2,3 வருடங்கள் இருக்கலாம். ஒரு மதிய பொழுதில் ஒன்றரை மணி நேரம் இரு சக்கர வண்டியில் பயணம் செய்து மதுரை பேரையூர் அருகில் இருக்கும் அந்த சிறு கிராமத்தை முரளியும் நானும் சென்றடைந்தோம். தோழர் ச தமிழ்செல்வன் எழுதிய அந்த ஊரில் இருந்த சீலைக்காரி கோப்பம்மாள் கோவிலைதான் தேடிப் போனோம்.
சிறு வீடு அது. உள்ளே ஒரு பெட்டியின் மீது சேலையும் வளையல்களும் போர்த்தப்பட்டிருந்தன. கிணற்றில் தவறி விழுந்த பெண் என்று எங்களிடம் அந்த மக்கள் சொன்னார்கள்.அதற்கு பத்து வருடங்களுக்கு முன்பு தோழரிடம் சொன்ன தகவல் வேறு.
ஆதிக்க சாதி குடும்பத்தில் பிறந்த பெண் அவள். ஆடு மேய்க்கும் போது உதவி செய்த ஒரு தாழ்ந்த சாதி பையனிடம் சகஜமாக பேசி சோறு பகிர்ந்து கொள்கிறாள். அதை கடுமையாக கண்டிக்கும் குடும்பத்தை எதிர்த்து செங்கல் சூளையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
இறப்பதற்கு முன்பு தனக்கு தாழ்ந்த சாதி மக்கள் மட்டுமே திருவிழா எடுக்க வேண்டும் என்று அந்த செங்கல் சூளையின் பொறுப்பாளரிடம் சொல்லிவிடுகிறாள். இன்று வரையில் அந்த திருவிழா தொடர்கிறது. சீலைக்காரிப் போலவே தோழரிடமிருந்து தெரிந்து கொண்ட இன்னொரு கதை முத்தாலம்மன் கதை.
கம்பம் பக்கம் முத்தாலம்மன் திருவிழா பிரசித்தம் என்று சொன்னார். திருவிழா முடிந்த கையோடு முத்தாலம்மன் சிலையை குளத்துக் கரையில் வைத்து கட்டையால் அடித்து உடைக்கிறார்கள். இப்போதும் நடைமுறையில் இருக்கும் வழக்கம் என்று சொல்கிறார்கள்
காரணம், முத்தாலம்மன் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து ஓடி விடுகிறாள். கொன்ற பிறகும் அடங்காத வெறிதான் திருவிழா வைத்து தீர்த்துக்கொள்கிறது. இப்படி தீப்பாஞ்ச அம்மன், மாசாணி என்று பல பெண் தெய்வங்கள் வாழ்ந்த போது பலி கொடுக்கப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
கர்ணனில் மனதை மிக தொந்திரவு செய்தது இறந்த பிறகு முகமூடியோடு வலம் வரும் கர்ணணின் தங்கை. நீதி நிலைநாட்டப்படும் போதும், அதற்கான ஒவ்வொரு முன்னெடுப்பிலும் அவள் கை கொட்டி மகிழ்கிறாள்.
நீதியின் பொருட்டு முத்தாலம்மன்களும் சீலைக்காரிகளும் கூட எங்காவது திரிந்து கொண்டுதான் இருப்பார்கள்
பி.கு: தோழர் தமிழ்செல்வன் இது போன்ற பல சாமிகள் பற்றி சாமிகளின் பிறப்பும் இறப்பும் என்று புத்தகம் எழுதியிருக்கிறார். @Bharathi_BFC வெளியீடு.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh