பூதனை வதத்திற்கு பின்...

“அடியே விசாலாட்சி, இந்த ஆச்சர்யத்தைக் கேள்விப்பட்டியோ?”

“எதைச் சொல்றே நீ சத்யா, நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைப்பத்தித் தானே?”

“வேறே என்ன விஷயம் இருக்கு பேச?”

“ஆமாம். கேள்விப்பட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு Image
உள்ளே போய் யசோதையைக் கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்”

“என்ன?”

“யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலம்பற வந்தாளாம். உங்க வீட்டு குழந்தை ரொம்ப அழகாக இருப்பானாமே, நான் பார்க்கலாமா என்று கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தையை தூக்கி அவள் கையிலே தந்திருக்கு. அவள் சப்பளிக்க உட்கார்ந்து மடியிலே
போட்டுக் கொஞ்சியிருக்கா. நான் இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா. இந்த பேக்கு சரின்னு தலையாட்டியிருக்கு”.

“அப்புறம்?”

“என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ?”

“சரி, சரி நீயே சொல்லுடி”

“என்ன ஆச்சோ தெரியல்லை. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு குடிக்க
முயற்சித்தபோதே அந்த பெண் அலறிண்டே அப்படியே சாஞ்சுட்டாளாம். அவ இருந்த இடத்திலே ஒரு பெரிய ராட்சசி கோரமாகக் செத்துக் கிடந்தாளாம். குழந்தை அவ மேலே விளயாடிண்டிருந்ததைப் பார்த்துட்டு நந்தகோபனும் மற்ற கோபர்களும் ஓடி வந்து குழந்தையை அப்புறப்படுத்திட்டு அந்த ராட்சசி யாருன்னு
கண்டுபிடிச்சிருக்கா. அப்பறம் அவளைத் தூக்கிக்கொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாளாம்”

“யாராம்?”

“பூதனை என்று பேராம். குழந்தையைக் கொல்ல வந்திருக்கலாம் என்று சொல்றா. ஏதோ யசோதை பண்ணின புண்ணியம், கடவுள் காப்பாத்தியிருக்கார். இல்லேன்னா குழந்தைக்கல்லவோ ஆபத்து ஏற்பட்டிருக்கும்!”
“ஐயோ! குழந்தை எப்படி இருக்கான்?”

“அந்த கரிக்குண்டன் எப்போதும்போல சிரிச்சுண்டே தான் இருக்கான், எல்லாரையும் பார்த்து மயக்கறான். யசோதை கையைப் பிடிச்சுண்டு தூக்கு என்கிறான்”

“என்னமோ போடி, அந்தப் பயலைப் பத்தி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சேதி வந்துண்டே இருக்கு”

“சரியாச் சொன்னே! கிருஷ்ணன்
ஒரு அதிசயக் குழந்தை தான் சந்தேகமில்லை”

#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
நெட்டில் சுட்டது

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
ஹரியும் ஹரனும்

கோகுலத்தில் அன்று “ஜே ஜே” என்று கூட்டம். வாயிலில் எல்லா வீட்டிலும் தோரணம். தெருவெல்லாம் பெரிய பெரிய கோலங்கள். எந்த வீட்டில் என்ன விசேஷம் என்று தெரியாதபடி எல்லார் வீட்டிலும் மகிழ்ச்சிக்கோலம். ஊரே சந்தோஷ வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது. மேள தாளங்கள், வாண Image
வேடிக்கைகள், பெண்கள் சேர்ந்து இசை கோலாட்டம், கும்மி, கேளிக்கைகள். ஆண்களில் பலர் கூட்டம் கூட்டமாக பாடிக்கொண்டு, கூத்தாடிக் கொண்டிருக்கிறார்களே. இன்று என்ன விசேஷம் என்று ஊன்றிக் கவனித்தால் நந்தகோபன் வீட்டில்தான் கூட்டம் அதிகமாகவே காண்கிறது.

காரணம் என்னவென்றால் ஒரு குட்டிப்பயல்
பிறந்திருக்கிறான் அந்த வீட்டில். ஊருக்கே செல்லம் அவன். அவனுக்கு பெயர் சூட்டு விழா என்பதால் வேத கோஷங்களும், மந்திர ஒலியும் வானைப் பிளக்கிறது. மந்தமாருதம், மெல்லிய பனிச்சாரல் போன்ற மழை தூற்றல், இடையிடையே சுகமான சூரிய வெப்பம், பறவை, பசுக்கள், கன்றுகளின் இடைவிடாத அற்புத சப்தம்.
காற்றில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வரும் இனிப்பு பலகாரங்களின் மூக்கைத் துளைக்கும் வாசம்.

“இது கைலாசமா வைகுண்டமா” என்று நம்மை நாமே கிள்ளிப் பார்க்கத் தோன்றும் ஆனந்த நிலை. எண்ணற்ற பேர் காத்திருக்கிறார்கள் குழந்தையைக் காண! இது யார்? ஒரு நீண்ட, நெடிய, ஆஜானுபாகுவான, புலித்தோல் அணிந்த
உடல் நெற்றி பூரா வெள்ளிய திருநீறணிந்த, உருத்ராக்ஷ கமண்டல ஜடாதாரி? அவரும் குழந்தையைக் காணக் காத்திருக்கிறாரே! ரோஹிணி உள்ளே சென்றாள்.

“யசோதா, யாரோ ஒரு சாமியார் கூட வந்திருக்காரடி, பார்க்கவே ரொம்ப பயமாக இருக்கிறதே”

“ஒரு வேளை பிள்ளை பிடிக்கிற சாமியாரோ? உள்ளே விட யோசனையா இருக்கே!”
“அதெல்லாம் இல்லை, விடேன், வந்து பார்க்கட்டுமே”

“குழந்தை பயந்து போய்ட்டான்னா?”

குழந்தை இதற்குள் ‘வீல்’ என்று அழுதது. முரண்டு பிடித்தது. யார் கையிலும் தங்கவில்லை. சமாளிக்க முடியவில்லை. நந்தகோபன் வேகமாக அருகில் வந்தான். “வழி, வழி”, குழந்தைய சூழ்ந்து கொள்ளாதீர்கள் கொஞ்சம் காற்று
வெளிச்சம் விடுங்கள்” என்று தூக்கி வைத்துகொண்டான். மேலும் அதிகமாகக் கத்தியது குழந்தை.

“சரி கொஞ்சம் வெளியே எடுத்து போய் வேடிக்கையாக எதையாவது காட்டு. அழுகை நிற்கிறதா என்று பார்ப்போம்” என்றார் ஒரு பெரியவர்.

இன்னும் சுரம் மேலே போனதே தவிர அழுகை நிற்கவில்லை.

“யாரோ ஒரு ரிஷியோ,
முனிவரோ, யோகியோ, ஒரு பெரியவர் நிற்கிறார் அவரிடம் விபூதி வாங்கித் தடவு” என்றாள் ஒரு பாட்டி.

ரோகிணி குழந்தையை வாங்கிக்கொண்டு சாமியாரிடம் சென்றாள். சாமியாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. குழந்தையை இரு கைகளிலும் வாங்கி இடி இடியென்று சிரித்தார், ஆனந்த தாண்டவமாடினார். குழந்தை அழுகையை Image
சட்டென்று நிறுத்தினான். பொக்கைவாய் சிரிப்பு அனைவரையும் மயக்கியது. தனது சிறு கைகளால் சாமியாரின் ஜடையை பிடித்திழுத்தான். பின்னால் வளர்ந்து கோபியரின் பின்னலைப் பிடித்திழுக்க பயிற்சியோ? அனைவரும் சிலையாயினர்! ஏன் ஆகமாட்டார்கள்? ஹரனும் ஹரியின் பக்தரல்லவா? இருவரும் ஒருவரை ஒருவர்
இணைபிரியாதவர்களாயிற்றே! ஹரி, கிருஷ்ணனாக பிறந்தது தெரிந்து, அவனைப் பார்க்க ஹரன் ஆவலாக வந்ததை தெரிந்து ஹரி அழுது ஆகாத்தியம் பண்ணி வெளியே வந்து ஹரனைக் கட்டி தழுவி மகிழ்வதில் என்ன ஆச்சர்யம்!

ரெண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள்! ஒருத்தர் தன்னை பக்தியுடன் புகழ்ந்து வேண்டினால், யோசிக்காமல
வரங்களை வாரி வழங்குபவர். எத்தனை அசுரர்கள், ராக்ஷசர்கள் அப்படி தவமிருந்து சிவனிடமிருந்து வேண்டிய எல்லா வரங்களையும் பெற்று அவற்றை துஷ்ப்ரயோகம் செய்தவர்கள்! மற்றவர் அப்படி தவறாக அந்த வரங்களைப் பயன்படுத்துவோரை சாமர்த்தியமாக தண்டித்து, அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவராச்சே! Image
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
சகடாசுரன் வதம்

கம்சன் அனுப்பிய சகடாசுரனும் தேர்ந்தெடுத்து, அந்த வண்டியின் சக்கரத்தில் ஒளிந்து கொண்டிருந்தான். சகடாசுரனுக்கு ரொம்பவே சந்தோஷம்! பழம் நழுவி, பாலில் விழுந்துவிட்டதே! யாரும் இல்லாத இந்த அறையில் கிருஷ்ணன் தன்னந் தனியனாக நம்மிடம் வசமாக அகப்பட்டுகொண்டான். அவனை இப்போதே Image
தீர்த்துக் கட்ட வேண்டும். இதைவிட சிறந்த சமயம் அகப்படாதே என்று எண்ணி மெதுவாக சக்கரத்தை நகற்ற ஆரம்பித்தான்.

“ஒரே நசுக்கு - கிருஷ்ணன் காலி” என்பது அவனுக்கு எண்ணம். கிருஷ்ணன் கண் விழித்தான். தூங்குவது போல் இத்தனை நேரம் நடித்த மாயாவி, யசோதையின் மனதில் புகுந்து அவள் தன்னை இந்த
வண்டியின் அடியில் படுக்க வைத்தானல்லவா? சகடாசுரன் தன்னை நோக்கி சக்கரத்தை உருட்டி வருவதைக் கண்ட கிருஷ்ணன் துளியும் கவலைப்படவில்லை.அருகில் வரும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன், கிட்டே வந்ததும், தனது இடது காலால் அந்த வண்டி சக்கரத்தை உதைத்தான். என்ன பலமோ அந்த காலுக்கு! பெரிய
சக்கரம் எதிர் திசையில் உருண்டு ஓடி, அங்கிருந்த சுவரில் மோதி, கீழே விழுந்து சிதறியது. அதனுள் இருந்த சகடாசுரன் எலும்பெல்லாம் நொறுங்கி வலியில் கத்திய சப்தம் கேட்டு அனைவரும் உள்ளே ஓடி வந்தனர்.

வண்டி திசை மாறியிருக்கிறது. ஒரு பெரிய சக்கரம் வண்டியிலிருந்து கழன்றிருக்கிறது. பால்,
தயிர், வெண்ணை எல்லாம் கொட்டி, கீழே படுத்திருந்த கிருஷ்ணன் வாயெல்லாம் வெண்ணையும் பாலும்! ஒரு பெரிய சக்கரம் தூரத்தில் பெரிய சுவரில் மோதி து£ள் தூளாகக் காட்சியளிக்கிறது. இது என்ன கோரம்! அதன் அடியில் ஒரு ராட்சசன் ரத்த வெள்ளத்தில் நகர முடியாமல் கிடக்கிறானே! அவர்கள் அவனை நெருங்கிக்
கொல்லும் முன்னே அவன் உயிர் பிரிந்து விட்டது. சகடாசுரன் கம்சனால் அனுப்பப்பட்டவன் என்று புரிந்து கொள்ள வெகுநேரம் ஆகவில்லை கோப, கோபியருக்கு.

“கிருஷ்ணா” என்று அடி வயிற்றிலிருந்து பாசத்தோடு கதறிக் கொண்டு ஓடிவந்தாள் யசோதை.

“என்ன பாதகி நான். உன்னைத் தனியே அந்த ராட்சசனிடம் விட்டு
வைத்தேனே. கடவுள் தானடா கிருஷ்ணா உன்னைக் காப்பாற்றினார்” என்று ஆதங்கப்பட்டாள் யசோதை.

“அது யார் அந்த இன்னொரு கடவுள் என்றோ, அடுத்த ராட்சசன் யாராக இருக்கும் என்றோ கிருஷ்ணன் யோசித்ததாகத் தெரியவில்லை! சிரித்துக்கொண்டே தன் வாய்க்குள் விழுந்த வெண்ணையும், பாலும் அளித்த ருசியில்
மகிழ்ந்து கொண்டிருந்தான்!

#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
வெண்ணை திருடிய கண்ணன்

கோகுலத்திலே, ஒரு வீட்டிலே புகுந்து வெண்ணெய் திருடிக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன்.

அப்போது அங்கு வந்த அந்த வீட்டின் பெண்மணி “யார் நீ?” எனக் கேட்கிறாள்.

“பலராமனின் தம்பி” என சாமர்த்தியமாகக் கூறுகிறது குழந்தை.

“இங்கு எங்கு வந்தாய்?” என வினவுகிறாள் Image
அந்தப்பெண்.

“என்வீடு என நினைத்து நுழைந்து விட்டேன்” என்கிறான் கண்ணன். (ஏனெனில், கிராமங்களிலே எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருக்குமல்லவா!)

அந்தப் பெண் விடவில்லை. மேலும் கேட்கிறாள். “அதுசரி, வெண்ணெய்ப் பாத்திரத்தில் கையை வைப்பானேன்?” என்கிறாள்.

“கன்றுக்குட்டி ஒன்று காணவில்லை.
ஒருவேளை அது இந்த வெண்ணெய்ப் பாத்திரத்தில் இருக்கிறதோ எனப் பார்க்கிறேன். ஏதும் வருத்தமடைய வேண்டாம்” என விஷமமாகப் பதிலளிக்கிறான் கண்ணன்.

கன்றுக்குட்டியை வெண்ணெயிருக்குமிடத்தில் தேடிய அந்த குறும்பனைக் கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள். கோகுலத்திலே, கிருஷ்ணன் வெண்ணெயை மட்டும்
திருடவில்லை. கோபிகைகள் அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டான். அதனால் தான், தயிர், மோர், பால் எனக்கூவி விற்க வேண்டிய
ஒருபெண்மணி, கிருஷ்ணன் மீதிருந்த பிரேமை மிகுதியால், “கோவிந்தா, தாமோதரா, மாதவா” என கூவிக்கொண்டே போனாள் என்கிறார் லீலாசுகர்.
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
கோபியர்களை மயங்க வைத்த கண்ணன்

அந்தக் கறுப்புப் பயல் துரு துரு வென்று இருப்பவன்.ஒரு இடத்தில் நிற்காமல் அலைபவன். அவனுக்கு என்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அத்தனை பேரும் சாமான்யமானவர்கள் அல்ல. கண் பார்த்ததை கை எடுக்கும். இவர்கள் அனைவருக்கும் தலைவன் அந்தக் கறுப்புப் பயல். Image
ஐந்திலிருந்து எட்டுக்குள் தாண்டாத வயசு அனைவருக்கும். சாதுவாக இருப்பவனையும் தயார் செய்து விடுவான் அந்த கறுப்புப் பயல். ஒரு வீடு பாக்கியில்லாமல் அந்த தெரு, அதற்கடுத்த தெரு, எதிர் தெரு, அதன் பின்னால் என்று அந்தச் சிறிய கிராமத்தின், அனைத்து தெருவுக்கும் செல்வார்கள். எதற்கு?

வீட்டில்
கொஞ்சம் அசந்து இருக்கும் சமயம் பார்த்து அந்தந்த வீட்டில் சேமித்து வைத்திருக்கும் வெண்ணையை அபேஸ் செய்ய! ஒரு தடவை இரண்டு தடவை வேண்டுமானால் கோட்டை விட்டு ஏமாறலாம். விழித்துக் கொண்ட தாய்மார்கள், இந்தப் பயல்கள் கைக்கு எட்டாமல் உயரே உத்தரத்தில் ஒரு கயிற்றில் உறி கட்டி அதற்குள் வெண்ணை
பால் சட்டிகளை வைத்து விடுவார்கள். இந்தக் கும்பலுக்கு இதனால் பெரும் ஏமாற்றம். என்னடா செய்யலாம் என்று யோசித்தார்கள். இருக்கவே இருக்கிறானே தலைவன். அவன் யோசனை கொடுத்தான்.

“எந்த வீட்டில் கொஞ்சம் அசந்து போய் இருக்கிறார்கள் என்று பார்த்து வந்து சொல்லுங்கள்” என்றான் கறுப்பு பயல்.
அன்று இரண்டு வீடு தேறியது. ஆறடி உயரத்தில் வெண்ணை சட்டி உறியிலே தொங்க, அந்த வீட்டுக்காரி குளத்துக்குச் சென்றிருந்தாள். விடுவார்களா தக்க சமயத்தை! இந்த ஐந்தாறு பயல்களும் அந்த வீட்டில் நுழைந்தனர். தலைவன் யோசனை குடுக்க, ஒருவன் வாசலில் காவல் யாராவது வருகிறார்களா என்றுபார்க்க. ஒருவன்
கையில் ஒரு பாத்திரத்துடன். திருடிய வெண்ணையை சேமிக்க; இரு பெரிய பயல்கள் மண்டியிட்டு குனிந்து நிற்க, அனைவரிலும் சிறிய தலைவன் அவர்கள் மேல் ஏறி, உயரே இருக்கும் வெண்ணைச் சட்டியில் கை விட்டு அள்ளி கீழே கொடுக்க, பாத்திரக்காரனிடம் அது போய்ச் சேரும். அடுத்த நிமிடம், அனைவரும் Image
ஒதுக்குப்புறமாக, யமுனை நதியின் கரையோரம் வழக்கமாக சந்திக்கும் பகுதியில் ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, வெண்ணையை பாகப்பிரிவினை செய்வார்கள். கேட்கவேண்டுமா. பெரும் பங்கு கறுப்புப் பயலுக்குத் தான்.

இது தொடர்ந்து நடப்பதால் அனைத்து கோபியர்களும், அந்த கறுப்புப் பயல் வீட்டுக்கு
வந்தனர். அவன் தாயிடம் முறையிட்டு இந்தக் கொள்ளையை எப்படியாவது நிறுத்த. இதோ வந்துவிட்டார்கள் திமு திமு வென்று. அவன் தாய் யசோதைக்குப் புரிந்து விட்டது. அனைவரும் வந்தால் அது நிச்சயம் அந்தப் பயல் சம்பத்தப்பட்ட ஒரு புகார் தானே வழக்கம்போல. அவன் அவர்களை பார்த்த கணத்திலேயே புரிந்து
கொண்டான் நண்பர்கள் போட்டு கொடுத்து விட்டார்கள் என்று. ஒன்றுமறியாதவனாக தனது தாய் பின்னால் சென்று அவள் கால்களைக் கட்டிக்கொண்டு நின்றான்.

“வாருங்கள் என்ன விஷயம்” என்றாள் யசோதை.

வந்த கோபியர் யார் முன்னால் விஷயத்தைச் சொல்வது என்று ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொண்டனர். அனைவரும்,
பண்ணுவதை எல்லாம் பண்ணிவிட்டு “ஒன்றும் தெரியாத அப்பாவி” யாக அம்மா பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பயலையும் பார்த்தனர்.

கண்கள் சந்தித்தன. என்ன காந்த சக்தியோ? பெரிய வட்ட விழிகள். அவை பேசும் மொழியோ ஏராளம். இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்ற வைக்கும் கருவூலம் - அந்த Image
கடலினும் பெரிய கண்கள். மெதுவாக, தலையை ஆட்டிக்கொண்டே அந்த விழிகள் அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டே பேசின

“தயவுசெய்து சொல்லாதே, சொல்லாதே” என்று.

“என்னவிஷயம் சொல்லுங்கள் ஏன் எல்லாரும் பேசாமலேயே நிற்கிறீர்கள்? அமருங்கள்” என்றாள் யசோதை.

“ஒன்றுமில்லையம்மா. நாம் அடிக்கடி சந்திக்க
முடியாமல் வேலை இருக்கிறதே. அதான் எல்லாரும் ஒன்று சேர்ந்து உன்னைப் பார்த்து விட்டுப் போவோம் என்று வந்தோம்.”

அந்த விழிகள் செய்த மாயம் அல்லவா இது?

#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏
கண்ணனிடம் ஏமாந்த யசோதை

கோகுலத்தில் கண்ணனால் பெரும் தொல்லை கோபியருக்கு. கண்ணனில்லாவிடிலோ தொல்லை. அதைவிடப் பெரும் தொல்லை. தனிமைத் தொல்லை. கண்ணனால் தொல்லைகளையும் துன்பத்தையும் அனுபவிக்கவேண்டும் அதை யசோதையிடம் சொல்லி மகிழவேண்டும் இதுதான் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தவர்களல்லவா Image
கோபியர். வசுதேவர் வருவதைக் கூடக் கவனிக்காமல் கோபத்துடன் தயிர் கடைந்து கொண்டிருந்தாள் யசோதை.

வசுதேவரும் அவளைப் பார்த்து "ஏன் யசோதா, வழக்கம்போல உன் மகனைப் பற்றி யாரேனும் புகார் கொடுத்தார்களா?"என்றார் மெதுவாக.

"வேறென்ன, இந்தக் கண்ணனுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியவில்லையே.
ஊர்வம்பையெல்லாம் விலைக்கு வாங்கி வருகிறான்." "அப்படி என்ன செய்தானாம் கண்ணன்?"

"ஒருத்தி புதுப் பாவாடையில் மண் அள்ளிப் போட்டான் என்கிறாள்.ஒருத்தி பின்னலைப் பிடித்து இழுக்கிறான் என்கிறாள். வேரொருத்தியோ வாயில் கட்டெறும்பைப் பிடித்துப் போட்டுவிட்டான் என்கிறாள். கடைசியில் பழத்தைப்
பறித்துக் கடித்து எச்சில் படுத்திக் கொடுத்தான் என்கிறாள் "

"இதோ பார். அந்த கோபியர் என்ன சொன்னார்களோ எனக்குத் தெரியாது. வேண்டுமானால் நீ கண்ணன் பின்னால் சென்று பார்."

"சரி உங்கள் சொற்படி நான் அவன் பின்னே சென்று பார்க்கிறேன் என்று வேகமாக வெளியே வந்த யசோதை தெருவில் தான் வருவது
தெரியாமல் மறைந்து நின்று கண்ணனைப் பார்த்தாள்.

தெரு முனையில் ஒருத்தி பின்னலை அசைத்துக் காட்டி நின்றாள். கண்ணன் தன்னைப் பாராமல் போகிறானே என்ற ஏக்கம் அவள் முகத்தில் தெரிந்தது. சற்று தொலைவில் இன்னொருத்தி பாவடையை பிடித்துக் கொண்டு அழகுடன் நின்றால். அவளையும் கண்ணன் கவனியாதவன் போல் தல
குனிந்து நடந்தான். அதேபோல் சற்றுத் தொலைவில் கையில் பழத்தை வைத்துக் கொண்டு ஒருத்தி கண்ணனை வா வா என அழைப்பதைப் போல நின்றாள் இவர்களையெல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு ஒன்றுமறியாதவன் போல வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன்.

தன் மகன் எவ்வளவு நல்லவனாக இருக்கிறான் இவனைப் பற்றி கோள் சொல்லும்
கோபியரைக் கடிந்தவாறே வீட்டுக்குள் நுழைந்த யசோதை தன் மகனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள். கண்ணனும் கள்ளச் சிரிப்புடன் கோபியரோடு தாயும் ஏமாந்து போனதை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டான். கண்ணனின் கள்ளத்தனம் நம்மையும் புன்னகைக்க வைக்கிறது இல்லையா.
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
கிருஷ்ணனை காட்டி குடுத்த மணி

யசோதை கண்ணனை வெளியே எங்கும் போகக் கூடாது என்று சொல்லிவிட்டுத் தயிர் கடையச் சென்றுவிட்டாள். சிறிது நேரம் சாதுவாக இருந்த கண்ணன்., நண்பர்கள் விளையாடுவதைக் கண்டவுடன் மெதுவே வீட்டை விட்டு வெளியேறினான். அவனைக் கண்ட நண்பர்கள் மிக மகிழ்ந்து, “கண்ணா, வா Image
வழக்கம்போல் வெண்ணை தின்னச் செல்லலாம்” என்று கூப்பிட்டார்கள்.

கோபிகைகள் அனைவரும் கூடிப்பேசி, கண்ணன் வெண்ணை திருட வருவான் என்பதால் உரியில் வெண்ணைப் பானையை வைத்துவிட்டு, தொட்டால் சத்தம் வரும்படியாக மணியைக் கட்டியிருந்தார்கள். பிறகு நிம்மதியாக வேலை செய்யச் சென்றுவிட்டார்கள்.
கண்ணனும் நண்பர்களும் மெதுவே ஒரு வீட்டில் நுழைந்தனர். உரியில் வெண்ணை இருப்பதைப் பார்த்த கண்ணன், அதில் மணி கட்டியிருப்பதையும் பார்த்து விட்டான். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அந்த மணியிடம்,“மணியே! நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அடிக்காதே” என்று சொல்ல மணியும் சம்மதித்தது.

கண்ணன்,
உரியிலிருந்து ஒவ்வொரு பானையாக இறக்கி நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, கடைசியாக இருந்த பானையில் கை விட்டு வெண்ணையை எடுத்து வாயருகே கொண்டு சென்றான். அதுவரை சப்திக்காமல் இருந்த மணி, இப்போது கணகணவென்று ஒலிக்கத் துவங்கியது. கண்ணன் வேகமாகக் கீழே குதித்துவிட்டு மணியிடம், "ஏ மணியே! ஒலிக்க
மாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போது நான் உண்ணும்போது ஏன் ஒலிக்கிறாய்?" என்று கேட்டான். மணியோ,“கண்ணா, மணிவண்ணா, பலப்பல யுகங்களாக, உனக்கு நிவேதனம் செய்யும்போது நான் ஒலி எழுப்புவது வழக்கம்தானே, இன்று நீ உண்ணும்போது எப்படி ஒலிக்காமல் இருப்பேன்?” என்றது. சத்தம் கேட்டு கோபிகை வரவே
அனைவரும் ஓடிச் சென்றார்கள்.

மெதுவே அடுத்த வீட்டில் நுழைந்தார்கள். அங்கும் உரியில் மணி கட்டியிருந்தது. இப்போது கண்ணன் ஒரு கையால் மணியின் நாக்கை ஒலிக்காதவாறு பிடித்துக் கொண்டு மறு கையால் வெண்ணை உண்டுவிட்டு ஓடினான். இடையர்கள் அனைவரும் ஓடுவதைக் கண்ட கோபிகைகள், தங்களுடைய யோசனையால்
பயந்து கண்ணன் ஓடுவதாக நினைத்தனர். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது வெண்ணையைக் காணாமல், கண்ணனின் லீலையை நினைத்து வியந்து மகிழ்ந்தனர்.

#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ததிபாண்டனின் ஏமாற்றம்

கண்ணன் எப்போதுமே யாரையாவது சீண்டிவிட்டு, அவர்களை ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பதிலே ஆனந்தம் காண்பவன். தன் நண்பர்கள் குழுவிலே அவனுக்கு மிகப் பிரியமான நண்பன் ததிபாண்டன். இவன் ஒர் அப்பாவி. அதே சமயம் அம்மாஞ்சி என்றும் சொல்லலாம். கண்ணன் Image
செய்யும் குறும்புகளிலே, இவனும் கலந்துகொள்வான். ஆனால் கண்ணன் அதிலிருந்து நழுவிக்கொண்டு, இந்தத் ததிபாண்டனை மாட்டிவிடுவான். ததிபாண்டன் மாட்டிக்கொண்டு தத்தளிப்பான்.

ஒருநாள் ததிபாண்டன் தன் வீட்டுப் பின்புற முற்றத்தில் தாய்ப் பசுக்களிடம் சென்று பாலைக் குடித்து விடாதபடி கன்றுகளைக்
கயிற்றினால் பிணைத்து, பாதுகாத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனை எப்படியாவது ஏதாவதொரு சிக்கலில் மாட்டிவிடவேண்டுன்று நினைத்த கண்ணன், அடுத்த நாழிகை அவன் கண்ணுக்குத் தொலைவில் தோன்றினான். தன் கையிலிருந்த குழலை அசைத்து, ததிபாண்டனின் கவனத்தை தன் பக்கம் இழுத்தான். ததிபாண்டனை அங்கு
வரும்படி கூறினான்.

ஆனால் ததிபாண்டனோ, "பாலைக் கறக்க அம்மா பாத்திரம் கொண்டு வர உள்ளே போயிருக்கிறாள். அம்மா வரும் வரை இந்தக் கன்றுகளை, தாய்ப் பசுக்களிடம் போகாமல் நான் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் கன்றுகளை விட்டுவிட்டு வரமாட்டேன்'' என்று சத்தமாகக் கூறினான்.

ததிபாண்டன் வரமாட்டான்
என்பதைக் கண்ட கண்ணன், அவன் அருகில் வந்தான். ததி பாண்டனைப் பார்த்து ""அந்த வைக்கோல் போரின் பின்பக்கம் போய்ப் பார். அங்கே சுவையான இனிப்புப் பண்டம் இருக்கிறது'' என்றான் கண்ணன்.

"இனிப்புப் பண்டமா?" ததிபாண்டனின் முகம் மலர்ந்தது.

ஆவலோடு துள்ளிக் குதித்து அங்கே ஓடினான். மாயக்கண்ணன்
அல்லவா! அங்கே தின்பண்டங்களை வரவழைத்து வைத்திருந்தான். ததிபாண்டனும் அந்தத் தின்பண்டங்களை ஒவ்வொன்றாக ஆசையோடு எடுத்து ருசித்துக் கொண்டிருந்தான். கண்ணன் தன் கைப்பிடியிலிருந்த கன்றுகளை அவிழ்த்துவிட்டான். அவை தாய்ப்பசுவிடம் தாவிக்குதித்து ஓடிச் சென்று பாலைக் குடித்து மகிழ்ந்தன. Image
மாயக்கண்ணன் உடனே அங்கிருந்து மறைந்தான்.

வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த ததிபாண்டனின் தாய், அத்தனை கன்றுகளும் பாலைக் குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போனாள். ஓடிப் போய் கன்றுகளைக் கட்டிப்போட்டுவிட்டு, ஒரு மூங்கில் கம்பை எடுத்துக்கொண்டு, ததிபாண்டனைத் தேடிக் கண்டுபிடித்தாள்.
"கன்றுகளைப் பார்த்துக்கொள்ளச் சொன்னால் அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கு தின்பண்டமா தின்கிறாய்?'' என்று கம்பால் அடித்தாள்.

இதுபோன்று பலமுறை, பல செயல்களில் ஏமாற்றமடைந்து மாட்டிக்கொண்ட ததிபாண்டனுக்கு கண்ணன் மீது கடும்கோபமும், ஆத்திரமும் வந்தது. அவனை இது போன்று வேறு ஏதாவது ஒன்றில்
மாட்டி வைத்து வேடிக்கை பார்க்க வேண்டுமென்று ததிபாண்டன் ஆசைப்பட்டான்.

#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
ததிபாண்டவனிடம் சிக்கிய கண்ணன்

ஒருநாள் ஒரு கோபிகையின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த கண்ணன், அங்கிருந்த தயிர்ப்பானையை உடைத்துவிட்டான். கோபம் கொண்ட கோபிகை கண்ணனை துரத்தி வந்தாள். கண்ணன் சிட்டுப் போலப் பறந்துவிட்டான். தன் வீட்டுத் தயிர்ப்பானையை உடைத்த விவரத்தை யசோதையிடம் எடுத்துக Image
கூறினாள் கோபிகை. கண்ணனின் மீது இது போல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வருவதைக் கண்ட யசோதைக்கு கண்ணன் மீது கடுமையான கோபம் வந்தது. அவனை இழுத்து வந்து தூணில் கட்டிப் போட நினைத்த யசோதை, அந்தக் கோபிகையை உடன் அழைத்துக் கொண்டு கண்ணனைத் தேடிப் போனாள்.

தன்னை அடிப்பதற்காக யசோதையும்,
கோபிகையும் வருவதைக் கண்ட கண்ணன் ஓடிப்போய் ஒரு வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே பெரிய பெரிய பானைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பானையாக கண்ணன் திறந்து பார்த்தான். அதில் எல்லாப் பானைகளிலும் தயிர் நிரம்பியிருந்தது. கடைசியில் ஒரு பானை மட்டும் காலியாய் இருந்தது. குழந்தைக் கண்ணன
் அந்த வெறும் பானைக்குள் எட்டிக் குதித்து, உள்ளே மறைந்து உட்கார்ந்து கொண்டான்.

இதை மறைவில் ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டே இருந்தான் ததிபாண்டன். கண்ணன் பானைக்குள் புகுந்து தன்னை மறைத்துக்கொண்டதும், ததிபாண்டன் ஓடிவந்து உள்ளே எட்டிப்பார்த்து, ""கண்ணா!... ஏன் இப்படி பயந்துபோய் ஓடி
வந்து இந்தப் பானைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாய்? என்ன நடந்தது?'' என்று கேட்டான்.

""ததிபாண்டா! பிறகு சொல்கிறேன். இப்போது என் தாயும், ஒரு கோபிகையும் என்னை அடிக்க ஓடி வருகிறார்கள். தயவு செய்து என்னை அவர்களிடம் காட்டிக்கொடுத்து விடாதே'' என கண்ணன் கெஞ்சினான்.

""என்னை எத்தனை முறை
இந்த மாதிரி சிக்க வைத்திருக்கிறாய்? உன்னை சிக்க வைக்க இதுதான் சரியான சந்தர்ப்பம். நான் உன்னைக் காட்டிக் கொடுக்காமல் விட மாட்டேன்'' என்றான் ததி பாண்டன்.

""இதென்னடா... நீ இப்படி வம்பு செய்கிறாய்? நான் சொல்வதைக் கேள். இப்போது நீ என்னைப் காப்பாற்றினால் நான் உனக்கு நல்லது செய்வேன்...
தயவு செய்து என்னைக் காட்டிக் கொடுக்காதே'' என்று கேட்டுக்கொண்டான் கண்ணன்

மனம் நெகிழ்ந்துபோன ததிபாண்டன் "'சரி சரி நீ அப்படியே பானைக்குள் இரு..'' என்று கூறியபடியே வெளியே சென்று எட்டிப்பார்த்தான். யசோதையும், கோபிகையும் கண்ணனைத் தேடி அந்த வீட்டுக்குள் வருவதைக் கண்டான். அடுத்த விநாடி
பரபரப்புடன் ஓடிவந்தான் ததிபாண்டன்.

தொடரும்...
பானைக்கு மோட்சம்

""கண்ணா! உன் தாயாரும், அந்தக் கோபிகையும் உன்னைத் தேடி இங்கே வருகிறார்கள். நீ உள்ளே அப்படியே இரு'' என்று கூறியபடியே அந்தப் பானையின் வாய்ப்புறத்தில் ஏறி அமர்ந்துகொண்டான் ததிபாண்டன்.

யசோதை பானையின் அருகே வந்து ததிபாண்டனிடம் கேட்க, ""கண்ணன் இங்கு வரவேயில்லை'' என்று Image
அடித்துச்சொன்னான் அவன்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யசோதையும், கோபிகையும் ததிபாண்டன் சொன்னதை நம்பி அங்கிருந்து அகன்று, கண்ணனைத் தேடிப் போனார்கள். அவர்கள் போய் விட்ட பின்பும், ததிபாண்டன் பானை மீதிருந்து இறங்கவில்லை. பானைக்குள் இருந்த கண்ணனுக்கு மூச்சு முட்டியது.

"'டேய்
ததிபாண்டா. இன்னும் எத்தனை நாழிகை நான் இப்படி உள்ளே இருந்து அவதிப்படுவது? நீ கீழே இறங்குடா'' என்று கூறி தன்னுடைய குழலால் ஒரு குத்து குத்தினான்.

ததிபாண்டனோ, ""ஹே கண்ணா! உனக்கு இந்தப் பானையிலிருந்து நான் விமோசனம் தர வேண்டுமானால் எனக்கு நீ மோட்சத்தைக் கொடுப்பாயா?'' என்று கேட்டான்.
"உனக்கு மோட்சமா? பொய் சொன்னவனுக்கா?''

"ஆமாம் இந்த மனிதப் பிறவியிலிருந்து எனக்கு மோட்சம் வேண்டும்''

"சரி உனக்கு மோட்சம் தருகிறேன். தயவு செய்து என்னை இப்போது விடுதலை செய்'' என்று மூச்சுத் திணறியபடி பானைக்குள்ளிருந்து கண்ணன் கேட்டுக்கொண்டான்.

"அதெப்படி என்னை மட்டும் மோட்சத்திற்கு
அனுப்புவது நியாயம்? இந்தப் பானை கூட உன்னைக் காப்பாற்றியதல்லவா? இந்தப் பானைக்கும் சேர்த்து மோட்சம் தர வேண்டும்'' ததிபாண்டன் விடாப்பிடியாய் இருந்தான்.

தனக்கிருக்கும் சங்கடத்திற்குள்ளிருந்து மீண்டு வர கண்ணன் அதையும் ஏற்றுக்கொண்டான். "'சரி பானைக்கும் சேர்த்து மோட்சம் தருகிறேன்.
தயவு செய்து நீ பானையை விட்டுக் கீழே இறங்கு'' என்றான்.

ததிபாண்டன் பானையின் வாய்ப் பகுதியிலிருந்து எழுந்து கீழே குதித்தான். கண்ணன் பானைக்குள்ளிருந்து வெளியே வந்தான். சொன்னதைச் சொன்னபடி செய்ய பகவான் ஒரு புஷ்பக விமானத்தை வரவழைத்து ததி பாண்டனையும், தன்னைக் காப்பாற்றிய பானையையும் அந்த
புஷ்பக விமானத்தில் ஏற்றி வைகுண்டத்தை நோக்கி அனுப்பி வைத்தான்.

பொய் எப்போது சொல்ல வேண்டுமோ, அப்போது அவசியம் ஏற்பட்டால் சொல்வதில் தவறில்லை. சாமான்ய தர்மம், விசேஷ தர்மம் என்று உள்ளது. இதில் விசேஷ தர்மத்தைச் செய்ய சாமான்ய தர்மத்தைக் கைவிட்டு விடுவதால் தவறில்லை. பானைக்குள் இருந்த
பகவானைக் காப்பாற்ற ததிபாண்டன் பொய் சொன்னான். எனவே அதனால் தவறில்லை. ஆகவே. அவனுக்கும், தன்னைக் காப்பாற்றிய பானைக்கும் மோட்சத்தைக் கொடுத்தான் கண்ணன்.
"யாரெல்லாம் வைகுண்டம் போக ப்ராப்தம் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் வைகுண்டம் போனால் இந்தப் பானையைப் பார்க்கலாம்' என்கிறது புராணம்
கோகுலத்தில் பண்டிகை

ஒருமுறை ப்ரஜ்ஜில் ஹோலி (holi) பண்டிகை கொண்டாடி கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் கிருஷ்ணனின் நண்பர்கள் அனைவரும் கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றனர். இதை கேள்வி பட்ட உடனே கிருஷ்ணன் வீட்டுக்குள் ஓடி யசோதாம்மாவின் மடியில் போய் உட்கார்ந்தான் .

கிருஷ்ணன் "அம்மா ! Image
அம்மா! எனக்கு இந்த நிறமே பிடிக்காது. இந்த நண்பர்கள் அனைவரும் என் மீது பூச வருகிறார்கள். என்னை மறைத்து வையுங்கள்."

கிருஷ்ணனின் பேச்சில் மயங்கினார் யசோதாம்மா. சில நிமிடங்களில் கண்ணனின் நண்பர்கள் அனைவரும் யசோதாம்மாவின் வீட்டில் கூடினார்கள்.

"கண்ணையா! கண்ணையா! எங்கே இருக்கிறாய் ?
சீக்கிரம் வெளியே வா. ஹோலி விளையாடுவோம் " கண்ணனின் அணைத்து சகாக்களும் வித விதமான நிறங்களுடைய தண்ணீருடன் நின்று கொண்டு இருந்தனர்

இதை உள்ளெ இருந்து கேட்டு கொண்டு இருந்த கண்ணன் "அம்மா ! வெளியே பொய் நான் இல்லை என்று சொல்லி விடுங்கள் "

அம்மாவும் கண்ணன் சொன்னது போல் வெளியே வந்து
சொன்னார்கள். ஆனால் சகாக்கள் இதை நம்பவில்லை. அவர்களுக்கு கண்ணனை பற்றி நன்கு தெரியும்.

சகாக்களில் மதுமங்கள் " நீங்கள் சொல்வதை நாங்கள் நம்ப மாட்டோம். நாங்கள் உள்ளே போய் பார்த்தால்தான் நம்புவோம்" வேறு வழி இல்லாமல் யசோதாம்மாவும் மதுமங்களை உள்ளே விட்டார்

அவனும் எல்லா இடமும்
தேடினான். கடைசியில் கண்ணனை பார்த்து விட்டான். மதுமங்கள் அவனை வெளியே வந்து விளையாடும்படி அழைத்தான்

கண்ணன் கெஞ்சினான் "தயவு செய்து நான் வீட்டில் இல்லை என்று சொல்லிவிடு "

ஆனால் மதுமங்கள் வெகுளி. அவன் " நான் பொய் சொல்ல மாட்டேன் " என்று சொன்னான். தொடர்ந்து கண்ணனை விளையாட வரும்படி
வற்புறுத்தினான். மதுமங்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்தான் கண்ணன் .மதுமங்களுக்கு லட்டு மிகவும் பிடிக்கும் என்று கண்ணனுக்கு தெரியும்.

உடனே கண்ணன் " நான் உனக்கு நிறைய லட்டுக்கள் தருகிறேன். தயவு செய்து நான் வீட்டில் இல்லை என்று சொல்லி விடு" என்றான். மதுமங்களுக்கு நாக்கு
ஊறியது. ஆனால் மதுமங்களுக்கு கண்ணன் மேல் நம்பிக்கை இல்லை

மதுமங்கள் " முதலில் லட்டுவை குடு . அப்புறம் நீ சொன்ன மாதிரி நான் சொல்றேன்" என்றான்.

கண்ணனும் லட்டுவை கொடுத்தான். மதுமங்கள் மகிழ்ச்சி அடைந்தான். மதுமங்கள் வெளியே சென்றான்

வெளியே காத்து கொண்டு இருந்த சகாக்கள் " கண்ணன்
எங்கே ? கண்ணன் எங்கே ? கண்டுபிடித்தாயா இல்லையா "

வெகுளியான மதுமங்களுக்கு பொய் எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை . பொய் என்றால் என்னவென்று தெரியாது அவனுக்கு.

மதுமங்கள் "கண்ணன் உள்ளே இருக்கிறான் .அவன் உள்ளே இல்லை என்று என்னை சொல்ல சொன்னான். அதனால் அனைவரும் செல்லுங்கள் "
அவ்வளவுதான்! அனைவரும் மொத்தமாக உள்ளே சென்றனர். மெத்தைக்கு அடியில் ஒளிந்து இருந்த கண்ணனை வெளியே இழுத்து வித விதமான நிறங்குலடைய தண்ணீரால் குளிப்பாட்டினர். கண்ணனும் பக்தர்களின் ஆசைக்கு இணங்க அவர்களுடன் விளையாடினர்.
மண்ணுடன் கிருஷ்ணன் தின்ற நாவல் பழங்கள்

அந்த பொடியனின் விஷமம் தாங்கமுடிய வில்லை. கொஞ்சம் பெரிய பையன்கள் விளையாடும் போது தானும் அவர்களோடு இணைவான். அவர்களோ முதலில் அவனை லட்சியம் செய்ய வில்லை. போகப் போக மூர்த்தி சிறிதானாலும் விஷம கீர்த்தி பெரியதாகத் தென்படவே, கூட்டு சேர்த்துக் Image
கொண்டார்கள். அவன் அம்மாவுக்கும் இது சௌகர்யமாக இருந்தது. கொஞ்ச நேரமாகவாவது அவன் விஷமம் வீட்டில் இருக்காதே!

அன்று நாவல் பழ மரம் அவர்களிடம் மாட்டிக் கொண்டது. ஆயர்பாடி நந்த கோபன் வீட்டுப் பின்புறம் அந்த பெரிய நாவல் மரத்தில் நிறைய பழங்களைப் பார்த்து விட்டு, பெரிய பையன்கள் மரம்
ஏறினார்கள்.

“கிருஷ்ணா, நீ சின்னவன், மரத்தில் ஏறாதே. நாங்கள் மேலே ஏறி கிளைகளை உலுக்கும்போது கீழே விழும் பழத்தை எல்லாம் பொறுக்கி, சேகரி. பிறகு நாங்கள் இறங்கி வந்தவுடன் அனைவரும் பங்கு போட்டுத் திங்கலாம்.”

“சரி” என்று தலை யாட்டிவிட்டு பழங்கள் மேலேயிருந்து உதிர்ந்ததும் ஒவ்வொன்றாக
அப்படியே மண்ணுடன் சேர்த்து தின்று கொண்டிருந்ததை ஒரு பயல் பார்த்து விட்டான்.

“டேய், எல்லாரும் அங்கே கீழே நடக்கிற அக்கிரமத்தைப் பாருங்கடா. முக்காவாசி பழத்தை அந்த கிருஷ்ணன் தின்னுண்டு இருக்கறதை!”

“இந்த கிருஷ்ணன் ரொம்ப மோசம். எவ்வளவு சாமர்த்தியம் பார்த்தாயா. எப்போ இவன் நம்பளை
ஏமாத்தினானோ அவனைப் பத்தி மண்ணு திங்கறான் என்று அவ அம்மாவிடம் சொல்லிடறேன். அவள் அவனுக்கு நல்லா “அப்பிச்சி தருவா!” என்று யோசனை தந்தான் ஒருவன். அதே போல் நடந்தது. யசோதை கோபமாக வெளியே வந்தாள். தூரத்தில் மரத்தடியில் பையன்கள் கூட்டம். நடுவே தரையில் கிருஷ்ணன் அமர்ந்திருந்தான். வாய் நிறைய
பழங்கள். உதடு கன்னம், தாடையில் எல்லாம் கருநீல நாகப்பழ வண்ணத்தில் மண்ணோடு கலந்து சாறு அப்பிக் கிடந்தது.

“உன்னோடு ஒரு நாள் கூட நிம்மதி கிடையாது எனக்கு. எப்பவும் ஏதாவது ஏடாகூடம். வாய் நிறைய இவ்வளவு மண்ணு தின்னால் உடம்பு என்னத்துக்கு ஆகும்? திற வாயை!”

“இல்லை” என்று தலையாட்டினான்.
கிருஷ்ணன் பேசவில்லை. பேசமுடியாதவாறு வாய் நிறைய நாகப்பழம்.

“அடம் பண்ணினே. பிச்சுடுவேன் பிச்சு. மரியாதையா வாயைத் திற.”

கண்கள் மலங்க மலங்கப் பார்த்தன. தலையை மீண்டும் அசைத்தான்.

“பிடிவாதமா பண்றே. இப்ப பார்.” யசோதா கிருஷ்ணன் வாயைக் கையால் திறந்தாள். வாய் மெதுவாகத் திறந்தது.
யசோதைக்கு விஸ்வரூப தரிசனம்

உள்ளே எவ்வளவு மண் இருக்கிறது என்று கவலையோடு பார்த்தாள். ஆனால் அவளுக்கு மார்பு படபட என்று அடித்துக்கொள்ள, கண்கள் இருள கை, கால் நடுங்க, தலை சுற்றியது. கிருஷ்ணன் வாயில் மண் அல்ல, மண்ணுலகம், வானுலகம், இந்த பிரபஞ்சமே தெரிந்தது! அனைத்தும் சுழன்றது. இதோ யமுனை Image
, கங்கை, ஹிமாசலம், இதோ ஆயர்பாடி கூட தெரிகிறதே அவள் வீடு, அந்த மரம், அதன் கீழே அவள், எதிரே தரையில் உட்கார்ந்து கொண்டு கிருஷ்ணன், திறந்த வாய், அந்த திறந்த வாய்க்குள் மீண்டும் பிரபஞ்சம், திரும்ப திரும்ப அளவில்லாத பிரபஞ்சம்...”

யசோதை கையை அவன் வாயில் இருந்து எடுப்பதற்குள் அவளே
தரையில் மயங்கி விழுந்தாள். அவன் வாயை மூடிக்கொண்டு சிரித்தான்.

சற்று நேரத்தில் சுதாரித்து கொண்டு எழுந்த யசோதா, “என் கிருஷ்ணா, நீ யார்...? இது என்ன கனவா? அல்லது ஆண்டவனின் செய்கையா! அல்லது என்னுடைய கற்பனைதானா? அல்லது இந்தச் சிறுவனுக்குத்தான் ஏதோ அதிசிய சக்தி இருக்கிறதா!" என்று
பலவாறு நினைத்துப் பார்த்தாள்.

அதற்குப் பிறகு, "இது கனவல்ல. நான் தான் என் கண்களாலேயே பார்த்துக் கொண்டியிருக்கிறேனே! கர்க்க மகரிஷி சொன்னது போல, என் மகனுக்கு ஏதோ தெய்வீக சக்தி இருக்க வேண்டும்" என்று தீர்மானித்தாள்.

கடைசியில் அவள் இறைவனைச் சரண் அடைந்தாள். தன் குழந்தையைக்
காப்பாற்றும்படி இறைவனை வேண்டிக் கொண்டாள். தீர்வு காண முடியாத பிரச்சனைகள் நம்மைத் தாக்கும் போது, பகவானிடம் சரண் அடைந்து, அவரை வேண்டிக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன இருக்கிறது? அறிவிற் சிறந்த யசோதை இந்த வழியைதான் பின்பற்றினாள். பகவான் கிருஷ்ணர் மாயை என்னும் வலையை அவள்மீது
வீசிவிட்டு, தாம் மீண்டும் பழைய குழந்தையைப் போல அவள்முன் தோற்றமளித்தார். கனவு உடனே மறைந்துவிடுவது போல நடந்த விசியங்களை அத்தனையும் யசோதைக்கு மறைந்துவிட்டன. தாய்ப்பாசம் மேலிடவே குழந்தையைத் தன் மடியில் கிடத்தி, அதைக் கொஞ்ச ஆரம்பித்தாள்.
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கிருஷ்ணதாசன்

கிருஷ்ணதாசன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!