இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.
பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி.
அயோத்திக்கு பாபர்;
சோமநாதபுரத்திற்கு கஜினி.
அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும்
தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது.
அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உணமை.
ஆனால் கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள் என்பதும்,
அதேபோல கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர் என்பதும், ‘இந்துக்’ கோயிலைக் கொள்ளையடித்த அந்த ‘இசுலாமிய’ மன்னன்தனது நாட்டின் ‘இந்து’ வர்த்தகர்களைக் கொள்ளையடிக்கவில்லை என்பதும் நமது பாடநூல்கள் குறிப்பிடாத உணமை.
த்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ,
இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இசுலாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்க வேண்டும்.
ஒரு நாடு என்ற பொருளில் இந்தியா என்று நாம் இன்றைக்கு அழைக்கின்ற புவிப்பரப்பு சுமார் 50(தற்போது 65 ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. கஜினி முகமதுவின் காலத்திலோ, அதற்கு முன்னரோ இந்தப் புவிப்பரப்பு ஒரே ஆட்சியின் கீழ் ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை.
ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை. எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை.
அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?
இவ்வாறு பேசுவதே தேசத் துரோகம் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குமுறுவார்கள்.
அகண்ட பாரதத்திற்கு அவர்கள் வரைந்துள்ள எல்லைக் கோட்டின்படி ஆப்கானிஸ்தானமும் இந்தியாவில் அடக்கம். அந்தக் கணக்கின்படி பார்த்தால் இராசேந்திர சோழனைப் போல கஜினி முகமதுவும் ஒரு இந்தியன். ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?
இது வேடிக்கையான வாதமோ, குதர்க்கவாதமோ அல்ல. இந்து தேசியக் கண்ணோட்டத்திலிருந்து நமக்குக் கற்பிக்கப்படும் வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளும் முயற்சி.
பிரபல வரலாற்றாய்வாளர் ரோமில்லா தபார் பம்பாய் பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு நிகழ்த்திய டி.டி. கோசாம்பி நினைவுச் சொற்பொழிவில் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த புதிய வரலாற்றுத் தரவுகளை வெளியிட்டுள்ளார்.
‘செமினார்’ ஆங்கில மாத இதழில் வெளியான அந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.(ஆதாரம் -வினவு)
சோமநாதபுரம் – அரேபியர்களுடன் இருந்த கடல் வர்த்தகத் தொடர்பு காரணமாக செல்வச் செழிப்புடன் விளங்கிய துறைமுக நகரம். இந்த அராபிய வர்த்தகத் தொடர்பு பல நூற்றாண்டுகள் முந்தையது. அரேபிய வர்த்தகர்கள்,
மாலுமிகளில் பலர் இங்கேயே திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டு மேற்குக் கடற்கரை ஓரமாக நிரந்தரமாகவே தங்கி விட்டனர். கி.பி 8, 9 நூற்றாண்டைச் சேர்ந்த ராட்டிரகூட ஆட்சியில் கடலோரப் பகுதிகளில் தாஜிக்கிஸ்தானைச் சேர்ந்த முசுலீம்கள் ஆளுநர்களாகக் கூடப் பணியாற்றியிருக்கின்றனர்.
அதே போல கஜினி நகரத்தில் இந்து வியாபாரிகள் செல்வாக்குடன் இருந்திருக்கின்றனர்.
சோமநாதபுரம் கோயில் அத்தனை செல்வச் செழிப்புள்ளதாக விளங்கச் சில காரணங்கள் இருந்தன. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் யாத்திரை வரி வசூலிக்கப்பட்டது.
(ஜஸியா எனும் யாத்திரை வரி முசுலீம் மன்னர்களால் இந்து யாத்தீகர்களிடம் வசூலிக்கப்பட்டதாக மட்டுமே கூறுகிறது பாடநூல்). இதில் கிடைத்த பெரும் வருவாயைக் கொண்டு அரேபியக் குதிரை இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது கோயில் நிர்வாகம்.
கோயில் நிர்வாகத்திற்கும், சோலங்கி ஆட்சிக்கும் அன்றைக்குப் பெரும் சவாலாக இருந்தவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கொள்ளையடித்த குறுநில மன்னர்கள்தான். யாதவர்கள், சுடாசாமர்கள், அபிரர்கள் என்று அழைக்கப்பட்ட
அந்தக் குறுநில மன்னர்கள் வர்த்தகர்களையும் பக்தர்களையும் வழிமறித்து அவர்கள் கொண்டுவரும் காணிக்கைகளை வழிப்பறி செய்தனர். இவர்களைச் சமாளிப்பதுதான் சோலங்கி அரசின் தலையாய பணியாக இருந்தது.
இந்தப் பின்புலத்தில் கி.பி 1025-ம் ஆண்டு நடந்தது கஜினியின் படையெடுப்பு. அது குறித்த வெவ்வேறு வரலாற்று ஆதாரங்களை இனிக் காண்போம்.
துருக்கிய – பாரசீகக் குறிப்புகள்:
மன்னர்களின் வீரபராக்கிரமங்களை மிகைப்படுத்திக் கூறும் எல்லா இலக்கியங்களுக்கும் உள்ள தன்மை இவற்றிலும் உண்டு. கீழை இசுலாமிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞரான பரூக்கி சிஸ்தானி என்பவர் கஜினியின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கிறார்.
சிஸ்தானியின் கூற்றுப்படி சோமநாதபுரத்தில் கஜினியால் உடைப்பக்கட்ட சிலை இந்துக் கடவுள் அல்ல; இசுலாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் வழிப்பட்டு வந்த வாத், உஸ்ஸா, மானத் என்ற பெண் தெய்வங்களில் ஒன்றான மானத் என்ற பெண் கடவுளின் சிலை.
உருவ வழிபாட்டை எதிர்த்த முகமது நபி இச்சிலைகளை உடைத்தெறியுமாறு ஆணையிட்டதாகவும் மற்ற இரண்டு கடவுள்களின் சிலையும் உடைக்கப்பட்டு விட்டதாகவும், மானத்தின் சிலை மட்டும் குஜராத்திற்கு ரகசியமாகக் கடத்தி வரப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார் சிஸ்தானி.
‘’சு-மானத்’ என்றால் ’’மானத் கடவுளின் உறைவிடம்’’ என்று பொருள். இந்தச் சிலையை உடைத்ததன் மூலம் நிறைவேற்றப்படாமலிருந்த ஒரு இசுலாமியக் கடமையை கஜினி நிறைவேற்றிவிட்டார்’’ என்று அவர் எழுதுகிறார்.
மன்னனைக் ‘குளிப்பாட்டுவதற்கு’ வழக்கமாக அரசவைப் புலவர்கள் புனையும் கதைதான் இது என்றும், பல்வேறு இசுலாமிய மன்னர்களைக் காட்டிலும் தன்னை ஒரு மதக்கடமையை நிறைவேற்றிய மாவீரனாகச் சித்தரித்துக் கொள்ள கஜினி செய்த முயற்சி என்றும் கூறி வரலாற்றாசிரியர்கள் இந்தக் கதையை நிராகரிக்கின்றனர்.
கஜினியின் அரசவையில் இருந்த அல் பரூனி எனும் அறிஞர் இந்தியாவின்பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து கிதாப் உல் ஹிந்த் எனும் வரலாற்று நூலை எழுதியவர். அவர் இத்தகைய கட்டுக் கதைகள் எதையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவை ஒரு புறமிருக்க சன்னி பிரிவு முசுலீமான கஜினி, ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் 50,000 பேரை இசுலாமிய மார்க்கத்துக்கு விரோதமானவர்கள் என்று கூறிக் கொலை செய்தான் என்றும் துருக்கிய – பாரசீக வரலாற்றுக் குறிப்புகள் கூறிகின்றன.
இன்னொரு சம்பவமும் நடதுள்ளது. மூல்தான் நகரிலிருந்த இந்துக் கோயிலொன்றை இசுமாயிலி முசுலீம்கள் தாக்கியிருக்கின்றனர். அதற்குப் பதிலடியாக இசுமாயிலி முஸ்லீம்களைத் தாக்கியது மட்டுமின்றி அவர்களது மசூதியையும் இழுத்து மூடியிருக்கிறான் கஜினி.
சோமநாதபுரத்தின் மீதான தாக்குதல், ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றை மதக் கடமையை நிறைவேற்றும் செயல்களாக அன்று இசுலாமிய உலகத்திடம் (கலீபாவிடம்) கஜினி சித்தரித்திருக்கலாம். எனினும் அடிப்படை உண்மை அதுவல்ல.
இந்தியாவின் பல்வேறு அரசுகளுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகத்தில் அரேபியாவுடன் கஜினி (ஆப்கான்) போட்டியிட்டுக் கொண்டிருந்தது. சோமநாதபுரத்தின் போரா முஸ்லீம் மற்றும் இந்து வணிகர்கள் மூலமாகவும், சிந்து மாகாணத்தின் (மூல்தான்) இசுமாயிலி,
ஷியா வியாபாரிகள் மூலமாகவும் நடைபெற்ற இந்த வர்த்தகத்தைத் தடுப்பதன் மூலம்தான் கஜினியின் வர்த்தகம் பெருகும் என்பது யதார்த்த நிலையாக இருந்தது.
வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை போர்த்திக் கொண்டது இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.
சமண நூல்களின் குறிப்புகள்:
இனி, அக்காலத்தில் நாடெங்கும் செல்வாக்குடன் திகழ்ந்த சமண மத்ததினரின் குறிப்புகளைக் காண்போம். கோயில்களை அழித்து முனிவர்களையும் பார்ப்பனர்களையும் துன்புறுத்துகின்ற ராட்சதர்களுக்கெதிராக
சாளுக்கிய மன்னன் போர் தொடுத்ததை 12-ம் நூற்றாண்டின் சமண நூல் குறிப்பிடுகிறது.
ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்த கஜினியின் படையெடுப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதே சாளுக்கிய மன்னன் காம்பே பகுதியில் முசுலீம்களுக்கு ஒரு மசூதி கட்டிக் கொடுத்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் குமாரபாலன் என்பவன் சாகாவரம் பெற விரும்பிய கதையை இன்னொரு சமண நூல் கூறுகிறது:
சோமநாதபுரத்திலுள்ள மரத்தினாலான பாழடைந்த கோயிலை கற்கோயிலாக மாற்றிக் கட்டினால் சாகாவரம் பெறலாமென அவனது அமைச்சன் கூறிய யோசனையை மன்னன் அமல்படுத்துகிறான். சமண மதத்தைச் சார்ந்த அந்த அமைச்சன் தனது மதத்தின் வலிமையை மன்னனுக்குப்
புரிய வைக்க சமண முனிவர் ஒருவரை அழைத்து வந்தான். சோமநாதபுரம் கோயிலுக்கு வந்த அந்த முனிவர் தனது தவ வலிமையினால் ‘சிவபெருமானை’ அழைத்தவுடனே சிவன் மன்னனுக்குக் காட்சியளித்தாராம். சிவனையே சொடுக்கு போட்டு வரவழைக்கும் அந்த முனிவரின் தவ வலிமையை வியந்த மன்னன்,
உடனே சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினான் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது.
கஜினி முகமதுவின் படையெடுப்புக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்நூலிலும் படையெடுப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை.
11-ம் நூற்றாண்டில் (அதாவது கஜினி முகமதுவின் படையெடுப்பின் போது) வாழ்ந்த மால்வா அரசவையின் சமணக் கவிஞர் தனபாலன் என்பவர் சோமநாதபுரம் படையெடுப்பைக் குறிப்பிடுகிறார். ஆனால் சிலை உடைப்பு பற்றி ஏதும் இல்லை. மாறாக மகாவீரரின் சிலைகளை கஜினி முகமதுவால் எதுவும் செய்ய முடியவில்லை
என்பதை விரிவாகக் கூறுவதன் மூலம் சைவத்தைக் காட்டிலும் சமணத்தின் மேன்மையை வலியுறுத்துகிறார்.
சைவத்திற்கு எதிராகக் கடுமையாக மோதிக் கொண்டிருந்த சமணர்கள், ‘’தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத சிவபெருமானைப்’’ பற்றி எழுதாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
சோமநாதபுரத்தின் சமஸ்கிருதக் கல்வெட்டுகள்:
12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.
ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படையெடுப்பைப் பற்றி ஒரு கல்வெட்டும் இல்லை.
கல்வெட்டைக் காண்பவர்கள் ‘’சிவனுக்கே இந்தக் கதியா’’ என்று நம்பிக்கையிழந்து விடுவார்கள் என்ற சங்கடமா? அப்படியானால் உள்ளூர் மன்னர்கள் கோயிலைத் தாக்கியதை மட்டும் ஏன் குறிப்பிட வேண்டும்? அல்லது கோயிலைக் கொள்ளையடிப்பது என்பது அடிக்கடி நடக்கக்கூடிய சாதாரண விசயமாக இருந்ததா?
– என்ற பல கேள்விகளை இக்கல்வெட்டுகள் கிளப்புகின்றன.
1264-ம் ஆண்டின் இன்னொரு கோயில் கல்வெட்டு மிக முக்கியமானது. சமஸ்கிருதத்திலும் அராபிய மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு, ஹார்மூஸ் நகரைச் சேர்ந்த
ஒரு முசுலீம் வியாபாரிக்கு மசூதி கட்டுவதற்காக சோமநாதபுரத்திலேயே நிலம் விற்பனை செய்யப்பட்டது பற்றியதாகும்.
கோஜா நூருதீன் பெரூஸ் என்ற வியாபாரிக்கு ஸ்ரீசாதா என்ற உள்ளூர் மன்னன் அனுமதியுடன் செய்த இந்த நிலவிற்பனைக்கு இரண்டு உள்ளூராட்சி அமைப்புகளும் அங்கீகாரம் அளித்துள்ளன.
சோமநாதபுரம் கோயிலின் அர்ச்சகர் வீரபத்ரனின் தலைமையில் வர்த்தகர்கள், அதிகாரிகள், உள்ளூர்ப் பிரமுகர்கள் அடங்கிய ‘பஞ்சகுலா’ என்ற பஞ்சாயத்து ஒரு உள்ளூர் அமைப்பு.
கப்பல் முதலாளிகள், கைவினைஞர்கள், மாலுமிகள், மதகுருமார்கள் ஆகியோரடங்கிய ‘ஜமாதா’ என்ற ஜமாத் இரண்டாவது அமைப்பு.
இந்த ஜமாத்தின் உறுப்பினர்களாக வாணிபர்கள், கொத்தனார்கள், முசல்மான் குதிரை லாயக்காரர்கள் ஆகியோரும் அவர்களது சாதியின் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் இசுலாத்திற்கு மாறிய உள்ளூர் சேவைச் சாதியினராக இருக்கக்கூடும்.
மசூதிக்கான நிலம் யார் யாரிடமிருந்தெல்லாம் விலைக்கு வாங்கப்பட்டது என்ற பட்டியல் தெளிவாக உள்ளது. அதில் பெரும்பகுதி நிலம் சோமநாதபுரம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதும், அதை விற்பனை செய்தவர் கோயிலின் தலைமை அர்ச்சகரான பார்ப்பனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தக் கல்வெட்டையும் பரிசீலிக்கும் போது, எவ்வித நிர்ப்பந்தமுமின்றி மிகச் சுமுகமாகவே இந்த விற்பனை நடந்துள்ளதென தெரிகிறது.
கஜினி முகமதுவின் படையெடுப்பு நடைபெற்று சுமார் இருநூறே ஆண்டுகளில் அந்தக் கோயில் நிலத்தையே மசூதிக்கு விற்க அர்ச்சகர்களும், ‘இந்து’ வியாபாரிகளும் எப்படிச் சம்மதித்தனர்? 1000 ஆண்டுகளாக இந்தியா முழுவதிலுமுள்ள
இந்துக்களின் நினைவில் கல்வெட்டாகப் பதிந்து அவமான உணர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் என்று பாரதீய ஜனதா கூறுகிறதே, அந்த கஜினியின் படையெடுப்பை அதே சோமநாதபுரத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மறந்தது எப்படி? அதுவும் இருநூறே ஆண்டுகளில்!
ஞாபக மறதியா? அல்லது பலநூறு படையெடுப்புகளில் அதுவும் ஒன்று என்பதால் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவு முக்கியமானல்ல என்பதாலா?அல்லது தங்களுடன் “சுமூகமான வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள் வேறு, ஆக்கிரமித்த துருக்கியர்கள் வேறு;
இருவரும் இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களிருவரையும் ‘முசல்மான்கள்’ என்று ஒரே மாதிரியாகக் கருத முடியாது’’ என எண்ணினார்களா – இந்தக் காரணம்தான் அடிப்படையானதாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்ல, குதிரை வர்த்தகத்திற்குப் பெயர்போன ஹார்மஸ் நகர முசுலீம் வியாபாரிக்குத்தான் நிலம் விற்கப்பட்டிருக்கிறது. எனவே வர்த்தக நலன் இதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கக் கூடும். கோயில் நிர்வாகிகள் கோயில் பணத்தில் குதிரை வர்த்தகம் செய்து கணிசமாக லாபம் ஈட்டியிருக்கக் கூடும்
என்பதும் இந்தப் ‘பெருந்தன்மைக்கு’க் காரணமாக இருந்திருக்கலாம்.
‘அர்ச்சகர்களின் பெருந்தன்மை’
இந்திய மன்னர்களுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகம் அரேபியா, சிந்து பகுதிகளைச் சேர்ந்த ஷியா, இசுமாயிலி பிரிவு முஸ்லீம் வியாபாரிகள் கையில் இருந்தது. இந்த வர்த்தக வழியைத் தடுத்து,
ஆப்கான் மூலம் வர்த்தகம் செய்ய வைப்பதன் மூலம் தனது அரசின் செல்வாக்கை பெருக்குவதே கஜினி முகமதுவின் நோக்கம். வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை அணிந்தது இப்படித்தான்.
அதேபோல கஜினி முகமது சோமநாதபுரதிதன் மீது படையெடுத்து 200 ஆண்டுகளுக்குள்,
அந்த கோயில் நிலத்தையே மசூதி கட்டுவதற்காக விற்றிருக்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள். இவர்களும் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததுதான் இந்தப் ‘பெருந்தன்மை’க்கு காரணமாக இருக்கும்.
சோமநாதபுரத்திலேயே காணப்படும் 15-ம் நூற்றாண்டின் கல்வெட்டொன்று இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாகப் பயன்படுகிறது.
சமஸ்கிருத மொழியில் உள்ள அக்கல்வெட்டு ‘’பிஸ்மில்லா ரஹ்மானி ரஹீம்’’ என்ற இசுலாமிய வாழ்த்துச் சொல்லுடன் தொடங்குகிறது. ‘’போராபரீத்’’ என்பவருடைய அராபிய வம்சாவளியை விவரமாகக் கூறி துருக்கியர்களால் (கஜினி) சோமநாதபுரம் தாக்கப் பட்டபோது
அதை எதிர்த்து உள்ளூர் மன்னன் பிரம்ம தேவன் சார்பாக போரா பரீத் போரிட்டு மடிந்ததாகவும், அவரது நினைவாக அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படையெடுப்புக்கு ஆளான சோமநாதபுரம் நகரைச் சேர்ந்தவர்களே கஜினியின் படையெடுப்பைப் பற்றி அப்போதும், அதையடுத்த சில நூற்றாண்டுகளிலும் எத்தகைய கருத்தும் கண்ணோட்டமும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் கண்டோம்.
அப்படியானால் இந்த ‘’ஆயிரம் ஆண்டு அவமானம்’’ என்ற கதை எப்போது உருவானது? இந்தக் கதையின் முதல் ஆசிரியர்கள் வெள்ளையர்கள்.
பிரிட்டிஷ் காமன்ஸ் அவை விவாதம்:
“சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த கஜினி முகமது அந்தக் கோயிலின் சந்தனமரக் கதவுகளை கொண்டு சென்று விட்டான். ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பிரிட்டிஷ் ராணுவம் கஜினிக்குச் சென்று அங்கிருந்து
அந்தக் கதவைக் கொண்டு வந்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று 1842-ல் அறிவித்தார் லார்டு எல்லன்பரோ.
(1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போருக்கு 15 ஆண்டுகள் முன்னர்தான் அந்த விவகாரம் தொடங்குகிறது என்பதையும், இந்து-முசுலீம் மன்னர்களையும் மக்களையும் பிளவுபடுத்துவது அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் வாழ்வுக்கே அவசியமானதாக இருந்தது என்பதையும் வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.)
இந்த எதிர்ப்பை முறியடிக்க எல்லன் பரோவின் ஆதரவாளர்கள் கீழ்க்கண்டவாறு வாதிட்டார்கள்:
“முசுலீம் மன்னர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நாடு, அந்தத் துன்புறுத்தும் நினைவுகளால் ஆயிரம் ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறது. இந்துஸ்தானத்தின் மீதான மிக மோசமான ஆக்கிரமிப்பின் சின்னமாக அந்தச் சந்தனக் கதவுகள் இந்துக்களின் நினைவில் பதிந்திருக்கின்றன.
எனவே இந்நடவடிக்கை அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும்” என்றனர்.
கஜினியின் படையெடுப்பு – கொள்ளைக்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய நூல் பிரிஷ்டா என்ற பாரசீகக் கவிஞன் 17-ம் நூற்றாண்டில் எழுதியது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.
11-ம் நூற்றாண்டில் சிஸ்தானி எழுதியதைக் காட்டிலும் பிரிஷ்டாவின் கட்டுக்கதை மிகக் கவர்ச்சிகரமானது. சோமநாதபுரத்தில் மிகப் பிரம்மாண்டமான கடவுள் சிலை இருந்ததாகவும், அதன் வயிற்றைத் தன்னுடைய வாளால் கஜினி முகமது கிழித்தவுடன் அதிலிருந்து தங்கமும் நகையும்
கொட்டத் தொடங்கியதாகவும் புராணப் புளுகுகள் கணக்கில் அளக்கிறார் பிரிஷ்டா.
ஒரு வழியாக இந்த ‘’வரலாற்று ஆதாரத்தை’’ வைத்துக் கொண்டு கஜினியிலிருந்து இரண்டு கதவுகளைத் தூக்கிக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ராணுவம். வந்தபின் பார்த்தால் அவை எகிப்தியக் கதவுகள்.
அதற்கும் சோமநாதபுரத்திற்கும் சம்பந்தமில்லை. எனவே அவை ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. ‘இந்துக்களின் நினைவில் பதிந்த அந்த சந்தனக் கதவுகளை’ இப்போது கரையான்கள் தின்று கொண்டிருக்கும்.
😃😃😃
காங்கிரசும் கஜினி முகமதுவும்:
இந்திய தேசிய விடுதலை இயக்கம் மறைமுகமாக முன்வைத்த இந்து தேசிய அரசியல் சோமநாதபுரம் விவகாரத்தைப் பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
குஜராத்தைச் சேரந்த கே.எம்.முன்ஷி சோமநாதபுரம் கோயிலை திரும்பக் கட்டுவதை தேசிய இயக்கத்தின் கடமையாக முன்னிறுத்தினார்.
இவர் கல்கி பாணியிலான ‘வரலாற்று’ நாவல்கள் எழுதிக் கொண்டிருந்தவர். முசுலீம் எதிர்ப்பு இந்து தேசியத்தை பிரச்சாரம் செய்த பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் நாவலைப் படித்து, அதன் தாக்கத்தில் அதே பாணியில் “ஜெய சோமநாதா’’ எனும் நாவலை இவர் 1927-ல் எழுதி வெளியிட்டார்.
“சோமநாதா – அழிவில்லா ஆலயம்” என்ற இவரது இன்னொரு நூல் 1843-ல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையில் நடைபெற்ற விவாதக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.
“இசுலாமிய ஆக்கிரமிப்புக்கு முந்தைய ஆரியப் பெருமிதத்தை மீட்பதே நமது லட்சியம்” என்று பகிரங்கமாகப் பேசி வந்த முன்ஷி மத்திய அமைச்சரும் ஆனார். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் வேலையாக இந்திய அரசாங்கம் சோமநாதபுரம் கோயிலைக் கட்டி
1951-ல் ஜனாதிபதி ராசேந்திர பிரசாத்தை வைத்துக் குடமுழுக்கு நடத்தியது.
“இந்திய அரசாங்கம் இதுவரை செய்த, செயது கொண்டிருக்கிற அனைத்துப் பணிகளைக் காட்டிலும் இந்தக் கோயிலைக் கட்டியதுதான் முக்கியமானது; ஏனென்றால் இது ஒட்டுமொத்த இந்தியாவையும் மனம் குளிரச் செய்யும்” என்றார் அமைச்சர் முன்ஷ
இப்படியாக ஒரு வரலாற்றுப் புரட்டு மதரீதியாகப் புனிதப்படுத்தப்பட்டதுடன், “அரசு அங்கீகாரம் பெற்றது” என்ற முத்திரையும் அதன்மீது இடப்பட்டு விட்டது.
பாடநூல் புரட்டு!
மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தின் வரலாற்றுப் பாடநூலிலிருந்து சில வரிகளைக் கீழே தருகிறோம். ரோமிலா தபாரின் ஆ்ய்வுடன் இதனைப் பொருத்திப் பார்க்கவும்.
“கஜினி முகமது ஒரு முஸ்லீம் வெறியன். சோமநாதபுரத்தில் அவன் சிவபெருமான் சிலையைத் துண்டு துண்டாக உடைத்தான்;
குவியல் குவியலாக வைரங்களையும், நகைகளையும் கொள்ளையடித்தான். ஏராளமான பேரைப் படுகொலை செய்தான்”
“கஜினி முகமதுவிம் படையெடுப்பின் விளைவாக பஞ்சாப், முஸ்லீம்களின் கைக்குப் போய் விட்டது, இந்திய நாடிடன் பொருளாதார, இராணுவ வல்லமைக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.”
‘மதவெறியன்’, பஞ்சாப் போன கதை இவையெல்லாம் பிரிஷ்டாவின் கட்டுக் கதையையும், முன்ஷியின் நாவலையும் வைத்து எழுதப்பட்டவை. இந்த ‘வரலாற்றை’ப் படித்த படிப்பாளிகள் மதவெறிக்கு ஆளாவதில் என்ன வியப்பு!
ஏராளமான நூல்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆதாரம் காட்டி இந்த ஆய்வுரையை நிகழ்த்தியிருக்கிறார் ரோமில்லா தபார்.
ஆனால் எந்தக் கோயிலை பாதுகாப்பதற்காக ஒரு முசுலீம் உயிர் துறந்தாரெனக் கல்வெட்டு இருக்கிறதோ அதே கோயிலிலிருந்து முசுலீம் மக்களுக்கெதிரான நாடு தழுவிய கலவரத்தைத் துவக்கி வைக்கிறார் அத்வானி.
இத்தகைய வரலாற்றுப் புரட்டு என்பது இந்துமத வெறியர்களால் மட்டும் செய்யப்படுவதல்ல.
தத்தம் அரசியல் தேவைக்கு ஏற்ப இசுலாமிய, கிறித்தவ மதவெறியர்களும், இன வெறியர்களும், சாதி வெறியர்களும் இதையே தான் செய்கிறார்கள். கட்டபொம்மன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மன்னன் அல்ல – கொள்ளைக்காரத் தெலுங்கன் எனகிறது ஒரு தமிழின வெறிப் பத்திரிகை;
ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும் பிடுகு முத்தரையர் சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார்; கான்சாகிபுவா மருதநாயகமா என்ற தகராறு கமலஹாசனுடைய படத்தின் வசூலுக்கு வலிமை சேர்க்கிறது.
வரலாற்றின் பெயரால் சாதி, மத, இனவாதிகள் நடத்தும் இந்த மோதலை முறியடிக்க வேண்டுமானால் நமக்குத் தேவை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம். அந்தக் கண்ணோட்டமிருந்தால் நாம் கஜினியையும் புரிந்து கொள்ளலாம்; கார்கிலையும் புரிந்து கொள்ளலாம்.
மன்னனின் பெருந்தன்மை
கஜினி முகமதுவால் தோற்கடிக்கப்பட்ட ஆனந்த பாலன் என்றும் மன்னன் கஜினி முகமதுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தை அல்பரூனி தனது நூலில் மேற்கோள் காட்டுகிறார்.
“உங்களுக்கெதிராகத் துருக்கியர்கள் கலகம் செய்வதாக அறிந்தேன். நீங்கள் விரும்பினால் 500 குதிரைப் படையினர்,
10,000 காலாட்படையினர், 100 யானைகளுடன் நான் உங்கள் உதவிக்கு வருகிறேன். அல்லது இரண்டு பங்குப் படையுடன் என் மகனை அனுப்புகிறேன். ஏனென்றால் நான் உங்களால் தோற்கடிக்கப்பட்டவன், நீங்கள் வேறொருவனால் தோற்கடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை”
முஸ்லீம் மக்களை ‘பாபரின் வாரிசுகள்’ என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஆனந்தபாலனின் வாரிசுகள் யார் என்று நமக்கு அடையாளம் காட்டுவார்களா?
புதிய கலாச்சாரம் – ஆகஸ்டு 1999
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்? தடுத்தது உண்மையா தெரியுமா?
உலகில் இருக்கும் மற்ற அனைத்து நாடுகளை காட்டிலும் அதிக வரலாற்றையும், மர்மங்களையும் கொண்ட நாடு நமது இந்தியா ஆகும். ஏனெனில் இப்பொழுதும் மட்டுமல்ல அந்த காலத்திலும் நமது மன்னர்கள் இப்போதிருப்பது போலவே மொழியாலும், எல்லையாலும் பிரிந்தே இருந்தனர்.
நம்மை ஆண்ட மன்னர்கள் ஒற்றுமையோடு இருந்திருந்தால் இன்று உலகின் சக்திவாய்ந்த நாடாக நாம்தான் இருந்திருப்போம்.
ஜாதிக்கு எதிராக தொடர்ந்து கடுமையாக போராடி வந்த தந்தை பெரியார், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் உருவான அரசியல் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். சுவாமிமலை கூட்டத்தில் பேசிய அவர்,
'பிராமணன் என்றொரு சாதி இல்லை' என்று அறிவிக்காவிட்டால் நங்கள் சட்ட புத்தகத்தை கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்தார்.
3.11.1957 ல் தஞ்சாவூரில் பெரியார் சாதி ஒழிப்பு மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் அரசியல் சட்டத்தில் உள்ள மதப்பாதுகாப்பு, மத உரிமை என்பதில்,
பார்ப்பன ஜாதியை எவ்வாறெல்லாம் காப்பாற்றும்படி சட்டம் உள்ளது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி எல்லாம் ஒடுக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதையும் விளக்கிப் பேசினார். அக்கூட்டத்தில் பெரியார்,
‘பிராமணன் என்று ஒரு சாதி சட்டத்தில் இருக்க அனுமதிக்க மாட்டோம். அப்படி இருந்தாலும், அவன் பிராமணனாக வாழ அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங்கம் சொல்லட்டும்’. - தோழர் பெரியார்
இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது.சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம்’ என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப்புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம். இதை நாங்கள் வருத்தத்துடனேயே சொல்கிறோம், வெறும் குறும்புக்காகவோ,
விளம்பரத்திற்காகவோ, ஜெயிலுக்குப் போய் வந்ததைக் காட்டி ஓட்டு வேட்டையாடவோ நாங்கள் அந்தக் காரியம் செய்யவில்லை.
எனக்கு 79 வயதாகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும்.
#அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.