நாம் திருக்கோயிலை விட்டு நகர மனம் வராத அளவு அழகுப் பொங்க காட்சியளிக்கிறாள் அருள்மிகு வனதுர்கை அம்மன்.
அரக்கர்கள் சிலர், தாங்கள் பெற்ற வரத்தால் மூவுலகங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இவர்களின் தொந்தரவு, மும்மூர்த்தியரையும் விட்டுவைக்கவில்லை.
இந்த அசுரர்களை அழிக்க வேண்டி, மும்மூர்த்திகளும் மற்ற தேவர்களும் ஆதி பராசக்தியின் அருள் வேண்டி மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினர்.
இந்த யாகத்தின் பலனாகத் தோன்றிய அம்பிகை, தன் அம்சத்துடன் தேவாதிதேவர்கள் அனைவரது அம்சத்தையும் இணைத்து துர்கையாக அவதரித்து,
மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் ஆகியோரை வதம் செய்தாள்.
பின்னர் ஏகாந்தியாக இந்த ஆலயத்தில் உலக நன்மைக்காக தாமரை பீடத்தின்மேல் மங்கலம் தரும் மகாலக்ஷ்மியாக அருள்புரிகிறாள் என்கிறார்கள் பக்தர்கள்.
கர்ப்பகிரக நுழைவாசலுக்கு மேற்புறம் சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சண்டகண்டீ, கூஷ்மாண்டீ, ஸ்கந்தமாலா, சித்திதாயினி, காத்யாயினி, காலராத்ரி, மஹாகவுரி ஆகிய தேவியரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அம்மையின் எதிரில் சிம்மவாகனம் அமர்ந்த நிலையில் இருக்கிறது.
எல்லா நாட்களும் ராகு காலத்தின்போது இவளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு அதிதேவதை, இந்த தேவி என்கிறார்கள்.
அத்துடன், இவ்வூரிலும் சுற்றுவட்டாரப் பகுதியிலும் தங்களின் குலதெய்வம் எதுவென்று தெரியாத அன்பர்கள்
இந்த அன்னையையே தங்களின் குல தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.
ராகுபகவானின் இஷ்ட தெய்வம் துர்கை.
எனவே அவர் துர்கையை பூஜை செய்யும் காலத்தில் (ராகு காலத்தில்), நாம் அவளை வழிபடுவது கூடுதல் விசேஷம்.
ராகு தோஷம் உள்ளவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஏதேனும் ஒருநாள், இந்தத் தலத்துக்கு வந்து, துர்காதேவிக்கு 54 அல்லது 108 எண்ணிக்கையிலான எலுமிச்சை பழங்களால் மாலை கோத்து, அம்மனுக்குச் சமர்ப்பித்து வழிபடலாம்.
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமைதோறும் விரதமிருந்து பால் அபிஷேகம் செய்து, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
இவ்வாறு, மகிமைகள்பல கொண்ட கதிராமங்கலம் திருத்தலத்துக்கு ஒருமுறையேனும் சென்று,
வனதுர்கை அம்மனைக் கண் குளிரத் தரிசித்து, அகமகிழ வழிபட்டு வரம்பெற்று வருவோம்.
செல்வ விருத்திக்கு செந்தாமரை அர்ச்சனை!
குடும்ப விருத்திக்காக இந்த அம்பிகைக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.
மேலும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வழக்கில் வெற்றி பெறவும், வியாபாரம் விருத்தியடையவும்
இந்த அம்மனிடம் வந்து பிரார்த்திக்கிறார்கள்.
இல்லத்தில் செல்வம் செழிக்க செந்தாமரை பூக்களாலும், கடன்கள் தீர்வதற்கு செவ்வரளி பூக்களாலும், தொழில் வெற்றிபெறுவதற்கு செம்பருத்தி பூக்களாலும், திருமணம் கைகூட மஞ்சள் நிற மலர்களாலும் இந்த அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால்,
இந்த அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவளின் திருவருளால் விரைவில் பலன் கிடைக்கும்.