உத்பன்ன ஏகாதசி இதனை உற்பத்தி ஏகாதசி என்றும் அழைப்பர்.
இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதசி எனவே இது இந்த பெயர் பெற்றது.
எவரொருவர் ஏகாதசி புனித விரதத்தின் மூலத்தினையும் மகத்துவத்தையும் கேட்கிறாரோ, அவர் இவுலகில் பல வித இன்பங்களையும் அனுபவிப்பதோடு
விஷ்ணு லோகத்திற்கும் நேரடியாகச் செல்கிறார்.
எவரொருவர் இந்நாளைப் பற்றிக் கேட்கிறாரோ (அ) சொல்கிறாரோ, (அ) வீட்டில் உள்ளவர்க்கு படித்து காண்பிக்கிறாரோ அவரும் கேட்டவரும் இறுதியில் விஷ்ணுலோகத்தை அடைவர் என்று பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கின்றது.
இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் இந்த விரதம் தோன்றிய கதையை, பற்றி எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.
(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)
சத்யயுகத்தில், சந்திராவதி எனும் நகரத்தை தலைநகரமாக கொண்டு, முரன் என்றொரு மகா பயங்கரமான ராட்சசன் வாழ்ந்து வந்தான்.
இந்திரன் முதலிய தேவர்களை வென்று இந்திரப் பதவியை பறித்துக்கொண்டு தேவர்களை சுவர்க்கத்தை விட்டு விரட்டியடித்து மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான்.
அவனது கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் அனைவரும் பூமியில் மறைந்து வாழ்ந்து வந்தனர்.
பின்னர், இன்னும் எவ்வளவு காலம் தான் இவ்வாறு ஒளிந்து வாழ்வது ?
இதற்கொரு முடிவே கிடையாதா ?
என்றெண்ணி இத்துன்பத்திலிருந்து விடுபட தகுந்த உபாயம் கூறி
தங்களைக் காக்கும்படி அனைவரும் மகாதேவரை சரணடைந்தனர்.
அதனைக் கேட்ட மகாதேவர், ஓ தேவர்களே !! நீங்கள் அனைவரும் பாற்கடலில் உறையும் ஜகத்ரட்சகனாகிய இறைவன் ஸ்ரீஹரியை சரணடையுங்கள்.
அவர் நிச்சயம் உங்களைக் காத்தருள்வார் என்று திருவாய் மலர்ந்தருளினார்
அதனைக் கேட்ட தேவர்கள் அனைவரும், ஆதிசேஷன் மேல் யோகநித்திரையில் உறையும் இறைவன் ஸ்ரீஹரி வசிக்கும் பாற்கடலுக்கு சென்று அவரைப் பலவாறாகப் போற்றி துதித்தனர்.
அதனைக் கேட்ட இறைவன் ஸ்ரீஹரி, தேவர்களின் வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
ஹே நாராயணா !! முன்னொரு காலத்தில் பிரம்மதேவரின் குலத்தில் தோன்றிய நாடீஜங்கன் என்னும் கொடிய அரக்கனின் மகனே இந்த முரன் என்னும் அசுரன்.
இவன் அதீத பலம் கொண்டு விளங்குவதால், தேவர்களாகிய எங்களை தேவலோகத்திலிருந்து விரட்டியடித்து விட்டு,
அசுரர்களை இந்திரன், வருணன், அக்னி, யமன் என லோகபாலகர்களாக நியமித்து விட்டான். மேலும் அவனே சூரியனாகி பூமியை தகிப்பதோடு, அவனே மழை மேகமாகி மழை பொழிகிறான்.
எனவே இவனிடமிருந்து உலகையும், எங்களையும் காத்து ரட்சிக்க வேண்டும் பிரபோ !! என்று தேவர்கள் அனைவரும் அவரை வேண்டினர்.
இதனைக் கேட்ட இறைவன் ஸ்ரீஹரி வெகுண்டெழுந்து, தேவர்கள் அனைவரையும் தனது தலைமையில் அழைத்துக் கொண்டு சந்திராவதி பட்டினத்தின் மீது தாக்குதல் தொடுக்கச் சென்றனர்.
இதனையறிந்த முரனும், அவர்களோடு ஆக்ரோஷமாக போர் புரியத் துவங்கினான்.
இறைவன் ஸ்ரீஹரி, தனது சக்ராயுதத்தினால், அசுரர்களின் அஸ்திர வித்தைகளையும், மாயாஜாலங்களையும் நாசம் செய்தார். அவனது வீரர்கள் அனைவரும் மடிவது கண்டு சற்றும் கலக்கமடையாமல் இறைவனோடு பயங்கரமாக போர் செய்து கொண்டிருந்தான்.
எனவே பகவான் அவனுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார்.
இறைவன் ஸ்ரீஹரி தேவர்களுக்காக அவனுடன் 1000 தேவ ஆண்டுகள் விடாமல் போர் புரிந்து கொண்டிருந்தார்.
இடைவிடாது நிகழ்ந்த போரின் காரணமாக மிகவும் களைப்புற்றவராய் பகவான் சாந்தத்துடன் சிறிது ஓய்வெடுக்க வேண்டி,
பத்ரிகாஸ்ரமத்தில் 28 கஜ தூரம் கொண்ட ஒரு துவாரத்துடன் கூடிய ஹேமவதி என்னும் பெயர் கொண்ட குகையில் சென்று சயனத்தில் ஆழ்ந்தார்.
முரனும் அந்தக் குகையில் நுழைந்தான்.
பகவான் சயநிதிருப்பதைக் கண்டு அவரைக் கொல்ல ஆயத்தமானான்.
அவனுடைய எண்ணமெல்லாம் ஸ்ரீஹரியை கொன்று விட்டால்,
காலம் முழுவதும் நாம் எந்த எதிரி பயமுமின்றி வாழலாம் என்பதிலேயே இருந்தது.
ஆனால் அவனது எண்ணம் நிறைவேறவில்லை.
முரன் வாளை உருவி பகவானை கொல்ல நெருங்கிய போது, அவருடைய தேகத்திலிருந்து திவ்ய வஸ்திரங்களுடன், சகல ஆயுதங்களோடும் அதி அற்புதமான அழகுடன் கூடிய ஒரு மங்கை தோன்றினாள்.
இத்தனை பலசாலியான, அழகான மங்கை திடீரென எங்கிருந்து தோன்றினாள் என்றெண்ணிக் கொண்டிருக்கும் போதே,
அவள் ஓங்கார சப்த கர்ஜனையோடு அவனுடன் ஆவேசமாக போர் புரியத் தொடங்கினாள்.
சில நேரமாக அஸ்திரங்களைப் பிரயோகித்தான் முரன். அவை அத்தனையையும் தூள் தூளாக்கினாள்.
அவனது ரதத்தை உடைத்தெறிந்தாள்.
அதனைக் கண்டு ஆத்திரமடைந்த முரன் யுத்த நியதிகளை விடுத்து பெண் என்றும் பாராமல் அவளுடன் மல்யுத்தத்தில் ஈடுபட ஆக்ரோஷமாக அவளை நோக்கி ஓடி வந்தான்.
ஆனால் அந்த மங்கை அவன் ஓடி வந்த வேகத்திலேயே,
அவனது சிரத்தைக் கொய்து மண்ணில் வீசி அவனை யமலோகத்திற்கு அனுப்பி வைத்தாள்.
அப்போது விழித்தெழுந்த பகவான்,
தரையில் கிடந்த முரனின் உடலைப் பார்த்து இவ்வளவு பலசாலியை கொன்றது யாராக இருக்கக்கூடும் என்று எண்ணிய வேளையில்,
அந்த மங்கை அங்கே வந்து
இறைவனை வணங்கி, பிரபோ !! இந்த கொடிய அரக்கன் தாங்கள் சயனித்திருந்த வேளையில் தங்களைக் கொல்ல முற்பட்டதையடுத்து அவனுடைய எண்ணத்தை அறிந்தவளாய் மூவுலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவனை உங்களது மகா சக்தியான நான் தங்கள் சரீரத்திலிருந்து தோன்றி வதைத்தேன் என கூறி கரம் கூப்பி நின்றாள்.
மகிழ்ச்சியுற்ற பகவான், “என்னுடைய ஆன்மீக சக்தியான நீ, ஏகாதசி (பதினொன்றாவது) திதியில் தோன்றியதால், ஏகாதசி என்று அழைக்கப்படுவாய்.
எனக்கு பிரியமான திதிகளான திரிதியை, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி ஆகிய திதிகளின் வரிசையில் நீ உயர்ந்த இடத்தை அடைந்து என்றும் என் மனதுக்கு பிரியமான திதியாக
புகழ் பெற்று விளங்குவாய் என்று கூறி , நீ வேண்டும் வரம் எதுவாயினும் கேள் !! அது எந்த வரமாயினும் அதனை பூர்த்தி செய்கிறேன் " என்றார்.
இது கேட்டு மகிழ்ந்த அந்த மங்கை, நாராயணா !! நீங்கள் எனது செயல் கண்டு மகிழ்ந்து வரமளிக்க விரும்பினால், தாங்கள் எனக்கு அளப்பரிய சக்தியினை வழங்குங்கள்.
அதாவது, தேவரோ, அசுரரோ, மனிதரோ, மிருகமோ, பிராணியோ, பட்சியோ எவரொருவர் நான் தோன்றிய இந்நாளில் விரதம் அனுஷ்டிக்கின்றாரோ, அவர்களுடைய பாவங்கள் அனைத்தையும் அழிக்க வல்ல சக்தியை வழங்குங்கள் என்றாள்.
மேலும், எவரொருவர் இந்நாளில் விரதம் அனுஷ்டிக்கிராரோ, அவர் பாவங்கள் அனைத்தும் நீங்கி இறுதியில் சுவர்க்கப் ப்ராப்தி அடைய வேண்டும்.
அது போல, இந்நாளில் முழு உபவாசம் இருந்து பூஜிப்பவரின் பலனில் பாதி பலனை இரவில் மட்டும் கண் விழிப்பவருக்கும்,
ஒரு வேளை மட்டும் உணவு உண்பவருக்கும் வழங்க வேண்டுகிறேன் என்றாள்.
முழு உபவாசம் கொள்பவர் வாழ்வில் அனைத்து சுகபோகங்களையும் அடைவதோடு, இறுதியில் பல கல்பங்கள் விஷ்ணுலோகத்தில் வாழும் பேற்றினைப் பெற வேண்டும் என்றாள்.
அதனைக் கேட்ட இறைவன் ஸ்ரீஹரி மிகவும் மனமகிழ்ந்து, "ஹே கல்யாணி !! ஜகத்தின் நன்மை கருதி நீ கேட்ட இந்த வரத்தினை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
எனவே நீ கோரியபடியே அந்த வரத்தினை உனக்கு அளிக்கிறேன்.
.நீ தோன்றிய நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நிலையை அடைவர்,” என்று வரம் நல்கினார்.
இன்று முதல் எனது பக்தர்கள் அனைவரும் எனதருளை எளிமையாகப் பெற இந்த விரதத்தினை அனுஷ்டிப்பார்கள் என்று கூறி மறைந்தார்.
பின்னர், சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசி, ஒவ்வொரு மாதத்திலும் இருமுறை வெவ்வேறு ரூபங்களில் தோன்றினாள்.
இவ்வாறாக கூறிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர், விரதத்தை 12ஆம் நாளான துவாதசி நாளன்று இறைவனை வணங்கி விரதத்தை நிறைவு செய்வோர் அஸ்வமேத யாக பலனை அடைவதோடு
சகல புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிய பலனையும் அடைவர் என்றார்.
மேலும் எவரொருவர் இந்நாளைப் பற்றிக் கேட்கிறாரோ (அ) சொல்கிறாரோ, (அ) வீட்டில் உள்ளவர்க்கு படித்து காண்பிக்கிறாரோ அவரும் கேட்டவரும் இறுதியில் விஷ்ணுலோகத்தை அடைவர் என்று பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கின்றது.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜீனனிடம் : "ஓ அர்ஜுனா! கார்த்திகை மாதம், கிருஷ்ணா பக்ஷத்தில்ஸவரும் ஏகாதசியே ஒருவர் புதிதாக ஏகாதசி விரதம் மேற்கொள்ளத் தொடங்குவதற்கு ஏற்றது.
ஏகாதசி அன்று பூரண விரதமாகவோ அல்லது ஒரு வேளை மட்டும் தானியம் பருப்பு வகைகள் சேர்க்கப்படாத உணவை மட்டும் உண்டோ விரதம் இருக்கலாம்." என்று விளக்கினார் கிருஷ்ணர்,
இரவு பகல் ஏகாதசி துவாதசி நாட்களில் விஷ்ணுவின் லீலைகளை தூய பக்தர் சொல்லக் கேட்போர், விஷ்ணுலோகம் செல்லும் பாக்கியம் பெறுவார்
ஏகாதசி மகிமையை ஒரு வாக்கியம் ஏனும் கேட்போர், அந்தணனைக் கொள்ளுதல் போன்ற எந்த வித பாவங்களில் இருந்தும் விடுபடுவர்.
இதில் ஐயம் இல்லை.
விஷ்ணு பகவானை வழிபட இதைவிட சிறந்த வழிவேறொன்றும் இல்லை.
இங்ஙனம் முடிந்தது, பவிஷ்ய உத்தர புராணத்தில் சொல்லப்பட்ட கிருஷ்ண ஏகாதசி அல்லது உத்பான ஏகாதசியின் மகிமை.
சென்னையை அடுத்து வேளச்சேரிக்கு செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தண்டீஸ்வரர் திருக்கோயிலாகும்.
இந்த கோயிலின் மூல தெய்வம் தண்டீஸ்வரர் - கருணாம்பிகை அம்மன் ஆகும். ஒரு முறை, சோமுகன் என்ற அசுரன் படைப்புக்கு ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து கவர்ந்து சென்றான்.
பிறகு, எவரும் கண்டறியா வண்ணம் அவற்றை கடலுக்கு அடியில் சேற்றில் புதைத்து வைத்தான்.
இதனால் படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது.
பெரிதும் வருந்திய பிரம்மன், திருமாலிடம் சென்று முறையிட்டார்.
அவரது வேண்டுகோளை ஏற்ற திருமால் மச்ச அவதாரம் எடுத்து, அசுரனை அழித்ததுடன் வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார்.