இன்று ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் ரம்பா திரிதியை !
ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற நன்னாளே ரம்பாதிரிதியை.
இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும் செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை.
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை.’
இந்தத் திரிதியையன்று தான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப் பெற்றாள்.
கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது.
தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
ரம்பா திருதியை எப்படி உருவானது என்பது பற்றி ஓர் அழகான கதை சொல்லப்படுகிறது.
பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்ட மேடையில் தேவலோகப் பேரழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில், தங்களில் யார் சிறப்பாக நடனமாடுகி றார்கள் என ஒரு போட்டி எழ... மூன்று பேரின் நடனத்தின் வேகம் அதிகமானது.
தேவலோக முதல் பேரழகி என்ற தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள எண்ணிய ரம்பை, அரங்கமே அதிரும்படி ஆக்ரோஷமாக ஆடினாள்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில், ரம்பை அணிந்திருந்த நெற்றிப் பொட்டும் பிறைச் சந்திரனும் கீழே விழுந்து விட... நிலைகுலைந்தாள் அவள்.
இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும் மேனகையும் ரம்பை யைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து, தங்களது ஆட்டத்தை நிறுத்திவிட்டு வெளியேறினர்.
அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமா கக் கருதிய ரம்பை, கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டு, அழுதபடியே அரங்கை விட்டு வெளியேறினாள்.
நடந்ததை எல்லாம் தேவர் பெருமக்கள் வியப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்க...
'இன்றைய சகுனம் சரியில்லை; சபை கலையலாம்’ என்று
உத்தரவிட்டு எழுந்தான் இந்திரன்.
அன்று இரவு, ரம்பைக்குத் தூக்கம் வர மறுத்தது. சபையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்தினாள்.
அந்தச் சிந்தனையிலேயே பொழுதும் விடிந்தது.
முதல் வேலையாக, தூக்கம் தொலைத்த கண்களுடன் இந்திரனைச் சந்தித்தாள்.
'நேற்று அவையில் எனக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பிராயச்சித்தம் வேண்டும்.
நடந்த சம்பவத்தால் 'முதல் அழகி’ என்ற அந்தஸ்து என்னை விட்டுப் போய்விட்டதோ என்று அச்சம் கொள்கிறேன்' என்று கண்ணீர் வடித்தாள் ரம்பை.
ரம்பையை முறைத்துப் பார்த்த இந்திரன், 'நர்த்தனம் புரிபவர்கள்
நர்த்தன பாவங்களின் விதி மாறாமல் ஆடுவதே முறை! மோகினி உருவாக இருக்கும் நீங்கள் மூவரும் நர்த்தனமா புரிந்தீர்கள்?
ராட்சதக் களிக்கூத்தை அல்லவா ஆடிவிட்டீர்கள்!
அதிலும், உன்னுடைய ஆட்டம்தான் பேயாட்டமாகி அரங்கையே அதிரவைத்து விட்டது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கலைகளின் அரசி கலைவாணி, அதைக் காணச் சகிக்காமல் தான் உனது பிறைச் சந்திரனைக் கழற்றிய தோடு, நெற்றிப் பொட்டையும் அகற்றி விட்டாள்.
அதனால், இன்னும் சில ஆண்டுகளுக்கு உன்னுடைய அழகிப் பட்டமும் நர்த்தன முறையும்
அரங்குக்கு வராமலேயே இருக்கட்டுமே..!' என்று ஆவேசப்பட்டுப் பேசினான்.
'தேவேந்திரா! பதவி உயர்வுக்கும், பட்டத்துக்கும், கௌரவத்துக்கும் தேவருலகில் அதிபதியான நீங்களே என்னை விலகி இரு என்று சொல்லலாமா?
இதற்குச் சரியான வழியை பிராயச்சித்தத்தை எனக்கு இப்போதே சொல்லி,
எனது துயரத்தைப் போக்கிட வேண்டும்'' என்று மன்றாடினாள் ரம்பை.
அழுது புலம்பும் ரம்பைக்கு ஆறுதல் சொல்ல விரும்பிய தேவேந்திரன், 'பூலோகத்தில், தன் பதியைத் தேடிச்சென்ற பார்வதிதேவி கௌரி அன்னையாக அவதரித்திருக்கிறாள்.
அவள் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கிறாள்.
அந்தத் தேவியை விரதமிருந்து வழிபட்டால், உனக்கு அருள் செய்வாள். உனக்கு நேர்ந்துள்ள களங்கமும் தீரும்' என்றான்.
அதன்படி பூலோகம் வந்த ரம்பை, அன்னை கௌரிதேவி யைத் தேடினாள்.
அவள் வந்தது கார்த்திகை மாதம் என்பதால், எங்கு பார்த்தாலும் தீபங்கள் வரிசையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.
தனக்கும் வாழ்வில் ஒளி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அவள் கௌரிதேவியைத் தேடிய போது, அந்த அன்னையின் தரிசனம் கிடைத்தது.
கார்த்திகை மாதத்தில் அமாவாசைக்கு இரண்டாவது நாள் துவிதியை திதி. இந்த நன்னாளில் மஞ்சளால் அம்பிகையை பிரதிமையாக (பொம்மையாக) செய்து விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை.
மஞ்சள்கொண்டு கௌரிதேவியை செய்து வணங்கிய தால், இந்த விரத பூஜைக்கு (திந்திரிணி- மஞ்சள்) தீந்திரிணி கௌரி விரதம் என்று பெயர் ஏற்பட்டது.
முறையாக ரம்பை செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட கௌரிதேவி, மறுநாள் தங்க நிறத்தில் ஸ்வர்ணதேவியாக அவளுக்குக் காட்சி தந்தாள்.
மேலும், ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த தேவி, மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாகும்படி அவளுக்கு அருள்புரிந்த தோடு, அவளது முக அழகையும் ஐஸ்வரியங்களையும் இன்னும் அதிகமாக்கி அருளினாள்.
தவிர, 'நீ மேற்கொண்ட இந்த விரத நாள், இன்று முதல் உனது பெயரால் 'ரம்பா திருதியை’ என்று பெண்கள் கொண்டாடும் தங்கத் திருவிழாவாக ஆகட்டும்'' என்றும் ஆசீர்வதித்தாள்.
கௌரி அன்னையாக பார்வதிதேவி காட்சி தந்தபோது, அழகுக்கு உரியவனாம் கார்த்திகேயனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக- பொன்மேனியளாகக் காட்சி தந்தாள்.
இதன் காரணமாகத்தான், எங்கெல்லாம் காத்யாயனி கோயில்கள் இருக்கின்றன வோ, அங்கெல்லாம் கௌரிக்கும் சந்நிதிகள் இருக்கும்.
பெண்கள் புதிதாக பொன் நகை வாங்கியதும், அதை இந்த அம்மன் சந்நிதியில் வைத்து ஸ்வர்ணபூஜை செய்து நகைகளைப் பெற்று அணியும் வழக்கம் உள்ளது.
ஆக, அழகும் ஐஸ்வரியங்களும் அள்ளித் தரும் நன்னாள்தான் ரம்பா திருதியை.
அன்றைய தினம் ரம்பாதேவி யந்திரத்தையோ, கௌரிதேவியாம் காத்யாயனி யந்திர வடிவையோ பூஜையறையில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.
வட இந்தியாவில் ரம்பாதேவி யந்திரம் வைத்து அன்றைய தினம் விசேஷ பூஜைகள் செய்வர்.
சென்னை- குன்றத்தூரில் காத்யாயனி அம்மன் ஆலயத்தில் இந்தத் திருநாளில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.
திருமுறைக்காடு என்ற சிறப்புப் பெற்ற இந்தத் தலம், குன்றத்தூர் முருகன் கோயிலில் இருந்து திருநீர்மலைக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
ரம்பா திருதியை நன்னாளில் நீங்களும் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்களேன்!
குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை.
அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை செய்த நாள் என்பதால், இந்த நாளுக்கு ரம்பா திருதியை நாள் என்று பெயர்.
ரம்பாதிருதியை அன்று விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானை யும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.
என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள்.
கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.
திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர்.
வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.
திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.
பெண்களின் தங்கத்திருநாள்:
முதல் நாள் திந்திரிணீ கவுரி விரதம் இருந்து அம்பிகையை கலசத்தில் எழுந்தருளச் செய்து வழிபட்டு, மறுநாள் காலையில் கவுரி தேவியை,
ஜெய ஜெய தேவி ஜெயசக்தி ஜெயம் - என பாடி மகிழ்ந்திடுவோம்.
கோயில் வழிபாடுகள்:
நம் தேசத்தில் கவுரி தேவியின் கோயில்கள், பார்வதி, அம்பிகை, மகாலட்சுமி சன்னதிகளில் ரம்பா திருதியை அன்று விசேட தரிசனங்களைச் செய்து வழிபட்டு வரலாம்.
குறிப்பாக ரம்பா திருதியை தொடர்புடைய கோயில்களாக கேரளாவில் சேர்த்தலையில் ராஜ கோபுரத்துடன் கூடிய கார்த்தியாயினி கவுரி தேவி,
திருவாரூர் மாவட்டத்தில் தில்லையாடி, காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் சன்னதி, தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை கார்த்தியாயனி கோயில், கர்நாடகாவில் மகாலட்சுமி கோயில்,
தேனி மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி கார்த்தியாயினி, கேரளத்து ஆலப்புழா சாலையில் விசேஷ சன்னதி மும்பை நெருன் 18 அடி உயர கார்த்திகாயினி ரூபம். தென்சென்னையில் குன்றத்தூர், சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி ஆகிய இடங்களில், விசேட அலங்கார தரிசன சேவை செய்யலாம்.
வழிபாட்டுப் பலன்கள்:
பெண்களுக்கு அழகும் முகவசீகரமும், தங்க நகை சேரும் பாக்கியமும் கிடைக்கும்.
பரத நாட்டியம், மற்ற ஆடல் கலைகளில் மிளிர்ந்திட, இந்த நாளில் கவுரி பூஜையுடன் ரம்பா தேவி பூஜையும் செய்ய வேண்டும்.
புதிதாக சிறிதளவு நகை வாங்கி பூஜை செய்து அணிபவர்கள், அருகில் உள்ள அம்மன் சன்னதிகளுக் குச் சென்று அம்மன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வீட்டுக்கு வந்து ஆரத்தி செய்த பிறகு அணிதல் வேண்டும்.
அன்னை கவுரிதேவி காட்சி தந்து ஆசீர்வாதம் செய்த படியால், தாயை வணங்கித் தெய்வமாக வழிபடுவதால் நமக்கு மகதைச்வர்யங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று இந்த பூஜா விதியில் சொல்லப்பட்டுள்ளது.
ஸ்வர்ணாம்பிகா பஞ்சகம் என்ற தங்கம் சேர்க்கும் துதியை படித்து சப்தமுகீ என்னும் ருத்ராட்சத்தை வழிபடுவோருக்கு பொன் பொருள் சேர்கின்ற அதிர்ஷ்டயோகமும் உண்டாகும்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில்.
இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.
குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.
திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில், ஈக்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமான் காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல் மற்றும் மாலை நேரம் என ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் காட்சியளித்து, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதால் இப்பெருமானுருக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர்' என்பது திருப்பெயர்.
இந்த சிவலிங்கப் பெருமான் அமிர்தமயமானவர் என்பதால் இவ்வாறு நிறம் மாறிக் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக, சிவலிங்கத் திருமேனி கரிய நிறத்தில் வழுவழுப்புடன் காணப்படும்.
ஆனால், இங்குள்ள மூர்த்தி கருப்பும் வெள்ளையு மாய், மேலிருந்து கீழாகக் கோடுகள் பதிந்து காட்சியளிக்கிறார்.