அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

May 26, 2022, 24 tweets

#அஹோபிலம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நல்லமலைப் பகுதி, புராண காலத்தில் அரக்கர் தலைவர் இரண்யனின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் அமைப்பே ஆதிசேஷன் படுத்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. அதன் தலைப் பகுதியில் திருப்பதி திருமலையும்,

மையப் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில் ஸ்ரீ சைலமும் அமைந்திருக்கின்றன. கருட புராணத்தின்படி, இந்த மலைப் பகுதியில் நரசிம்ம தரிசனத்துக்காகப் பல ஆண்டுகள் கருடன் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்யனை வதம் செய்த உருவத்துடன் நரசிம்மர் கருடனுக்குக் காட்சி அளித்தபோது, கருடன் வியந்து

போய் "அஹோ பலா' (இதோ பலம்) என்று குரலெழுப்பியதாகவும் அதனால் இந்த இடத்துக்கு "அஹோபலம்' என்று பெயர் வந்து, அது மருவி அஹோபிலமானதாக ஒரு கருத்து. இரண்யனை வதைத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முப்பது முக்கோடி தேவர்களும், நரசிம்மரின் உக்கிரத்தைப் பார்த்து மிரண்டு போய்
"அஹோவீர்யம் அஹோசௌர்யம்

அஹோபாஹ பராக்ரம:
நரசிம்மம் பரம் தெய்வம்
அஹோபலம் அஹோபிலம்'' 
- என்று கோஷம் எழுப்பியதாகவும், அதனால் அஹோபலம் என்று பெயர் வந்ததாகவும் இன்னொரு கருத்து.
கருடனுக்கு நரசிம்மர் காட்சியளித்த குகையைப் பார்த்து "அதோ குகை' என்று அடையாளம் சொல்லப் பட்டதாகவும் அதனால்தான் "அஹோபிலம்' (அதோ குகை)

என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். அஹோபிலத்துக்குப் பெயர் வந்ததன் காரணம் எதுவாக இருந்தாலும், அஹோபிலமும் நரசிம்மரும் புராண இதிகாச காலங்களுக்கு முன் வந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை. வாயு புராணம், அக்னி புராணம், பிரம்மாண்ட புராணம், மத்ஸ்ய புராணம், விஷ்ணு

புராணம், நரசிம்ம புராணம், கூர்ம புராணம், செளர புராணம், பாகவத புராணம் என்று பல்வேறு புராணங்களில் நரசிம்மர் குறித்து எடுத்தியம்பப்பட்டிருக்கின்றன. புராணங்கள் மட்டுமல்ல, நரசிம்மர் குறித்த பல கல்வெட்டு ஆதாரங்களும் கூடக் கண்டறியப் பட்டிருக்கின்றன. நான்கு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை

பல கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இந்தியாவில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில்தான் நரசிம்ம வழிபாடு அதிகமாகக் காணப்படுகிறது. 6ஆம் நூற்றாண்டு சாளுக்கியர்களின் தலைநகரான பதாமியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் நரசிம்மரின் உருவம் பதித்த தூண்கள் கற்சிலைகள் வெளிப்பட்டு இருக்கின்றன.

நரசிம்மரின் முதல் ஆலயமும், மூலஸ்தானமும் ஆந்திர மாநிலம் அஹோபிலம்தான். அஹோபிலம், புராணங்கள் குறிப்பிடும் பிரகலாத சரித்திரம் நிகழ்ந்த இடம். ஏனைய இடங்களில் நரசிம்மருக்கு ஆலயங்கள் எழுப்பட்டு இருக்கின்றன. ஆனால் அஹோபிலம் என்பது நரசிம்மர் தோன்றிய இடம். அவரது அவதாரத் தலம். ஆதிசங்கரரால்

"சுதர்சன சக்கரம்' ஸ்தாபிக்கப்பட்ட கோயில்கள்தான் அதீத சக்திபெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன. அஹோபிலத்துக்கு ஆதிசங்கரர் வந்திருப்பதன் அடையாளமாக இங்கே அவரால் சுதர்சன சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. ஆதிசங்கரர் காபாலிகர்களால் தாக்கப்பட்டதும், நரசிம்மர் அவரைத் காப்பாற்றியதும்,

"லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்' அவரால் இயற்றப்பட்டதும் அஹோபிலத்தில் தான். ஸ்ரீ அஹோபில நரசிம்மர் ஆலயத்தில் அவரால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. அவரால் நரசிம்ம பஞ்சரத்ன ஸ்தோத்திரம், நரசிம்ம ஸ்தோத்திரம் ஆகியவையும் இயற்றப்பட்டிருக்கின்றன. த்வைதம்' தந்த

ஸ்ரீ மாத்வச்சாரியாரும் அஹோபிலத்துக்கு வந்திருக்க வேண்டும். அவரது வருகைக்கான ஆதாரமோ, குறிப்போ இல்லை என்றாலும், அவரால் இயற்றப்பட்ட "நரசிம்ம ஸ்துதி' நரசிம்மரிடம் அவருக்கிருந்த பக்தியை வெளிப் படுத்துகிறது. பாஷ்யக்காரர் என்று போற்றப்படும் விசிஷ்ட அத்வைதம் சொன்ன #ஸ்ரீராமானுஜரும்,

#ஸ்ரீவேதாந்ததேசிகரும் அஹோபிலம் வந்திருக்கிறார்கள். ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் அஹோபிலம் வந்து பெரிய திருமொழியில் பத்துக்கும் அதிகமான பாசுரங்கள் மூலம் துதித்துப் போற்றியிருக்கிறார். 
"தினைத்தனையும் செய்ய 
ஒண்ணாச் சிங்கவேழ் குன்றமே”
-என்று திருமங்கையாழ்வாரால் போற்றப்பட்ட

அஹோபிலத்துக்கு, பக்தி இயக்கத்தின் முன்னோடி #சைதன்யர் வந்திருப்பது பதிவாகி இருக்கிறது. ஸ்ரீ ராமானுஜருக்கும், ஸ்ரீவேதாந்த தேசிகருக்கு பிறகு விசிஷ்டாத்வைதத்தைப் பரப்பவும், வைணவத்தைப் பாதுகாக்கவும் தலைமை இல்லாத வெறுமை ஏற்பட்டபோது, மைசூருக்கு அருகிலுள்ள மேல்கோட்டையில் அவதரித்த கிடம்பி

ஸ்ரீநிவாச்சாரியாருக்கு நரசிம்மரிடமிருந்தே அழைப்பு வந்தது. (நரசிம்மர் அழைக்காமல் அஹோபிலம் சென்றுவிட முடியாது, அப்படியே சென்றாலும்கூட, மலையிலுள்ள நவ நரசிம்மர்களை தரிசித்து விட முடியாது.)
தனது 19-வது வயதில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நிதியில் சாஸ்திரங்கள் படித்துக் கொண்டிருந்த

ஸ்ரீநிவாசாச்சாரியாரின் கனவில், "அஹோபிலத்துக்கு வா, உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று நரசிம்மர் கூறி மறைந்தார். அஹோபிலத்தில் வயதான யோகி ஒருவர் அவரை வரவேற்று வேத, வேதாந்தங்களையும், நரசிம்ம மந்திரத்தையும் பயிற்றுவித்தார். சந்நியாசம் பூணச் சொல்லி உத்தரவிட்டு, த்ரிதண்டத்தை

சங்கு சக்கரங்களையும் வழங்கினார். அவருக்கு #சடகோபயதி என்கிற திருநாமத்தையும் சூட்டினார்.
இத்தனையும் செய்துவிட்டு அந்த யோகி மாயமாய் மறைந்த போது தான், சாட்சாத் நரசிம்மரே தனக்கு குருவாக இருந்து, துறவு பூண வைத்திருப்பதை உணர்ந்தார் "சடகோப யதி' என்று மாறிவிட்டிருந்த ஸ்ரீநிவாசச்சாரியார்,

அவரால் ஸ்தாபிக்கப்பட்டதுதான் #அஹோபிலமடம் அஹோபில மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஸ்ரீவண் சடகோப யதீந்திர மகாதேசிகன் என்று அழைக்கப்படுகிறார்கள். ஜீயர் என்றும் அழகிய சிங்கர் என்றும் குறிப்பிடப் படும் இவர்களது தலைமைப் பீடம் அஹோபிலம். அந்த  குரு பாரம்பரியம் இப்போதைய 46வது

ஜீயரான ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகா தேசிகன் வரை தொடர்கிறது. அஹோபிலத்திலுள்ள ஆலயங்கள் அனைத்தும் அஹோபில மடத்தின் மேற்பார்வையில்தான் இருக்கின்றன. அஹோபிலத்தின் முக்கிய கோவில் எழுவா அஹோபிலம் (மேல் அஹோபிலம்) என்றும், இங்குள்ளவர் அஹோபில உக்ர நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார்.

ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்ற பிறகு, நரசிம்மர் இந்த இடத்தில் உக்ர நரசிம்மராக காட்சியளித்தார். அருகிலுள்ள லட்சுமி தேவியின் கோவிலைக் காண்கிறோம், அவர் செஞ்சு லட்சுமி, பழங்குடியினரின் மகள். திரேதா யுகத்தில், ஸ்ரீ ராமர், சீதா தேவியைத் தேடிய போது, ​​அஹோபிலத்திற்குச் சென்று நரசிம்மரை

வழிபட்டதாக நம்பப்படுகிறது. வெங்கடேஸ்வரர் அஹோபில நரசிம்ம சுவாமியை வழிபட்டார். அவரது குலதெய்வம் அஹோபில நரசிம்மர் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன. கீழ் அஹோபிலத்தில் (திகுவா அஹோபிலம்) லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி பத்மாவதி தேவியுடன் திருமணத்திற்கு முன்பே வெங்கடேஸ்வரரால் பிரதிஷ்டை செய்யப்

பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு ஶ்ரீனிவாச பெருமாளுக்கும் சன்னதி உள்ளது. துவாபர யுகத்தில், பாண்டவர்கள் அஹோபிலத்தில் நரசிம்மரை தரிசித்து வழிபட்டனர். அஹோபிலம் நவ நரசிம்ம க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது, அங்கு நரசிம்மர் அஹோபிலத்தில் 9 வெவ்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறார். அவர்கள்,

ஜ்வாலா,
அஹோபிலா (உக்ர நரசிம்மர்),
மலோலா,
க்ரோதா,
கரஞ்சா,
பார்கவா,
யோகானந்தா,
சத்ரவத,
பாவனா.
ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதரித்த தூண் இருக்கும் இடம் மேல் அஹோபிலம் கோயிலுக்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவனின் கால் தடங்கள் இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் ஒரு

சின்ன இரும்புத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் உக்ர ஸ்தம்பம் (உக்கிரமான தூண்) என்று அழைக்கப்படுகிறது. அஹோபிலம் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அல்லகட்டாவிலிருந்து 24 கிமீ தொலைவில் நல்லமலா காடுகளில் அமைந்துள்ள புனித நதியான பவானாசினியின் கரையில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 2800 அடி உயரத்தில் வேதாத்ரி மலையின் உச்சியில் கோயில் உள்ளது. அவனருளாலே அவன் தாள் வணங்க நரசிம்மரை வேண்டுவோம். அற்புதமான இத்தலத்தில் இருக்கும் ஒவ்வொரு நரசிம்மரின் பெருமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. காண விரைவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling