அட்டவீரட்டான திருத்தலங்கள்
பகுதி-1
எல்லாம் வல்ல சிவபெருமான், படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து தொழில்களைப் புரிகிறார்.
தமது திருவிளையாடல்கள் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காத்து அருள்கிறார்.
பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே "அட்டவீரட்டான தலங்கள்".
திருத்தலம்-1
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில்:
பிரம்மனின் சிரம் கொய்து, செருக்கை அழித்த திருத்தலம்.
ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார்.
பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்தார். காரணத்தால், இந்தத் தலத்துக்கு `கண்டியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) பெருமான் அருளிச் செய்தார்.
திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருநாவுக்கரசர் சுவாமிகள் பதிகங்கள் பாடப் பெற்ற திருத்தலம்.
சப்தஸ்தான தலங்களில் 5-ம் தலம்.
"சாதாதாப" முனிவருக்காக இறைவன் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார்.
மேலும் பெருமான் சாதாதாப-க்காக வில்வமரத்தை கயிலையிலிருந்து வர வைத்தார் ஆகையால், இத்தலம் 'ஆதிவில்வாரண்யம்' என்றும் பெயர் பெற்றது.
தேவாரப்பாடல்:
திருச்சிற்றம்பலம்
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த
தொண்டர் பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே.!
திருச்சிற்றம்பலம்
அட்டவீரட்டான திருத்தலங்கள் பகுதி-2
திருத்தலம்-2
திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டேஸ்வரர் திருக்கோயில்:
ஊர் பெயர் திருக்கோவலூர், தலத்தின் பெயர் வீரட்டம்.
அட்ட வீரட்டத் தலங்களுள், அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம்.
உற்சவ மூர்த்தி, அந்தகாசுர வதமூர்த்தி ஆவார்.
இருள் என்னும் அஞ்ஞானத்தில் இருந்து உற்பத்தி ஆன அசுரனை அழித்த, சுவாமி மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாக இருப்பதாக ஐதீகம்.
பைரவராக இருந்து தோசங்களை பைரவராக இருந்து நிவர்த்தி செய்கிறார் பெருமான்.
திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருநாவுக்கரசர் சுவாமிகள் பதிகங்கள் பாடப் பெற்ற திருத்தலம்.
மெய்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக ஆட்சி செய்த பதி.
சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்த நரசிங்கமுனையரையர் அவதரித்தத் தலம்.
இராஜராஜ சோழன் அவதரித்த பதி.
ஔவையார் இத்தல விநாயகரை, “சீதக் களப” எனத் தொடங்கும் அகவல் பாடி பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.
அவ்வையார், கபிலர் சேர்ந்து, பாரி வள்ளலின் மகள்களை (அங்கவை சங்கவை), திருக்கோயிலூர் மன்னனுக்கு திருமணம் செய்து வைத்த சிறப்புடைய தலம் இது.
முருகன் அசுரனை கொன்றதால் பிரம்மகத்தி தோசம் நீங்க பூமியில் சிவபூஜை செய்ய வேண்ட, ஏற்ற இடத்தை உணர்த்த அம்பாள் எறிந்த வேல் விழுந்த தலம்.
தேவாரப்பாடல்:
திருச்சிற்றம்பலம்
ஆறு பட்ட புன்சடை அழகன் ஆயிழைக்கு ஒரு
கூறு பட்ட மேனியான் குழகன் கோவலூர்தனுள்
நீறு பட்ட கோலத்தான் நீலகண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே.!
திருச்சிற்றம்பலம்
#நற்றுணையாவது_நமச்சிவாயவே🙏🏻
#சைவநெறி
#சர்வம்_சிவமயம்
அட்டவீரட்டான திருத்தலங்கள் பகுதி-3
திருத்தலம்-3
திருவதிகை வீரட்டானம் வீரட்டேஸ்வரர் கோயில்:
அட்ட வீரட்டத் தலங்களுள் திரிபுரத்தை எரித்த திருத்தலம்.
திரிபுரதகன உத்ஸவம் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டத்தன்று நடக்கிறது.
தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் 3 அசுரர்கள் செய்து பிரம்மாவிடம் தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாத வரம் பெற்றனர்.
தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று தேவர்கள் நினைத்து கொண்டிருக்க, சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை.
அசுரர்களை பார்த்து சற்றே புன்னகைத்தார். அவ்வளவுதான், உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்ட மூவரும் சாம்பலாயினர்.
தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.
ஒரே சமயத்தில் தேவர்கள், அசுரர்கள் இருவரது ஆணவத்தையும் அடக்கினார் பெருமான்.
அப்பர் சுவாமிகளின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்த திருத்தலம்.
"கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கி "நாவுக்கரசு" என்ற பட்டம் பெற்ற அற்புதத்தலம்.
ஞானசம்பந்தர் சுவாமிகளுக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.
சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தார்' அவதாரத் தலம்.
இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கி, திருவடி தீட்சை பெற்றதும் இத்தலமே.
தேவாரப் பாடல்:
திருச்சிற்றம்பலம்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்
வண்ண இரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்
திண்ணென் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை.!
திருச்சிற்றம்பலம்
#நற்றுணையாவது_நமச்சிவாயவே🙏🏻
#சைவநெறி
#சர்வம்_சிவமயம்
அட்டவீரட்டான திருத்தலங்கள்
திருத்தலம்-4
திருப்பறியலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
(கீழப்பரசலூர், நாகப்பட்டினம்)
சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில், பெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும் தட்சனையும் வீரபத்திரராக அழித்த திருத்தலம்.
இங்குள்ள தட்சபுரீசுவரரின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கும் காட்சி மிக சிறப்பானது.
தேவாதி தேவர்களை எல்லாம் அழித்ததுடன், அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார்.
நவகிரகத்திற்கென்று கோயில் இல்லை.
சுப்பிரமணியர் திருவுருவம் மயிலின் மீது ஒரு காலை வைத்து நின்றபடி உள்ளது. அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது திருத்தலம்.
தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தைத் தண்டனை மூலம் பறித்ததால் 'பறியலூர்' என்றும், தக்கன் யாகம் செய்த தலமாதலின் தக்ஷபுரம் என்றும் வழங்கலாயிற்று.
தேவாரப் பாடல்:
திருச்சிற்றம்பலம்
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்
சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில்
விறல் பாரிடம் சூழ வீரட்டத்தானே.!
திருச்சிற்றம்பலம்
#நற்றுணையாவது_நமச்சிவாயவே🙏🏻
#சைவநெறி
#சர்வம்_சிவமயம்
அட்டவீரட்டான திருத்தலங்கள்
திருத்தலம்-5
திருவிற்குடி அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்
சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில், சலந்தரன் சங்கரிக்கப்பட்ட திருத்தலம் இது.
சலந்தரனின் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பது தொன்வரலாறு.
திருமால் வழிபட்ட இலிங்கத் திருமேனி தனிக் கோவிலாக உள்ளது.
சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.
சலந்தரனைச் சம்ஹரித்த மூர்த்தி, ஜலந்த்ரவதமூர்த்தி, உற்சவத் திருமேனி கொண்டு, வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தி, ஏனைய கரங்களில் மான், மழு ஏந்தி, முத்திரையுடன் அருட்காட்சி அளிக்கிறார்.
தேவாரப் பாடல்:
திருச்சிற்றம்பலம்
கரிய கண்டத்தர் வெளிய வெண்பொடி அணி மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை இடம் பெறக் காட்டு அகத்து ஆடிய வேடத்தர்
விரியும் மா மலர்ப்பொய்கை சூழ் மது மலி விற்குடி வீரட்டம்
பிரிவு இலாதவர் பெருந் தவத்தோர் எனப் பேணுவர் உலகத்தே.!
திருச்சிற்றம்பலம்
அட்டவீரட்டான திருத்தலங்கள்
திருத்தலம்-6
திருவழுவூர் அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில்
தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன் பால் ஏவி விட, பெருமான் அதை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த தலம்.
வழுவை– யானையை உரித்த ஊர், வழுவூர் என்பர்.
பெருமான், கஜசம்ஹாரமூர்த்தி ஆக தரிசனம் தருகின்றார். யானையை அழித்து, தோலுரித்து சிரசின் மீது சுற்றியவண்ணம், இறைவன் வீர நடனமாடுகின்றார்.
யானையின் வால்புறம் சிரசின் மீது தெரிகிறது. திருமேனி ஓங்கார வடிவில் அமைந்துள்ளது.
கைவீசி திருவடிகள் முருக்கியவாறு, மடித்து, திருவடியின் உட்புறம் (புறங்கால் பகுதி) தெரியுமாறு அற்புத நடனமாடுகிறார்.
பெருமானுக்கு அருகில் அம்பாள், இடுப்பில் முருகப் பெருமாளுடன், ஒரு பாதத்தைச் சற்று திருப்பி, நடந்து செல்ல முயலும் கோலத்தில் உள்ளார்.
முருகப் பெருமாள் தன் தாய்க்கு, ‘இதோ தந்தையார்’ என்று பெருமானைச் சுட்டிக் காட்டும் திருக்கோலத்தில் உள்ளார்.
மூலவர் - சுயம்பு மூர்த்தி, நாகாபரண அலங்காரத்தில் அழகு மிளிர திருக்காட்சித் தருகிறார்.
சுவாமி மண்டபத்தில் அட்ட வீரட்டச் செயல்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
அப்பர் சுவாமிகள் வைப்புத் தலமாக திருப்பதிகங்கள் பாடியுள்ளார்.
தலம் பதிகங்கள் நமக்கு கிடைக்கவில்லை.
திருச்சிற்றம்பலம்
#நற்றுணையாவது_நமச்சிவாயவே🙏🏻
#சைவநெறி
#சர்வம்_சிவமயம்
அட்டவீரட்டான திருத்தலங்கள்
திருத்தலம்-7
திருக்குறுக்கை அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்
(கொருக்கை, நாகப்பட்டினம்)
சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில், மன்மதனை எறித்த திருத்தலம் இது.
காமதகன மூர்த்திப் பெருமான் என்ற திருநாமத்துடன் உற்சவ முகூர்த்தியாக அருள்கிறார்.
பெருமான், இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன் இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் யோக மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.
யோக மூர்த்த பெருமானை நினைத்தவுடன் தரிசிக்க இயலாது. சுவாமியை தரிசிப்பவர்களுக்கு யோக நிலை கைகூடும் என்பது ஐதீகம்.
மூலவர் சுயம்பு மூர்த்தியாக சதுர ஆவுடையாரில் உயர்ந்த பாண லிங்கத் திருமேனியாக பெருமான் அருள்கிறார்.
மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.
தேவாரப் பாடல்:
திருச்சிற்றம்பலம்
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அருந்தவத்த
கணம் புல்லர்க்கு அருள்கள் செய்து, காதல் ஆம் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.!
திருச்சிற்றம்பலம்
அட்டவீரட்டான திருத்தலங்கள்
திருத்தலம்-8
திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
(திருக்கடையூர், நாகப்பட்டினம்)
அட்டவீரட்ட தலங்களில், மார்க்கண்டேயருக்காக எமனை காலால் எட்டி உதைத்து, பெருமான் சம்காரம் செய்த திருத்தலம்.
பெருமான் திருமேனியில் ஒரு பிளப்பும் பாசத் தழும்பும் காணப்படுகின்றன. அவை மார்க்கண்டர் வரலாற்றினை நினைவூட்டுவனவாம்.
கருவறையில் மூலவரின் லிங்கத் திருமேனியை உற்றுப் பார்க்கும் போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும்.
மூலவர் மேற்கே பார்த்தும் அருள்மிகு அபிராமி அம்பாள் கிழக்கே பார்த்தும் அமையப் பெற்றதால் இத்தலம் நித்திய திருக்கல்யாண தலமாக திகழ்கிறது.
அம்மையின் 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடம் ஆகும்.
சுப்பிரமணிய பட்டர், அம்மைக்காக "அபிராமி அந்தாதி" பாடிய திருத்தலம்.
குங்குலியகலய நாயனார், காரி நாயனாரும் அவதரித்து திருத்தொண்டு ஆற்றிய திருத்தலம்.
திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் ஒரு சேர எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை பெற்றப் பதி.
தேவாரப்பாடல்:
திருச்சிற்றம்பலம்
எரிதரு வார்சடையானும் வெள்ளை எருது ஏறியும்
புரிதரு மா மலர்க்கொன்றை மாலை புனைந்து ஏத்தவே
கரிதரு காலனைச் சாடினானும் கடவூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே.?!
திருச்சிற்றம்பலம்
#நற்றுணையாவது_நமச்சிவாயவே🙏🏻
#சைவநெறி
#சர்வம்_சிவமயம்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.