#நரநாராயணர் #பத்ரிகாஸ்ரமம்
தவத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்ட மகாவிஷ்ணு எடுத்த இரட்டை அவதாரமே நர நாராயணர்கள். கடவுள் மனிதனாகவும், மனிதன் கடவுளாகவும் ஆகமுடியும் என்ற தத்துவத்தை விளக்குவது இத்திருவவதாரம். மகா விஷ்ணுவின் பல்வேறு திருநாமங்களுண்டு. முக்கியமான 245-வது நாமம்
'நாராயணா’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கூறுகிறது. #நாராயணா என்றால், 'எல்லா ஜீவன்களும் உறையுமிடம்’ என்று பொருள். ஸ்ரீமந் நாராயணனிடம் இருந்து தான் சப்தரிஷிகளும், தேவர்களும், பஞ்சபூதங்களும், அனைத்து ஜீவராசிகளும் தோன்றி உள்ளன என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது.
'ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திரம்
பகவான் விஷ்ணுவைச் சரணடையவும், மோக்ஷத்தை அடையவும் வழிவகுக்கும் உன்னத மந்திரம் என்று புராணங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. நர நாராயணர் என்பவர்கள் பகவான் விஷ்ணு எடுத்த இரட்டை அவதாரம்.
நரன் என்பது மனிதத் தன்மையையும், நாராயணா என்பது தெய்வத் தன்மையையும் விளக்குவது.
'நர நாராயணன்’
என்பது மனிதனும் தெய்வமும் இணைந்த சக்தியைக் குறிப்பிடுவதாகும். நாராயணன் என்கிற தெய்வத்திடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத மனித சக்தியைக் குறிப்பதே நரநாராயண அவதாரம். தெய்வீக உணர்வோடு, இறைவனை அறிந்து பூரண ஞானம் பெற்ற மனிதன் தான் நரர்களில் நாராயணன். தன்னலம் இல்லாமல் மனித
நேயத்துடன் வாழ்ந்து தர்மத்தைக் காக்கின்றவனே நரநாராயணன். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் #பகவத்கீதையில், “சாதுக்களை ரக்ஷித்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தை ஸ்தாபிக்க நான் எல்லா யுகங்களிலும் அவதரிப்பேன்”என்று கூறுகிறார். அதற்காக அவர் மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம,
கிருஷ்ண, கல்கி ஆகிய பத்து அவதாரங்கள் எடுத்துள்ளார். இந்த தசாவதாரத்தைத் தவிர, பகவான் விஷ்ணு எடுத்த அம்ஸாவதாரங்கள் பற்றியும் நமது புராணங்கள் குறிப்பிடுகின்றன. வேதங்களைக் காக்க குதிரை முகத்தோடு தோன்றிய ஹயக்ரீவ அவதாரம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் வடிவிலே எடுத்த
தத்தாத்ரேய அவதாரம், உலகை நோயிலிருந்து காப்பாற்றி ஆரோக்கியத்தை அருளுவதற்காக எடுத்த தனவந்திரி அவதாரம்
ஆகியவற்றைத் தொடர்ந்து எடுத்த அம்ஸாவதாரம்தான் நர நாராயண அவதாரம். விஷ்ணு புராணத்திலும் சிவபுராணத்திலும், வாமன புராணத்திலும், ராமாயண- மகாபாரத காவியத்திலும் இந்த நரநாராயண அவதாரத்தின்
பெருமை விளக்கப்படுகிறது. சிருஷ்டி காலத்தில் பிரம்மதேவன் தனது மார்பிலிருந்து தர்ம தேவனை சிருஷ்டித்தான். தர்மங்களையும் நியாயங்களையும் காப்பாற்றும் பொறுப்பு அந்தத் தேவனுக்குத் தரப்பட்டது. தர்மதேவன் தட்சப்பிரஜாபதியின் 10 புத்திரிகளை மணந்து, அற்புதமான புதல்வர்களைப் பெற்றான். அவர்களில்
ஹரி, கிருஷ்ணா, நரன், நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஹரியும் கிருஷ்ணனும் பிரம்மஞானம் பெற்ற யோகிகளாகி, உலகம் உய்ய தவம் இயற்றலாயினர். நர நாராயணர்கள் முற்றும் துறந்த முனிவர்களாகி, இமயத்தில் அமைந்த பத்ரிகாஸ்ரமத்தில் தவம் மேற்கொண்டனர். பத்ரிகாஸ்ரம் என்பதே இன்றைய #பத்ரிநாத்
ஷேத்திரம். மனித இனத்துக்கு அமைதியும் சாந்தியும் ஏற்பட பன்னெடுங்காலம் நர நாராயணர்கள் இங்கே தவம் செய்தனர். அவர்களின் தவவலிமை எல்லா உலகங்களிலும் பிரதிபலித்தது. தேவர்களின் தலைவனான தேவேந்திரனை இது பாதித்தது. தனது இந்திர பதவியை அடைய யாரோ அசுரர்கள் கோர தவம் செய்வதாக அவன் எண்ணினான். தனது
பதவியையும் தேவலோகத்தையும் காப்பாற்ற நினைத்த தேவந்திரன், நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான். முதலில் தேவேந்திரன் காமதேவனை அனுப்பி, நர நாராயணர்கள் மனத்தில் ஆசையை உருவாக்க முயற்சித்தான்.
காமதேவனுக்குத் துணையாக சில அப்ஸர கன்னிகளையும் அனுப்பினான். ஆனால், நர நாராயணர்களை
எந்த விதத்திலும் அவர்களால் அணுக முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட தருணத்தில், தவத்திலிருந்த நாராயணர் தனது துடையைக் கையால் ஓங்கி அடித்தார். அதிலிருந்து சௌந்தர்யமும் தேஜஸும் மிக்க ஓர் அப்ஸரப் பெண் தேவதை தோன்றினாள். அவளது அழகிய தோற்றத்தைக் கண்டு இந்திரனும், காமனும், மற்ற தேவதேவியர்களும்
திகைத்து நின்றனர். துடையிலிருந்து தோன்றிய அந்தத் தேவதைக்கு 'ஊர்வசி’ என்று பெயரிட்டு அழைத்தார் நாராயணர். 'ஊரு’ என்றால் துடை என்று பொருள். தங்கள் தவத்தின் நோக்கத்தை நர நாராயணர்கள் தேவேந்திரனிடம் எடுத்துக்கூற, அவன் தன் தவறுக்கு வருந்தி, அவர்களின் ஆசி கோரினான். அப்போது கலைத் திறமை
அனைத்தும் கொண்ட ஊர்வசியை தேவேந்திரனிடம் ஒப்படைத்தார் நாராயணன். அவள் தேவலோகத்தின் இசை நடனக் கலைஞராகி, தேவர்களுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தாள். நர நாராயணர்களை வணங்கிய தேவேந்திரன், தேவ லோகத்திலிருந்த அமிர்த கலசத்தை அவர்களிடம் ஒப்படைத்து, பாதுகாப்பாக வைத்திருந்து, தேவர்களும்
தர்மவான்களும் அதனால் பயனடைய வழிசெய்யுமாறு வேண்டினான். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு, தேவர்களை ஆசீர்வதித்துத் தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். பிறகு, மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அது, நர நாராயணர்களை சிவபெருமானோடு இணைத்த சம்பவம். சிவபெருமானை ஒதுக்கி வைத்து விட்டு தட்சன் பெரும் யாகத்தை
தொடங்கினார். சிவபெருமானின் பத்தினியும், தட்சனின் மகளுமான தாட்சாயினி அந்த யாகத்துக்குச் சென்று, தன் தந்தை செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி வாதிட்டாள். கோபம் அடைந்த தட்சன், மகளென்றும் பாராமல் அவளை நிந்தித்தான்.
தாட்சாயினி 'தட்ச யாகம் அழியட்டும்’ என்று சாபமிட்டு, யாகசாலையில் பிராணத்
தியாகம் செய்தாள். இதனால் கோபமடைந்த சிவபெருமான், வீரபத்திரர் வடிவில் தோன்றி யாக சாலையை அழித்தார். அப்போது அவர் கையிலிருந்து புறப்பட்ட திரிசூலம் தீயைக் கக்கிக்கொண்டு விண்ணில் கிளம்பியது. நேராக அது பத்ரிகாஸ்ரமம் அடைந்து, அங்கே ஆழ்ந்த தவத்திலிருந்த நாராயணர் மார்பில் தாக்கியது. ஆனால்,
நர நாராயணர்களைச் சுற்றியிருந்த தவ மண்டலத்தின் சக்தியால் திரிசூலம் திசை திரும்பி சிவபெருமானையே தாக்கியது. அப்போது சிவபெருமான் தலை முடிக்கற்றை திரிசூலத்தின் வெப்பத்தால் கருகியது. அதனால், அது காய்ந்த வைக்கோல் போல ஆனது.
இதனால் சிவனுக்கு 'முஞ்சகேசன்’ என்ற பெயர்ஏற்பட்டது. 'முஞ்ச’
என்றால் காய்ந்த புல் என்று பொருள்.
தேவர்கள் அனைவரும் சிவபெருமானை அமைதியாக இருக்கும்படி வேண்டினர்.
அப்போது சிவபெருமான், ''நர நாராயணர்களின் தவவலிமையை உலகுக்கு எடுத்துக்காட்டவே நான் இந்தத் திருவிளையாடல் புரிந்தேன்.
நர நாராயணர்களின் தவம் என்னைச் சாந்தப் படுத்திவிட்டது. #பத்ரிகாஸ்ரமம்
அருகிலேயே நானும் அமர்ந்து, என் பக்தர்களுக்கு அருள்பாலிப்பேன். நான் அமர்ந்த இடம் #கேதார்நாத் என்று பெயர் பெறும். பத்ரிகாஸ்ரமத்தில் எனது திரிசூலம் விழுந்த இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றி, காலம் காலமாக இங்கு வரும் பக்தர்களின் நோய் தீர்க்கும் தீர்த்தமாகச் செயல்படும். தேவர்களும்
மனிதர்களும் வழிபடும் விஷ்ணு- சிவ ஸ்தலங்களாக பத்ரிநாத்தும் கேதார்நாத்தும் திகழும்” என்று கூறி அருளினார். நர நாராயணர்களின் தவம் தொடர்ந்தது. இந்த நர நாராயணர்களே துவாபர யுகத்தில் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றினார்கள் என்கிற விவரம் மகாபாரதத்தில் உள்ளது. மகாபாரத காலத்தில், சிவ
பெருமான் கிராடன் என்ற வேடன் வடிவில் தோன்றி அர்ஜுனனின் பலத்தைப் பரீட்சை செய்வதற்காக அவனுடன் யுத்தம் செய்த வரலாறும், அதன்பின் அவனுக்குப் பாசுபதாஸ்திரம் தந்து அருளிய வரலாறும், நரனுக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. பிரிக்க முடியாத ஜீவாத்மா, பரமாத்மாவின் பிரதிபிம்பமே நர
நாராயணர்கள். தூய தவத்தாலும், தார்மிக நெறியாலும் மனிதன் தெய்வமாகலாம் என்பதே நர நாராயண தத்துவம்.
ஓம் நமோ நாராயணாய!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.