தஞ்சை ஆ.மாதவன் Profile picture
Passionate about #Archaeology #Anthropology #Astrobiology #Paleontology | Threads on #தொல்லியல்நூல் | #தொல்லியற்களம் | #ஆய்வுக்கட்டுரை | #ArchaeologyBook

May 16, 2021, 15 tweets

கல்வெட்டுகளில் முதியோர் பாதுகாப்பு!

முதியோர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கங்கள் இன்று பல்வேறு திட்டங்களை, அறிவிப்பதைக் காண்கிறோம். அவர்களுக்கான உதவிகளைப் பணமாகப் பெறவும், மருத்துவ சலுகைகள், பயணக் கட்டணத்தில் சலுகை, ஆலயத்தினுள் நடக்க முடியாதவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் என 1/n

இப்படி பல அம்சங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் பழங்காலத்தில் இருந்தே ஓர் அறமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வயதில் முதியவர்களாக இருப்பவர்களால் வெகு தொலைவு நடக்க இயலாது. அவர்களுக்கு திருக்கோயில்கள் உதவி செய்திருக்கின்றன. 2/n

இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பண்டை நாளில் திருக்கோயில்களில் அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை இருந்தன.

#கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில் #அறச்சாலை இருந்ததாக சோழர் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 3/n

#திருவீழிமிழலை வீழிநாதேசுவரர் கோயிலில் "திருநாவுக்கரசர் மடம்" என ஒரு மடம் இருந்ததை அறிய முடிகிறது.

#திருவாரூர் ஆந்தக்குடி சோமேசுவரர் கோயிலில் காணும் கல்வெட்டில் "தியாகவினோதன் சாலை" குறிப்பிடப்படுகிறது. இதில் உணவு உண்ணும் தபசிகளுக்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது

#திருச்சி அருகே உள்ள #திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் மலைக்கோயிலில் #சத்திரம் ஒன்றை "செம்பியன்வேதி வேளான்" என்பவன் அமைத்தான்.

அதே சத்திரத்தினை பிற்காலத்தில் இராஜராஜசோழன், விக்கிரமசோழன் போன்ற மன்னர்கள் தொடர்ந்து பராமரிக்கவும், அங்கு தங்குபவர்களுக்கு உணவு அளிக்க தானம் அளித்தனர். 5/n

இதில் தங்கும் ஒவ்வொருவருக்கும் அரிசி, காய்கறி, புளி, நெய், தயிர், பாக்கு, வெற்றிலை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டதைக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.

திருக்கோயிலுக்கு வெளியூரிலிருந்து வந்து பலர் வழிபட்டனர்.

இவர்களை #ஆபூர்விகள் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன... 6/n

இவர்கள் கோயிலில் வந்து தங்கிச் செல்லும் பொழுது உணவு வழங்கப்பட்டது. இதனைக் கல்வெட்டுகள் #சட்டிச்சோறு எனக் குறிக்கின்றன.

#சட்டிச்சோறு பற்றிய மேலதிக தகவல்களுக்கு 👇

இவ்வாறு இந்த நற்செயலுக்காக அளிக்கப்பட நிலம்  #சட்டிச்சோற்றுப்புறம் என அழைக்கப்பட்டதை #திருவாரூர் மாவட்டம் #நன்னிலம் அருகே உள்ள #திருப்பனையூர் சௌந்தரேசுவரர் கோயிலில் காணப்படும் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 8/n

#திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது சிவயோகிகளுக்கும், தபசியர்களுக்குமாக 1000 #சட்டிச்சோறு வழங்க தானம் அளிக்கப் பெற்றதை இரண்டாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 9/n

வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் திருக்கோயில்களில் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன.

இதனை "ஆதுலர் சாலை" எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

திருக்கோயில்களில் மடங்கள் இருந்தது போன்று, அருகிலேயே சத்திரங்களும் அமைக்கப்பட்டன... 10/n

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் சோழ நாட்டிலிருந்து இராமேசுவரம் செல்லும் பாதையில் 20க்கும் மேற்பட்ட சத்திரங்கள் அமைக்கப்பட்டதை அறிய முடிகிறது. திருவையாறில் காவிரிக் கரை அருகில் உள்ள "செவ்வாய்க்கிழமை படித்துறை" சத்திரம் மன்னர் சிவாஜி 1852ல் கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது.

#தஞ்சை அருகே ஒரத்தநாட்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் (1798-1832) அமைக்கப்பட்ட "முத்தம்மாள்" சத்திரத்தில் கருவுற்ற பெண்களையும், சிறு கைக்குழந்தைகளையும் தனி கவனத்துடன் பார்த்துக் கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கைக் குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டது... 12/

1869-ஆம் ஆண்டில் இங்கு மருத்துவமனையும், பள்ளிக்கூடமும் நிறுவப்பெற்றன.

மாணவர்களுக்கு இருவேளை உணவு வழங்கப்பட்டது. அவர்கள் தேய்த்துக் குளிக்க நல்லெண்ணெய், சீயக்காய் வாரம் இருமுறை அளிக்கப்பட்டது.

தல யாத்திரையாக வரும் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது... 13/n

முத்தம்மாள் சத்திரத்தில் காலை 9 மணிக்கு மேல் உணவுப் பொருளும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், அதன் பின்னர் நடமாட இயலாதவர்களுக்கு வீதிதோறும் உணவு எடுத்துச் சென்றும் வழங்கப்பட்டது.

ஊரில் உள்ள முதியவர்கள் இச்சத்திரத்தில் தொகைப் பெற்றனர்... 14/n

கோயிலின் சார்பில் இருந்த அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை வயது முதிர்ந்தோர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் வேண்டிய உணவு, மருத்துவ வசதி போன்றவைகளை அளிக்கும் கடமையை மற்றும் மக்களுக்கு வேண்டிய நற்பணிகளைச் செய்து வந்தன என்பதை கல்வெட்டுகளால் அறிய முடிகிறது...

நன்று.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling