வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும் போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.
அதை அரசனிடம் எடுத்துச் சென்ற போது
”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக் கொள்..
சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்”
என்று ஏளனமாக அரசன் கூறி விட்டான்.
இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து தான் உண்ணும் பழைய உணவை படைத்து வழிபட்டான்.
ஒரு நாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது.
" சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யச் சாம்பல் இல்லையே " என வருந்திய அவனும் வறட்டிகளை அடுக்கித் தீயை மூட்டி விட்டுத் தனது மனைவியிடம் ” நான் இந்தத் தீயில் விழுகிறேன்.
என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்” என்று கூறினான்.
ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்து விடும்,
நானே தீயில் குதிக்கின்றேன் ,
எனது உடல் சாம்பலை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள்”
என்று கூறிக் கொண்டே தீயில் வீழ்ந்தாள்.
இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன் பார்வதியுடன் பிரத்யட்சமாகி மனைவியை உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார்.
இதைக் கேட்ட அரசனும் "தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்குக் காட்சி தராத இறைவன்,
சுடுகாட்டுச் சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு மோட்சம் அளித்துள்ளாரே " என்று வருந்தினாலும்
#பக்தி என்பது ஆடம்பரத்தில் இல்லை.. அன்பினால் மட்டுமே மலரக் கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.
ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த இராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.
அப்போது இராமர் இலட்சுமணனை பார்த்து இலட்சுமணா இராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.
நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.
இலட்சுமணன் பவ்யமாக இராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது.
நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்.