பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை!

தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய நீர் சமூகம் ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை!
பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை!

அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்!
ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக்கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்றுநீரை எப்படி பங்கிட்டுக்கொடுக்க வேண்டும்? என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்தவர்கள் இவர்கள். இந்த நீர் சமூகத்தின் அந்த பிரிவினருக்கு #நீராணிக்கர்கள் என பெயர்!
ஆற்று நீரை நீர்நிலைகளுக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு இவர்களுடையது!

நீரைக் கொண்டு வந்து சேர்த்தால் கடமை முடிந்ததா? அந்த நீரை கட்டிவைத்து காக்க வேண்டுமல்லவா அவர்களுக்கு #நீர்க்கட்டியார் என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பு கொண்டவர்கள்!
ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள காலங்களில் ஏரி நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற ஏரிக்குள் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் #நீர்க்கட்டியார் அனுமதி வேண்டும்!
ஒரு ஏரியின் உயிர் அதன் கரையில் தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, தன்னை நம்பி வாழ்ந்த மக்களையும் அழித்துவிடும்!

அதனால்தான் ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது அப்படிப்பட்ட கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும்!
அந்த வேலையைப் பார்ப்பவர்களுக்கு #கரையார் என்று பெயர். இவர்கள்தான் ஏரிகரைக்கு முழுப்பொறுப்பு!

என்னதான் கரையை வலுப்படுத்தினாலும் எதிரிகளால் எப்போதும் ஏரிகளுக்கு ஆபத்து இருந்து கொண்டேதான் இருந்தது. ஒரு ஏரியை உடைத்தால் சுலபமாக ஒரு நாட்டின் பொருளாதரத்தை ஆட்டம் காண வைத்துவிட முடியும்
ஏரிகளை உடைப்பது மிகப் பெரிய பாவம் என்று சங்ககால பாடல்கள் சொன்னாலும் இதை மதிக்காத ஒன்றிரண்டு மன்னர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நேர்மையான முறையில் போரிட்டு வெல்லமுடியாத எதிரிகள் இப்படி நீர்நிலைகளை அழித்தொழிப்பதும் உண்டு!
அந்த ஏரியை பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்களே #குளத்துக்காப்பாளர்கள்!

இவர்கள் ஏரிக்குள் அத்துமீறி நுழைபவர்களையும் விரட்டியடித்தனர்.

ஒரு ஏரி என்பது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஆடு மாடுகள் விழுந்து இறந்து போவதும், சில சமயம் மனிதர்கள் இறந்து போவதும் நடப்பதுண்டு!
அப்படி விழுந்து மாண்டவற்றை அப்புறப்படுத்த ஏரியில் தேவையின்றி வளரும் தாவரங்கள், பாசிகள் போன்றவற்றை அழித்து ஏரியை தூய்மைப் படுத்த ஏற்படுத்தப் பட்டவர்கள்தான் #குளத்துப்பள்ளர்கள்’. இவர்கள்தான் ஏரியின் சுத்தத்துக்கு பொறுப்பு!
ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் மூலம் வயல்களின் வாசல் வரை கொண்டு வந்த சேர்க்கும் பொறுப்பு #நீர்வெட்டியார் / #நீர்பாச்சி என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது!

இவர்கள் தான் வயல்களுக்கான நீரை கண்காணிப்பவர்கள்!
பாசனத்திற்காகவும் வெள்ளத்தின் போதும் நீரை திறந்து விடுவதற்காக ஏரிக்கரைகளில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருந்தன!

இந்த மடைகளை திறந்து மூடுவதற்கு ஒரு பிரிவினர் இருந்தனர் அவர்களுக்கு #மடையர்கள் என்று பெயர்!
ஏரிகளின் கரைதான் ஒரு ஏரியின் உயிர். அக்கரைகளை எப்போதும் வலுவாக அமைக்கவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்தவர்கள் தமிழர்கள். அக்கரைகளை அமைப்பதிலும் தமிழர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள். உலகம் முழுவதுமே ஏரிகளை அமைக்கும்போது முதலில் களிமண்ணால் ஆனா உட்புறச்சுவர் ஒன்றை அமைப்பார்கள்
இதுதான் ஏரி நீரை கசியவிடாமல் தடுக்கும். இந்த சுவரை அமைத்தப் பின் அதன்மீது மற்ற மண்ணை இரண்டு பக்கமும் சேர்த்து கரையை மேலும் வலுவாக்குவார்கள். களிமண் சுவர் இல்லாமல் எரிக்கரைகளை அமைக்க முடியாது என்பது மேலை நாட்டினரின் கணிப்பு!
ஆனால், தமிழர்கள் வடிவமைத்த ஏரிக்கரைகள் பலவற்றில் களிமண் பயன்படுத்தப்படவில்லை. அருகில் கிடைக்கும் மண்ணைக் கொண்டே ஏரிக்கரையை அமைத்திருக்கிறார்கள். மண்ணோடு மண்ணை இறுக்கும் பசைப் போன்ற ஒன்றை பயன்படுத்தி இந்த சுவர்களை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சொட்டு நீர் கசிவதில்லை!
சமீபத்தில் வீராணம் ஏரியில் புதிதாக ஒரு மதகை அமைப்பதற்காக ஏரிக்கரையை கொஞ்சம் உடைக்க வேண்டியிருந்தது. இன்றைய நவீன இயந்திரங்களை கொண்டு கூட அந்தக் கரையை உடைக்க முடியவில்லை. பாறைப் போன்று கரை இறுகியிருந்தது!
களிமண் இல்லாமல் கரை அமைக்க எப்படி முடியும்? என்று அகலத் திறந்த கண்களை வெளிநாட்டினர் இன்னமும் மூடவில்லை!

இன்னுமொரு வியக்க வைக்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் இருந்தது. அது ஏரியின் தரைப் பகுதியில் சேரும் சகதியை வெளியேற்றுவது!
ஏரிக்கு வரும் நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறு சகதியையும் சேர்த்தே கொண்டு வந்துவிடும். இவைகள் அதிகம் சேர்ந்தால் ஏரி தூர்ந்து போய்விடும். மதகுகள் அடைத்துக் கொள்ளும். அதனால் இவற்றை ஏரியில் சேரவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்!
இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள் நம்மவர்கள். அதற்குப் பெயர் #குமிழி!

இதுவும் ஏரி நீரை வெளியேற்றும் ஒரு அமைப்புதான். இது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைத்திருப்பார்கள்!
ஒரு மதகுக்கு ஒன்று என்ற அடிப்படையில் #குமிழி இருக்கும்.

இந்த குமிழி பெரிய தொட்டிப் போன்ற அமைப்பில் இயங்கும். பெரிய நகரங்களில் சாலைகளைக் கடக்க நாம் பயன்படுத்தும் சுரங்கப்பாதை போல் இருக்கும். இதன் நுழைவு வாயில் ஏரிக்குள்ளும் வெளிவாயில் ஏரிக்கு வெளியே பாசனக் கால்வாயிலும் இருக்கும்!
ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போது இந்த குமிழியை திறந்து விடுவார்கள்.

சேறோடித்துளை மூலம் தரையில் இருக்கும் வண்டல் மண்ணையும் சேற்றையும் இந்த முறையில் சுத்தமாக வெளியேற்ற முடியும். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும்!
வண்டல் மண் பயிர்களுக்கு நல்ல உரம் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. இதனால் ஏரியின் தளத்தில் சகதி சேருவது வெளியேற்றப்பட்டது. இது தமிழர்கள் பயன்படுத்திய அற்புதமான தூர்வாரும் தொழிநுட்பம்!
ஆனால், பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஆங்கிலயர்கள் அதன் அருமை தெரியாமல் அவர்களது ஆட்சிகாலத்தில் குமிழி தேவையற்ற ஒன்று என்று நிறைய ஏரிகளில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதன்பின் ஏரியில் வண்டல் மண்ணும் சேறும் சேரத்தொடங்கின. மதகுகள் சகதியால் அடைத்துக் கொள்ளத் தொடங்கின!
ஏரிகளின் மரணத்திற்கு முதல் அச்சாரம் இது. இதோடு ஆங்கிலேயர்களின் நீர்நிலையை பாழ்படுத்தும் கடமை முடிந்துவிட வில்லை. இன்னும் நிறைய இருக்கிறது.

ஏரிகளின் கரையில் காலாற நடந்து போனால் மடத்து கருப்பன், மட இருளன், மட முனியன் என்ற காவல் தெய்வங்களை பார்க்கலாம்.
இந்த தெய்வங்களை எப்போதும் ஏரியின் மடைகளுக்கு அருகிலேயே அமைத்திருப்பார்கள். அந்த தெய்வங்களின் பூர்விகத்தைக் கேட்டால் அது அந்த ஏரிக்காக உயிர்விட்ட ஒருவரின் நடுகல்லாக இருக்கும். அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்!
விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கு ஏரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்ற அளவை துல்லியமாக வைத்திருந்தார்கள் தமிழர்கள்!

அதற்கேற்ப மதகுகளை ஏரிகளில் அமைத்திருந்தனர். அவர்களின் நீர் மேலாண்மை வியக்கவைக்கிறது!
ஏரிகளை அவர்கள் ஏனோதானோவென்று உருவாக்கிவிடவில்லை. பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம் இவற்றைக் கொண்டு ஏரியின் கொள்ளளவை நிர்ணயித்தார்கள். அதற்கு ஏற்ப மதகுகளை அமைப்பார்கள்!
இந்த மதகுகளில் இருந்து எவ்வளவு நீர் வெளிவரும், எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும் என்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுதான் ஒரு ஏரியை வடிவைப்பார்கள்!
இப்படி துல்லியமாக அமைக்கப்பட்ட ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீரை வயல்களுக்கு அனுப்பும் வேலையை #மடையர்கள் பிரிவினர் பார்த்து வந்தார்கள். ஒரு நாழிகை நேரம் மதகுகளை குறிப்பிட்ட அளவு திறந்து வைத்திருந்தால் நீர் இவ்வளவு ஆயக்கட்டுக்கு பாய்ந்திருக்கும் என கணக்கீடுகளை தெரிந்திருந்தார்கள்!
ஏரியிலிருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் மூலம் வயல்கள் வரை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை ‘நீர் பாச்சி’ என்பவர்கள் செய்து வந்தனர் என்பதை முன்னரே பார்த்திருந்தோம்!

இவர்களுக்கடுத்து ஒவ்வொரு வயல்களுக்கும் தேவையான நீரை பாய்ச்சுவதற்காக #குமுழிப்பள்ளர்கள் இருந்தார்கள்!
இவர்கள் இப்படி பாயும் நீரை அளவிடுவதற்காக ‘முறைப் பானை’ என்ற ஒன்றை வைத்திருந்தார்கள்!

இந்த முறைப் பானையை செம்பு அல்லது தாமிரம் கொண்டு செய்திருப்பார்கள். இது 10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவில் இருக்கும். இந்தப் பானையின் அடிப்பாகத்தில் ஒரு சிறு துளையிடுவார்கள்.
இப்படி துளையிடும் ஊசி எந்த அளவு இருக்க வேண்டும் என்பது கூட சங்க கால பாடல்களில் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது.நீர் பாய்ச்ச இருக்கும் வயல்களுக்கு அருகே மூன்று கற்களைப் பரப்பி அதன் மீது இந்த பானையை வைத்து விடுவார்கள். பானை முழுவதும் நீர் நிரப்பிவிடுவார்கள்!
அதே நேரத்தில் அந்த வயலுக்கான நீரையும் வாய்க்காலில் இருந்து பாய்ச்சத் தொடங்குவார்கள். துளையிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும். பானை நீர் முழுவதும் வடிந்து விட்டால் ஒரு ஏக்கர் நெல் வயலுக்கும் நீர் பாய்ந்து விட்டதாக அர்த்தம். எப்படியொரு நுட்பம் பாருங்கள்...!
நீரைப்பகிர்ந்து எல்லா வயல்களுக்கும் சமமாக கொடுப்பதில் குமுழிப்பள்ளர்களை அடித்துக் கொள்ள முடியாது!

நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதகுகள் வழியாக நாம் நீரை வேண்டிய அளவு வெளியேற்ற முடியும். நீரைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் மடை என்பது அப்படியல்ல
அதை திறந்துவிட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்த முடியாது!

அதனால் தான் #மடை ஏரியின் உயிர்நாடி என்றார்கள். இந்த மடைகளை பராமரிப்பவர்களுக்கு #மடையர்கள் என்று பெயர் இருந்தது!
மழைநீர் பெருக்கெடுத்து ஏரி முழுவதும் நீர் நிறைந்திருக்கும் போது கரைகள் உடையக்கூடிய அபாயம் இருப்பதால், ஏரி நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும். மதகுகள் வழியாக ஆர்ப்பரிக்கும் அவ்வளவு நீரையும் வெளியேற்ற முடியாது. அப்போது மடையை திறந்து விடவேண்டும்.
மடையை திறப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. உயிரை பணையம் வைக்கும் செயல் அது.

இந்த இக்கட்டான நிலையில் தலைமைக் கிராமம் ஏரியின் நிலைமைப் பற்றி முடிவெடுக்கும்!

ஒரு ஏரி கிட்டத்தட்ட 50 கிராமங்களுக்கு மேல் நீர்பாசனத்தை வழங்கும்!
வெள்ளம் வரும் நேரங்களில் ஏரி உடையக்கூடிய வாய்ப்பிருப்பதால். முதலில் இந்த கிராமங்களில் #தண்டோரா மூலம் அபாய எச்சரிக்கை கொடுத்து மக்கள் அனைவரும் கிராமங்களை விட்டு வெளியேற்றிவிடுவார்கள்!

அப்போது ஒரேயொரு மனிதருக்கு மட்டும் மாலை மரியாதையோடு பிரிவு உபச்சாரம் நடைபெறும்.
அவர்தான் அந்த ஏரியின் மடை பராமரிப்பாளர். #மடையன் என்று அழைக்கப்படுபவர்!

தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒரு ராணுவ வீரனின் தியாகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல இவர் செய்யும் தியாகமும்!

மனைவியும் பிள்ளைகளும் திலகமிட்டு வழியனுப்புவார்கள். அது இறுதிப் பயணம் போன்றதுதான்!
ஒரு ஈ, காக்காய் கூட இல்லாத அந்த வெற்று ஊரில் இந்த ஒரு மனிதர் மட்டும் தன்னந்தனியாக ஏரியை நோக்கிப் போவார்!

ஏரியில் தழும்பி நிற்கும் நீரைப் பார்க்கும்போதே மூச்சு முட்டும். அப்படிப்பட்ட அந்த ஏரிக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையை திறப்பது சாதாரண காரியமல்ல!
ஏரியின் பிரமாண்டம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்!

#பூண்டி ஏரியின் உயரம் 35 அடி, சென்னையை அன்று திணறடித்த #செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி உயரம்.

இவ்வளவு உயரம் கொண்ட ஏரியின் அடி ஆழத்திற்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் ஆளாக செல்வது எத்தனை சிரமம்!
எவ்வளவு மூச்சை #தம் கட்ட வேண்டும். அதோடு சென்று மடையை திறக்கும்போது நீரின் அழுத்தத்திலிருந்து மீண்டு வருவது மறுஜென்மம் எடுப்பது போல்!

மடையை திறக்கும்போதே ஆக்ரோஷத்தோடு வெளியேறும் நீர் மடை திறப்பவரை கொன்று விடுவதும் உண்டு!
இப்படி மடையை திறக்கப் போனவர்களில் உயிரோடு பிழைத்து வந்தவர்களும் உண்டு. உயிரை தியாகம் செய்தவர்களும் உண்டு.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கிராமத்தின் சார்பாக நிலம் கொடுக்கப்படும். அவருக்காக #நடுகல் நட்டு வைப்பார்கள்!
50, 60 கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காத்ததால் அவர் அந்த கிராம மக்களின் காவல் தெய்வமாக மாறுவார்!

#மடையர் என்றும் மகத்தானவர்களே. அவர்களை அப்படி அழைத்ததே தவறு!
"ஏரிகள் - குளங்கள் குடி மராமத்து"

ஒரு ஏரி எப்படி அமைய வேண்டும். ஏரியை வடிவமைக்கும் போது ஒரு மன்னன் என்னென்ன அம்சங்களை பார்க்க வேண்டும் என்ற விவரங்களை எல்லாம் சங்க கால பாடல்கள் ஏராளமாய் சொல்கின்றன!

எட்டாம் நாள் பிறை வடிவில் ஏரியை அமைத்தால் ஏரியின் கரை நீளம் குறைவாக அமைக்கலாம்!
அதே வேளையில் இந்த வடிவமைப்பில் நீரின் கொள்ளளவும் அதிகம் என்று கூறுகிறார் #கபிலர். எத்தகைய ஞானம் அன்றைய புலவர்களுக்கு இருந்திருக்கிறது!

ஒரு அரசன் ஏரியை அமைக்கும் போது அதில் ஐந்து விதமான அம்சங்கள் இருக்கும்படி அமைக்க வேண்டும்!
அப்படி ஒரு நீர் நிலையை அரசன் உருவாக்கினால் அவனுக்கு சொர்க்கத்தில் ஓர் இடம் காத்திருக்கும் என்கின்றன பாடல்களும், கல்வெட்டும்!

அந்த ஐந்து அம்சங்களை பொதுவாக நமது எல்லா ஏரிகளிலும் குளங்களிலும் பார்க்க முடியும். அப்படிதான் அதனை அமைத்திருக்கிறார்கள்!
சொர்க்கத்தில் ஓர் இடம் பிடிப்பதில் அன்றைய மன்னர்கள் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள்!

‘குளம் வெட்டுதல்’ என்பது முதல் அம்சம். அதில் ‘கலிங்கு அமைத்தல்’ 2வது அம்சம், எரிக்கான நீரை கொண்டு வரும் ‘வரத்துக்கால்’, மதகுகளின் அமைப்பு, அதிகமான நீரை வெளியேற்றும் ‘வாய்க்கால்’ அமைப்பு போன்ற 1/2
அனைத்தும் 3வது அம்சம். ‘ஆயக்கட்டு’ பகுதிகளை உருவாக்குதல் 4வது அம்சம். ஊருக்கான ‘பொதுக்கிணறு’ அமைத்தல் 5வது அம்சம்.

பழமையான கிராமங்களில் இந்த எல்லா அம்சங்களுமே இருக்கும். இதில் #பொதுக்கிணறு எதற்கென்றால் எப்படிப்பட்ட ஏரிகளும் கடுமையான வறட்சி காலத்தில் வற்றிப் போய்விடும்! 2/2
ஏரியில் குறைவாக இருக்கும் நீரை மதகுகள் வழியாக வயல்களுக்கு பாய்ச்சினால் நிறைய நீர் இழப்பு ஏற்படும். அத்தகைய காலங்களில் கிணற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்துவது புத்திசாலித்தனம். அதைதான் அவர்களும் செய்தார்கள்!
மேலும் கால்நடைகளுக்கும் சலவை தொழில் செய்பவர்களுக்கும் வருடம் முழுவதும் அதிக நீர் வேண்டும்!

இதற்காகவே ஏரியின் மையப்பகுதியில் ஆழமாக எப்போதும் தண்ணீர் இருப்பது போன்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தார்கள்!
சலவைத் தொழிலாளிகள் எப்போதும் அவர்கள் பணி நிமித்தமாக எரிகளிலேயே தொடர்ந்து இருப்பதால் ஏரியை காவல் காக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்திருந்தனர்!

நீர் சமூகத்தில் எந்தெந்த பிரிவுக்கு என்னென்ன வேலை பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அவர்கள் செய்தே ஆக வேண்டும்!
அதில் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை இருந்தது. அதானால் நீர் மேலாண்மையும் நீர் பகிர்தலும் எந்தவித தொய்வும் இல்லாமல் வெகு சிறப்பாக நடந்தது!

சரி, பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு, ஏன் சலவைக்குக் கூட நீர் கொடுத்தாகிவிட்டது!
அப்படியென்றால் ஊர்களில் கிராமங்களில் பெரிய நகரங்களில் வாழும் மக்களுக்கு நீர்..?

விட்டுவிடுவார்களா..!?

வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடிய மாந்தர்கள் அல்லவா அவர்கள் மனிதர்களை வாட விட்டுவிடுவார்களா..?!
பிரமாண்டமான கோட்டைகள், அரண்மனைகள் கட்டும் போது கூடவே மழைநீரை சேமித்து வைக்கும் அகழியையும் அமைத்தார்கள்!

இதை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அரணாகவும் மாற்றிக் கொண்டார்கள்!
இதைப்போலவே பெரிய கோயில்களை கட்டும்போது அதில் விழும் மழைநீரை கோயிலுக்கான தெப்பக்குளங்களில் சேரும் விதமாக அமைத்தார்கள்!

இதுபோக குடிநீருக்கென்று குளங்கள், மற்ற நீர் தேவைகளுக்கு தனிக் குளங்கள் என்று ஊருக்குள்ளும் நிறைய நீர் சேமிப்பு மையங்களை அமைத்தார்கள்!
இதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

கோடையில் இந்தக் குளங்களும் சில சமயங்களில் வற்றிப் போகும். வருடம் முழுவதும் நிலத்தடி நீர் நல்ல நிலையில் சேமிக்கப்படுவதால் சில நாட்களுக்கு மட்டும் கிணற்று நீரை பயன்படுத்திக் கொள்வார்கள்!
இந்த குளங்களை எல்லாம் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டது. இதற்கு #குடிமராமத்து எனப் பெயர். அதாவது குடிமக்கள் தாங்களாகவே குளங்களை பாதுகாத்து பரமாரித்துக்கொள்ளும் முறை. வாரத்தில் ஒருநாள் வீட்டுக்கொருவர் என்ற கணக்கில் ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து குளங்களை சுத்தப்படுத்துவார்கள்!
இதனால் குளங்கள் தூய்மையாகவும் உயிர்ப்போடும் இருந்தன...!

இப்படி ஊர் மக்களையும் உணவளிக்கும் விவசாயத்தையும் நீர் மேலாண்மையால் கட்டிப்போட்ட தமிழர்கள் எப்படி தமிழ்நாட்டை வறட்சி காடாக மாற்றினார்கள்..?
பிரமிக்கவைக்கும் சங்கிலித் தொடர் ஏரிகள்!

“கடைசி ஏரிதான் முதலில் நிறையும். முதல் ஏரி கடைசியாக நிறையும்.”

அப்படியொரு தொழில்நுட்பத்தில் அமைந்ததுதான் சங்கிலித் தொடர் ஏரிகள்.

ஒரு மொழியின் செழுமை என்பது அதன் சொற்களில் இருக்கிறது. தமிழ் சொற்களுக்கு பஞ்சம் இல்லாத ஒரு மொழி!
மனிதன் உருவாக்கிய நீர்நிலை கட்டுமானங்களுக்கு அவன் ஏகப்பட்ட பெயர் வைத்திருக்கிறான்!

இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய்...

அப்பாடி..! சொல்லிமுடிக்கவே மூச்சு முட்டுகிறது...!
இத்தனை பெயர்களையும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து அந்தந்த நீர்நிலைகளுக்கு வைத்திருந்தார்கள்!

இயற்கையான நீர் ஊற்றுகள் உள்ள இடங்களில் அமைந்த நீர்நிலைகளுக்கு #பொய்கை, #ஊற்று என்று பெயர்.

தானாகவே நீர் கசிந்து சிறிய அளவில் தோன்றும் நீர் நிலைகளுக்கு #சுனை, #கயம் என்று பெயர்!
#ஊற்றுகள் எதுவும் இல்லாமல் #மழைநீர் மட்டும் தேங்கி இருக்கும் சிறு நீர் தேக்கத்திற்கு #குட்டை என்று பெயர்!

இன்றைக்கு இந்த சொல் #சாக்கடை நீர் தேங்கும் இடத்தை குறிப்பதாக மாறிவிட்டது!

மக்கள் குளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளுக்கு #குளம் என்று பெயர்!
அழுக்கு போகக்குளிப்பது இன்றைய வழக்கம். ஆனால் அன்றைய குளித்தலின் அர்த்தம் வேறு!

பகல் முழுதும் வயலில்வெயிலில் வேலைசெய்து வெப்பமான உடலை குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையே குளிர்த்தல். இதுவே காலப்போக்கில் குளி(ர்)த்தல் என்று மாறியது. குளங்கள் மனிதர்களின் உடலை குளிர்வித்தன!
குடிப்பதற்கும் சமைப்பதற்கும் என்ற உணவுத் தேவைகளுக்கு பயன்படும் நீர் நிலைகளை #ஊருணி (ஊண் - உணவு, ஊருணி - தண்ணீர்) என்று அழைத்தார்கள். இத்தகைய நீர் நிலைகளை அமைப்பதற்கு நிலத்தின் தன்மை ஆராய்வார்கள்!

நிலத்தின் உவர்ப்பு தன்மை நீரில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்!
சில ஊர்களில் நல்ல நிலத்தைக் கண்டறிவது சிரமம். அப்போது இருப்பதிலேயே உவர்ப்பு தன்மை குறைந்த நிலத்தில் #ஊரணி அமைப்பார்கள்!

நிலத்தால் மாறுபடும் நீரின் சுவையை இனிமையாக்க ஊரணிக் கரைகளில் #நெல்லி மரங்களை நட்டுவைத்தார்கள்!
அது நீரின் சுவையை கூட்டும் அதே வேளையில் கிருமிகளையும் கொல்லும் மருந்தாகவும் பயன்பட்டன. #ஊரணி அமைப்பதற்கும் வரைமுறைகள் நிறைய உண்டு!

"ஏர் உழுதல்" தொழில்களுக்கு நீர் தரும் நீர்நிலைகளுக்கு #ஏரி என்று பெயர் வைத்தார்கள்!
வெறும் மழைநீரை மட்டுமே ஏந்தி தன்னுள் சேர்த்து வைத்துக் கொள்ளும் நீர் நிலைகளுக்கு #ஏந்தல் என்று பெயர். இதில் நதியின் நீர் சேர்வதில்லை!

நதியின் நீரை கால்வாய் மூலம் கொண்டு வந்து சேர்த்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட நீர் நிலைகளுக்கு #கண்மாய் என்று பெயர்!
இந்தப் பெயர்களை வைத்தே அந்த நீர் நிலைகளின் தன்மையை அறிந்து கொள்ள முடியும்!

மழை எப்படி பொழிகிறது? என்று உலகம் அறியாத காலத்திலேயே அதைப் பற்றி பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் #தமிழர்கள்!
மாவீரர் அலெக்ஸாண்டரின் ஆசிரியர் #அரிஸ்டாட்டில் கூட கிமு 4-ம் நூற்றாண்டில் ‘குளிர்ச்சியான காலத்தில் காற்று உறைந்து மழைப் பொழிகிறது’ என்று மழைக்கு விளக்கம் கொடுத்தார்!
மற்றொரு கிரேக்க அறிஞரான #தேல்ஸ் ‘கடலின் அடித்தளத்தில் நீர் உற்பத்தியாகிறது. அந்த கடல் நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு மலையின் உச்சிக்கு சென்று அங்கிருந்து ஆறாக வெளிப்படுகிறது’ என்றார்.

எப்படிப்பட்ட அறிஞர்கள் அவர்கள் அவர்களே அவ்வளவு அறியாமையில் இருந்திருக்கிறார்கள்!
ஆனால், அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த புலவர் "கடியலூர் உருத்திரங்கண்ணனார்" தனது #பட்டினப்பாலை நூலில் #பூம்புகார் துறைமுகத்தின் பெருமை பாடுகிறார்.

அதாவது, "ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது. மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடி கடலில் கலக்கிறது!"
"அதுபோன்று புகார்த் துறையில் ஒரு பக்கம் கப்பல்களில் இருந்து பல பண்டங்கள் வரிசையாக நிலத்துக்கு இறக்கப்படுகின்றன. மறுபக்கம் நிலத்திலிருந்து பல பண்டங்கள் வரிசையாக கப்பலுக்கு ஏற்றப்படுகின்றன." என்கிறார்.

அன்றே மழை எப்படி உருவாகிறது? எப்படி பொழிகிறது? என்ற ஞானத்தை பெற்றிருந்தார்கள்!
நாம் எத்தகைய மேன்மையான அறிவைப் பெற்றிருந்தோம் என்பதற்கு இதுவொரு சின்ன உதாரணம்!

தமிழகத்திற்கு பெரும் மழையை கொண்டுவந்து சேர்க்கும் தமிழர்கள் வடகிழக்குப் பருவமழையைப் பற்றியும் கணித்து வைத்திருந்தார்கள்!

இதுவொரு கொடூரமான பருவமழை இதன் போக்கை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளமுடியாது.
நினைத்தால் மேகமே வெடித்தது போல் கொட்டித் தீர்த்துவிடும். ஊரெல்லாம் வெள்ளக்காடாக மாற்றிவிடும். இல்லையென்றால் ஒரு சொட்டு நீர் கூட கீழே விழாமல் பெரும் வறட்சியை தந்துவிடும்!

அப்படிப்பட்ட இந்த காட்டுத்தனமான பருவமழையை தங்களின் நீர் மேலாண்மையால் கட்டிப்போட்டு வைத்தார்கள்!
அதற்காக அவர்கள் உருவாக்கியது தான் "#சங்கிலித்_தொடர்_ஏரிகள்"!

வருடத்தில் மூன்று மாதங்கள் பெய்யும் மழையை தேக்கி வைத்து வருடம் முழுவதும் விவசாயம் செய்யும் தொழில்நுட்பம் தான் சங்கிலித் தொடர் ஏரிகள்!

இந்த ஏரிகள் சங்கிலித் தொடர் போல் ஒன்றன்பின் ஒன்றாக அமைத்திருப்பார்கள்!
முதல் ஏரியில் பாதியளவு மட்டும் தண்ணீர் நிறைப்பார்கள். அதன்பின் அந்த நீர் அடுத்த ஏரிக்கு போகும்.

அந்த ஏரியும் பாதியளவு நிறைந்ததும், அதற்கடுத்த ஏரிக்கு தண்ணீர் போகும். இப்படியே கடைசி ஏரி வரை எல்லா ஏரிகளிலும் பாதியளவு மட்டுமே நீரை நிரப்புவார்கள்!
எதற்கு பாதியளவு நீர் என்கிறீர்களா? அங்குதான் நமது நீர் பங்கீட்டு முறையின் உன்னதம் இருக்கிறது!

முதல் ஏரி முழுதாக நிறைந்தால் தான் அடுத்த ஏரிக்கு தண்ணீர் என்றால் கடைசியில் இருக்கும் ஏரிகள் எல்லாம் நிறைவதற்கே வழியில்லாமல் போய்விடும்!
இதனால் முதல் ஏரி பாசனம் பெரும் விவசாயிகள் உயர்ந்தவர்களாகவும். கடைசி ஏரி பாசன விவசாயிகள் கையேந்துபவர்களாகவும் மாறிவிடுவார்கள்!

விவசாயிகளிடம் இந்த ஏற்ற தாழ்வு வந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்!
அதனால் முதலில் சங்கிலித் தொடரில் இருக்கும் எல்லா ஏரிகளுக்கும் பாதியளவு தண்ணீர் கட்டாயமாக கொடுத்துவிடுவார்கள். இதில் ஒட்டு மொத்த மக்களும் கடவுளிடம் வேண்டுவது கடைசி ஏரி நிறைய வேண்டும் என்றுதான்!
ஏரியின் #கலிங்கு வரை நீர் நிறைந்துவிட்டால் ஏரியின் பாதி கொள்ளவிற்கு நீர் நிறைந்துவிட்டது என்று அர்த்தம்.

இந்த கலிங்குகளுக்கு மேல் இரண்டடி உயரத்தில் அணைக்கற்கள் கொண்டு வலிமையான சுவர் கட்டப்பட்டிருக்கும்.

இந்த சுவருக்கும் கலிங்குக்கும் இடையே பலகைகளை சொருகிவிட்டால் போதும்!
ஏரி நீர் வெளியேறாது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிவிடும். இப்படி கடைசி ஏரி பாதி நிறைந்ததும், அந்த ஏரியின் கலிங்கு மீது பலகைப் போட்டு நீரைத் தடுத்து முழு கொள்ளளவையும் நிறைப்பார்கள். கடைசி ஏரிதான் முதலில் நிறையும். முதல் ஏரி கடைசியாக நிறையும்!
#தாமிரபரணி ஆற்றின் சங்கிலித் தொடர் ஏரிகளில் கடைசி ஏரி #திருச்செந்தூர் குளம்!

கடைசி ஏரியில் ஒரு கோயில் அமைத்திருப்பார்கள். அந்தக் கோயிலில் ஏரி நிறைந்ததும் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். இந்த பூஜைதான் சங்கிலித் தொடர் ஏரிகளின் உயிர்ச் செய்தி...!
விவசாயிகள் விவசாயத்தை தொடங்கலாம் என்பதற்கான அனுமதி. ஆனாலும் தொடங்க மாட்டார்கள்!

எல்லா ஏரிகளிலும் நீர் இருப்பதால் விவசாயத்துக்கான தொடக்க வேலைகள் மும்மரமாக நடக்கும். கடைசி ஏரி முழுதாக நிறைந்ததும் அதற்கு முந்திய ஏரியில் பலகை போடுவார்கள். அதுவும் நிறைந்ததும் அதற்கு முந்திய ஏரி!
இப்படியாக கடைசியில் இருந்து முதல் ஏரி வரை ஒவ்வொரு ஏரியாக நிறைந்து கொண்டே வரும்!

எல்லா ஏரிகளும் நிறைந்த பின் பாசனத்திற்கென்று ஏரியின் நீர் திறந்துவிடப்படும். இதனால் விவசாயிகள் ஒற்றுமையோடு இருந்தனர்!
ஏரிகளில் இருந்து நீர் எப்படி விவசாய நிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது என்பதை ஏற்கனவே முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம்!

ஒவ்வொரு ஏரிக்கும் விளைநிலங்கள் போலவே வடிகால் நிலங்களும் சொந்தமாக இருந்தன. ஏரி நிறைந்து வெளியேறும் உபரி நீர் வடிகால் நிலங்களில் சேர்க்கப்பட்டன!
அந்த நீரையும் அடுத்த ஏரிகளுக்கு அனுப்பும் தொழில்நுட்பமும் நம்மிடையே இருந்தது!

பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வயல்களில் இருந்து வெளியேற்றப்படும் நீரையும் வீணாக்காமல் அடுத்த ஏரியில் கொண்டுபோய் சேர்க்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் இருந்தது!
சங்கிலித் தொடர் ஏரிகளின் குறைந்த எண்ணிக்கையாக 4 ஏரிகளும் அதிக எண்ணிக்கையாக 318 ஏரிகளும் இருந்தன!

இன்று பாலைவனமாக காட்சியளிக்கும் #பாலாறு தான் தனது குழந்தைகளாக 318 சங்கிலித் தொடர் ஏரிகளை வைத்திருந்த #பெருந்தாய்!
அத்தனை ஏரிகளுக்கும் நீரைக் கொடுத்த பிரமாண்டமான நீர்வளம் கொண்ட நதியைதான் மணல் அள்ளி மணல் அள்ளியே பாலைவனமாக மாற்றிவிட்டோம்!

‘எப்படி இருந்த நாம், ஏன் இப்படி ஆனோம்?’ அந்த சரித்திரத்தையும் பார்ப்போம்..
#இருப்பைக்குடி_கிழவன்!

இவர் செய்த இன்னொரு பிரமாண்டம், ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு சென்று அங்கும் ஏரிகளை உருவாக்கியது தான்!

இதனால் நீரைக் காணாமல் இருந்த வறட்சிப் பகுதிகள் எல்லாம் செழிக்கத் தொடங்கின!
எனது நண்பர் ஒருவர் என்னிடம் நேற்று கேட்டார், "அது என்ன எப்போதும் தமிழர் நீர் மேலாண்மை என்றே சொல்கிறீர்களே? மற்ற எவரும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கவில்லையா?" என்று!

உண்மைதான் மற்றவர்கள் யாரும் #தமிழர்கள் அளவிற்கு சிறந்து விளங்கவில்லை தான்!
மற்றவர்களுக்கு நிறைய ஜீவநதிகள் இருந்தன. வருடம் முழுவதும் நீரை அள்ளி வழங்கும் அற்புத நதிகள் இருந்தன. இதுபோக மிதமான மழையை வருடம் முழுவதும் தந்து கொண்டிருந்த இயற்கை வளம் இருந்தது. அதனால் அவர்களுக்கு நீரை தேக்க வேண்டிய அவசியமில்லை!
தமிழகத்தில் நிலைமை அப்படியில்லை. மிதமான மழையெல்லாம் இங்கு கிடையாது!

வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்ற கதைதான். ஜீவநதிகள் இல்லை. இருக்கும் ஒரே ஜீவநதி #காவிரி மட்டும்தான்.

அதிலும் கர்நாடகா கட்டிய அதிகமான அணைகளால் தண்ணீரைப் பார்ப்பது அரிதாக மாறிவிட்டது!
மற்ற சமூகங்களில் விவசாயம் மழையை நம்பியும் நதியை நம்பியுமே இருந்தன. தமிழகத்தில் நதிகள் குறைவு. அதனால் ஆற்றுப் பாசனமும் குறைவு!

வருடத்தில் சில மாதங்கள் பெய்யும் மழையை வைத்துதான் விவசாயம் செய்யவேண்டிய நிலை. அதற்காக நீரை தேக்க வேண்டியிருந்தது!
அதை பத்திரமாக பகிர்ந்து கொடுக்க ஒரு மேலாண்மை தேவைப்பட்டது.

அதனால்தான் தமிழர்கள் தங்களுக்காக உருவாக்கிய அரிய பொக்கிஷமாக இந்த "நீர் மேலாண்மை" இருக்கிறது!

தமிழர்கள் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் தொழில்நுட்பத்தை 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கற்றிருந்தனர்!
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to தஞ்சை ஆ.மாதவன்
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!