ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில்.
இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.
குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.
கோவிலின் தென்பகுதியில் அஷ்டலட்சுமிக்கு தனிச் சன்னிதி உள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், இந்த சன்னிதிக்கு வந்து தாயாரை மனமுருக வேண்டி, விளக்கு ஏற்றி வழிபட்டால், மது பழக்கத்தில் இருந்து விடுபடுவர் என்பது நம்பிக்கை.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு நடைபெறும் ராகு கால பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் அகலும் என்கிறார்கள்.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கடன் பிரச்சினை அகலவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேண்டுபவர்கள், நீண்ட நாள் நோய் தீர, தொழில் விருத்தியாக, நலிந்த தொழில் மீண்டும் நல்ல முறையில் நடைபெற என அனைத்து பிரச்சினைகளுக்கும்,
இத்தல லட்சுமி நாராயணரை வணங்கி வழிபட்டு வந்தால் போதுமானது. தங்களின் கோரிக்கை நிறை வேறியதும் பக்தர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்தூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், வேப்பஞ்சேரி லட்சுமி நாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இன்று ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் ரம்பா திரிதியை !
ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற நன்னாளே ரம்பாதிரிதியை.
இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும் செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை.
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை.’
இந்தத் திரிதியையன்று தான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப் பெற்றாள்.
கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது.
தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில், ஈக்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமான் காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல் மற்றும் மாலை நேரம் என ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் காட்சியளித்து, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதால் இப்பெருமானுருக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர்' என்பது திருப்பெயர்.
இந்த சிவலிங்கப் பெருமான் அமிர்தமயமானவர் என்பதால் இவ்வாறு நிறம் மாறிக் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக, சிவலிங்கத் திருமேனி கரிய நிறத்தில் வழுவழுப்புடன் காணப்படும்.
ஆனால், இங்குள்ள மூர்த்தி கருப்பும் வெள்ளையு மாய், மேலிருந்து கீழாகக் கோடுகள் பதிந்து காட்சியளிக்கிறார்.