந்த ஆறு பேர் சாட்சி சொல்கிறார்கள் என்று இந்த அழகான ஸ்லோகம் மூலம் சொல்கிறார் குலசேகரர். இறைவன் ஒருவனையே நாம் நம்ப வேண்டும். உலகத்தவர்களை நம்பக் கூடாது என்பதை உனர்த்துகிறார். இந்த குணங்களை
எல்லாம் நாம நினைக்கும் போது தான், பகவான் காப்பாற்றுவார் என்கிற நம்ம நம்பிக்கை உறுதிப்படும். பக்தி வளரும்.

#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
19.
ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்

பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுதகதா:² ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருʼணு ।

க்ருʼஷ்ணம் லோகய லோசனத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்

ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துலஸீம் மூர்த⁴ன் நமாதோ⁴க்ஷஜம் ॥
இந்த உடலை விசித்தரமான உறுப்புகளோடு இறைவன் படைத்து இருக்கிறார். ஒவ்வொரு அவயத்துக்கும் ஒரு செயல்பாட்டை கொடுத்து இருக்கிறார். ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள் ஆகியவையும் உள்ளன. அனைத்தையும் இறைவனின் செயல்களுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.
ஜிஹ்வே கீர்தய கேஶவம் – ஹே நாவே! நீ கேசவனைப் பாடு. முரரிபும் சேதோ ப⁴ஜ -மனமே! முரனை அழித்த, முரனுக்கு சத்ருவான அந்த விஷ்ணுவை ஸ்மரணம் செய். ‘பாணித்³வந்த்³வ ஶ்ரீதரய அர்சயஹ இரண்டு கைகளே! அந்த லக்ஷ்மிகாந்தனான நாராயணனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ‘அச்யுதகதா:² வய த்வம் ஶ்ருʼணு-காதுகளே!
அச்யுதனுடைய கதைகளை நீங்கள் இடைவிடாது கேளுங்கள். ‘க்ருʼஷ்ணம் லோகய லோசனத்³வய’ – இரண்டு கண்களே! கிருஷ்ணனுடைய அழகைப் பாருங்கள், பருகுங்கள். ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம் – கால்களே! ஹரியினுடைய ஆலயத்துக்கு நீங்கள் போய் அங்கு கோவிலை வலம் செய்யுங்கள். ‘ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³
துலஸீம்’– ஹே மூக்கே! முகுந்தனுடைய பாதத்துல பூஜை செய்த அந்த துளசிய எடுத்து அதை முகர்ந்து பார்க்கவும். ‘மூர்த⁴ன் நமாதோ⁴க்ஷஜம்’–தலையே! நீ அதோக்ஷஜனை வணங்கு. இந்த உடலை வைத்துக்கொண்டு நாம் செய்ய வேண்டியது, பகவானோட செயல் தான் என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார். இப்படி ஒருவன் செய்து
கொண்டே இருந்தால் மற்ற வேலைகளை எல்லாம் யார் கவனிப்பது என்று கேட்டால் கிருஷ்ணர் பகவத்கீதையில், “தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்‌ஷேமம் வஹாம்யஹம்” “நானே அவர்களுடைய நலத்தைப் பார்த்துக்கொள்வேன்” என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அந்த வாக்கை நம்பி, அம்பரீஷ மஹாராஜா போல பகவானிடம் பொறுப்பை
விட்டு, இறைவனின் பெயரை பாடிக்கொண்டு அதுனால் ஒரு குறையும் இல்லாமல் நிறைய பேர் இந்த உலகத்தில் இருந்திருக்கிறார்கள். அது போல பகவானுடைய செயல்களுக்குகாகத்தான் புத்தியும், மனமும், உடலும் செயல்படவேண்டும் என்கிறது இந்த அழகான ஸ்லோகம்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
20.
ஹே லோகா: ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதே⁴ஶ்சிகித்ஸாமிமாம்

யோக³ஜ்ஞா: ஸமுதா³ஹரந்தி முனயோ யாம் யாஜ்ஞவல்க்யாத³ய: ।

அந்தர்ஜ்யோதிரமேயமேகமம்ருʼதம் க்ருʼஷ்ணாக்²யமாபீயதாம்

தத்பீதம் பரமௌஷத⁴ம் விதனுதே நிர்வானமத்யந்திகம் ॥

ப்ரஸுதி, மரணம், வியாதி–வாழும் காலத்தில்
நம் உடலுக்கு நிறைய நோய்கள் வருகின்றன. “ப்ரஸுதினா” ஜனனம், “மரணம்” கடைசியில் வருகிறது. திரும்ப திரும்ப பிறவி எடுத்துக்கொண்டே இருக்கிறோம். இதுவே மிகப்பெரிய நோய். நோய் நொடியில்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்தாலும், எப்படியும் இறுதியில் மரணம் வரப்போகிறது, நீ இறைவனை அடையவில்லை
என்றால் திரும்ப வந்து பிறக்கவேண்டும். இது ஒரு பெரிய வியாதி அல்லவா என்று கேட்கிறார் குலசேகர ஆழ்வார். அதுனால் இந்த நோய்க்கு நான் ஒரு மருந்து சொல்கிறேன். இந்த மருந்த நான் சொல்லவில்லை, “யாஜ்ஞவல்க்யாத³ய:” – யாக்ஞவல்க்யர் முதலிய “யோக³ஜ்ஞா:” – யோகம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள் என்கிறார்.
உடல் நலத்துக்கு யோகாஸனம் செய்கிறோம். ஆனால் இந்த உடலில் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருப்பதற்கு யோகிகள் சொன்ன மருந்த நான் சொல்கிறேன். “அந்தர்ஜ்யோதி” – உள்ளுக்குள் இருக்கும் ஒரு ஜோதி, அதன் பெயர் “க்ருஷ்ணன்”. அந்த மருந்தை நீங்கள் அருந்துங்கள். அதற்கு மிகுந்த வீர்யம் உள்ளது. அந்த
மருந்தை குடித்தால் நிரந்தரமான ஆரோக்கியம், நித்ய மோக்ஷானந்தம் உங்களுக்கு கிடைக்கும். இது பரம ஔஷதம். மிகச் சிறந்த மருந்து. இந்த மருந்து அம்ருதம், கசக்காது. “ஏகமம்ருʼதம்”- இது தனியான ஒரு மருந்து. வயதாக வயதாக இந்த மருந்திடமே ஒரு பற்றுதல் வந்துவிடும். க்ருஷ்ணன் என்கிற மருந்தை
நம்புங்கள் என்று சொல்லும் ஓர் அற்புதமான ஸ்லோகம் இது.

#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தனாலா #முகுந்தமாலை
21.
ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா: ।
நானாஜ்ஞானமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு:

மனிதர்களே மிக அபாயகரமான சம்சாராணார்வம்
ஆபதூர்மி பஹுலம்- ஆபத்து என்கிற அலைகள் நிறைந்து இருக்கும், தீடீர் என்று ஒரு நாள் வெள்ளம் வருவது போல பலவிதமான ஆபத்துகள் வாழ்க்கையில் ஒவ்வொன்றாக வரும். மேலும் மேலும் அலை மாதிரி ஆபத்துகள் வரக் கூடிய இந்த சம்சார சாகரத்தில் மிக உள்ளே போய் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மீள நான்
ஒரு வழி சொல்கிறேன் என்கிறார் குலசேகரர். வக்ஷ்யாமி சம்க்ஷேபத: சுருக்கமாக சொல்கிறேன். ‘நானாஞானம் அபாஸ்யா’ பலவிதமான ஞானத்தை தெரிந்து கொண்டு பல புத்தகங்களைப் படித்து பலபேர் சொல்வதை கேட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். நமோ நாராயணா என்கிற மந்திரத்தை ப்ரணவத்தோடும் ப்ரணாமத்தோடும் மீண்டும்
மீண்டும் ஜபித்துக் கொண்டே இருங்கள் என்று சொல்றார். ப்ரணாமத்தோடு செய்யவேண்டும் என்று அவர் சொன்னதினால் குலசேகர ஆழ்வாரையே ஒரு குருவா நினைத்து, அவரிடம் அன்பும் மரியாதையும் வைத்து அவரையே வணங்கி இந்த நாராயண நாமத்தை ஜபம் செய்யவேண்டும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். அவர் ஒரு உயர்ந்த
நிலையில இருந்து கொண்டு அந்த மந்திரத்தை உபதேசம் செய்கிறார். ஓம் என்னும் ப்ரணவத்தை ஜபிப்பதற்கு பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளன. நாராயண நாமத்தை ஜபிக்க எந்த கட்டுப்பாடும் இல்லை. நமோ நாராயணா என்று ஜபியுங்கள் என்று சொல்கிறார். நாராயண நாமத்துக்கு அத்தனை பெருமை உள்ளது. நாலாயிர திவ்ய
பிரபந்தத்தில் நிறைய சொல்லியிருக்கிறார். உங்களுக்கு கண்ணன் வேணுமா? நாராயண நாமத்தை ஜபம் செய்யுங்கள் என்கிறார் நம்மாழ்வார்.
கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.
அப்படி இந்த நாராயண நாமத்துக்கு மிகப் பெரிய பலன் உள்ளது. அந்த நாராயண நாம் ஜபத்தை இந்த
ஸ்லோகத்தில் சொல்கிறார். நீங்கள் இந்த சம்சார சாகரத்துல எந்த புத்தகமும் படிக்கத் தேவையில்லை. எந்த ஞானமும் உங்களுக்கு வேண்டாம். நாராயண நாமத்தை மட்டுமே சொல்லி நீங்கள் கரையேறிவிடலாம் என்கிறார்.

#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
22.
ப்ருʼத்²வீரேணுரணு: பயாம்ஸி கணிகா: ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ऽனல –
ஸ்தேஜோ நி:ஶ்வஸனம் மருத் தனுதரம் ரந்த்⁴ரம் ஸுஸூக்ஷ்மம் நப:⁴ ।
பக்தா: ருத்³ரபிதாமஹப்ரப்⁴ருʼதய: கீடா: ஸமஸ்தா: ஸுரா
த்³ருʼஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே ⁠பூ⁴மாவதூ⁴தாவதி:⁴ ||
இறைவனின் பெருமை எல்லையற்று உள்ளது. விஷ்ணு பகவானின் மகிமையை நினைக்கும்போது, சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்று உலகமே விஷ்ணுமயமாக அவரை தரிசனம் செய்து அதற்கு முன் அனைத்துமே மிக சாதாரணமாக தெரிவதை இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார் குலசேகர ஆழ்வார். அளவற்ற பெருமையை, அந்த ரூபத்தை தியானம்
செய்யும்போது, பூமி ஒரு துகளைப் போல் ஆகிவிடுகிறது, கடல் ஒரு திவலை போல், நெருப்பு ஒரு பொறியைப்போல் ஆகிவிடுகிறது. வாயு ஒரு மூச்சுக்காற்று போல் ஆகிவிடுகிறது, பகவானுடைய மூச்சுக் காற்று என்கிறார். ஆகாசம் சின்ன துவாரம் போல ஆகிவிடுகிறது. அந்த மாதிரி தன்னோட இஷ்ட தெய்வத்துக்கிட்ட
எல்லாத்தையும் பார்க்க வேண்டும். ஒரு இடத்துல பக்தி செய்ய வேண்டும்- தாத்பர்யம் இந்த ஸ்லோகத்தில் விளங்குகிறது.

#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
23.
ப³த்³தே⁴னாஞ்ஜலினா நதேன சிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:

கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன நயனேனோத்³கீ³ர்ணபா³ஷ்பாம்பு³னா ।

நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³லத்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்

அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥

நித்யம் – ஒவ்வொரு நாளும்
எப்பொழுதும் ‘த்வச்சரணாரவிந்த³யுக³லத்⁴யானாம்ருதம்’ – உன்னுடைய இரண்டு பாதத் தாமரைகளின் தியானம், அதையே தியானம் பண்ணுவது என்கிற அமிர்தம் – அந்த அமிர்தத்தை குடித்துக் கொண்டு ‘அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம்’ – எங்களுடைய வாழ்நாள் உன்னுடைய சரணாம்ருதம் என்ற அந்த ரசத்தை
அமிர்த ரசத்தை பருகிக் கொண்டு ஒவ்வொரு நாளும் கழியட்டும். ஸரஸீருஹாக்ஷ – தாமரைக் கண்ணனே என்று சொல்கிறார். உன்னுடைய கண்ணால் எங்களுக்கு அருள் பாலித்து எங்களுக்கு அந்த பாக்கியத்தைக் கொடு. அந்த அமிர்த ரசத்தை ஒருவன் பருகினால் என்ன ஆனந்தம் வரும் என்பதும், அதை எப்படி பருக வேண்டும் என்றும்
சொல்லித் தருகிறார். ப³த்³தே⁴னாஞ்ஜலினா’ – கூப்பிய கைகளோடு ‘நதேன சிரஸா’ –தலை வணங்கி ‘கா³த்ரை: ஸரோமோத்³க³மை:’ உடம்பு மெய் சிலிர்த்து
‘கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன’ கண்டம் தழுதழுத்து பகவானைப் பாடினால் பெரிய மகான்கள் எல்லாம் திருப்புகழ் பாடும்போது, தொண்டை தழுதழுத்து பாடுவார்கள். ஸ்ரீமத்
பாகவதம் படிக்கும் போதும் ஸ்ரீமத் ராமாயணம் படிக்கும்போதும் அப்படியே ஆழ்ந்து இந்த ஸ்லோகத்தில் சொல்லியிருப்பது போல மகான்கள் அந்த பகவானுடைய சரண அம்ருதத்தை பருகினார்கள். கையை கூப்பி, தலை வணங்கி, உடல் மெய் சிலிர்த்து ‘கிருஷ்ணா’ என்று சொல்லும்போது தொண்டை தழுதழுத்து ‘நயனேனோத்³கீ³ர்ண
பா³ஷ்பாம்பு³னா’ கண்கள் கண்ணீர் பெருக்கிக் கொண்டு உன்னுடைய சரணாம்ருதத்தை அந்த ரசத்தை நாங்கள் ஒவ்வொரு நாளும் இடையறாமல் பருகிக் கொண்டு இருக்க வேண்டும். எங்களுடைய வாழ்நாள் இப்படி கழிய வேண்டும். இதற்கு அருள் புரி ஹே கிருஷ்ணா!என்கிறது இந்த ஸ்லோகம்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
24.
ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।

ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்

ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥

பசுக்களைக் காப்பவனே, கோபாலனே, கருணைக் கடலே
‘க்ருபா ஜலநிதே’ என்கிறார். ‘ஸிந்து கன்யாபதே’ பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மியின் நாயகனே, ‘கம்ஸாந்தக’ – கம்ஸனை கொன்றவனே ‘கஜேந்திர கருணா பாரீண’ கஜேந்திரனுக்கு அருள் செய்தவனே ‘ஹே மாதவா’ ‘ஹே ராமானுஜ’ பலராமனுடைய தம்பியே, ‘ஹே ஜகத்ரயகுரோ’ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் என்று சொல்கிறோம் இல்லையா
அது போல ஜகத்குரு அவர் தான். திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக எழுந்தருளி கீதோபதேசம் செய்கிறார். ‘ஹே புண்டரீகாக்ஷ’ தாமரைக் கண்ணனே ‘ஹே கோபி ஜனநாதா’ கோபிகைகளுக்குத் தலைவனே. ‘மாம் பாலய பரம் ஜானாமி ந த்வாம் வினா’- உன்னைத் தவிர எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று இந்த சரணாகதியில்
கிருஷ்ணனிடம் ‘நீ தான் என்னைக் காப்பாத்தணும்’ என்று வாய்விட்டு சொல்ல வேண்டும். அதை இந்த ஸ்லோகத்தில் காட்டித் தருகிறார். இறைவனின் பெருமைகளை நினைதது அவன்தான் நம்மை காப்பாற்ற முடியும், அவன் காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கை, வேறு விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று சரணாகதியினுடைய ஒவ்வொரு
அங்கததையும் சொல்லி வருகிறார். இந்த ஸ்லோகத்தில் அந்த சரணாகதியை வாய்விட்டு வேண்டுகிறார். இந்த நாமங்களை சொன்னாலே நமக்கு இன்பம் பெருகும்.
#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
25. ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணிஸ்த்ரைலோக்யரக்ஷாமணிர்

கோ³பீலோசனசாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்யமுத்³ராமணி: |

ய: காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:

ச்ரேயோ தே³வசிகா²மணிர்தி³சது நோ கோ³பாலசூடா³மணி: ॥

நோய் வந்தால் ஔஷதம் (மருந்து)தேவை என்றால்
மூலிகைகளை தேடிப் போகவேண்டும். மந்திரம் என்றாலும் நல்ல குருவா கிடைக்கவேண்டும். மணி, மந்திர, ஔஷதங்கள் நன்மை செய்யும். ஆனால் அது கிடைப்பதற்கு கடினமாக இருக்கும். குலசேகராழ்வார் சொல்றார். ‘நீ அது மாதிரி எல்லாம் தேடி அலையாதே. நான் உனக்கு மணி, மந்திர, ஔஷதம் சொல்கிறேன் என்று கிருஷ்ணன்
தான் மணி. கிருஷ்ணன் தான் மந்திரம். கிருஷ்ணன் தான் ஔஷதம் என்று இந்த மூன்று ஸ்லோகங்களில் சொல்கிறார். அதற்கு ‘கோபால சூடாமணி’ என்று பெயர். கோபாலஹ - பசுக்களை பார்த்துக் கொள்பவன். அந்த இடையர்களுக்குள் சூடாமணியாக தலைவனா விளங்கும் கிருஷ்ணன்,ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணி’ –
பக்தர்களுக்கு அபாயம் என்ற பாம்புக்கு கருடனாக விளங்குகிற மணி என்கிறார். அபாயம் பாம்பு போல உள்ளது. கிருஷ்ணான்னு நீ சொன்னா கருடன் வந்து பாம்பை விரட்டுகிற மாதிரி உன் கஷ்டம் போய் விடும். ராமலக்ஷ்மணா நாகபாஸத்தில் கட்டுண்டு இருந்த போது கருட பகவான் வந்தது போல், கிருஷ்ண நாமத்தை நீ
சொன்னால் உன்னுடைய அபாயம் காணாமல் போய் விடும். எப்ப என்ன கஷ்டம் வந்தது என்பதும் மறந்து போகும் அளவுக்கு அந்த கஷ்டம் மறந்து ‘த்ரைலோக்யரக்ஷாமணி:’ – மூவுலகத்தையும் காப்பாற்றுகிற மணி கிருஷ்ணன் என்கிற மணி. ‘கோபி லோசன சாதகாம்புத மணி:’ கோபிகைகளுடைய கண்களாகிய
சாதக பக்ஷிகளுக்கு மேகமாக இருக்கும் மணி என்று சொல்கிறார். இதில் என்ன அழகு என்றால், சாதக பக்ஷி வானத்தில் இருந்து வரும் மழை நீரை மட்டும் தான் உண்ணும். அதற்கு கழுத்தில் ஓர் ஓட்டை இருக்கும். அது மற்ற பறவைகள் மாதிரி தரையில இருந்து தண்ணீரைக் குடித்தால் குடித்து நிமிர்ந்த உடனே குடித்த
தண்ணீரெல்லாம் கீழே விழுந்துடும். அதுனால் தலையை மேலே தூக்கிக்கொண்டு இருக்கும் போது மழை வந்து அந்த நீரை குடித்தால் தான் அதற்கு உள்ள போகும். சாதக பக்ஷிகளுக்கு எப்படி மழை ஒன்று தான் திருப்தியை அளிக்குமோ, அது போல் இந்த கோபிகைகளுக்கு கிருஷ்ணனை பார்த்தால் தான் திருப்தி. வேற ஒன்றிலும்
திருப்தி கிடையாது என்று அழகான உவமை சொல்லி கோபிகைகளோட கண்கள் என்கிற சாதக பக்ஷிகளுக்கு மேகம் போன்ற மணி என்கிறார். ‘சௌந்தர்ய முத்ரா மணி: -அழகுக்கு அடையாளமே கிருஷ்ணன்தான். அப்படி ஒரு அழகு மணி அவன். ‘ய: காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:’ – காமாக்ஷியை மூக கவி கூட
‘நாரீகுலைக சிகாமணி:’ என்று சொல்வார். அது போல பெண் ரத்தினமாகிய ருக்மணிதேவியினுடைய குசங்களுக்கு அலங்காரமாக விளங்கும் இந்த கிருஷ்ணன் என்கிற மணி என்று சொல்கிறார். ‘தே³வசிகா²மணி:’ – தேவர்களுக்கு சிகாமணி தேவர்களுடைய தலைவன். அந்த கிருஷ்ணன் ‘ ஸ்ராயோ திஷது’ – நமக்கு மங்களங்களை, நன்மையை
அளிக்கட்டும் என்று அழகான ஓர் ஸ்லோகம்.

#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
26.
சத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்

ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ: ஸங்க⁴னிர்யாணமந்த்ரம் |

ஸர்வைச்வர்யைகமந்த்ரம் வ்யஸனபு⁴ஜக³ஸந்த³ஷ்டஸந்த்ராணமந்த்ரம்

ஜிஹ்வே ஸ்ரீக்ருʼஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்மஸாப²ல்யமந்த்ரம் ॥
சத்ருச்சே²தை³கமந்த்ரம் – கிருஷ்ணன் என்கிற மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருந்தால் ஜப ஜப, சததம், கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அது நம் எதிரிகளை வெட்டி போட்டு விடும். சத்ருச்சே²தை³கமந்த்ரம். அதற்குப் பிறகு பகைவர்களே இருக்க மாட்டார்கள். சொலற்கரிய திருப்புகழை
உரைத்தவரை அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன் எனதுளத்தில் உறைகருத்தன் மயில் நடத்தும் குஹன் வேலே. என்று அருணகிரிநாதர் பாடியாது போல கிருஷ்ண நாமம் சொல்லிக் கொண்டே இருந்தால் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்கிறார்
குலசேகர ஆழ்வார்.
‘ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்’ – உபநிஷத் வாக்யங்கள் எல்லாம் இந்த கிருஷ்ண நாமத்தைதான் கொண்டாடுகின்றன. உபநிஷத் வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம். சகலம் எல்லாமே இந்த கிருஷ்ண மந்த்ரம் தான். ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் -ஸம்ஸாரத்துல இருந்து உன்னை தூக்கி விடக் கூடிய மந்த்ரம் இது.
‘ஸமுசிததமஸ: ஸங்க⁴னிர்யாணமந்த்ரம்’ நாம் சேர்த்து வைத்திருக்கிற எல்லா அக்ஞானத்தையும் போக்கடிக்கக் கூடிய மந்திரம் என்கிறார்.
ஸர்வைச்வர்யைகமந்த்ரம் – எல்லா ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக் கூடிய மந்திரம். வ்யசன, புஜக சந்தஷ்ட சந்தராண மந்த்ரம். பாம்பு கடித்தால் மந்த்ரிப்பார்கள். வியசனங்கள்
என்றால் துக்கம். மனக்கவலைகள் என்ற புஜகம் பாம்பு. சந்தஷ்ட: கடித்தவனுக்கு சந்தரான மந்த்ரம் – உயிரை கொடுக்கக் கூடிய மந்திரம். இந்த கிருஷ்ண மந்த்ரம். ‘ஜிஹ்வே’ தன் நாவையே கேட்டுக் கொள்கிறார். ‘ஹே ஜிஹ்வே ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்ம சாபல்ய மந்த்ரம்’ இந்தப் பிறவியை பயனுள்ளதாக
ஜன்ம சாபல்யம் இந்த கிருஷ்ண மந்திரத்தை சொல்வதுதான்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்று ஜபிததுக்க கொண்டே இருந்தால் எல்லா நற்பலங்களும் கிடைக்கும்.

#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
#முகுந்தமாலா #முகுந்தமாலை
27.
வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்

தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।

ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்

ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥
கிருஷ்ணனாகிய ஔஷதம் ‘ வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம்’ நம்முடைய மனமயக்கம், உலக வாழ்க்கையில ஏற்படக் கூடிய மயக்கங்களை எல்லாம் தெளிவிக்கக் கூடிய ஒரு மருந்து என்கிறார் குலசேகரர். ‘முனிமனோவ்ருʼத்தி ப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்’ மௌனமா இருந்து கொண்டு, பகவானுடைய நாமத்தை ஜபித்துக்க கொண்டு இருக்கக் கூடிய
மகான்களோட சித்தத்தைத் தூய்மைப் படுத்தி அவர்களுடைய ஆத்மீக சக்தியை வளர்க்கிற ஔஷதம் இந்த கிருஷ்ண ஔஷதம் -‘முனிமனோவ்ருʼத்தி ப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்’
‘தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம்’ தைத்யர்களுடைய இந்திரன், அதாவது அஸுர ராஜாக்கள். அவர்களுக்கு எல்லாம் பயம் உண்டாக்குகிற ஔஷதம். அவர்களை வருந்தச்
செய்யும் ஔஷதம் இந்த கிருஷ்ணா நாமம். கிருஷ்ணன், நரகாசுரன், முராசுரன் போன்ற அசுரர்களை எல்லாம் வருத்தப் பட வைத்தார். ‘த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம்’ மூவுலகங்களுக்கும் புத்துயிர் கொடுக்கும் ஔஷதம் இது. கிருஷ்ணனை நினைத்தால் நமக்கு வருத்தம் சோம்பல் எல்லாம் விலகி புத்துயிர் வந்துவிடும்.
‘ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம்’ பக்தர்களுக்கு அத்யந்த ஹிதத்தை செய்யக் கூடிய ஔஷதம் என்கிறார். ‘ ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்’ இந்த வாழ்க்கைப் பிரச்சினைகள், வாழ்க்கையைப் பற்றிய ஒரு கவலை, பவபயம். அதை போக்குவதற்கு ஒரே ஔஷதம்-இது ஒண்ணு தான் மருந்து என்று சொல்கிறார். ‘ ச்ரேய: ப்ராப்தி
கரௌஷத⁴ம்’ மங்களங்களை கொடுக்கும் மருந்து.
‘பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம்’ ஹே மனமே நீ இந்த கிருஷ்ணன் என்ற சிறந்த ஔஷதத்தை குடி என்று சொல்கிறார். அப்படி வாழ்க்கையில கஷ்டங்களை போக்கிக் கொள்வதற்கு மணி, மந்திர, ஔஷதம் என்று ஒரு வழி இருக்கு. குலசேகராழ்வார் கிருஷ்ணனே உனக்கு
மணியாகவும், மந்திரமாகவும், ஔஷதமாகவும் இருப்பான். வேறு ஒன்றையும் நாடத் தேவையில்லை என்கிறார். இந்த மணி, மந்திர, ஔஷதம் என்று இந்த மூன்று ஸ்லோகங்கள் ஒரு set.

#முகுந்தமாலா #முகுந்தமாலை Image
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with அன்பெழில்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!