ஸ்ரீ ரங்கம் கோவில் 1000-2000 வருடங்கள் பழமையானது, சந்திர தீர்த்தம், மற்றும் 8 தீர்த்தங்கள் கொண்டது.
ஸ்ரீ அரங்கநாதர், திருப்பாற்கடலில் தோன்றியவர்.
இவரை பிரம்மா நெடுங்காலமாகப் பூஜித்து வந்தார்.
ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார்.
சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த அரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார்.
இராவணன் சீதையை கடத்திச் சென்ற போது,
அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான்.
இராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த அரங்கநாதரை அளித்தார் இராமர்.
விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு, திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை.
அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான்.
அரங்கநாதரும் “காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம்” என்றார்.
விபீஷணனை தேற்றும் பொருட்டு அவர் தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை (இலங்கை) நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்.
பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான்.
அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
அரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார்.
நாபியில் பிரம்மா இல்லை.
ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு அரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.
திருப்பாணாழ்வார் மீது முனிவர் ஒருவர் கல் எறிந்தபோது,
சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.
டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள்.
இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி(புரோட்டா)
நைவேத்யம் படைக்கப்படுகிறது.
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று.
சயன கோலத்தில் மூலவர் பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார்.
மூலவரின் விமானம் தங்கத்தால்
வேயப்பெற்றது.
மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.
பெருமாளின் 108 திருப்பதிகங்களில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான்.
முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.
இத்தலத்தில் பலகாலம் தங்கி அரங்கநாதருக்கு சேவை செய்த இராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார்.
அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர்.
சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார்.
இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.
இவருக்கு திருமஞ்சனம் கிடையாது.
சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.