‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதி மாலை போடுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன?
இந்த பரிகாரத்தை யார் செய்ய வேண்டும்?
முறையாக எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது என்பது மிகப்பெரிய புண்ணிய பரிகாரமாகும்.
ஆஞ்சநேயரை வேண்டி இந்த நாமத்தை 108 முறை எழுதி மாலையாக கோர்த்து அவருடைய கழுத்தில் போடுவது நாம் வேண்டிய வரங்களை எல்லாம் நமக்கு வாரி வழங்கக் கூடிய அற்புத சக்தி வாய்ந்த பரிகாரமாக இருந்து வருகிறது.
பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் முதல் வயதானவர்கள் வரை அத்தனை பேரும் தங்களுடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஸ்ரீ ராம ஜெயம் நிச்சயம் எழுதி இருப்போம்.
அப்படி ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?
யார் இதை எழுதினால் மிகவும் நல்லது?
எப்படி முறையாக எழுத வேண்டும்?
என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர்களுக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது என்பது மிகவும் பிடித்த செயல் ஆகும்.
108 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு சாற்றினால் தேர்வில் வெற்றி பெற்று விடுவோம் என்று ஆர்வமாக இந்த பரிகாரத்தை செய்வது உண்டு.
தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் இறைவனின் இந்த திருநாமத்தை எழுதும் பொழுது
அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் நல்ல நேர்மறை சிந்தனைகள் செலுத்தப்படுகின்றன.
இறைவனுடைய திருநாமத்தை உச்சரிக்கும் பொழுது மனதில் இருக்கும் தீயவைகள் யாவும் அழியும் என்பது நியதி.
அப்படி பார்க்கும் பொழுது இந்த மந்திரத்தை தெரிந்தும் தெரியாமலும் எவரொருவர் உச்சரிக்கிறார்களோ
அவர்களுக்கு தீமைகள் குறைந்து நன்மைகள் பெருக துவங்கும்.
ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் மட்டும் தேர்வில் வெற்றி பெற்று விட முடியாது.
நன்றாகப் படித்து மனப்பாடம் செய்து படித்ததை மறந்து போகாமல் இருக்க இந்த ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை தியானமாக நினைத்து எழுதி வரலாம்.
ஸ்ரீ ராம ஜெயம் எழுதும் பொழுது மனம் ஒருமுகப்படுவதை நம்மால் உணர முடியும்.
ஸ்ரீ ராம ஜெயம் நோட்டு புத்தகத்தில் வரிசையாக எழுதும் பொழுது ஒன்று, இரண்டு, மூன்று என்று பக்கத்தில் எண்ணை போட்டு ஆரம்பித்து எழுதக்கூடாது.
மனதால் உச்சரித்துக் கொண்டே எத்தனை முறை எழுதுகிறோம் என்று
உன்னிப்புடன் கவனித்து எழுதி வந்தால் மனம் ஒருமுகப்படும். வேறு ஒரு சிந்தனைகள் உங்களுடைய மனதில் உதிக்காது.
எப்பொழுதும் பிரார்த்தனையின் பொழுது சிந்தனைகளை ஒருமுகப்படுத்த வேண்டும்.
அப்போது தான் நீங்கள் வேண்டிய வேண்டுதல்களும் உடனே பலிக்கும்.
ஸ்ரீ ராம ஜெயம் எழுதும் பொழுது நீல நிற மையால் எழுதுவது இன்னும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
ஸ்ரீ ராமர் நீல நிறத்தில் தேகத்தை கொண்டிருப்பதால் நீல நிற மையை கொண்டு ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் அளப்பரிய பலன்கள் உண்டாகும்.
ஸ்ரீ ராம ஜெயம் எழுதும் பொழுது தனியாக யாரும் இல்லாத ஒரு இடத்தில் அமர்ந்து எழுதுவது நல்லது.
ஒவ்வொரு வாக்கியத்தையும் எழுதும் பொழுதும் ஆஞ்சநேயரையும், ராமரையும் மனதில் நினைத்துக் கொண்டே எழுதுவது உத்தமம்.
தேர்வு எழுத செல்லும் மாணவர்கள்,
தொழில் துவங்க நினைப்பவர்கள்,
திருமணமாகாத கன்னிப் பெண்கள்,
திருமணத்தடை உள்ளவர்கள்,
மனதில் குழப்பங்களுடன் இருப்பவர்கள்,
தொழில் நலிவடைந்தவர்கள்,
தொடர் தோல்விகளை சந்திப்பவர்கள்,
பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,
எம பயம் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,
கோழைகள், பயந்த சுபாவம் உள்ளவர்கள் தைரியம் பெறவும்
ஸ்ரீ ராம ஜெயம் என்னும் இந்த திருநாமத்தை 108 முறை தனித்தனியாக பேப்பரில் எழுதி அதனை சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பேப்பர் துண்டுக்கும் மஞ்சள் அல்லது செந்தூரம் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் வெள்ளை நிற நூலினால் ஒவ்வொன்றாக இடைவெளிவிட்டு மாலையாக வரிசையாக பூ கட்டுவது போல கட்டி கோர்த்து கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த மாலையை ஆஞ்சநேயர் சன்னிதிக்கு சென்று அங்குள்ள
ஆஞ்சநேயரை தரிசனம் செய்த பின்பு உங்களுடைய பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தித்து பின்னர் உங்கள் கையில் இருக்கும் மாலையை இறைவனுடைய திருவடியில் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறிய ஆஞ்சநேயராக இருந்தால் அவருடைய கழுத்திலேயே நீங்கள் போடலாம்.
108, 1008, 10008 என்கிற வரிசையில் ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது முறையாகும். இப்படி எழுதி இறைவனிடம் சமர்ப்பிக்கும் பொழுது நம்முடைய எத்தகைய வேண்டுதல்களும் தடையில்லாமல் நிறைவேறும் என்பது பக்தர்களின் தீவிர நம்பிக்கை.