தஞ்சை ஆ.மாதவன் Profile picture
Passionate about #Archaeology #Anthropology #Astrobiology #Paleontology | Threads on #தொல்லியல்நூல் | #தொல்லியற்களம் | #ஆய்வுக்கட்டுரை | #ArchaeologyBook

May 12, 2022, 23 tweets

சங்ககால கைவினைக் கலன்கள்!

குயவர்கள் 'கலம்செய் கோவே' என அழைக்கப்பெற்றனர்.
கலத்தினை வனைவதற்குத் #திகிரி (மலைபடு.474) பயன்படுத்தினர்.

#குயவர்கள் சமைத்த கலன்களைச் சூளையில் சுட்டு உருவாக்கினார்கள்.

▪︎ #தாழி:

இறந்தோரை அடக்கம் செய்யும் 'தாழி'யினையும் இக்குயவர்களே செய்து கொடுத்தனர்.

'முதுமக்கள் தாழி' எனப்பட்ட இக்கலம் பெரிய வாயகன்ற பானை போன்று இருந்தது.

உயிர் நீந்த மன்னர்களையும், நிலக்கிழார்களையும், தலைவனையும் இத்தாழிக்குள் வைத்துப் புதைந்தனர்.

இதனை #பதிற்றுப்பத்து பின்வருமாறு உணர்த்துகிறது.

சங்க காலத்தில் குறிஞ்சி, முல்லை, பாலை நில மக்கள் #ஈசல் பிடித்து உண்டனர்.

அவ்வீயலைப் பிடிக்கத் #தாழி பயன்பட்டது என்பதை

‘நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்கெண்டி' எனும் #நற்றிணை (59: 2) அடி குறிப்பிடுகிறது.

▪︎ #அகல்:

மண்ணால் செய்யப்பட்ட அகன்ற சட்டி #அகல் எனப்பட்டது. இது அக்காலத்தில் #அப்பம் சுடுவதற்குப் பயன்பட்டது என்பதை பின்வரும் #பெரும்பாணாற்று அடிகள் (377-378) மூலம் அறியலாம்.

▪︎ #மண்டை:

#பாணர்கள் நிலைகுடிகளை அண்டி உணவு பெற்றுண்ணும் #மண்டை மண்ணாலானது.

இது 'இரப்போர் கலம்', 'சென்னி' என்று அழைக்கப்பெற்றது.

கீழ்கூறிய பாடலடிகள் #மண்டை எனும் பாத்திரம் மண்ணாலானது என்பதைக் குறிப்பிடுகின்றன.

மன்னர்கள் பயன்படுத்தியதும் அவர்கள் பரிசிலர்க்கும், வீரர்களுக்கும் கொடுத்த விருந்துக்குப் பயன்பட்ட மண்டை எனத் தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவையாக இருந்தன.

▪︎ #குழிசி:

களிமண்ணால் செய்யப்பட்ட பானை போன்றது குழிசி, உட்புறம் குழிவாக இருந்தது.

இது #சோறு வடிப்பதற்குப் பெரிதும் பயன்பட்டது.

மேலும், #கஞ்சி காய்ச்சவும், பிற உணவு வகைகள் சமைப்பதற்கும், #களி கிண்டவும் #குழிசி பயன்பட்டது.

சமைப்பதற்கு மட்டுமன்றி, முல்லை நிலமக்கள் தயிரினை எடுத்துச்சென்று #பண்டமாற்று செய்துவர குழிசியைப் பயன்படுத்தினர்.

▪︎ #குடம்:

செம்பு, மிடா, குடம் இம்மூன்றும் ஒலி பொருள் குறித்த சொற்கள்.

இப்பாத்திரம் #பலாப்பழம் போல் இருந்தது என்பதை 'முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்' என்கிறது #அகநானூறு (352:1)

ஆயர் மகளிர் கறந்த பாலினைக் குடத்தில் ஊற்றி வைத்தனர்.

அக்குடத்துப் பாலிலேயே பிரைத்துளி குத்தித் தயிரும் தோய்த்தனர்.

இதனைப் #புறநானூறு,
'ஆய்மகள் வள் உகிர்த் தெறிந்து குடப்பாற் சில்லுறை போல்'
(276: 4-5) என்கிறது.

குடமானது #தசும்பு என்றும் கூறப்பட்டது. கோபுர விமானங்களின் உச்சியில் இருக்கும் கலசம் போன்றது என்பதால் குடத்தைத் தசும்பு என் அழைத்தனர்.

ஆயர்கள் தயிரை எடுத்துச் செல்வதற்குத் தசும்பைப் பயன்படுத்தினார்கள். உணவு சமைக்கவும், தேறல் கலந்து ஊற வைக்கவும் தசும்பு, மிடா இரண்டும் பயன்பட்டது.

▪︎ #சாடி:

கள்ளினைக் காய்ச்சுவதற்கும், அதனை நொதிக்க வைப்பதற்கும், பின்னர் பாதுகாப்பதற்கும் இச்சாடி பயன்பட்டது.

பல்வேறு இலக்கியங்கள் இதனைப் பதிவு செய்துள்ளதைப் பின்வரும் சான்றுகள் வழி அறியலாம்.

இச்சாடி கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதை,

'கலிமடைக் கள்ளின் சாடி அன்ன எம், இளநலம் இற்கடை ஒழிய' என #நற்றிணை (295:7-8) பாடலடிகள் மூலம் அறியலாம்.

▪︎ #தாலம்:

தாலம், பிழா இரண்டும் இன்று #தட்டு போன்று உணவு உண்பதற்குப் பயன்பட்டது எனலாம். இதனை #புறநானூறு மூலம் அறியலாம்

▪︎ #பிழா:

கொழியலரிசிக் கஞ்சியை உண்பதற்கு அகன்ற வாயுடைய தட்டு பயன்பட்டது.

ஏறக்குறைய #தாலம் போன்றதொரு பாண்டமே #பிழா என்றழைக்கப்பட்டது என இதனைப் #பெரும்பாணாற்றுப்படை (275-276) விவரிக்கிறது.

▪︎ #வள்ளம்:

#வள்ளம், #வட்டில் இரண்டும் வட்ட வடிவமான கலன்களாகும்.

தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள #கிண்ணம் போன்று உட்குழிந்தும் வட்டமாகவும், தட்டைவிடச் சற்று உயரமாகவும் உள்ள பாத்திரமாகும்.

சங்க காலத்தில் பால், தேறல் முதலான நீர்மப் பொருட்களை இந்த வள்ளத்தில் பெய்துண்டனர்.

மன்னர்களின் அரண்மனைகளிலும், உயர் குடிக் குடும்பங்களிலும் இவ்வள்ளம் தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டது என்பதை

'பொன்செய் வள்ளத்துப் பால்கிழக் கிருப்ப' எனும் நற்றிணைப் பாடலடி (297:1) வழி அறியலாம்.

உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வைப்பதற்கு மெழுகு பூசிய பெட்டியைப் பயன்படுத்தியுள்ளனர் எனும் பட்டினப்பாலை வர்ணனை வழிக் காண்கிறோம்.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த காலகட்டம் சங்ககாலம் என நாம் மதிப்பிடுகிறோம்.

உலோகங்களாலும், மணிகளாலும் அலங்காரம் மிக்கப் பண்டப்பாத்திரங்களை அக்காலத்திலேயே செய்துள்ளனர் என்பது கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கது.

நீரின் வெதுவெதுப்பைப் பாதுகாத்து, முன்பனிக் காலத்தில் #வெந்நீர் பருகும் வகையில், #சேமச்செப்பு ஒன்றினையும் தயாரித்துள்ளனர்.

இது ஒரு வியப்பான செய்தியாக உள்ளது. இதனை பின்வரும் #குறுந்தொகை பாடல் தெரிவிக்கின்றது.

உண்கலன்கள் யாவும் புழங்கு பொருள்களாகும். பொருளும் பண்பாடும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.

சுருக்கமாகச் சொன்னால் 'பண்பாட்டின் கண்ணாடி புழங்கு பொருள்கள்' எனலாம்.

பொருள்கள் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. சங்க காலத்தில் கைவினைகள் பெருகியிருந்தன.

அவற்றின் மூலம் எண்ணற்ற கைவினைப் பொருள்களைச் செய்தனர். அவற்றில்,

அழகியலும் அலங்காரமும் சார்ந்தவை #கலை எனப் பிரிக்கலாம்.

தினசரி பயன்பாட்டுக்கு உகந்தவற்றைக் #கைவினை எனப் பகுக்கலாம்.

சங்ககாலப் புழங்கு பொருட்களில் இவ்விரண்டு வகையினங்களும் இருந்தன.

எனினும் கைவினைப் பொருட்களே பெரிதும் #புழங்கு பொருள்களாக விளங்கின. இவற்றில் #குழிசி எனும் #குடம் பெரிதும் பயன்பட்டது.

புழங்கு பொருட்கள் எவ்வாறு செய்யப்பட்டன? என்பதை அறிதல் அதன் தொழில்நுட்பத்தை அறிதலாகும். எப்படி, எவ்வாறு பயன்பட்டன என்பதை அறிதல் புழங்கு பொருள் பண்பாட்டை அறிவதாகும்

சங்ககால மக்கள் தாவரங்களைக் கொண்டும், உலோகங்களைக் கொண்டும், களிமண் கொண்டும் பொருட்களைச் செய்துள்ளனர்.

சங்ககாலத்தில் 33-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் இருந்துள்ளனர், இவர்கள் எண்ணற்ற கைவினைப் பொருள்களைத் தயாரித்தனர். அவற்றில் பல புழங்கு பொருள்களாகப் பயன்பட்டன.

- நன்று

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling