சென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா?

பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எஸ்.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத்நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது.
10.12.1948இல் இந்திய அரசிடம் இக்குழு அறிக்கையைக் கொடுத்தது. இப்போது உள்ள நிலையில் புதிய மாநிலம் எதையும் உருவாக்கத் தேவையில்லை என்று இக்குழு கருதியது. அந்த அறிக்கையில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 70%க்கு மேல் ஒரே
மொழியைப் பேசும் மக்கள் இருந்தால் தான் அதை ஒரு மொழிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் 70%க்குக் கீழ் ஒரு மொழியைப் பேசும் மக்கள் உள்ள பகுதியை ‘இரு மொழியாளர் பகுதி’ (அ) பல மொழியாளர் பகுதி என்றே கருதவேண்டும் என்ற கருத்தை அறிவித்தது.
திருவாங்வர், கொச்சி இரண்டு நாடுகளும் மன்னராட்சியில் இருந்து விடுபட்டு இந்திய அரசில் இணைந்துள்ள இரண்டு மாநிலத்தையும் ஒரே மாநிலமாக இணைக்கப் பரிந்துரைத்தது.
புதிய மாநிலப் பிரிவினை வேண்டாம் என்று அக்குழு கருத்தறிவித்ததால் ஆந்திரர்கள் கோபமுற்றனர். ஏனென்றால் அவர்கள் 1913 முதலே தனி மாநிலம் வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். அதற்காக 1937க்குப் பிறகு தீவிரமாகப் போராடி வந்தனர்.
1913இல் ஆந்திர மகாசபை உருவானது. அன்றைய சென்னை மாகாண அரசின் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும், மராத்தியப் பார்ப்பனர்களும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். ஆந்திரப் பார்ப்பனர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வேலை வாய்ப்புகள் கிடைத்தன.
சென்னைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களே அதிகமாக இடம் பெற்றனர். ஆந்திர மாணவர்களுக்குப் போதுமான இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே தெலுங்குக் காரர்களுக்குத் தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை உருவானது.
(Political History of Andhra Pradesh 1901-2009) (Innaiah-பக். 13) நாளடைவில் அந்தக் கோரிக்கை வலுப்பெற்றுவந்தது.

1917இல் கல்கத்தாவில் அன்னிபெசன்ட் தலைமையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு மாநாட்டில் ஆந்திரர்களுக்குத் தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை விண்ணப்பத்தை அளித்தனர்.
அன்னிபெசன்ட்டும் காந்தியும் அக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர். திலகர் அக்கோரிக்கையை ஆதரித்தார்.

காந்தி மொழி வாரியாக காங்கிரஸ் கமிட்டிகளை அமைப்பதற்கு முன்பே ஆந்திரர்கள் 20.1.1918இல் நீதிபதி சுப்பராவ் தலைமையில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியை அமைத்துக் கொண்டனர்.
அதனால் வேறு வழிஇன்றிக் காந்தி மொழி வாரியாகக் காங்கிரஸ் கமிட்டிகளை 1920இல் அமைத்தார்.

எல்லா மாநிலக் காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் தலைநகரை அந்த அந்த மாநிலத்திலே அமைத்த காங்கிரஸ் கட்சி ஆந்திரக் காங்கிரஸ் கமிட்டிக்கு மட்டும் தலைநகரை ஆந்திராவில் அமைக்காமல் சென்னையிலே இருக்கும்படி
அமைத்துவிட்டனர். இது முதல் தவறு. இது குறித்து ம.பொ.சி. அவர்களும் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“சென்னை நகரில் ஆந்திரா ஜில்லா காங்கிரஸ் கமிட்டி அமைப்பதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் அங்கீகாரம் கொடுத்தது. சென்னை கார்ப்பரேஷன், சட்டசபைத் தேர்தல்களில் அபேட்சகர்களைப்
பொறுக்கி எடுக்கும் வேலையில் ஆந்திரக் காங்கிரசைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டது. சென்னை நகருக்குரிய அசெம்ளி (சட்டசபை) தொகுதிகளில் சரிபாதியை ஆந்திரருக்கு அளித்ததோடு அத்தொகுதிகளுக்கு அபேட்சகர்களைப் பொறுக்கி எடுக்கும்
உரிமையையும் ஆந்திர மாகாண காங்கிரசுக்கே வழங்கியது தமிழ்நாடு காங்கிரஸ்” (செங்கோல் 5.12.54)

தமிழகத்தின் வடக்கெல்லை தெற்கெல்லைப் பகுதிகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை, சித்தூர் பகுதி ஆந்திரக் காங்கிரசிடமும் தென் திருவிதாங்கூர்
பகுதி திருவாங்கூர் - கொச்சி காங்கிரசிடமும் அளித்திருந்ததும் அப்பகுதிகள் நமக்குக் கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம் என கோல்டன் சுப்பிரமணியம் தன்னுடைய ‘வடக்கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும்’ என்ற நூலில் பக். 29இல் பதிவு செய்துள்ளார்.
(குறிப்பு: அவர் வடக்கெல்லையை மட்டும் குறிப்பிட்டிருந்தார்)

1948இல் ஜெய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் கமிட்டி மொழிவாரி மாநிலங்களை அமைக்க ஆய்வு செய்யுமாறு காங்கிரசில் இருந்த மூவர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவிற்கு (ஜெ.வி.பி.) குழு என்று பெயர். ஜவஹர்கலால் நேரு,
வல்லபாய் பட்டேல், பட்டாபி சீத்தாராமையா ஆகிய மூவர் அடங்கிய அந்தக் குழு ஆய்வு செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் அறிக்கையை 1.4.1949இல் அளித்தது.

அந்தக் குழுவிற்கும் மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதற்கு விருப்பம் இல்லையெனினும் ஆந்திர மக்களின் போராட்டங்களைக்
காரணமாகக் காட்டி ஆந்திராவை மட்டும் பிரித்துத் தனிமாநிலமாகக் கொடுக்கச் சிபாரிசு செய்தது. சென்னையை ஆந்திரர்கள் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்தது. (ஜெ.வி.பி. குழு அறிக்கை பக்.14) அக்குழுவில் இடம் பெற்றிருந்த பட்டாபி சீத்தாராமய்யா எவ்வளவோ முயன்றும் நேருவும்,
பட்டேலும் சென்னையை ஆந்திராவுக்குக் கொடுக்க மறுத்துவிட்டனர்.

1949இல் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி சென்னை மாகாண அரசாங்கத்தையும், ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டியையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியையும் அழைத்து ஆந்திர மாநிலம் பிரிவினை தொடர்பான அனைத்து அம்சங்களையும்
ஆராய்ந்து முடிவெடுக்க இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்துக் கேட்டுக்கொண்டது.

இந்திய அரசு இந்த மூவர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு ஆந்திரத்தைத் தனி மாநிலமாகப் பிரித்துக் கொள்ள சென்னை மாகாண அரசாங்கத்தையே ஒரு குழுவை அமைத்து முடிவு செய்யக் கேட்டுக் கொண்டது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கடித எண். 651/49/15 நாள் 25.11.1949. இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலப் பிரிவினை தொடர்பாக ஒரு அதிகாரப்பூர்வ குழுவைச் சென்னை மாகாண அரசு அமைத்தது. அக்குழு அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி ராசா தலைமையில் அமைக்கப்பட்டது.
அக்குழுவில் டி. பிரகாசம், டி. கோபால்ரெட்டி, என். சஞ்சீவரெட்டி, காலா வெங்கட்ராவ் ஆகிய நால்வர் ஆந்திர காங்கிரசின் பிரதிநிதிகளாகவும், குமாரசாமிராசா, எம். பக்தவச்சலம், டி. டி. கிருஷ்ணமாச்சாரி ஆகிய மூவர் தமிழகக் காங்கிரசின் பிரதிநிதிகளாகவும்,
மாதவமேனன் கேரளக் காங்கிரசின் பிரதிநிதியாகவும் உறுப்பினர்களாக இருந்தனர். 17 முறை அக்குழு கூடி விவாதித்தது.

சென்னை மாகாண அரசு சென்னைக்கு ஈடாக ஆந்திராவில் புதிய தலைநகரை ஏற்படுத்திக் கொள்ள ரூபாய் ஒரு கோடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அப்போது இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 95 பேர் ஆந்திராவுக்குப் பிரிந்து செல்ல வேண்டும் என்றும் மீதம் 174 உறுப்பினர்கள் சென்னை மாகாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. புதிய ஆந்திரத்தின் தலைநகர் ஆந்திர எல்லைக்குள் அமைய வேண்டும் என்றே முடிவு செய்யப்பட்டது.
(பிரிவினைக் கமிட்டி அறிக்கை பக். 4)

ஆந்திராவின் உயர்நீதி மன்றம் ஆந்திர எல்லைக்குள் அமைய வேண்டும். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் 16 பேரில் 7 நீதிபதிகள் புதிய ஆந்திர உயர்நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டும். (அறிக்கை பக். 4)
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அனைவரும் புதிய ஆந்திர மாநில அரசுக்கு செல்ல வேண்டும். ICS அதிகாரிகளைப் பொறுத்து அவர்கள் இந்திய அரசால் நியமிக்கப்படுவதால் மொத்தம் உள்ள 43 பேரில் ஆந்திராவுக்கு 16 பேர் பேச்சுவார்த்தை மூலம் அவரவர்களின்
விருப்பத்தை அறிந்து மத்திய அரசுக்குத் தெரிவித்துச் சுமூகமான முறையில் மாற்றிக் கொள்ள வேண்டும். (அறிக்கை பக். 28)

IAS அதிகாரிகள் மொத்தம் 28 பேர் சென்னை மாகாண அரசில் பணியில் இருந்தனர். அதில் 38% மக்கள் தொகை அடிப்படையில்
11 பேர் ஆந்திராவுக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது (அறிக்கை பக். 30)

சென்னை மாகாண அரசு எல்லாத் துறைகளைப் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டு ஆந்திர மாநிலப் பிரிவினை அறிக்கைiயை 25.12.1949இல் இந்திய அரசுக்கு அனுப்பியது.
இந்தியா குடி அரசு நாளாக மலரவிருக்கும் 26.1.1950இல் ஆந்திர புதிய மாநிலம் உருவாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குழுவின் முடிவைச் சென்னை மாகாண அரசின் கெசட் மூலம் பதிவு செய்து இந்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த டி. பிரகாசம் இதில் சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தார். மின்சாரச் செலவினங்களுக்குத் தமிழ்நாடு பகுதிக்கு அதிக அளவில் ஏற்கெனவே செலவு செய்யப்பட்டிருப்பதால் புதிய ஆந்திர அரசுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார்.
(அறிக்கை பக். 2) சென்னை நகரிலுள்ள அரசு கட்டிடங்களை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்றாற் போல் ரூ. 1 கோடி என்பதை உயர்த்திக் கொடுக்கவேண்டும் என்றார்.

டி. பிரகாசம் தன்னுடைய எதிர்ப்புகளைத் தனியாக அதில் பதிவு செய்துள்ளார்.
ஆந்திராவில் புதிய உயர்நீதி மன்றம் கட்டும் வரையில் ஆந்திர உயர்நீதி மன்றம் சென்னையிலே இருக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.
ஆந்திரக் காங்கிரஸ் கமிட்டி 11.11.1949இல் கூடியபோது பட்டாபி சீதாராமய்யா கூறியது கருத்தாவது. ஜெ.வி.பி. கமிட்டியில் சென்னை நகரத்தை ஆந்திரர்கள் கேட்கக்கூடாது என்று முடிவு செய்த காரணத்தினாலேயே அது தமிழர்களுக்குச் சொந்தம் என்று ஆகிவிடாது. ஜெ.வி.பி.
கமிட்டியில் புதிய ஆந்திர அரசு தகராறுக்கு இடமில்லாத வகையில் அமைந்த 12 மாவட்டங்களைப் புதிய மாநிலமாக அமையும் என்று கூறியுள்ளதாலேயே சென்னையைத் தமிழர்களுக்கு விட்டுக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. (அறிக்கை பக்.5)
ஆந்திராவில் புதிய தலைநகரம் உருவாகும் வரை ஆந்திர அரசின் தலைமை அலுவலகங்கள் சென்னையிலே இருக்க வேண்டும். சென்னை மாநகரத்தையும் அதைச் சுற்றியுள்ள இருமொழி பேசுவோர் பகுதிகளையும் இணைத்துத் தனி கமிஷனர் மாகாணமாக ஆக்கவேண்டும். (அறிக்கை பக். 5) பட்டாபி சீத்தாராமையா
இக்குழுவில் இடம் பெறவில்லை என்றாலும் அவருடைய கருத்துகளை டி. பிரகாசம் பதிவு செய்துள்ளார். ஆந்திர உயர்நீதி மன்றம் சென்னையில் இருக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்தார். ஆனால் பெருவாரியான உறுப்பினர்கள். இவருடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
சென்னை நகரத்தில் தமிழருக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு ஆந்திரருக்கும் உரிமை உள்ளது என்ற பிரகாசத்தின் கோரிக்கையைப் பிரிவினைக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை. (சான்று: Formation of Andhra Province - Report of the Partition Committee)
நேருவின் தலைமையிலான இந்திய அரசு வழக்கம் போல மாநிலப் பிரிவினையில் விருப்பம் இல்லாததால் இந்தக் குழுவின் அறிக்கையை வாங்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது.
பொட்டி ஸ்ரீராமுலு சென்னை மயிலாப்பூரில் புலுசு. சாம்பாமூர்த்தி வீட்டில் தனி ஆந்திர மாநிலம் அமைக்க வலியுறுத்திச் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். 19.10.1952 முதல் 15.12.1952 வரை 57 நாட்கள் உண்ணா விரதம் இருந்து இறந்துவிட்டார்.
பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்தபோதே பிரதமர் நேரு அவர் இறப்பதற்கு முன் 9.12.1952இல் பாராளுமன்றத்தில் “ஆந்திரர்கள் சென்னை நகரைக் கேட்காமல் இருந்தால் தனி ஆந்திர மாநிலம் உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்”
என்று அறிவித்தார். (Political History of Andhra Pradesh 1909 - 2009 by Narisatti Innaiah பக். 44)

பொட்டி ஸ்ரீராமுலு 15.12.1952இல் இறந்த பிறகு ஆந்திராவில் பெரும் வன்முறை மூண்டது. விஜயவாடா இரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர். துணை இராணுவப்படை வரவழைக்கப்பட்டது.
துப்பாக்கிச்சூடு நடைபெற்றுச் சிலர் கொல்லப்பட்டார்கள். மேலும் போராட்டம் அதிக அளவில் வெடித்த பிறகுதான். நேரு பாராளுமன்றத்தில் 19.12.1952 அன்று நாடாளுமன்றத்தில் தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
புதிய ஆந்திர மாநிலத்தை உருவாக்குவதற்காக நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழுவை அமைத்தது மத்திய அரசு.
பிரகாசம் - வாஞ்சு சந்திப்பு 100 நிமிடம் பேச்சு:

பல்வேறு தரப்பினரும் நீதிபதி வாஞ்சுவிடம் தம் கோரிக்கைகளை முன் வைத்தனர். தோழர் டி. பிரகாசம் நேற்று நீதிபதி வாஞ்சுவைக் கண்டு சுமார் 100 நிமிட நேரம் ஆந்திரப் பிரிவினைப் பிரச்சனைகளைக் குறித்துத் தமது கோரிக்கைகளை
வெளியிட்டதாகவும் சென்னையில் இரு ராஜ்ஜியங்களின் தலைநகரங்களும் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. (விடுதலை 11.01.1953)
கம்யூனிஸ்டுகள் சந்திப்பு:

ஆந்திரக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்குழுவினர்களாகிய தோழர்கள் டி. நாகிரெட்டி, சி. ராஜேஸ்வர ராவ், பி. வெங்கடேசுவரலு, ஓய். ஈஸ்வராரெட்டி, ஓய்.வி. கிருஷ்ணாராவ் ஆகியவர்கள் நீதிபதி வாஞ்சுவை நேற்று பிற்பகல் கண்டு ஒரு மணிநேரம் வரை விவாதித்தனர்.
பொது கவர்னர், பொது உயர்நீதி மன்றம், பொது பப்ளிக் சர்வீஸ் கமிஷன் போன்ற எதுவுமற்ற விசால ஆந்திரா மார்சு 16ஆம் தேதிக்குள் நிறுவப்படவேண்டுமென்று வற்புறுத்தியதாகத் தெரிகிறது. (விடுதலை 11.01.1953)
பொதுவுடைமைக் கட்சியைப் பொறுத்தவரை சென்னை தமிழ்நாட்டுக்குச் சொந்தம், சித்தூர் மாவட்டமும் திருப்பதியும் ஆந்திராவுக்குச் சொந்தம் என்ற கொள்கை உடையவர்கள். ஆந்திரத்தின் தலைநகர் ஆந்திரத்திலேயே இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சென்னை சட்டசபையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தி மாநிலச் சீரமைப்பு மசோதாவின் மீது பேசும் போது, அன்றைக்கு நிதிமந்திரி சி. சுப்ரமணியம் பேசும்போது, “தமிழகத்தின் வட பகுதிகளை இராமமூர்த்தி
ஆந்திரா மாகாணத்திற்கு விட்டுக் கொடுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டார். அதே மாதிரி ஆந்திர முதலமைச்சர் கோபால் ரெட்டி ஆந்திரக் கம்யூனிஸ்டுகளைப் பற்றிப் பேசும்போது, “தமிழர்களுக்கு அடிமைகளாகி விட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.
(சட்டமன்ற விவாதங்கள் பக். 296 நாள் 31.12.1956) ஆந்திராவில் பொதுவுடைமைக் கட்சியினர் சென்னை தமிழ்நாட்டுக்கு உரியது என்று பிரச்சாரம் செய்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் வாஞ்சு சந்திப்பு:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் தோழர்கள் கே. காமராஜ் எம். பக்தவச்சலம்,
டாக்டர் பி. சுப்பராயன், பி.எ. சுப்பையா, டி. செங்கல்வராயன் ஆகியவர்களைக் கொண்ட காங்கிரஸ் கமிட்டியின் தூதுக்குழுவொன்று தோழர்கள் எம்.ஏ. முத்தையா செட்டியார், ஆர். குழந்தைவேலு ஆகியவர்களுடன் நீதிபதி வாஞ்சுவைக்கண்டு ஒரு மனுவைக் கொடுத்தனர்.
சென்னை நகரம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்றும், ஆந்திராவின் தலைநகரமும், உயர்நீதி மன்றமும் சென்னைக்கு வெளியில்தான் இருக்கவேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள் என்று தெரிகிறது. (விடுதலை 11.01.1953)

இந்தக்குழுவில் ம.பொ.சி. இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
நீதிபதி வாஞ்சு தன் பணியை 30.12.1952இல் தொடங்கினார். 7.2.1953இல் வாஞ்சு குழுவின் அறிக்கையை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். அவர் தம் பரிந்துரையில்,

“சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆந்திரர்களுக்குச் சென்னையின் மீது எவ்வித உரிமையும் இல்லை.
விருந்தாளிகளைப் போல அல்லது வாடகைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாது”. அதற்குள் தாங்கள் மாநிலத்தில் புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இருந்தபோதும், இமாச்சல அரசு சிம்லாவின் மீது எந்த உரிமையையும் கொண்டாட முடியவில்லை என்பதை வாஞ்சு உதாரணமாகக் காட்டியுள்ளார். இது என் சொந்தக் கருத்து என்றும் கூறியுள்ளார். (வாஞ்சுகுழு அறிக்கை பக். 5)
சென்னையைத் தற்காலிகத் தலைநகராகக் கொடுத்தால் அதன் பிறகு ஆந்திரர்கள் போகமாட்டார்கள் என்று சென்னையில் உள்ள மற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆந்திர அரசின் அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும். சென்னையிலேயே ஆந்திர உயர்நீதிமன்றம் தற்காலிகமாக 5-10 ஆண்டுகள் வரை இருக்கப் பரிந்துரை செய்கிறேன். (பக். 8) அதற்கு உதாரணத்தையும் வாஞ்சு காட்டியுள்ளார்.
ஒரிசா 1936இல் பிரிந்தாலும் அதனுடைய உயர்நீதிமன்றம் 1947 வரை பீகாரிலேயே இருந்தது என்கிறார். (பக். 9) ஆந்திராவின் தலைநகரமும் ஆந்திராவின் உயர்நீதிமன்றமும் உடனடியாகச் சென்னைவிட்டுப் போகவேண்டும் என்று ஆந்திரர் அல்லாதவர்கள் கூறுகிறார்கள். அது உடனே முடியக் கூடிய காரியமல்ல. (பக். 10)
சென்னை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 36ரூ இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஆந்திரர்களுக்கு ஒதுக்கித்தரவேண்டும். அந்த இடங்களுக்கான மாணவர் பெயர்ப் பட்டியலை ஆந்திர அரசு கொடுக்கும். (பக். 12) இக்குழு பெல்லாரி மாவட்டத்தைக் கர்நாடகாவுடன்
சேர்க்கப் பரிந்துரை செய்தது. (பக். 2) மற்ற 11 மாவட்டங்களைக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைத்துக் கொள்ள வழிவகுத்தது.

சென்னை நகருக்கு ஈடாக ரூ. 2.3 கோடியை புதிய ஆந்திர அரசுக்குக் கொடுக்கப் பரிந்துரை செய்தது. (பக். 26)`
அனைத்துக் கட்சிக்கூட்டம்

வாஞ்சு அறிக்கையைப் பற்றிப் பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கும் சேதிகள் அநேகமாக உண்மையென்றே விஷயம் தெரிந்த மக்களிடையே பேசப்படுகிறதை உத்தேசித்து அதைக் கண்டித்து டில்லி முதன் மந்திரிக்குக் (பிரதமர்) கண்டனம் அனுப்புவதற்காக
13.02.14 மாலை 4 மணிக்குச் சென்னை மேயர் செங்கல்வராயன் அவர்கள் முன் முயற்சியின் மீது கார்ப்பரேஷன் தியாகராயர் கட்டிடத்தில் 13.02.1953இல் சென்னைப் பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.
அக்கூட்டத்திற்குச் சர். முகமது உஸ்மான், பெரியார் ஈ.வெ.இராமசாமி, மேயர் டி. செங்கல்வராயன், மாஜி மந்திரிகள், எம். பக்தவச்சலம், டி. பரமேஸ்வரன், எஸ். முத்தையா முதலியார், மாஜி மேயர்கள், ராமநாதன் செட்டியார், ராதா கிருஷ்ணபிள்ளை, சிக்யதுல்லா சாயுபு, மாஜி ஐக்கோர்ட்
ஜட்ஜ் பி. பாஷ்யம் அய்யங்கார், மாஜி அட்வகேட் ஜெனரல் குட்டி கிருஷ்ணமேனன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உபதலைவர் என்.எல். கரையாளர், பார்லிமென்ட் மெம்பர் பி.எம். லிங்கேஸ்வரன், எம்.எல்.சி., ம.பொ.சிவஞான கிராமணி, எம்.எல்.ஏ. கே. விநாயகம், டாக்டர் வி.கே. ஜான், எம்.பி. தாமோதரன்,
லக்கபராய், நஜீர் உசைன், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், மீனம்பாள் சிவராஜ், செரியன் ஆகிய தமிழ், கேரள, கர்நாடக நாட்டுப் பிரதிநிதிகளான முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு விஜயம் செய்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் யாவரும் கலந்து ஆலோசித்து, பண்டித நேருவுக்கு ஒரு மெமோரண்டம்
அனுப்புவது என்றும் அதன் சுருக்கத்தைத் தந்தியில் உடனே அனுப்புவது என்றும், ஒரு மனதாக முடிவுசெய்தனர். மெமோரண்டத்தில் மேற் கண்டவர்கள் கையெழுத்து செய்தார்கள். பிறகு 16ஆம் தேதி திங்கட்கிழமை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு சென்னை ராஜ்யப் பொதுக்கூட்டம் கூட்டித்
தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் முடிவு:-

நீதிபதி வாஞ்சு இந்திய சர்க்காருக்கு ஆந்திர ராஜ்ய அமைப்புப் பற்றிச் செய்துள்ள சிபாரிசுகளைக் குறித்துப் பற்பல கவலைகளைக் கொடுக்கக்கூடிய தகவல்கள்
பத்திரிக்கை மூலமாகவும் வெளிவந்திருக்கின்றன. ஆந்திர ராஜ்ய அமைப்பில் மிகவும் முக்கியமான அம்சங்களைப் பற்றிய மேற்கூறிய தகவல்கள் எங்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருக்கின்றன. ஆந்திர ராஜ்யத்தின் தலைநகரமானது. உயர்நீதி மன்றமாவது தற்காலிக ஏற்பாடாகக்கூட
சென்னை நகரத்தில் இருக்கக்கூடாதென்று மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறோம். ஆந்திரத் தலைநகரையும், உயர்நீதி மன்றத்தையும் சிறிது காலத்திற்குச் சென்னை நகரில் “விருந்தாளியாகக்கூட” இருப்பதற்கு அனுமதிப்பதால் அனாவசியமான தொல்லைகளும் சர்ச்சைகளும் ஏற்படும்.
இதனால் நிர்வாகக் கஷ்டங்களும் தொல்லைகளும் ஏற்படும்.

ஆந்திர ராஜ்ய அமைப்பு மிகவும் சௌகர்யமாகவும் நேசமனப்பான்மையாகவும் அமல் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆகவே ஆந்திரத் தலைநகரை எந்த வகையிலும் சிறிது காலத்திற்குக் கூட சென்னையில் வைத்தால் அனாவசியமான
தகராறுகளுக்கும் சர்ச்சைகளும் ஏற்படும். ஆகவே பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சொற்பகாலத்திற்குக் கூட ஆந்திரத் தலைநகரமோ உயர்நீதி மன்றமோ சென்னை நகரத்தில் இருக்கக் கூடாதென்று ஏக மனதாக அபிப்ராயப் படுகிறார்கள்.
ஆந்திரர்களில் சிலர் இன்னும் சென்னை நகரத்தில் பாத்தியதை கொண்டாடிக் கிளர்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆந்திரத் தலைநகரைச் சென்னை நகரில் ஏற்படுத்துவது மிகவும் ஆட்சேபகரமானது. சென்னை நகரம் பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின் தலைநகராக இருக்கும்.
ஆகவே பலமான எதிர்ப்பை அலட்சியம் செய்து, ஆந்திர தலைநகரையும், உயர்நீதி மன்றத்தையும், தற்காலிகமாகக்கூட சென்னை நகரத்தில் ஏற்படுத்துவதென்று முடிவு செய்யாமலிருக்குமாறு இந்திய சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறோம். (விடுதலை 14.02.1953)
சென்னை மேயர் தலைமையில் 13.02.1953இல் கூடிய கூட்டத்தில் பெரியார் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையொப்பமிட்டு பிரதமர்ப் நேருவுக்கு அன்றே உடனடியாகத் தந்தி அனுப்பப்பட்டது. விரிவான கோரிக்கை விண்ணப்பத்தையும் அனுப்பி வைத்தார்கள்.
சென்னை நகரமேயர் ஏற்பாடு செய்து திருவல்லிக்கேணிக் கடற்கரையில் 16.02.1953 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசியதாவது.

“மாட்சிமிக்க மேயர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, நான் உங்கள் ஆரவாரத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.
ஆனால் இந்த ஆரவாரத்திற்கு ஏற்ப நீங்கள் இப்போது என்னிடம் உங்களுக்கு உற்சாகமும் உணர்ச்சியும் ஊட்டத் தகுந்த “காரசாரமான” பேச்சை எதிர்பார்த்து ஏமாற்றமடையக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இன்று என் பேச்சு அப்படி இருக்காது.
இந்தக்கூட்டம் பல கருத்துக் கட்சிகள் கூட்டமாகும். இதில் ஆளும் கட்சியும் அங்கம் வகித்திருக்கிறது. காங்கிரஸ் கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில் எனக்குத் தலைகாட்டவும் பேசவும் கிடைத்த ஒரு வாய்ப்பை நல்ல வாயப்பென்றே கருதுகிறேன். ஆதலால் இந்தக் கூட்டத்தின் தன்மைக்கு ஏற்றபடிதான் நான் பேசுவேன்.
வேறு எதையாவதைப் பேசி அவர்களுக்குத் தொந்தரவோ, சங்கடமோ ஏற்படும்படி பேசமாட்டேன். அப்படி எதையாவதை நான் பேசிவிட்டால் அப்புறம் அவர்கள் என்னைக் கூப்பிட மாட்டார்கள். அன்றியும் எல்லோருடனும் சேர்ந்து எல்லோருக்கும் ஏற்ற
முறையில் நமது குறைபாடுகளுக்கு ஒரு பரிகாரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பெரிய இலாபம் என்று எண்ணிப் பாருங்கள்.
நம் காரியம்:

நாம் செய்ய வேண்டிய - செய்யப் போகும் காரியம் இருக்கவே இருக்கிறது. அதை எடுத்துச் சொல்ல நமக்கு வேறு பல மேடைகளும் இருக்கின்றன. சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. நாம் கடிவாளம் இல்லாத குதிரைகள். மற்றவர்கள் எல்லோரையும் அப்படி எதிர்பார்க்கக் கூடுமா?
இந்தக் கூட்டம் நான்கு நாட்களுக்கு முன் மேயர் காரியாலயத்தில் பல பிரமுகர்கள் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகவே கூட்டப்பட்ட கூட்டடமாகும். ஆகவே அந்தக்காரியம் நடைபெறும் அளவுக்கே நமது எல்லை இருக்க வேண்டும்.
ஆதலால் நான் மேயர் அவர்களின் தீர்மானத்தை ஆதரிக்கிற அளவுக்குப் பேசுகிறேன்.

தோழர்களே! ஆந்திரா பிரிவினை விஷயத்தில் ஜஸ்டிஸ் வாஞ்சு அவர்கள் அறிக்கையைக் கண்டித்துப் பண்டித நேரு அவர்களுக்கு நமது கருத்தைத் தெரிவிக்கும் தீர்மானத்தை உங்கள் ஆதரவு மீது இப்போது நிறைவேற்றப்பட வேண்டும்.
அதைப்பற்றிப் பேசுவதென்றால், அந்த அறிக்கையின் கேட்டையும் பற்றிப் பேச வேண்டும். அப்படிப் பேசுவதில் எனக்கு முன் பேசிய மாட்சிக்குரிய மேயர் அவர்களும் பெருமைக்குரிய பக்தவச்சலம் அவர்களும் மற்றும் பெரியோர்களும் பேசினார்கள். அந்தப்பேச்சுகள் பெரிதும் வாஞ்சுவையும்
ஆந்திரக்காரரையும் கண்டிப்பதாகவும், அவர்கள் மீது அதிருப்திப் படுவதாகவும் தான் காணப்பட்டனவே தவிர, அதன் மூலாதாரத்தைக் கண்டித்ததாகவோ, அதைப்பற்றிப் பேசியதாகவோ ஒன்றும் தெரியவில்லை.
காரணமானது அவர்களுக்குத் தெரியவில்லையோ, அல்லது அது பெரிய இடத்துச் சங்கதி என்ற தாட்சண்யமோ எனக்குத் தெரியவில்லை.
நான் இப்போது வெளிப்படையாய்த் தெளிவாய்ச் சொல்லுகிறேன். தவறு இருந்தால் மேயர் அவர்கள் அருள்கூர்ந்து திருத்தவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நான் இப்போது சொல்லப் போவது, ஜனவரி 2ஆம் தேதி மேயர் அவர்கள் வீட்டில் கூடிய சென்னை எல்லாக் கட்சிப் பிரமுகர் கூட்டத்திலும்,
ஜனவரி 5ஆம் தேதி மைலாப்பூர் இலட்சுமிபுரம் யுவசங்கத்தில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்திலும் பிப்ரவரி 1ஆம் தேதி பீச்சில் ஒரு இலட்சம் பேர் கூடிய மாபெரும் கூட்டத்திலும், பிப்ரவரி 13ஆம் தேதி கார்ப்பரேஷன் கட்டிடத்தில் மேயர் காரியாலத்தில் கூடிய எஞ்சிய
3 நாட்டின் பிரமுகர்கள் கூட்டத்திலும் சொன்னவைகளேயாகும்.
ஆனால் இங்கு அதைத் திரும்பவும் ஆதாரப் பூர்வமாக எடுத்துச் சொல்லி ஆதாரமும் காட்டப் போகிறேன். என் சங்கதி எப்போதும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எந்தச் சங்கதியும் எங்கும் பேசப்படுவதாக இருக்கும்.
ஆகையால் சொல்லுகிறேன். தயவு செய்து காது கொடுக்கக் கோருகிறேன்.

நேருவே மூலப் புருஷர்:

வாஞ்சு அவர்கள் அறிக்கைக்கு வாஞ்சு அவர்களோ, இலங்கா சுந்தரம் அவர்களோ மூலப் புருஷர்கள் அல்ல; அந்தப் பிரச்சனைகளுக்கு அதாவது ஒரு ஐகோர்ட்,
ஒரு கவர்னர் சென்னைக்கும் ஆந்திராவுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியதானது பண்டிதர் நேரு அவர்களின் மூளையிலேயாகும்.

அவர்தான் டாக்டர் இலங்கா சுந்தரம் அவர்களுக்கு இந்தப்படி செய் என்று யோசனை சொன்னவர். நேரு அவர்கள் உபதேசத்தாலேயே இதைச்சொல்லி வலியுறுத்தி
“இந்தப்படி இல்லாவிட்டால் ஆந்திரருக்கு ஆந்திர ராஜ்யமே வேண்டாம்” என்று சொல்லும் நிலையை அடைந்தார்.

ஆந்திரர்களையே கூப்பிட்டு நீங்கள் இந்தமாதிரி செய்யுங்கள் என்று நேரு அவர்கள் சொல்லி இருப்பார்களே யானால், ஜஸ்டிஸ் வாஞ்சு அவர்களிடம் சொல்லி அனுப்புவது
அவருக்கு முடியாததாகவோ கூடாததாகவோ இருந்திருக்க முடியுமா?

இதோ பாருங்கள் 18.12.1952ஆம் தேதியில் நேரு அவர்கள் இலங்கா சுந்தரம் அவர்களுக்குச் சொன்ன உண்மையை இலங்கா சுந்தரம் அவர்கள் ஜனவரி மாதம் 18இல் நீதிபதி வாஞ்சு அவர்களிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.
“சென்னை நகரம் பொது நிர்வாக சர்க்கார், நிர்வாக வட்டாரமாக்கப்பட வேண்டும். ஆந்திராவின் தலைநகரும் அந்தச் சென்னை நகரிலேயே அமைக்கப்படவேண்டும்”
“புதிய ராஜ்யத்துக்காக அனாவசியமாக இரட்டிப்புச் செலவு செய்யவேண்டியதில்லை என்று பிரதமர் நேரு 18.12.1952இல் என்னிடம் தெரிவித்தார். மற்றும் ஆந்திரா ராஜ்ய துவக்கக் காலத்திலாயினும் இரு ராஜ்யங்களுக்கும் ஒரே கவர்னரும், ஒரே உயர்நீதி மன்றமும் இருக்கவேண்டுமெனவும் பிரதமர் நேரு தெரிவித்தார்.
நான் பிரதமர் நேருவின் கருத்தை முழு அளவுக்கு ஒப்புக் கொள்கிறேன். ஆந்திரப் பொதுமக்களும் அவரின் இந்த யோசனையை முழு அளவுக்கு ஆதரிப்பார்களென்பதில் எனக்குச் சந்தேகமில்லை” என்று கூறியிருக்கிறார். இது ஜனவரி 19ஆம் தேதி ‘இண்டியன் எக்ஸ்பிரசில்’ வெளியாக்கப்பட்டிருக்கிறது.
அதில் கண்டுள்ள ஆங்கில வாசகமாவது (பெரியார் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் 2.5 இலட்சம் மக்கள் முன்னிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் வந்திருந்த செய்தியைப் படித்துக் காட்டினார்.)
Andhra without Hq. In City
‘PUBLIC OPINION WON’T ACCEPT”
New Delhi, Jan. 18
Dr. Lanka Sundaram, M.P. from Andhra and President of the All-India Linguistic States Conference in his memorandum to Mr. Justice Wanchoo has suggested that Madras City should be made a centrally
administered area and the capital of Andhra located in it. Without this being done, Dr. Sundaram said ‘Andhra public opinion would not accept the Andhra State. .....Dr. Sundaram said that the Prime Minister Nehru had told him
on Dec. 18, 1952. that there need not be unnecessary duplication of expentiture for the new state. Mr. Nehru had also expressed that there should be one Governor and one High Court for both the states at any rate for the initial years of the life of the Andhra State.
“I am in entire agreement with the view of the Prime Minister and I have no doubt that Andhra public opinion would view this proposal with unqualified favour”.

இதன் கருத்து என்ன?

இதன் கருத்து என்ன? நீங்கள் பிரிந்துக்காணப் போகும் ஆந்திர ராஜ்யத்திற்கு
இரட்டிப்புச் செலவு வேண்டாம். “ஆந்திராவுக்கும் சென்னைக்குமாக ஒரே நிர்வாகக் கவர்னர் இருக்க வேண்டும்” என்பதாகும்.

இதிலிருந்து என்ன நினைக்கிறீர்கள்; அனாவசியமாய் இலங்கா சுந்தரத்தின் மீதும், வாஞ்சு மீதும் குறை கூறுவதில் என்ன பயன்? யார் தவறுக்கு யாரை நோவது? இதற்குக் காரணம்
எனக்குத் தெரியும். நேரு அவர்களுக்கு எங்களைப் பற்றிய பயம் மாத்திரம் அல்ல; இந்த மேயர் அவர்களிடமும், மதிப்புக்குரிய பக்தவச்சலம் அவர்களிடமும் நம்பிக்கை கிடையாது; காரியத்திற்கு இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார். (மேயரைத் தொட்டுக்காட்டி,
பக்தவச்சலம் அவர்களைக் கைநீட்டிக் காட்டிச் சொன்னார். அவர்களும் மேடையில் உள்ளவர்களும் பொதுமக்களும் சிரித்தார்கள்.) நேரு அவர்கள் சென்னையை அடக்கி வைத்திருக்கவேண்டிய நாடு என்றுதான் கருதியிருக்கிறார் என்று நான் கருதுகிறேனே ஒழிய, நம்மை ஒரு சுதந்திர நாட்டாராகக் கருதி இருக்கிறார் என்று
நான் எண்ணவில்லை. இது என் தாழ்மையான கருத்து. மேயர் அவர்கள் என்னை மன்னிக்கவேண்டும். இதில் ஏதாவது தவறு இருந்தால் மாட்சி மிக்க மேயர் திருத்தினால் நன்றியோடு ஒப்புக் கொள்ளுகிறேன்.
பரிகாரக் கூட்டம்:

இந்தச் சங்கதியை இங்கு ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்தக் கூட்டம் வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கெடுதியை எடுத்துச் சொல்ல மாத்திரம் ஏற்படுத்தப்பட்டக் கூட்டம் அல்ல. அந்த அறிக்கையை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும் என்கிற பரிகாரத்திற்கு ஆகவும் கூட்டப்பட்ட கூட்டமாகும்.
வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கேடு இந்த நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்ததுதான்; இங்குக் கூடி உள்ள உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதற்குப் பரிகாரம் என்ன? இதில் யார் யார் எவ்வளவு தூரம் ஒன்றுபட்டு வேலை செய்ய முடியும்? அப்படி செய்வதற்குக் கையாளும் முறை என்ன? இவைதான்
இங்குச் சிந்திக்க வேண்டிய முக்கிய காரணமாகும்.

ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் மேயர் மன்னிக்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள முக்கிய கட்சிக்காரர்களுக்குள் காங்கிரஸ் ஒரு பெரியகட்சியார், எப்படியென்றால், ஏன் என்றால் அந்தக் கட்சியார்தான் இந்த நாட்டை
ஆளும் கட்சியாராக இன்று இருக்கிறார்கள். ஆதலால் அதை நாம் மறுக்க முடியாது.

இந்தக் கண்டனக் கூட்டத்தில் அவர்களும் பெருவாரியாகக் கலந்து இருக்கிறார்கள். வாஞ்சு அறிக்கையை இன்று “அதிகாரமற்ற அறிக்கையல்ல, அது ஒரு சிபாரிசு அறிக்கைதானே, அதுவும் ஹேஸ்யம் தானே,
அன்றியும் அது முடிந்ததல்லவே” என்று விவகாரத்திற்குச் சொல்லிவிடலாம். ஆனாலும் மாஜி மந்திரி பக்தவச்சலம் அவர்களே என்னோடு பேசும் போது, “அது ஹேஸ்யம் அல்ல உண்மை என்றுதான் கருதவேண்டும்” என்று சொன்னார். எப்படியோ இருக்கட்டும். நமது கண்டனங்களை.?
தந்தி தீர்மானம் மூலமாகப் பண்டிதருக்குச் சொல்லுகிறோம்; அவர் அதை மதித்தால் நமக்கு நல்ல வாய்ப்புத்தான்; அவர் இலட்சியம் செய்யாமல் அறிக்கைப்படி காரியத்தை முடிவு செய்துவிட்டால் மேலால் நாம் என்ன செய்வது? -என்பதைக் காட்ட வேண்டாமா? எந்த அளவுக்கு நாம் தயாராய் இருக்கிறோம்?
என்பதைக் கலந்தாவது பேசிக் கொள்ள வேண்டாமா? அதற்கு மக்கள் தயாராய் இருக்கிறார்களா என்று இந்தக்கூட்டத்தில் அறிய வேண்டாமா?
இஷ்டப்படாத காரியம் நடப்பது என்றால், அதைத் தடுக்க நாம் சிறிதாவது சிரமப்பட்டுத்தான் ஆகவேண்டும். அதற்கு ஆக சிறிதாவது கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தாவது சிறிது எதிர்ப்பாவது காட்ட வேண்டும். அப்படி இல்லையானால் இதற்குத் தீவிர எதிர்ப்பு இல்லை என்று கருதி மேலிடத்தார் உறுதி செய்துவிட்டால்,
அப்புறம் நமக்கு எவ்வளவு கஷ்டம் தொல்லை ஏற்படும்? அந்தத் தொல்லை கஷ்டங்களை இப்படி ஒன்று சேர்ந்து அனுபவிக்க முன்வர முடியுமா? என்பது தெரிய வேண்டாமா?
நான் வரப்போகும் கஷ்டத்திற்கு இன்று இங்கு உள்ள காங்கிரசுக்காரர்கள் பின் வாங்குவார்கள் என்று கருதிப் பேசுவதாகத் தயவு செய்து யாரும் கருதக் கூடாது. மக்கள் அரசியல் காரணங்களுக்குக் கஷ்ட நஷ்டமடைவது, தியாகம் செய்வது என்பது இந்த நாட்டில் காங்கிரஸ்காரர்களால் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது
என்பது எனக்குத் தெரியும். நானும் தியாகம் என்பதைக் காங்கிரசினால்தான் தெரிந்துகொண்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதலால் நான் காங்கிரஸ் தோழர்களைப் பற்றி இப்போது என்ன கருதுகிறேன் என்றால், இன்று காங்கிரஸ் வேறு; கவர்ன்மென்ட் வேறு என்பதாக இல்லை.
அவர்கள் தான் நாட்டை ஆளுகிறார்கள். அந்த ஆட்சி முறையில் பிரதம மந்திரி பண்டித நேருவினால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு காரியம் நேரு சர்க்கார் அவர்களின் முத்திரை பெறுவது, சாதாரண நிலையில் அசாத்தியமானதாக இருக்க முடியுமா?
அப்படி முத்திரை பெற்றுவிட்டால் காங்கிரஸ் தோழர்கள் தங்கள் தலைவர் முடிவு என்பதற்குத் தலைவணங்காமல் எப்படி இருக்க முடியும்? இது ஒரு சங்கடமான நிலைதான். ஆதலால் அதை அவர்கள் இங்கேயே கூற வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை.
கடையடைப்பு நாள்:

அது தவிர்த்து வாஞ்சு அறிக்கையைக் கண்டிக்கிற அளவில் ஒரு வாரத்திற்குள்ளாக ஒரு நாளில் தமிழ் நாடெங்கும் கடை அடைப்பு, அர்த்தால் நடத்தலாம் என்றும் அதற்கு ஒரு நாள் குறிப்பிடலாம் என்றும் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறேன்.

இதை மேயர் அவர்கள் ஏற்றால் ஓட்டுக்கு விடலாம்;
இல்லாவிட்டால் நான் வலியுறுத்தவில்லை. ஏனென்றால் எந்தக் காரணத்தாலும் மேயர் அவர்களின் அதிருப்திக்கு இடம் தரும் காரியம் இங்கு நடக்கக் கூடாது என்பது எனது கருத்தும் கவலையும் ஆகும்.

நாம் ஒரு பலமான காரியத்தை எதிர்க்க வேண்டியவர்கள் கூடிச் செய்கிற காரியத்தில் நமக்குள்
கருத்து வேற்றுமை இருக்கக்கூடாது என்பது என் கருத்தாகும். (விடுதலை 17.02.1953)

மேலேகண்ட பெரியாரின் கடற்கரைச் சொற்பொழிவில் டாக்டர் லங்கா சுந்தரம் அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அவர் விசாகப்பட்டிணம் தொகுதி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர். 1952 முதல் நாடாளுமன்றத்தில் அடிக்கடி ஆந்திரப் பிரிவினையையும், சென்னை ஆந்திராவுக்கு மட்டுமே சொந்தம். சென்னை இல்லாத ஆந்திரா எங்களுக்குத் தேவை இல்லை என்று பேசியவர்.
கடற்கரைச் சொற்பொழிவில் பெரியார் கூறியபடி அனைத்துக்கட்சிகளும் இணைந்து பொது வேலை நிறுத்தம் கடையடைப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை.
22.02.1953 அன்று சென்னை வந்த குடிஅரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்துக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் குத்தூசி குருசாமி தலைமையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்டினர். தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் வாஞ்சி அறிக்கை கண்டன நாள்,
“தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்” கொண்டாடப்பட்டது.

08.03.1953 அன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் செட்டிநாட்டு முத்தையா செட்டியார் தலைமையில் கூடிய கூட்டத்தில் பேசிய ம.பொ.சி. “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், சர்வக்கட்சித் தலைவர்களும், சென்னைச் சட்டசபை
ஆந்திரர் அல்லாத உறுப்பினர்கள் 200 பேரும், பார்லிமென்டிலிலுள்ள ஆந்திரரல்லாத உறுப்பினர்களும் பெரியார் ஈ.வெ.ராவும் எல்லோரும் சேர்ந்து மகஜர்மூலம் சென்னையில் ஆந்திரத் தலைநகரை ஒரு நாளைக்குக்கூட அமைக்கக்கூடாது என்று அறிவித்த பின்னும் சஞ்சீவ ரெட்டி கோரிக்கைக்கு
மத்திய சர்க்கார் அசைந்து கொடுக்காது என்று நாங்கள் நம்புகிறோம் என்று பேசியுள்ளார். (விடுதலை 09.03.1953)

ஆந்திரத் தலைநகர் பிரச்சனை - சென்னையில் மாபெரும் கூட்டம்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காரியாலய செக்ரட்டரி திரு. என்.இ. ரகுநாதன் எழுதுவதாவது:
16.02.1953ஆம் தேதி மாலை 6 மணிக்குத் திருவல்லிக்கேணிக் கடற்கரையில், சென்னையில் தற்காலிகமாகக்கூட ஆந்திரத் தலைநகரையும், உயர்நீதி மன்றத்தையும் நிறுவப்படுவதற்குத் தங்களின் உறுதியான எதிர்ப்பைக் காட்டுவதற்காகச் சர்வக்கட்சிப் பிரதிநிதித்துவமடங்கிய ஒரு மாபெரும் கூட்டம் நடைபெறும்.
சென்னை மேயர் திரு.டி. செங்கல்வராயன் அவர்கள் தலைமை வகிப்பார். பெரியார் ஈ.வெ. இராமசாமி, திருவாளர்கள் எம். பக்தவச்சலம், எஸ். முத்தையா முதலியார், எல்.எஸ். கரையாளர், ம.பொ. சிவஞானம் கிராமணி, கே. விநாயகம்,
உபயதுல்லா சாகிப், மீனாம்பாள் சிவராஜ் முதலியவர்கள் பேசுவார்கள். (விடுதலை 14.02.1953)

இந்தக் கடற்கரைக் கூட்டத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன் நின்று நடத்தியிருக்கிறது. ம.பொ.சி எனது போராட்டத்தில் கூறியிருப்பது போல இராஜாஜி சொல்லி ம.பொ.சி ஏற்பாடு செய்ததல்ல.
மேலும் பெரியாரின் கடற்கரைச் சொற்பொழிவிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் மேயரின் அலுவலகத்தில் நான்கு நாட்களுக்கு முன் நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
பெரியாரின் கிளர்ச்சியைக் காட்டித்தான் முதலமைச்சர் இராஜாஜி காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் “சென்னையில் தற்காலிகமாகக் கூட ஆந்திராவுக்குத் தலைநகராகக் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு வந்தார். பெரியார் கிளர்ச்சி தொடங்கி விட்டார். இனி யார் யாரோ கிளர்ச்சித் தொடங்குவார்கள்.
என்னால் இதைச் சமாளிக்க முடியாது. முதல்வருக்கு வேறு ஆளைப்பார்த்துக் கொள்ளுங்கள்” என்று டெல்லியில் நேருவிடம் சொல்லிவிட்டு வந்தார். (விடுதலை 13.03.1953)
இதே காலக்கட்டத்தில் தான் ம.பொ.சிக்குக் காங்கிரஸ் கட்சியில் சிக்கல் உருவானது. ம.பொ.சி சென்னைச் சட்ட மேலவைத் தேர்தலில் ஏற்கெனவே வெற்றிப்பெற்றிருந்தார். வேறு ஒரு வேட்பாளர் அந்தத் தேர்தல் சரியான முறையில் நடைபெறவில்லை எனக்கூறி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து
வெற்றியும் பெற்றுவிட்டார். அந்தத் தேர்தல் செல்லாது என உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது மீண்டும் மறுதேர்தல் நடைபெற இருந்தது.

20.03.1953 அன்று ம.பொ.சியும் மற்றும் பலரும் மேலவைத் தேர்தலுக்கு வேட்பு மனுவைத்தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இவருடைய வேட்பு மனுவை டெல்லிக்கு அனுப்பும்போது கூடவே ஒரு குறிப்பையும் அனுப்பி வைத்தனர். இவர் தமிழரசுக் கழகம் என்று தனிக்கட்சி நடத்துகிறார்.
காங்கிரஸ் சட்டவிதிகளுக்குப் புறம்பாகக் கட்சி நடத்துவதால் இவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எழுதி அனுப்பினர். காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்டரி போர்டு ம.பொ.சி.யின் வேட்பு மனுவை நிராகரித்தது.
உடனே ம.பொ.சி. தமிழரசுக் கழகத்தின் செயற்குழுவைக் கூட்டி அதன் விதிகளைத் திருத்தி இது அரசியல் கட்சியல்ல. வெறும் கலாச்சார கழகமே என்று காங்கிரஸ் மேலிடத்திற்குக் கழகத்தின், தீர்மான நகலையும் அனுப்பி வைத்தார். விடுதலையில்
குத்தூசி குருசாமி “கிராமணியாரின் சரணாகதி; பதவிப்பேராசையால் கட்சிக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டார்” என்று எழுதினார். (விடுதலை 25.03.1953)

ம.பொ.சி.யின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு மேலவைத் தேர்தலிலும் போட்டியிட்டார். அதைப் பெரியார் ஆதரித்தார்.
“சட்டப்பேரவைத் தொகுதியிலே சட்டமேலவைக்குப் போட்டியிட நான் முனைந்தது தெரிந்ததுமே பெரியார் ஈ.வெ. ராவின் ‘விடுதலை’ பத்திரிக்கை கூட நான் வெற்றிபெற வேண்டுமென்று விரும்பியது. காங்கிரசில் இருந்த கோஷ்டி பூசல் காரணமாக ஒருகால் நான் தோற்கடிக்கப்படுவேனோ என்ற அச்சத்தையும்
விடுதலை வெளியிட்டது”. (எனது போராட்டம் பக். 582)

காங்கிரஸ் கட்சியில் பலர் போட்டியிட்டதால் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதினான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். ம.பொ.சிக்கும் வாக்களிக்க காங்கிரஸ் கட்சி 14 சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கட்டளையிட்டது.
ஆனால் அதில் 9 பேர் மட்டுமே ம.பொ.சிக்கு வாக்களித்தனர். முதல் சுற்றில் ம.பொ.சி. தோல்வியுற்றார். அப்போது இராமசாமி படையாச்சின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. அக்கட்சி இராஜாஜி ஆட்சியை ஆதரித்தது. அக்கட்சியின்
சார்பில் மேலவைக்குப் போட்டியிட்ட ஆ. கஜபதி நாயகருக்கு 14 வாக்குகள் போக மீதம் 5 வாக்குகள் இருந்தன. ம.பொ.சி. 1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்காகச் சூறாவளியாக பிரச்சாரம் செய்தார். படுத்துக்கிடந்த காங்கிரசை நான் தான் நிமிர்த்தினேன் என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
இந்த மேலவைப் பதவி கூடத் தீவிரமாகத் தேர்தல் வேலை செய்ததற்காகத் தான் காங்கிரஸ் எனக்குக் கொடுத்தது என்று எழுதியுள்ளார். அந்த தேர்தலில் ம.பொ.சி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.
“நண்டு நாற்காலி ஏறுமா” அதாவது வன்னியர் நண்டு தின்னும் ஜாதியினர் என்பதாகக் கேலி செய்தார். “பள்ளிகள் பாராளமுடியுமா”? என்றெல்லாம் தேர்தல் கூட்டங்களில் பேசினார். காங்கிரஸ் கட்சியில் இவர் ஒருவர்தான் பீரங்கிப் பேச்சாளர் என்று பெருமைப் பீற்றிக்கொண்டார்.
மேலவைத் தலைவர் பதவி ஆசை காரணமாக இராஜாஜியின் மூலமாக இராமசாமி படையாச்சியைப் பிடித்து மீதம் இருந்த 5 வாக்குகளைத் தனக்குப் போட வைத்து இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார். இதை அவரே எழுதியுள்ளார். ம.பொ.சி. (எனது போராட்டம் பக். 685)
ம.பொ.சி.க்கும் காங்கிரசில் எந்தச் செல்வாக்கும் இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகிறது. அவருடைய குருநாதர் இராஜாஜிக்கும் தமிழ்நாட்டில் எந்தச் செல்வாக்கும் இல்லை. அவர் டெல்லியிலிருந்து திணிக்கப்பட்ட முதலமைச்சர். காந்தி உயிரோடு இருந்தவரைத்தான் இராஜாஜிக்கு அகில இந்திய காங்கிரசில்
செல்வாக்கு இருந்தது. அதன் பிறகு இல்லை. கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜாஜி இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருக்கவிரும்பினார். நேருவிடமும் கேட்டார். ஆனால் வல்லபாய் பட்டேல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொள்ளாத இராஜாஜிக்குக் குடி அரசுத் தலைவர் பதவி தரமுடியாது
என்று மறுத்துவிட்டார். (ராஜ்மோகன் காந்தி இராஜாஜி வாழ்க்கை வரலாறு பக். 731-733)

நேரு இராஜாஜியைத் தன் அமைச்சரவையில் 15.17.1950இல் சேர்த்துக் கொண்டார். ஆனால் எந்த இலக்காவையும் கொடுக்காமல் அவமதித்தார். தனக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் இடையில்
இடைத்தரகர் போல இருக்கும்படி செய்து விட்டார். சம்பளம், கார், பங்களா எல்லாம் உண்டு. ஆனால் கையெழுத்துப் போட ஒரு கோப்பு கூடக்கிடையாது. இலாக்கா இருந்தால்தானே கோப்புகள் வரும். இராஜாஜியும் மானம் ஈனம் எதுவும் இல்லாமல் இலக்கா இல்லாத
அமைச்சராக 15.12.1950 வரை இருந்தார். 1950 டிசம்பர் 13இல் வல்லபாய் பட்டேல் இறந்த பிறகு தான் அவருடைய உள்துறை இலாக்கா இராஜாஜிக்குக் கொடுக்கப்பட்டது. (ராஜ்மோகன் காந்தி இராஜாஜி வாழ்க்கை வரலாறு பக். 741)
நேருவுக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு விரைவிலேயே மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து விட்டார்.

ம.பொ.சியின் குருநாதரும் சென்னை மாகாண முதல்வருமான ராஜாஜிக்கும் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு இல்லை என்பதே உண்மை.
ம.பொ.சி. வரலாற்றையே புரட்டி எழுதிவிட்டார். “சென்னைப் பற்றிய பிரச்சனையில் தமிழினத்தார் நிலை ஆரம்பத்தில் பரிதாபகரமானதாக இருந்தது. தி.க. தலைவர் பெரியார் ஈ.வெ. ரா., “சென்னை ஆந்திரத்தில் இருந்தால் என்ன தமிழகத்தில் இருந்தாலென்ன! எங்கிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப்போகிறது”
என்று அறிவித்து விட்டார் என்ற பச்சையான பொய்யை (எனது போராட்டத்தில் பக். 619)இல் ம.பொ.சி. எழுதியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. காமராஜரைப் பற்றிக்கூடப் பொய்யான தகவலையே ம.பொ.சி. எழுதியுள்ளார். “ஆம் சென்னை நகர் பற்றிக்கூட எதுவும் கூறாமல் அவர் மௌனம் சாதித்தார்”
(எனது போராட்டம் பக். 619)

ம.பொ.சியின் கூற்று உண்மையல்ல. காமராசரின் தலைமையில் தான் அக்கட்சியினர் நீதிபதி வாஞ்சுவைச் சந்தித்து ஆந்திராவின் தலைநகர் சென்னையில் இருக்கக்கூடாது என்று விண்ணப்பம் அளித்தனர். (விடுதலை 11.01.1953)
சென்னை நகர மேயர் காமராசர் குழுவைச் சார்ந்தவர். அவர் காமராசருடன் சேர்ந்து போய் நீதிபதி வாஞ்சுவை சந்தித்தார். (விடுதலை 11.01.1953) அக்குழுவில் ம.பொ.சி. இல்லை என்பதே உண்மை. சென்னை நகர மேயர் “சென்னையில் வாழும் சிறுபான்மையினரான ஆந்திரர்கள் சென்னைப்
பற்றிய கிளர்ச்சியிலே ஆந்திரக் காங்கிரசுடன் ஒத்துழைத்தால், அவர்களுக்குக் குடி தண்ணீர் வழங்க மாட்டேன். பிணம் புதைக்கவும் சுடுகாட்டில் அவர்களுக்கு இடம் கிடைக்காது” என்று முழங்கினார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக். 620)
இப்படிப்பட்ட மேயரையும் ம.பொ.சி. கூறுவதைப் போல இராஜாஜியின் ஆந்திராவின் தற்காலிகத் தலைநகர் கோரிக்கைக்கு இணங்கினார் என்பது பொய். புதுதில்லியில் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்த சென்னை மாகாண முதல்வர் இராஜாஜி, “சென்னையை ஆந்திராவுக்குக் கொடுப்பது என்றால் வேறு முதலமைச்சரைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் மேலிடத்துக்குக் கூறிவிட்ட இராஜாஜியையும் தன் குருநாதர் என்று கூடப் பார்க்காமல் ம.பொ.சி. கவிழ்த்து விட்டார்.
“மாநாகராட்சியின் சிறப்புக்கூட்டம் நடைபெறவிருக்கும் செய்தியைப் பத்திரிக்கைகளில் பார்த்ததும் மேயரையும் என்னையும் ராஜாஜி தமது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார். “ஆந்திர அரசுக்குத் தற்காலிகமாகக் கூட சென்னையில் இடம் தரக்கூடாது” என்ற வாசகத்தை தீர்மானத்திலிருந்து
நீக்கி விடும்படி மேயரையும் என்னையும் இராஜாஜி கேட்டுக் கொண்டார். மேயர் அவர்கள் வெகு சுலபத்தில் அதற்கு இணங்கிவிட்டார்... இந்த விஷயத்தில் மேயரும் என்னைக் கை விட்டுவிட்டார்... நிபந்தனை எதுவும் இல்லாமலே ஆந்திர அரசுக்குச் சென்னையில் இடம் தரத்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் தயாராக இருப்பதை நான் அறிவேன். (ம.பொ.சி. எனது போராட்டம் பக். 632)

இது அத்தனையும் பொய் ம.பொ.சி. தான் மட்டும்தான் தலைநகரைக் காப்பதில் உறுதியாக இருந்தேன் என்பதற்காக எழுதப்பட்ட புனைக்கதை.
தேவிக்குளம், பீர்மேடு தமிழகத்திற்குத்தான் சொந்தம் என்ற சட்டமன்றத் தீர்மானத்தையே ஏற்க மறுத்த நேரு, பக்தவச்சலமும், சி. சுப்பிரமணியமும் தேவிகுளம், பீர்மேட்டை கேரளாவுடன் சேர்க்க மறுப்புத் தெரிவித்துப் பதவி விலகல் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேபர்
அவர்களிடம் கொடுத்ததை மும்பையிலிருந்து வெளிவரும்

‘பிளீட்ஸ்’ ஆங்கில ஏட்டில் வெளி வந்ததைச் சட்ட மன்றத்தில் அ. கோவிந்தசாமி எடுத்துக் காட்டியுள்ளார் 29.03.1956.

(பக். 185, 186) அப்படியும் தேவிக்குளம் பீர்மேட்டைத் தமிழகத்தில் சேர்க்க மறுத்தவர் நேரு.
ம.பொ.சியின் நகர மன்றத் தீர்மானம் நேருவின் மனத்தை மாற்றிவிட்டது என்பதும் ஆயிரம் பேர் தந்திகள் அடித்ததால் நேரு மனம் மாறினார் என்பதும் உண்மையல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் பொதுமக்களின் எதிர்ப்புக் காரணமாகவே நேரு பணிந்தார் என்பதே உண்மை.
ஆந்திரர் அல்லாத 200 சட்டமன்ற உறுப்பினர்களிடம் நானும் செங்கல்வராயனும் கையெழுத்துப் பெற்று அனுப்பினோம் என்பதிலும் உண்மை இல்லை. ம.பொ.சி. காமராஜர் குழுவினரை நெருங்கவே முடியாத காலம் அது. மேயர் என்ற முறையில் செங்கல்வராயன் கையெழுத்து வாங்கியிருப்பார்.
அவர் காமராஜர் குழுவில் இருந்தார். ம.பொ.சி. பிற்காலத்தில் எழுதிய ‘எனது போராட்டத்தில்’ நானும் சேர்ந்துவாங்கி அனுப்பினேன் என்பது பொய்.
சென்னை மாகாணத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்துக்கட்சி 32 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் நேருவைச் சந்தித்துச் சென்னையைத் தமிழ் நாட்டுக்கே தரவேண்டும்; ஆந்திராவிற்குத் தற்காலிகத் தலைநகராகக் கூட சென்னையில் இடம் தரக்கூடாது என்று வலியுறுத்தினர்.
தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பைக் கண்டு தான் நேரு பின் வாங்கினாரே தவிர, ம.பொ.சி மட்டும் தனித்து நின்று சென்னை நகரை மீட்கவில்லை.

இது ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று விடுதலையேடு எழுதியது 26.03.1953.
ஆனால் ம.பொ.சி. தனக்குக் கிடைத்த வெற்றியாக எனது போராட்டத்தில் எழுதிக் கொண்டார்.

1946இல் ம.பொ.சி.க்குக் கிடைத்த வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சீட்டை டெல்லி மேலிடம் நரசிம்மாவிற்கு மாற்றிக் கொடுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ம.பொ.சி. நரசிம்மராவ் தெலுங்கர் என்பன போன்ற
அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொண்டார் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ம.பொ.சி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. நரசிம்மராவ் “இவர் ஒழுங்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்” என்று கூறி இவரைக் காப்பாற்றி விட்டார்.
ம.பொ.சி.யைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட முனைவர் எம்.ரங்கசாமி கூறியுள்ளார்.

(Dr. M. Rangasamy Tamil Nationalisam Political Identity of Tamil Arasu Kazhagam P. 98)

1948இல் திராவிடர் கழகம் முன்னின்று நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் காலையில் மட்டும் கலந்து கொண்டார்.
பிற்பகல் கலந்து கொள்ளவில்லை. இது இந்தியை எதிர்ப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டமல்ல; காங்கிரசை எதிர்ப்பதற்காக நடத்தப்படுகிறது என்று கூறிப் பின் வாங்கினார். அப்போதும் இவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியது. (மேற்கண்ட நூல் பக். 98)
காங்கிரசில் நிறுத்திவைக்க நேரு செய்த முயற்சி

ம.பொ.சியை முழுமையாகக் காங்கிரசை விட்டு நீக்கிவிட தமிழ்நாடு காங்கிரஸ் 1952இல் முடிவு செய்தது. அதைப்பற்றி ம.பொ.சி.யே கூறியுள்ளார். “நேருஜி என்பால் அன்பு காட்டி எனது தமிழரசு இயக்கத்திற்கு வெற்றிகளைத் தந்ததை
விடவும் எனது சொந்த விஷயம் ஒன்றிலும் அவர் என்பால் பேரன்பு காட்டியது என்னால் என்றும் மறக்க முடியாததாகும். காங்கிரசிலிருந்து என்னை வெளியேற்றத் தமிழ்நாடு காங்கிரஸ் பிடிவாதத்துடன் முயன்றபோது, நான் நேருஜியிடம் சரண் புகுந்தேன்.
1952 ஆம் ஆண்டின் இறுதியில் காங்கிரசிலிருந்து என்னை வெளியேற்றிவிடத் தமிழ்நாடு காங்கிரசைத் தங்கள் செல்வாக்கில் வைத்திருந்த ஒரு சாரார் பெருமுயற்சி எடுத்தார்கள். அதற்கு அவர்கள் வெளிப்படையாகச் சொன்ன காரணம், தமிழரசுக் கழகம்
என்னும் பெயரில் ஒரு கட்சியையே காங்கிரசுக்குள் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதாகும். தமிழரசுக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் அரசியல் கட்சியல்ல என்று நான் சொல்லி வந்ததை அவர்கள் நம்பவில்லை. ஆம், நம்புவதிலே அவர்களுக்கு லாபமில்லை.
அவர்கள் சொன்ன மற்றொரு காரணம், இந்தியாவிலிருந்து பிரிந்து வாழும் சுதந்திரத் தமிழகத்தைத்தான் தமிழரசுக் கழகம் கோருகின்றது என்பதாகும். “சுயாட்சித் தமிழகம்” என்று நான் சொன்னதன் பொருளை அவர்கள் புரிந்து கொள்ளாததுபோல் நடித்தார்கள்.
சென்னை நகருக்கெனத் த. நா. கா. கமிட்டியால் நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் அதிகாரி, காங்கிரசால் நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் அதிகாரி, காங்கிரஸ் அமைப்புக்குரிய சட்டத்தில் நான்காவது விதியைக் காட்டி எனது நியமனப் பத்திரத்தை நிராகரித்தார். நான்காவது விதி,
“வேறோர் கட்சியில் உறுப்பினராக இருப்பவர் காங்கிரசிலும் உறுப்பினராக இருக்கமுடியாது” என்று கூறுகிறது.

தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கையானது என் மனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. நேருஜி அப்போது அனைத்திந்திய காங்கிரசின் தலைவராக இருந்தார்.
என்னைப்பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்த நேரம் அது. அதனால், தேர்தல் அதிகாரியின் முடிவை நேருஜிக்கு அறிவித்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவருக்கு ‘மேல் மனு’ப் போட்டேன். 21 மணி நேரத்திற்குள் அவரிடமிருந்து கீழ்க்கண்ட தந்தி கிடைத்தது.

புதுடெல்லி, 16.11.1952
தாங்கள் காங்கிரஸ் தலைவருக்குச் செய்து கொண்ட அப்பீல் மனு கிடைத்தது. காங்கிரஸ் மேலிடம் தமிழரசுக் கழக அங்கத்தினர்கள் பற்றி விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் வரையிலும் அந்தக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸ் தேர்தலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். “காங்கிரஸ்”
அப்போது இராஜாஜி அவர்கள் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். ஆயினும், நேருஜியிடமிருந்து நீதி பெறுவதற்கு இராஜாஜியின் உதவியை நான் நாடவில்லை. எனது மேல் மனுவை நேருஜி ஏற்றுக் கொண்டது செய்தித் தாள்களில் வெளியானபோது தான் இராஜாஜி அறிந்து கொண்டார். .
நானும் அவரைச் சந்தித்து நிகழ்ந்ததை விவரமாகக் கூறினேன்.

மாநில சுயாட்சி பற்றி நான் எழுதிய கட்டுரைகளை எல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் காங்கிரஸ் தலைவர் நேருஜிக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட்டாரம் அனுப்பி வைத்ததோடு, காரியக்கமிட்டி உறுப்பினர்களுக்கும்
அதன் நகலை அனுப்பியது. இராஜாஜி அப்போது காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருந்தார்.

காரியக் கமிட்டியின் ஒவ்வொருக் கூட்டத்திலும் தமிழரசுக் கழகம் பற்றிய பிரச்சினை ஆராயப்பட்டு, இறுதி முடிவு எதுவும் எடுக்காமல் ஒத்திப்போடப்பட்டு வந்தது. இதற்கிடையிலே, ஸ்ரீமந் நாராயணன்
அனைத்திந்தியக் காங்கிரசின் பொதுச் சொயலாளர் என்ற முறையிலே என்னுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டார். அவருக்குப் பின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்ற திரு. பல்வந்தராய் மேத்தா என்பவரும் என்னுடன் கடிதப் போக்குவரத்து நடத்தினார்.
இந்த இருவருமே சென்னை நகருக்கு வருகை தந்து, எனக்கு நேரிலும் பேட்டியளித்து, என்னிடமிருந்து விவரங்களறிந்து சென்றனர்.
இப்படி, தமிழரசுக் கழகம் பற்றிய பிரச்சினை சரியாக ஒன்றைரையாண்டுக்காலம் ‘இழுபறி’யில் இருந்து வந்தது. காரியக்கமிட்டியின் ஒவ்வொரு கூட்டத்திலும் இராஜாஜி கலந்து கொண்டு, அதன் உறுப்பினர்களான சர்தார் படேல்,
மவுலானா ஆசாத் போன்ற பெருந்தலைவர்களுக்கு என்னைப் பற்றிச் சரியான தகவல்களைத் தந்துகொண்டிருந்தார்.

இதற்கிடையில் திருவிதாங்கூர் சமஸ்தான சட்டமன்றத்திற்குத் தேர்தல் வந்தது. அதிலே, கேரள மாகாண காங்கிரசானது தமிழர் மிகுதியாக வாழும் தென் திருவிதாங்கூர் தொகுதிகள்
சிலவற்றில் கேரளர்களை நிறுத்தி வைத்தது. அவர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய நான் தென் திருவிதாங்கூருக்குச் செல்ல வேண்டுமென்று த. நா. கா. கமிட்டியிடமிருந்து ஆணை வந்தது.
நான் ஆணையை ஏற்க மறுத்தேன். இராஜாஜி தமிழக முதலமைச்சர் என்ற முறையிலே கேரளத்திற்குச் செல்ல இசைவு தெரிவித்திருந்தார். என்னை நேரில் அழைத்து, நானும் அவருடன் வரவேண்டுமென்று எனக்கு ஆலோசனை கூறியதோடு, நேருஜி தமக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் காட்டினார். அதிலே, “தங்கள் நண்பர் கிராமணியார்
பிரச்சினை எனக்கு மிகவும் கவலை தருவதாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குத் தாங்கள் தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லும் போது ஸ்ரீ கிராமணியாரையும் அழைத்துச் செல்ல முயலுங்கள்’ என்று நேருஜி குறிப்பிட்டிருந்தார்.
இராஜாஜி, திருவிதாங்கூர் தமிழர்களுக்கு எதிராகத் தேர்தல் களத்தில் கேரள வேட்பாளர்களை நான் ஆதரிப்பதிலுள்ள சங்கடத்தை அறிந்து கொண்டார். ஆயினும், நேருஜியைத் திருப்தி செய்வதற்காக - என்பால் நேருவுக்குள்ள அன்பு கெடாமலிருப்பதற்காக நான் தம்முடன் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வருவதை
அவர் விரும்பினார். தமிழர்கள் மிகுதியாக வாழும் தொகுதிகளுக்குத் தாம் செல்லப் போவதில்லையென்றும், அதனால் நானும் தம்முடன் வரலாமென்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியானது நேருஜிக்கு என்பால் கொஞ்சம் மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படியிருந்தும்
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் ஆறுமாத காலம் நான் காங்கிரசிலிருப்பதற்கு நேருஜி வழிவகுத்துக் கொடுத்தார். இந்த நிலையில் முதலமைச்சர் பதவியிலிருந்து இராஜாஜி தாமாக விலகிக் கொள்ளவே குலக்கல்வித் திட்டம் எதிர்ப்புக் காரணமாக சட்டமன்ற
வாக்கெடுப்பில் தோல்வியுற்றதை ம.பொ.சி. மறைத்து விட்டார். திரு. காமராசர் அந்தப் பதவியில் அமர்ந்தார்.

இதனையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு புதுவழியைக் கண்டுபிடித்தது. தமிழக எல்லைப் பிரச்சினைக்கென்று நடைபெறும் கூட்டங்களிலோ, ஊர்வலங்களிலோ காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக்கூடாது
என்று த. நா. கா. க. செயலாளர் திரு. ஆர். வெங்கட்ராமன் எனக்கு ஆணை அனுப்பினார். தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டி தரங்கம்பாடியில் நிறைவேற்றிய தீர்மானத்தையே திரு. ஆர்.வி. எனக்கு அனுப்பிவைத்தார். அதன் பின்னரும் நான் எல்லைகளை மீட்கும் கிளர்ச்சிகளிலே தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன்.
‘வடக்கெல்லை தினம்’ என்னும் பெயரில் ஒரு நாள் கொண்டாடியது தமிழரசுக் கழகம். அது, 1954 ஜுலை 4ஆம் தேதியாகும். அன்று திருவல்லிக்கேணிக் கடற்கரையில் தமிழரசுக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி, அதிலே நான் பேசினேன்.
அந்தப் பேச்சினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரம் நேருஜிக்கு அனுப்பிவைத்தது. எல்லைக் கமிஷன் நியமிப்பதில் நேரு ஆட்சி காட்டி வரும் நியாயமற்ற தாமதத்தை எனது பேச்சில் நான் வன்மையாகக் கண்டித்திருந்தேன். அது, “நேருஜிக்கு ம.பொ.சி. மிரட்டல்”
“நேருஜியே தமிழர்களை ஏமாற்றாதே” என்றெல்லாம் காரசாரமான தலைப்புக்களைத் தந்து, ‘தினத்தந்தியில்’ பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதை அப்படியே மொழி பெயர்த்து த. நா. கா. கமிட்டி நேருஜிக்கு அனுப்பியது. தினத்தந்தியில் வெளியான செய்திக்குப் பின்னர் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூடிய போது,
“ஸ்ரீ சிவஞான கிராமணியார் பிரச்சினையை இந்தக் கமிட்டியில் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. தாங்கள் அவசியம் கலந்து கொண்டு உதவி செய்யுங்கள்” என்று நேருஜி இராஜாஜிக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், என்ன காரணத்தாலோ, காரியக் கமிட்டிக் கூட்டத்திற்கு இராஜாஜி செல்லவில்லை.
தனது அபிப்பிராயத்தைக் கூட நேருஜிக்கு எழுதவில்லை. ஆம்; என்னைக் கைவிட்டு விட்டார். அதனால், தமிழரசுக் கழகப் பிரச்சினையைத் தமிழ்நாடு காங்கிரசிடமே விட்டு விடலாம் என்று காரியக்கமிட்டி முடிவெடுத்தது. ஆம்; ஆடு கசாப்புக்காரனிடமே ஒப்புவிக்கப்பட்டது.
அதன் பின்னர் 20.7.1954 தேதியிட்டுத் தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களிடமிருந்து எனக்கு வந்த கடிதத்திலே “15 நாட்களுக்குள் தமிழரசுக் கழகத்திலிருந்து தாங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். தவறினால் காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருந்து விலக்கப்படுவீர்கள்”
என்று குறிப்பிட்டிருந்தது.காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றே தமிழ்நாடு காங்கிரஸ் இந்த முடிவை மேற்கொண்டது என்றும் திரு. ஆர். வி. தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர், நானும் தமிழரசுக் கழகத் தோழர்களும் காங்கிரசிலிருந்து தமிழரசுக் கழகத்தின்
தீர்மானப்படி வெளியேறியது நாடறிந்த நிகழ்ச்சியாகும்.

காங்கிரசிலிருந்து வெளியேறி விடுவதென்று தமிழரசுக் கழகம் எடுத்த தீர்மானத்தின் ஆங்கில நகலை எனது கையெழுத்துடன் நேருஜிக்கு அனுப்பி வைத்தேன். அவர், “தமிழரசுக் கழகம் எடுத்த துரதிருஷ்டமான முடிவு எனக்குக் கிடைத்தது”
என்று மட்டுமே குறிப்பிட்டு பதில் எழுதினார். “தமிழரசுக் கழகத்தார் அனுப்பிய ராஜினாமாக்களை ஏற்று பதில் எழுத வேண்டாம். மேற்கொண்டு அவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பதைக் கண்காணித்து வாருங்கள்” என்று நேருஜி த. நா. க. கா.வுக்கு எழுதியதாகக் கேள்விப்பட்டேன். பிரதமர் நேருஜி என்பால்
காட்டிய பேரன்பு காரணமாக ஒன்றரையாண்டுகாலம் நான் காங்சிரசில் நீடித்திருக்க அவகாசம் கிடைத்தது. (ம.பொ.சி. ‘நேருஜி என் ஆசன்’ பக். 93 முதல் 100 வானதி பதிப்பகம், சென்னை - 17)
சென்னை நகர் பிரச்சினை 1953 சனவரி முதல் 1953 மார்சு வரை மட்டுமே. இந்தக் காலக்கட்டத்தில் ம.பொ.சி.க்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் சுமூக உறவே இல்லை என்பதை அவரே எழுதியுள்ளார். தனக்குப் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லார் மீதும் வீண்பழி சுமத்தி ‘
எனது போராட்டத்தில்’ எழுதியுள்ளார்.

அவருடைய ஆட்சிக்காலத்திலே தமிழ் மாகாணம் அமைந்தது. குமரி மாவட்டமும் செங்கோட்டை வட்டமும் கேரளத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுத் தமிழகத்தோடு சேர்க்கப்பட்டன. தணிகை வட்டமும் ஆந்திரத்திடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டுத், தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
சென்னை நகரம் தமிழகத்திற்கே உரியதாக்கப் பெற்றது. இவ்வளவுக்கும் பிரதமர் நேருஜிக்கு என்பாலிருந்த அன்பும் காரணமாக இருந்தது என்பதனைத் தமிழ் மக்களுக்கு நான் நினைவூட்ட வேண்டும். ம.பொ.சி. ஒருவருக்காகத்தான் நேருஜி எல்லாம் செய்தாராம். அப்படியானால்
தேவிகுளம் பீர்மேடு ஏன் கொடுக்கப்படவில்லையாம். (மேற்கண்ட நூல் பக். 101)

1954 ஜனவரி 17இல் தமிழரசுக் கழகத்தின் சார்பில் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் “சென்னையைக் காத்தது ம.பொ.சி.
என்று சிலர் நினைக்கிறார்கள். அது வெறும் மாயை. இராஜாஜிதான் சென்னையைக் காத்தார்” என்று பேசினார். (ம.பொ.சி. ‘நானறிந்த இராஜாஜி’ பக். 325)
சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று நான் பேசினேன். வேடிக்கை பார்க்கப் பெரியக்கூட்டம் கூடியது என்பதெல்லாம் சுத்த பொய். இன்றைக்கும் மாநகராட்சி தீர்மானப் புத்தகத்தில் அந்தச் சொற்பொழிவு உள்ளது
. “இந்த மாமன்றம் பிரதமர் நேரு அவர்கள் 19.01.1953இல் நாடாளுமன்றத்தில் தெலுங்கு பேசும் பகுதியைத் தனி ஆந்திர மாநிலமாக உருவாக்கப்படும் அதில் சென்னை இடம் பெறாது என்று அறிவித்ததற்கு வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறது. சென்னை தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது.
சென்னை தற்காலிகத் தலைநகரமாகக்கூட ஆந்திராவுக்கு இங்கு இருக்கக்கூடாது. அது இரு மாநில மக்களின் உறவுகளைப் பாதிக்கும் என்று சென்னையில் ஆந்திரா தற்காலிகத் தலைநகர் வேண்டும் என்பதற்கு இம்மாமன்றம் எதிர்ப்புத் தெரிவிக்கின்றது.” அந்தக்கூட்டம் 03.01.1953இல் நடைபெற்றது. வேண்டுமென்றே
ம.பொ.சி. எனது போராட்டத்தில் கூட்டத் தேதியை எழுதவில்லை. ஏனென்றால் இவருடைய தீர்மானத்தால் நேரு மனமாற்றம் அடைந்தார் என்று எல்லோரும் நம்ப வேண்டும் என்பதற்காகவே நேரு நாடாளுமன்றத்தில் வாஞ்சுக் குழு அறிக்கையை வைத்துப் பேசியபோது
25.03.1953இல் ஆந்திராவின் தலைநகர், ஆந்திர எல்லைக்குள் அமையும் என்று அறிவித்தார். இந்த இடைப்பட்ட மூன்று மாதத்தில் சென்னை தலைநகர் தொடர்பாக ஏராளமான நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் செய்த முயற்சியை எல்லாம் ம.பொ.சி. தன்னுடைய சொந்த முயற்சியாக
எழுதிக் கொண்டார். சென்னை தலைநகருக்காக ம.பொ.சி.யின் தமிழகரசுக் கழகமோ, இந்தியத் தேசிய காங்கிரசோ, எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. திராவிடர் கழகம் மட்டுமே தனித்து நின்றுப் போராடியது.
திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் குத்தூசி குருசாமியின் தலைமையில் 5000த்திற்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் 22.02.1953 அன்று சென்னைக்கு வந்த குடியரசுத் தலைவர் இராஜேந்திரப்பிரசாதுக்குக் கருப்புக்கொடி காட்டினர். குடி அரசுத் தலைவர் கவர்னர் மாளிகைக்குச் சென்றபின் தமிழர்கள்
பொறுமை காக்கவேண்டும் என்று அறிவித்தார். அதே நாளில் 22.02.1953 தமிழகம் முழுவதும் திராவிட கழகத்தினர் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி வாஞ்சு அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தனர். ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராகக் கூட சென்னையில் இடம் தரக்கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டம் மற்றும் தெற்கெல்லைப் போராட்டத்தில் தமிழகத்திற்குத் துரோகம் இழைத்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்பதில் உறுதியாக இருந்தனர்.
ஆந்திராவில் இருந்த பொதுவுடைமைக் கட்சியினர் ஆந்திராவில் சென்னையைத் தமிழ்நாட்டுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பரப்புரைச் செய்தனர். தமிழக முதலமைச்சர் இராஜாஜியின் உறுதிப்பாடும்,
இந்தியத் தேசிய காங்கிரசின் தமிழ்நாடு கமிட்டி சென்னை தலைநகர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக உறுதியாக இருந்தது. அனைவருடைய முயற்சியால் தான் சென்னை தமிழ்நாட்டுக்கே கிடைத்தது.

- வாலாசா வல்லவன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

28 Sep
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை
😇😇😇🎷
சீதை “ராமன் எப்படியாவது தொலைந்தால் என்னை நீ கைப்பற்றி அனுபவிக்கலாம் என்று கருதி , ராமனை காப்பாற்றப் போக மறுக்கின்றாயா? என்று கேட்கின்றாள்

மற்ற மாநிலங்களில் அமைதியாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி நடந்த ரத யாத்திரையைத்
தமிழ்நாட்டில் மட்டும் அனுமதிக்காமல் மறுப்பது சட்டவிரோதம் என்றும், இந்துக்கடவுளான ராமனை இந்து விரோதிகள் திட்டமிட்டு அவமானப்படுத்துகின்றார்கள் என்றும், சங்பரிவாரத்தைச் சேர்ந்த வானரங்கள் குய்யோ முய்யோ என்று கத்திக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களை
இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் யாரும் வீதிக்கு வந்து ‘எப்படி நாங்கள் கடவுளாக வணங்கும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் ஊர்வலத்தை எதிர்க்கலாம்?’ என்று யாரும் போராட இல்லை. மக்கள் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆளும் கட்சியையும், சில பார்ப்பன
Read 39 tweets
28 Sep
அயோத்தி ராமன் அழுகிறான்
-கவிப் பேரரசு வைரமுத்து

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா Image
மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்
ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை
Read 7 tweets
28 Sep
நீங்கள் என்ன கோத்ரம்? ​
நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை.

சடங்குகளில், ஆலயங்களில் சங்கல்பம் செய்து கொள்ளும்போது கோத்திரம் என்று ஒரு ரிஷியின் பெயரை சொல்கிறோம். கோத்ரம் என்னால் வழி வந்தவர்கள், வம்சாவழி என்று ஒரு அடையாளம். முக்கியமாக ஏழு Image
ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள்
​ அபிவாதயே என்று பெரியோரிடம் நம்மை அறிமுகப்படுத்தி கொள்ளும்போது ப்ரவரம் என்று இதற்கு பெயர், எந்த ரிஷி வம்சாவழி, என்ன பெயர், எந்த ஆசார்யன், எந்த வேதத்தை பின்பற்றுகிறோம்
என்றெல்லாம் சொல்லி நமஸ்கரிப்பது.
முக்கியமான அந்த 7
​ ரிஷிகள் 1 ​. . பிருகு 2. அங்க்ரஸர் 3. அத்ரி 4. விச்வாமித்ரர் 5. வஸிஷ்டர் 6. கச்யபர் 7. அகஸ்த்யர்
கோத்ரம் பிராமணர்களுக்கு மட்டும் அல்ல. எல்லோருக்குமே உண்டு. அதிகமாக பிராமணர்கள் உபயோகிப்பது அவ்வளவு தான்.
Read 26 tweets
28 Sep
பிராமணத்தில் உள்ள சாதி உட்பிரிவுகள் எத்தனை? என்ன வகையான சாதிகள் உள்ளன?

காஞ்சிபுரம் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் என்ன ஆனார்கள், அவர்களை விட்டுவிட்டீர்கள்.

அப்புறம் தாவூத் இப்ராஹிமுக்கு அடுத்து மும்பையில் பிரபலமான தாதா சோபா அய்யர் என்ற பெண். Image
உலக அளவில் போதைக் கடத்தல் மன்னர்களில் முக்கியமானவன் விக்கி கோஸ்வாமி, வேறு யாரும் அல்ல நம்ம அர்னப் கோஸ்வாமி வகையறா.

அப்புறம் தங்கச்சி கூட படுக்க கட்டிய மனைவியை கொலை செய்த பாப்பான் எல்லாம் இருக்கான்.
இதையெல்லாம் மறைத்துவிட்டு பாப்பான் என்றால் உத்தமன் என்று பொய் சொல்கிறீர்களே. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.

கொஞ்சம் உண்மையை பேசுங்க. IPCஇல் அத்தனை பிரிவுகளிலும் குற்றம் செய்த பாப்பான் லிஸ்ட் வேணால் போடுகிறேன்.
Read 14 tweets
28 Sep
"செப்பென்பன் கலசம் என்பன்
செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்று திரள்சூ தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பன்
ஒப்பொன்றும் உலகின் காணேன்
பல நினைத்து உலைவன் இன்னும்."
அதாவது இராமன் கூறுகிறார் "என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன், ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலேயே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!" என சோகிக்கிறார். "செப்புக் கலசமோ!"
"செவ்விளநீரோ!" என தன் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறார் அந்தக் கடவுள்(?).

அதிலும் இந்த உவமைகளை அவர் சொல்லுவது கட்ட பிரம்மச்சாரியாகக் கருதப்படும் அவரின் நண்பன் அனுமனிடம்.
Read 8 tweets
28 Sep
‘இராமனே’ எப்படிப் பிறந்தான்?

இராமன் பிறப்புப் பற்றி வால்மீகி இராமாயணம் என்ன கூறுகிறது? அஸ்வமேத யாகத்தில் பிறந்தவன் இராமன் என்று கூறுகிறது. இதன் கதை நாற்றமடிக் கிறது என்பதால், கம்பன், “அஸ்வமேத யாகத்தை” “புத்திர காமேஷ் யாகமாக” திருத்தி எழுதினான். கம்பனாலேயே
இராமன் பிறப்பை சகிக்க முடியவில்லை போலும். வால்மீகி இராமாயணம் தான் மூல இராமாயணக் கதை. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அந்த மூல இராமாயணம் இராமன் பிறப்புப் பற்றி என்ன கூறுகிறது?
கலைக்கோட்டு மகரிஷியும், இன்னும் அவருக்குத் துணைவராக இருத்துவிக்களும், புரோகிதப் பார்ப்பனர்களும் சேர்ந்து யாகசாலையொன்று ஏற்படுத்தி, வேதாகம விதிப்படி யக்கியங்களை வளர்த்து, யாக மண்டபத்தைச் சுற்றி வேதப் பிராமணர்கள் உட்கார்ந்துகொண்டு,
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(