திமுகவை ஆதரிப்பது என்பது பதவிக்காகவோ, பணத்துக்காகவோ அல்ல. அது ஒரு நன்றிக்கடன்!
திமுக மீது எவ்வளவு அவதூறை, வன்மத்தை இன்றைய இளைஞர்களிடம் பரப்பி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பியின் புரிதல் ஒரு உதாரணம்!
பெரியார் ஏன் சிறந்தவர், காமராசர் ஏன் சிறந்தவர் என்பது மக்களுக்கு எளிதில்
புரிந்து விடும். ஏனெனில், அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பதை திரும்பத்திரும்ப பேசியும், சொல்லியும், எழுதியும் வருகிறோம்.
ஆனால், அண்ணா ஏன் சிறந்தவர்? கலைஞர் ஏன் சிறந்தவர்? என அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால், அவர்கள் மக்களை அதிகாரம் பக்கம் திருப்பினார்கள்.
பொருளாதார சுதந்திரம் தந்தார்கள். ஆகையால், திமுக என்றால் பணம், பதவி, அதிகாரம் தான் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. அதை தவிர்க்கவும் முடியாது. திமுக என்றால் வெறும் ஊழல் கட்சி மட்டும் தான் என்ற சங்கிகளின் தொடர் பரப்புரை வென்றதும் இப்படித்தான்!
இங்கே இன்னொரு முரண் என்னவென்றால்,
சங்கிகள் எந்தளவுக்கு திமுகவை வெறுக்கிறார்களோ, அதே அளவுக்கு தங்களை புரட்சியாளர்கள் என்று கருதிக்கொள்ளும் தோழர்கள் சிலரும் வெறுப்பது தான்!
சங்கிகள் திமுகவை எதிர்ப்பது மிக சிப்பிள் லாஜிக். சங்கிகள் திமுகவை தங்கள் கொள்கையின் நேரடி எதிரியாக பார்க்கிறார்கள். இயற்கையை காப்போம்
என ஒரு பக்கம் நம்மை பேசவிட்டு அவர்கள் நீட், ஐஏஎஸ் என நம் மக்களின் உயர்வை அழிக்க வருகிறார்கள்.
இதில், தோழர்கள் திமுகவிடம் முரண்படுவதை புரிந்துக்கொள்வது கொஞ்சம் சிக்கலானது. சில பெரியாரியர்கள், திமுக பெரியாரியத்தை நீர்த்துப்போகச் செய்கிறது என குற்றம் சாட்டுவார்கள்.
சில தமிழ்தேசியர்கள், அண்ணா, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது கொள்கை சமரசம் என்பார்கள்.
சில தலித்தியவாதிகள் திமுக சூத்திரர்களின் கட்சி என சொல்லுவார்கள்.
சில பொதுவுடமை தோழர்கள், திமுக முதலாளிகளின் கட்சி என்பார்கள்.
மேலோட்டமாக பார்த்தால், இதில் எல்லாமே உண்மை இருப்பது
போலத்தான் இருக்கும். உண்மை இல்லாமலும் இல்லை.
ஆனால், திமுக திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, மாநில சுயாட்சியை கையில் எடுத்தது.
திமுக பெரியாரின் இயக்க அரசியல் பாதையை கைவிட்டு, தேர்தல் அரசியலை கையில் எடுத்தது. புரட்சிப்பாதையை கைவிட்டு மக்களாட்சி பாதையை தொடர்ந்தது.
சூத்திரர்களின் ஆட்சி என சொல்லப்படும் ஆட்சியில் தான் இந்தியாவிலேயே அதிகமான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. கட்சியிலும் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது திமுக. இசைவேளாளர் எனும் மிகவும். ஒடுக்கப்பட்ட ஆள் பலமில்லாத சாதியை சேர்ந்த கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்ததே சமூகநீதியின்
வெற்றி தான். பறையர்களின் கட்சி என்று பேர் வாங்கிய கட்சியான திமுக, இன்று பறையர்களுக்கு கருணாநிதியின் துரோகம் என்று புத்தகம் வெளியிடும் கட்டத்தில் இருப்பதன் பிண்ணணியை ஆராயவேண்டும்!
ஐடி கம்பெனிகள், கார்ப்பரெட் கம்பெனிகளை கொண்டு வந்த அதே திமுக தான், ஒரு ரூபாய் அரிசியில்
இருந்து இலவச மருத்துவ காப்பீடு வரை சோசியலிச பாதையில் பயணித்ததும் திமுக தான்!
பார்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில் பார்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு எதிரான பண்பாட்டை நிறுவியவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களின் பெயர் சிரமணர்கள். அதாவது, சிரமமான
பாதையான கடும்தவம், புலால் மறுப்பு, துறவு வாழ்க்கை என்று வாழ்ந்தார்கள். கௌத்தம புத்தர் தனது ஆரம்ப காலத்தில் இந்த கடுந்தவ வாழ்க்கையை தான் வாழ்ந்தார். பிறகு, தன்னை உணர்ந்த போதி நிலையை அடைந்த பின், புத்தர் தனது பாதையை “மஜ்ஜிம பதிபாதம்” என்ற நடுநிலை பாதைக்கு மாறினார்.
அதாவது, கடும் தவம் தேவையில்லை. ஒரு எளிய மனிதனும் பின்பற்றும் வகையில் பௌத்தத்தை உருவாக்கினார். அதே வேளையில், தனது அடிப்படை கொள்கையான பகுத்தறிவு, உயிர் நேயம், அறம் சார்ந்த வாழ்வியல் என்பதிலும்..மானுட வாழ்வில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பரப்புவதிலும்
எவ்வித சமரசமும் செய்யவில்லை. இன்று உலகெங்கும் பௌத்தம் பரவி வாழ்வதற்கு இந்த நடுநிலை பாதையும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.
திமுகவின் பாதையும் ஒரு வகையில் இந்த நடுநிலைபாதை தான். அது தான் தேர்தல் பாதை. மக்களாட்சி என்கிற ஜனநாயக பாதை.
ஆனால், அது சென்று சேரும் இடம் புத்தம் - பெரியாரியம்- அம்பேத்கரியம் காட்டிய சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவமாக தான் இருக்கும்!
கலைஞர் தந்த இலவச பஸ்பாஸ் தான் அவர் எனக்குள் விழுந்த முதல் விதை. தொண்ணூறுகளில் என்னைப்போல ஒரு நகர் புற, நடுத்தர பொருளாதார மாணவனுக்கு போகவர 80+80 = 1 ரூபாய் 60 காசுகள் டவுன்பஸ்ஸில் கொடுப்பது பெரிய விசயமில்லை. ஆனால், தஞ்சையை சுற்றி இருக்கும் எண்ணற்ற ஊர்களில் இருந்து டவுனுக்கு
படிக்க வரும் பிள்ளைகளுக்கு அது மிகப்பெரிய விசயம்!
இலவசங்களால் வீழ்ந்தோம் என்று சொல்லும் அரைவேக்காடுகளுக்கு சமூகநீதி என்றால் என்னவென்று கிஞ்சித்தும் தெரியாது.
உன் சுமைகள் அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். உன் வேலை படிப்பது மட்டும் தான். படித்து உன் வீட்டை காப்பாத்து.
பின் நாடு தானாக உயரும். இது தான் காமராசர், அண்ணா, கலைஞர் என ஜெயலலிதா வரை செய்தது.
அவை இலவச சத்துணவு அல்ல, என் வயிற்றுப்பசியை போக்கி என் அறிவுப்பசியை புசிக்கச்செய்யும் ஊட்டச்சத்து!
அவை இலவச சைக்கிள்கள் அல்ல, என் காலால் நானே உயர்வதற்கு தந்த சுயமரியாதை வண்டி!
ராகுல் காந்தியை பப்பு என ட்ரோல் பண்ணி மோடி மஸ்தானை பிரமாண்டமாக காட்டி ஆட்சி பிடிக்க வைத்து.. நம்மை வதம் செய்த அதே பார்முலாவை தமிழ்நாட்டில் காவிகள் ஸ்டாலினுக்கு செய்கிறார்கள். நாமும் அந்த விஷம பிரச்சாரத்துக்கு பழியாகிறோம். நமக்குள் எதிரியை உருவாக்கிவிட்டு..
அவர்கள் வந்து நம் மேல் உட்கார வழி செய்கிறார்கள்.
திமுக என்பது ஊழல் கட்சி என்று 2ஜி வழக்கில் வெற்றி பெற்ற பின்னும் மக்களை பேச வைப்பது என்பது காவிகளின் உளவியல் யுத்தத்தின் வெற்றி.
காலம் காலமாக தங்களை எதிர்த்தவர்கள் மீது ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துவிட்டு..நாம் அந்த பிம்பத்தை
போக்க போராடிக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் தங்கள் வேலைகளை செவ்வனே செய்து முடிக்கிறார்கள். இந்த நுண்ணரசியலை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளர்களாக தான் நம் மக்கள் அறிகிறார்கள். இதுக்கு திக சரியான பிரச்சாரம் செய்யவில்லை என்று
நான் அடிப்படையில் ஒரு திமுக ஆதரவாளனாக தான் இருந்தேன். ஆனால், 2009ல் தீவிரமாக திமுக-காங்கிரஸ் எதிர்ப்பாளனாக அன்றைய உணர்ச்சி மேலிட்ட நிலை மாற்றியது. இத்தனைக்கும் 2009ல் கம்யுனிஸ்ட்டுகள் ஆதரவுடன் நடந்த காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக தான் இருந்தது. 2011 ல் ஈழத்தாய் ஜெயித்தது எல்லோருக்கும்
தெரியும். ஈழத்தமிழர்களுக்கு அவர் ஒன்றும் புடுங்கியதில்லை, புடுங்கப்போவதில்லை என்றெல்லாம் என் அறிவுக்கு எட்டாமலில்லை.
நிற்க!
அப்படியே 2014 தேர்தலுக்கு வருவோம். நான் அப்போதும் திமுக ஆதரவாளனாக மாறிவிடவில்லை. ஆனால், மோடி என்பவன் ஒரு மனித குல விரோதி, மத வெறியன்,
பச்சை பாஸிஸ்ட் என்ற அடிப்படை அரசியல் அறிவு இருந்தது. மிக கடுமையாக மோடியை எதிர்த்தேன். லண்டனில் தனியொரு திராவிடனாய் வடவர்களுக்கு மத்தியில் மோடி எதிர்ப்பாளனாய் இருந்தேன். மோடி ஜெயித்த இரவு என்னால் தூங்க முடியவில்லை. ஒரு மூத்த எழுத்தாளரின் inbox ல் புலம்பி தள்ளினேன்.
மிசா காலத்தில் அப்பாவை சிறையில் சென்று அடைத்தார்கள்.., ஒரு வருடம் சிறையில் இருந்தார் என் அப்பா.. நானும் என் தம்பியும் பள்ளி படிக்கும் குழந்தைகள். ஸ்டாலின் உட்பட எல்லோருமே சிறையில் இருந்தார்கள்.. சிறையில் அடித்து துன்புறுத்தல் என்ற செய்தி தான் எங்களுக்கு கிடைத்தது..
யார் எந்த சிறை என்று யாருக்கும் தெரியாது..
என்னுடைய தாய் இரண்டு குழந்தைகளோடு மதுரை கலக்டர் ஆபிஸ் வாசலில் நின்று செய்வது அறியாது திகைத்து நின்றார்.. எங்களோடு ஏகப்பட்ட திமுக குடும்பங்கள் கலக்டர் வாசலில் நின்று அழுதுகொண்டு இருந்தார்கள்..
ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறையில் இருந்த திமுக குடும்பங்கள் மளிகை சாமான் வாங்க முடியாமல் கஷ்டப்படும் செய்தி அறிந்து சென்னையில் இருந்து மளிகை சாமான்களோடு ஒவ்வொரு திமுக குடும்பத்திற்கும் சென்று மளிகை சாமான்கள் கொடுத்து ஆறுதல் கூறிவிட்டு வந்த ஒப்பற்ற தலைவர் எங்கள் தலைவர் கலைஞர்..
உலக பிராமணர்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பு, பாஜக ஆதரவு எடுத்திருக்கிறது என்ற ஒரு செய்தியைப் பகிர்ந்து இருந்தேன். கூடவே பெரியாரின் ஒரு வாசகத்தையும் சொல்லியிருந்தேன். சில நண்பர்கள் எனக்கு இன்பாக்ஸில் வந்து, தாங்கள் பிறப்பால் பார்ப்பனர்கள். ஆனால், பல காலமாக திமுகவை
ஆதரிப்பவர்கள் என்றார்கள். திமுக ஆதரவில் இருக்கும் பல பார்ப்பனர்களை நான் அறிவேன். அவர்களில் பலர் என் நட்பு பட்டியலில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை பார்ப்பனர்கள் என்று எங்கேயும் குறிப்பிட்டு கொள்ள மாட்டார்கள். நாங்களும் திராவிடர்கள் என்று சொல்பவர்கள் உண்டு.
திராவிடம் பிறப்பால் மனிதர்களை பிரிப்பதில்லை. பிறப்பால் மனிதர்களை பிரிப்பது சாதிய அமைப்பு (அ) பார்ப்பனியம் (அ) வர்ணாசிரம தர்மம் அல்லது இந்துத்துவம். எல்லோரும் சமம் என்று சொல்வது திராவிடம். பார்ப்பனிய எதிர்ப்பு என்பது பண்பாட்டு எதிர்ப்பே தவிர மனிதர்களை எதிர்ப்பது அல்ல.
இந்துத்துவ அரசியல் என்றால் தமிழர் பார்வையில் என்ன?
தமிழர் நலன், தமிழர் பண்பாடு, தமிழர் மெய்யியல், தமிழ் மொழி ஆகியவற்றை அழித்து ஹிந்து, ஹிந்து பண்பாடு, ஹிந்து மதம், சமஸ்கிருதம் என மாற்றுவது. சிறுபான்மையினர் மதங்கள், பிற்படுத்தப்பட்ட பட்டியிலின
மக்களுக்கு எதிரான உயர் சாதி ஆதிக்க அரசியல் செய்வது.
இந்துத்துவம் தனது நேரடி எதிரியாக யாரைப் பார்க்கிறது? ஏன்?
இந்துத்துவம் தனது நேரடி எதிரியாக திராவிட கொள்கையை பேசும் கட்சிகளையும்,தமிழர் உரிமை பேசும் கட்சிகளையும், பொதுவுடமை பேசும் கட்சிகளையும் பார்க்கிறது. அதாவது, திமுக, விசிக,
கம்யுனிஸ்ட் கட்சிகளை நேரடி எதிரியாக பார்க்கிறது. அதில் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்புள்ள திமுகவை தனது முதல் எதிரியாக பார்க்கிறது.
ஒருவேளை, தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமையாவிட்டால் என்ன நடக்கும்?
தமிழ்நாட்டு அரசாங்கத்தை பாஜக தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.