அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Feb 16, 2023, 13 tweets

காலன் வழிபட்ட சிவலிங்கமும், ஆசியாவிலே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி என்று பல்வேறு புகழினை உடையது #கோவில்பாளையம்_காலகாலேஸ்வரர் ஆலயம். கோவையிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் எழிலுறத் திகழ்கிறார் ஈசன். இத்தலத்தில் மூலவர் மணலும் நுரையும் கலந்த லிங்க

வடிவில் அருளுகிறார் என்கின்றனர் பக்தர்கள். பொதுவாக மணலால் ஆன லிங்கம் காலத்தில் நிலைத்து நிற்பது என்பது அபூர்வம். ஆனால் இத்தல இறைவன் சுமார் 1300 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் பேறு பெற்றவர் என்பது நம்பிக்கை. மிருகண்டு முனிவருக்கும் மருத்துவவதிக்கும் திருமணம் ஆகி நீண்ட நாள்கள் ஆகியும்

குழந்தை பாக்கியம் இல்லை என்ற ஏக்கம் இருந்தது. எனவே, அவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி சிவபெருமானை மனதார வழிபட, அத்தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு #மார்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயன் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டு ஒழுகினான்.

மார்கண்டேயனின் 16 வயதிலேயே ஆயுள் முடிய வேண்டும் என்று விதி இருந்தது. ஆயுள் முடியும் நாளில் யமதர்மனின் தூதுவர்கள் அவனது உயிரை எடுக்க வந்தனர். மார்க்கண்டேயன் திருக்கடையூர் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரரை இறுகப் பற்றிக் கொண்டு சரணாகதி அடைந்தான். இதனால் கோபமடைந்த யமன்

பாசக்கயிறை சுழற்றி வீச, அக்கயிறு ஈஸ்வரன் மீது விழுந்தது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், யமனை சூலத்தால் குத்தி இடது காலால் எட்டி உதைத்து சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார். யமனின் யமலோகப் பதவி பறிக்கப்பட்டு மானிடனாக பூலோகத்தில் உலாவினார். மீண்டும் யமபதவி வேண்டி கௌசிகாபுரி தலம்

சென்று (தற்போதய கோவில் பாளையம்) அங்குள்ள நதியில் நீராடி சிவபூஜை செய்ய எண்ணினான். சிவபூஜை செய்ய லிங்கம், விபூதி, வில்வம், ருத்ராட்சம் என ஏதும் கிடைக்கவில்லை. எனவே, செய்வதறியாது அங்கு கிடந்த குச்சியை எடுத்து மண் குவிந்த இடத்தில் குத்தினான். அதன் உள்ளிருந்து நுரை பொங்கி வந்தது.

மணலுடன் நுரையைச் சேர்த்து அழகிய சிவலிங்கம் வடித்துப் பூஜை செய்தான். யமனுக்கு அருகில் கௌசிக முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். முனிவரிடம் பாவ விமோசனம் கேட்டு யமன் இறைஞ்சினான். பரம்பொருள் யமனின் முன்பு தோன்றி, சாப விமோசனம் அளித்து மீண்டும் யமபதவி வழங்கி அனுக்கிரக மூர்த்தியாக

அருளினார். இதனால் யமதர்மன் மகிழ்ந்து யமலோகம் நோக்கிச் சென்றான். யமன் வழிபாடு செய்த மணலும் நுரையும் சேர்ந்த சிவலிங்கமே #காலகாலேஸ்வரர் என்கிறது தலவரலாறு. கரிகாலச்சோழன் தன்னை வருத்திய பிணி நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்கள் எழுப்பினான் என்பது வரலாறு. அவ்வகையில்,

காலகாலேஸ்வரருக்கு சிவாலயம் எழுப்பி வழிபட்டான். உள் நுழைந்தவுடன், கன்னி மூல கணபதி எழுந்தருளியுள்ளார். கணபதியை வணங்கி விட்டு வலதுபுறம் திருப்பினால் தட்சிணாமூர்த்தி அருளுகிறார். இடது புறம் திரும்பிச் சிறிது தூரம் சென்றால் நஞ்சுண்டேசுவரர் அருள் பாலிக்கிறார்.
மூலவருக்கு இடப் புறத்தில்

கருணாகரவல்லி அம்மன் அழகுற காட்சி அளிக்கிறார். சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே கால சுப்பிரமணியர் வீற்றிருப்பதால் இத்தலம் சோமஸ்கந்த அமைப்பு கொண்ட கோவிலாக விளங்குகிறது. தல விருட்சமாக வில்வ மரமும் தலதீர்த்தமாக காலபொய்கை நதியும் உள்ளது. யமனுக்கு அருள் செய்த தலம் என்பதால் இத்தலத்தில்

ஆயுள் ஹோமம், உக்கிரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் பூர்ணாபிஷேகம் போன்ற ஹோமங்கள் செய்வது சிறப்பு. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெறுகிறது. நெய், பஞ்சாம்ருதம், தயிர் மட்டும் சுவாமி

அபிஷேகத்தில் சேர்ப்பதில்லை. இந்த அபிஷேகத் தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இப்பிரசாதத்தை உண்போருக்கு உடலை வருத்திய பிணி நீங்கும் என்பது நம்பிக்கை. சூரசம்ஹாரம் இத்தலத்தில் விமர்சையாக நடைபெறுகிறது. மரகதத்திற்குரிய குணங்களைக் கொண்ட பச்சை நிற நந்திக்கு பிரதோஷ பூஜை

சிறப்பாக நடைபெறும். அனைவரும் வாழ்வில் ஒரு முறையேனும் காலகாலேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் ஆயுளும் ஆரோக்கியமும் பெறலாம்.
இடம்: சர்கார் சாமகுளம், கோவில்பாளையம்
#அன்பேசிவம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling