மஹா சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும்.
ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அர்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படும்.
அதைப் பற்றி இங்கு காண்போம்.
💥முதல் கால பூஜை🌺 (6pm-9pm) :
முதல் கால பூஜை பிரம்மன், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் உடலில் இருந்த பிரச்சனைகள் பூரணமாக குணமாகும்.
இந்தக்கால பூஜையில் சிவபெருமானுக்கு பஞ்ச கவ்வியத்தால் (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, சந்தனம் பூசி, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும்,
வில்வ இலை மற்றும் தாமரைப்பூவால் அலங்காரம் செய்து, பாசிப்பருப்பு பொங்கலை நிவேதனமாக படைத்து, ரிக்வேதம் மற்றும் சிவபுராணத்தை பாராயணம் செய்து நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும்.
💥இரண்டாவது கால பூஜை🌺 (9pm-12am) :
இரண்டாவது கால பூஜை திருவடி தேடிச் சென்ற பரம்பொருள் விஷ்ணு அவர்களால் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும், செல்வம் பெருகும், திருமாலின் அருள் கிடைக்கும்.
இந்த காலத்தில் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், பச்சைக்கற்பூரம் மற்றும் பன்னீர் சேர்த்து அரைத்து பூசி, வெண்பட்டாடை அணிவித்து அலங்காரம் செய்தும்,
வில்வ இலை, துளசியால் அலங்காரம் மற்றும் அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசத்தை நிவேதனமாக படைத்து, யஜூர் வேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் கீர்த்தி திருவகவலை பாராயணம் செய்து நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை நடைபெறும்.
💥மூன்றாவது கால பூஜை 🌺(12am-3am) :
மூன்றாம் கால பூஜை என்பது அம்பாள் அவர்கள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் சிவபெருமானுக்கு விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை நெருங்காது.
மேலும், இந்த காலத்தில் சிவபெருமானுக்கு தேனால் அபிஷேகம் செய்தும், பச்சைக்கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவினைக் கொண்டு அர்ச்சனைகள் செய்தும்,
கற்கண்டு மற்றும் எள் சாதத்தை நிவேதனமாக படைத்தும், சாமவேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் திருவண்டகப் பகுதியை பாராயணம் செய்தும் நெய் தீபத்துடன் பூஜை நடைபெறும்.
💥நான்காவது கால பூஜை🌺 (3am-6am) :
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் என அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பது நான்காவது கால பூஜையாகும்.
இந்த காலத்தில் சிவபெருமானுக்கு குங்குமப்பூ சாற்றி, கரும்புச்சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், பச்சை அல்லது நீல வண்ண வஸ்திரம் அணிவித்தும், நந்தியாவட்டை பூவால் அலங்காரம் செய்தும்,
சுத்தான்னத்தை நிவேதனம் படைத்து, அதர்வண வேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் போற்றித் திருவகவலை பாராயணம் செய்து தூப தீப ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும்.
எனவே, இந்த மஹா சிவராத்திரியன்று நான்கு ஜாம பூஜைகளிலும் பங்கேற்று சிவபெருமானின் அருளைப் பெற்றிடுங்கள்.
உங்களுக்கு அருகில் உள்ள சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேகங்களில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.