“தமிழன்” என்பவன் இந்து-கடவுள் உணர்வாளன். அவன் அழிக்கப்படும் போது இறை நம்பிக்கை மட்டும் அழிக்கப்படுவதில்லை, தமிழனின் தொன்மையும் அழிக்கப் படுகிறது.
பிறர் அழிக்க தலைப்படும் நம் சைவப் பாரம்பரியங்களில் ஒன்று “திருக்கயிலாய வாத்தியம்”.
எல்லையற்ற பரம்பொருளாகிய சிவபெருமானுக்காக,
சிவனடியார்களால் இசைக்கப் பெறுவது “திருக்கயிலாய வாத்தியம்”. அனைத்து சிவன் கோவில்களிலும் தொன்று தொட்டு இசைக்கப்பட்டு வந்தது.
திருஉடல், பிரம்மதாளம், திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, சங்கு, கொம்பு, கொக்கரை ஆகிய பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டு
வாசிக்கும் இதை, “பஞ்ச வாத்தியம்” என்றும் கூறுவர்.
இவற்றில் மிகவும் பழமையானது கொக்கரை, சங்கு. “சங்கநாதம்” மங்களகரமானது. தமிழகத்தில் அதை பற்றி, எப்படியோ வேறு பார்வை ஏற்பட்டு விட்டது. திருஞானசம்பந்தர் செல்லும் இடங்களெல்லாம், சங்கநாதம் முழங்கியதாக, பெரியபுராணத்தில் குறிப்பு உள்ளது.
கயிலாய வாத்தியங்களிலிருந்து வரும் இசை நம்மை பரவசப்படுத்தி, நம் உள்ளத்தில் இருக்கும் நுணுக்கமான உணர்வுகளைத் தூண்டி, நம் இறை சிந்தனையை ஒருமிக்க உதவும். பிறப்பு, இறப்பு இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானின் பெருமைகளையும் தன்மைகளையும் இசையின் மூலமாகவே நமக்கு உணர்த்தும்.
இசைக்கப்படும் ஒலியின் அதிர்வுகளே, சிவனின் பாதங்களில் நாம் அடிபணியும் அனுபவத்தைத் தருகின்றன. இந்த இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் சிவாலயங்களிலே ஒருகாலத்தில் சிவ நாதமாக ஒலித்துக் கொண்டிருந்தவை.
யாழ், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு போன்று காலத்தால் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட,
இன்னும் சொல்லப்போனால் திட்டமிட்டே ஒதுக்கப்பட்ட நம் தமிழ் மண்ணின் பாரம்பரிய இசைக்கருவிகள்தான் இவை.
தமிழ்நாட்டில் பரவலாக சிவ தலங்களில் திருக்கயிலாய இசைக் கருவிகளை இசைக்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டு, இசைக் கருவிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
எல்லா சிவாலயங்கள், திருமுறை ஊர்வலங்கள், குடமுழுக்கு திருவிழாக்கள், திருவாசகம் முற்றோதுதல் என சிவனைச் சார்ந்த அத்தனை விழாக்களிலும் திருக்கயிலாய இசைக்கப்பட வேண்டும்.
பாரம்பரியத்தோடு இணைந்து பயணிப்பதே உண்மையான தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்பதை உணர்வோம்.
சிவபெருமான் அந்தம், ஆதி இல்லா அனாதியானவன்.
ஆனந்த கூத்தாடி, எல்லையில்லா அருள் ஞானமாக திகழ்பவன்.
அனைத்து உயிர்கட்டும் தாயானவன், தந்தையானவன், தலைவனாவன்.
பேரண்டத்துக்கும் எல்லா தெய்வங்களுக்கும் தலைவன்.