Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture
| Doctor of Pharmacy (Pharm.D) | | I am a #PharmDian | | Rationalist | | Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx | |Belongs to Dravidian Stock| 🌈

Sep 8, 2022, 32 tweets

#ஓணம்

ஓணம் எனக் கேட்டவுடன் அனைவர் மனதிலும் அது தொடர்பாக நினைவுக்கு வரும் கதை "கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்;

(1)

அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு

(2)

அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார்" என்ற கதை தான்.

ஓணப் பண்டிகை என்பது ஆண்டுக்கு ஒரு முறை தங்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்கும் ஒரு திருநாளாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர் என நம்பப்படுகிறது. இங்கு, நாம் கவனிக்க வேண்டிய

(3)

ஒரு முக்கியமான கதை உள்ளது, அது தான் கேரள நாட்டின் தோற்றம் குறித்து புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கதை.

விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான "பரசுராமன்" தன் போர்க் கோடாலியை கடலில் வீசி கடலில் மூழ்கி இருந்த கேரளத்தை மேலே கொண்டு வந்து மீட்டதாக சொல்கிறது புராணக் கதைகள்.

(4)

விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் உருவாக்கிய கேரளாவை ஆண்ட மன்னன் மகாபலியை, விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமனன் எப்படி வதம் செய்திருக்க முடியும்!? ஏதோ லாஜிக் இடிக்கிற மாதிரி இருக்குல்ல. புராணங்களில் லாஜிக் இடிக்காமல் இருந்தால் தான் அதிசயம்,

சரி இங்கு புராணங்களின் படி மகாபலி யார்!?

(5)

பிரம்மாவின் மகன் மரீசி என்பவர், இந்த மரீசியின் மகன் கஷ்யபன், கஷ்யபனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர் ஒருவர் திதி இன்னொருவர் அதிதி. திதி எனும் மனைவிக்கு பிறந்தவர்கள் அசுரர்கள் எனவும் அதிதி எனும் மனைவிக்கு பிறந்தவர்கள் தேவர்கள் எனவும் விஷ்ணு புராணம் கூறுகிறது.

(6)

திதி எனும் மனைவிக்கு பிறந்த அசுரர்களில் ஒருவர் ஹிரண்யகசிபு அதாவது இரணியன், இரணியனைப் பற்றிய கதை நம் அனைவருக்கும் தெரிந்தது தான். விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை கொன்ற பிறகு இரணியனின் மகன் பிரகலாதன் அசுரர் தலைவராக பதவி ஏற்கிறார். பிரகலாதனின் மகன் விரோசனன்,

(7)

இந்த விரோசனனின் மகன் தான் மகாபலி, அதாவது பிரகலாதனின் பேரன் தான் மகாபலி.

பிரகலாதன் எப்படி தீவிர விஷ்ணு பக்தராக இருந்தாரோ அதேபோல மகாபலியும் தீவிர விஷ்ணு பக்தர். மேலும் இந்து புராணங்களின் படி ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் மகாபலி, இறப்பே இல்லாத பிறவி இவர்.

(8)

இந்து மத புராணங்களின் படி வாமனன் மகாபலியை அழிப்பதற்கான காரணத்தை பல விதமாக கூறுகிறார்கள்.

முதல் கதை, மகாபலி அசுரர் குல தலைவன் இந்த அசுரர் சக்கரவர்த்தி ஆட்சியில் மக்கள் மிக செழிப்பாக இருந்ததாகவும் அவர் மிக சிறப்பாக ஆட்சி செய்ததாகவும் அதை கண்டு தேவர்கள் பொறாமை கொண்டு

(9)

விஷ்ணுவிடம் சென்று முறையிட்டதாகவும், தேவர்களை திருப்தி படுத்த தன் பக்தனான மகாபலியை வாமன அவதாரம் எடுத்து விஷ்ணு அழித்ததாக சொல்லப்படுகிறது.

இரண்டாவது கதை, அனைத்திலும் சிறந்து விளங்கிய மகாபலி கடைசியாக தேவர் குல தலைவனாகும் ஆசையும் கொண்டார்.அனைத்திலும் சிறந்த விஸ்வஜீத் யாகம்

(10)

நடத்தியதாகவும்(விஷ்வா என்றால் பிரபஞ்சம் மற்றும் ஜீத் என்றால் வெற்றி. இதன் மூலம், விஸ்வஜீத்தை பிரபஞ்சத்தை வென்றவர் என பொருள் கொள்ளலாம்)அது பிடிக்காத தேவர்களும் இந்திரனும் விஷ்ணுவிடம் முறையிட்டு அதற்கு இணங்க, விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை அழித்ததாகவும் சொல்கிறார்கள்.

(11)

இந்த முதல் கதையில் வாமன உருவில் இருந்த விஷ்ணு மகாபலியின் தலையில் கால் வைத்து பாதாளத்திற்குள் தள்ளவில்லை, சுதலம் எனும் சொர்க்கத்தை விட மேன்மையான ஒரு இடத்திற்கு தள்ளி மோட்சம் கொடுத்தார் என சொல்லப்படுகிறது. சூதலத்திற்கு விஷ்ணுவே துவார பாலகனாக இருப்பதாகவும் கதைகள் உண்டு.

(12)

பாகவத புராணத்தின் படி ஏழு கீழ் உலகங்களில் ஒன்றாக பாதளத்தை குறிப்பிடுகிறது. அசுரர்களின் கட்டிடக் கலைஞரான மயன், பாதாள லோகத்தில் பல அழகிய கட்டிடங்கள் கட்டினார். அந்த அழகிய இடம் தான் சுதலம்.

விஷ்ணு புராணத்தின் படி, ஏழு கீழ் உலகங்களை, அதலம், விதலம், நிதலம், தலாதலம், மகாதலம்,

(13)

சுதலம் மற்றும் பாதாளம் பெயர்களால் குறிப்பிடுகிறது. இதிலும் சுதலம் என்பது தேவர்களே செல்ல ஆசை கொள்ளும் அளவிற்கு மிக அழகான இடம் என சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது கதையில் மகாபலி பாதாளத்திற்குள் தள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

(14)

இதே போல வாமனனுக்கும் ஒரு கதை உண்டு அனைவருக்கும் பொதுவாக தெரிந்தது வாமனன் விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம். விஷ்ணு புராணத்தின்படி தேவர்களை பெற்றெடுத்த அதிதி தனக்கு விஷ்ணுவே மகனாக பிறக்க வேண்டும் என்று தவம் செய்து அவளுக்கு பிறந்த மகன் தான் வாமானன். அதாவது வாமனன் மகாபலியின் தாத்தா.
(15)

இப்படி இந்து மத புராணங்களின்படி பார்த்தால் ஒன்று தன் தீவிர பக்தன் மகாபலியை தேவர்களின் பொறாமை காரணமாக விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அழித்துள்ளார், அதுவும் தன் சொந்த பேரனையே அழித்துள்ளார் இந்த பொறாமைக்கார தேவர்களுக்காக.

(16)

இந்த கதையில் எங்காவது நியாயம் உள்ளதா!? ஒரு அசுரன் தன் மக்களை சிறப்பாக ஆட்சி செய்தான் அவன் ஆட்சியில் மக்கள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடனும் இருந்தனர் என்பது நல்ல விஷயம் தானே, பிறகு ஏன் அவனை அழிப்பதாக கதை சொல்லப்பட்டுள்ளது!

மகாபலி சிறப்பாக இருந்ததால் அவன் அழிக்கப்பட்டான்
(17)

என்பது மேலோட்டமாக இருக்கும் விஷயம், ஆனால் நுட்பமாக பார்த்தால் ஒரு விஷயம் புரியும்,

எப்படி சூத்திரனான ஏகலைவனின் கட்டைவிரல் அவன் சிறந்த வில்லாளனாக இருந்த ஒரே காரணத்தினால் துரோணாச்சாரியாரால் சூழ்ச்சி செய்து முறிக்கப்பட்டதோ, சூத்திரனான சம்புகன் தவம் செய்த ஒரு காரணத்திற்காக

(18)

அவன் தலை ராமனால் கொய்யப்பட்டதோ. அதே போல அசுரனான மகாபலி தேவர்களை விட சிறப்பாக இருந்தான் என்பதற்காக விஷ்ணுவால் சூழ்ச்சி செய்து அழிக்கப்பட்டான் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இந்து மதத்தின் மிக முக்கிய புராணங்களாக சொல்லப்படும் மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் கூட மகாபலி

(19)

பற்றிய குறிப்புகள் உள்ளது. மகாபாரதத்தில் வரும் வன பர்வம் மற்றும் சாந்தி பர்வத்தில் மகாபலி பற்றி சொல்லப்பட்டுள்ளது.

வாமனனால் பாதாளத்திற்குள் தள்ளப்பட்ட மகாபலியை, இராவணன் பாதாளத்திலிருந்து விடுவிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை என்று ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

(20)

அதேபோல பாகவத புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்திலும் கூட மகாபலியை பற்றிய குறிப்புகள் உள்ளது.

மேலும் இந்து மத புராணங்கள் தவிர பௌத்தம் மற்றும் ஜைனம் புராணங்களிலும் மகாபலியை பற்றிய குறிப்புகள் உள்ளது.

(21)

பௌத்த நூல்களான லோட்டஸ் சூத்ரா (Lotus sutra) தான பரமித சூத்ரா (Dana Paramita sutra) போன்ற நூல்களிலும் நாராயணனால் சிறைபிடிக்கப்பட்ட மகாபலி என்பது போன்ற குறிப்புகள் காணப்படுகிறது. மேலும் ஜைன மதத்தில் ஒன்பது துஷ்ட சக்திகளில் ஆறாவது துஷ்ட சக்தியாக மகாபலி சொல்லப்பட்டுள்ளார்.

(22)

ஜைன கதையின்படி மகாபலி ஒரு வில்லன்.

சரி இத்தனை புராணக் கதைகளையும் கடந்து வரலாற்றுப் பூர்வமாக மகாபலி எனும் மன்னர் வாழ்ந்ததற்கான தரவுகள் ஏதேனும் உள்ளதா என்று பார்த்தால் அப்படி எந்த தரவும் இல்லை என்பதுதான் உண்மை.

(23)

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக இத் திருவிழாவை எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
(24)

மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர"
~ மதுரைக் காஞ்சி (590 - 599)

(25)

அதாவது, ஓண நாளில் காய்கறி, கனி முதலிய உணவுப் பொருள்களை விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர். வீரர்கள் "சேரிப்போர்' என்னும் வீர விளையாட்டை நிகழ்த்தினர் எனவும், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பசுக்களைப் பாண்டிய மன்னன் வழங்கினான் என மதுரையில் நடைபெற்ற ஓணத்தை விளக்கியுள்ளார்.

(26)

அதே போல பெரியாழ்வார் திருமொழியில் 6 ஆம் பாடல், இரண்டாம் திருமறையின் தேவார பாடல் 503,
பரிபாடலில் உள்ள 55 -ஆவது பாடல், என பல பக்தி இலக்கிய பாடல்களிலும் ஓணம் பற்றிய குறிப்புகள் உள்ளது. மொத்தத்தில் மகாபலி எனும் மன்னனின் கதை முழுக்க முழுக்க பக்தி சார்ந்து மட்டுமே காணப்படுகிறதே

(27)

தவிர வரலாற்று ரீதியாக மகாபலி மன்னனுக்கும் வாமனனுக்கும் நடந்த நிகழ்வுகள் என சொல்லப்படும் எதற்கும் எந்த விதமான தரவுகளும் இல்லை.

வரலாற்று ரீதியாக அப்படி ஒரு விஷயம் இல்லாத போது ஏன் ஓணம் குறிப்பிட்ட மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் மழை முடிந்ததும்,

(28)

எங்கு பார்த்தாலும் அறுவடைகள் நடக்கும் அதை தொடர்ந்து வியாபாரங்கள் நடக்கும்.

மழை பெய்யும் போது கடல் வழி போக்குவரத்து சிரமம், ஆடி மாதம் மழைக்காலம் முடிந்து கடல் வழி போக்குவரத்திற்கு ஏதுவான சூழல் உருவாகும் அப்போது வணிகர்கள் கடல் வழியாக பயணித்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.

(29)

அறுவடையும் வியாபாரமும் நடந்து மக்கள் செல்வ செழிப்புடன் இருக்கும் நாட்களில் தான் இந்த ஓணப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய இந்த ஓணப்பண்டிகையை, அறிவுக்கு பொருந்தாத பல கட்டுக்கதைகளை எழுதி ஒரு மதப் பண்டிகையாக மாற்றி முயற்சித்துள்ளனர்.

(30)

தமிழ்நாட்டின் அறுவடைத் திருவிழாவான பொங்கல் போன்று, கேரளாவின் அறுவடை திருவிழா தான் இந்த ஓணம்.

பண்பாட்டு விழாவை மதவிழாவாக மாற்ற முயன்றாலும், இன்றும் கேரள மக்கள் சாதி மதம் கடந்து அனைவரும் ஓணம் கொண்டாடுகின்றனர்.

(31)

கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஓணம் கொண்டாடிய காணொளி. இது ஒரு உதாரணம் தான், இது போல பல இடங்களிலும் சாதி மதம் கடந்த பண்பாட்டு பண்டிகையாக ஓணம் கொண்டாடப்படுகிறது.

சர்ச்சில் ஓணம் கொண்டாடிய காணொளி 👇🏽



(32)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling