பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி ஆல மரத்தின் கீழ், அமர்ந்த நிலையில்தான் காட்சிகொடுப்பார்.
கலைகளுக்கும் கல்விக்கும் குருவாக விளங்குவதால் குரு தட்சிணாமூர்த்தி என்று அழைக்கபடுவார்.
மேலும் படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமாரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் ஞானம் போதிக்கும் நிலையில், சின் முத்திரை தரித்த கோலத்தில் அவர் காட்சி கொடுப்பார்.
ஆனால், இக்கோவில் சன்னதியில் கோஷ்ட மூர்த்தியாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில், வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு அதிசயத்தக்கது.
வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாதது.
இங்கு அருளும் தட்சிணாமூர்த்தி பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர்.
எனவே இவரை பூராட நட்சத்திர அன்பர்கள் வழிபட்டால், அவர்களுக்கு நன்மை உண்டாகும்.
சுக்கிரன் வழிபட்ட லிங்கம் :
சுக்கிரன் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை தாபித்து அதற்கு முறைப்படி பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார்.
சுக்கிரன் நிறுவிய லிங்கம் நவகிரகங்களுக்கருகே அமைந்துள்ளது.
வெள்ளிக் கிழமைகளில் இந்த லிங்கத்துக்கு விசேச வழிபாடுகள் நடக்கின்றன.
இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்த இத்திருத்தலம் ஒவ்வொரு சைவ சமய அன்பர்களும் சென்று தரிசிக்க வேண்டிய தலம்.