அந்தத் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான் தோன்றுகிறது அவருக்கு தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று.
'வாழ்க்கையில் அவ்வளவு இலகுவாக யாருக்கும் கிடைத்து விடாத பெரும் வாய்ப்பு தங்கத்தட்டில் வைத்துத் தனக்குத் தரப்பட இருக்கையில் அதைத் தானே தட்டிப் பறித்துத் தள்ளி விட்டு விட்டோமோ?'
லேசாக உறுத்தத் தொடங்குகிறது அவருக்கு.
மீண்டும் தொலைபேசியில் அழைத்துத் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம்.
விசயம் வேறு ஒன்றுமில்லை. இதுதான்.
சட்டப்படிப்பை முறையாக முடித்து விட்ட அவருக்கு திங்கட்கிழமை காலையில் 'வைவா' தேர்வு நடைபெற இருக்கிறது.
அந்தத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும்போதுதான் ஞாயிறு காலையில் - அதாவது தேர்வுக்கு முந்தைய நாளில் - அந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.
"நாளைக் காலை சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது" என்பதே அதன் சாரம்.
தொலைபேசியில் அழைத்துச் சொன்னவரிடம், "நாளைக் காலையில் எனக்கொரு தேர்வு இருக்கிறது. எப்படியாவது முன்னுரிமை பெற்றுக் காலையிலேயே என் தேர்வை நிறைவு செய்து விட்டு வந்து விடுகிறேன்.
அந்த அறிவிப்பை மதியத்திற்கு மாற்றி வைக்க முடியுமா?" என்று அந்தச் சூழலிலும் சொல்லியிருக்கிறார் அவர்.
சொல்லி முடித்துத் தொலைபேசியை வைத்த பின்னர்தான் உறைக்கிறது அவருக்கு.
என்னஒரு பைத்தியக்காரத் தனம் செய்து விட்டேன்?
அவரவர் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பற்றிக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள்.
இந்தத் தேர்வை அடுத்த வருடம் கூட அட்டண்ட் செய்ய முடியும்தான். இல்லையா.?
ஆனால் இது வாழ்நாளுக்கான வாய்ப்பல்லவா?
எத்தனை பேரின் கனவு இது?
இப்படி நேரம் காலம் தெரியாமல் முப்பதாண்டு கால உழைப்பை முப்பது நொடிகளில் சிதைத்து விட்டோமே என்ற கலக்கத்தில் என்ன செய்வதென்றறியாத திகைப்பில் இருந்திருக்கிறார் அவர். அந்தத் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு.
அவர் இந்தத் திகைப்போடும் கலக்கத்தோடும் இருக்கையில் திங்கள் வெளியிடப்படுவதாக இருந்த அந்த முக்கிய அறிவிப்பு ஞாயிறு மதியமே வெளியாகிறது.
கலக்கம் மறைந்து களிப்பு தோன்றிய அதே நேரத்தில் ஆனந்தக் கண்ணீர் தானாகப் பெருகுகிறது அவருக்கு.
இது எப்படி சாத்தியமானதென்று அவருக்கே புரியவில்லை.
நடந்தது இதுதான். புதுக்கோட்டை அப்துல்லாவுக்கு முதல்வரின் தனிச்செயலாளரிடமிருந்து திங்கள் சென்னையில் இருக்கும்படியும், மாநிலங்களவை உறுப்பினர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தொலைபேசி வழியாகச் செய்தி சொல்லப்பட்டது.
அவரிடம், தனக்குத் தேர்வு இருக்கும் விசயத்தைச் சொல்லிவிட்டார்
அப்படிச் சொல்லி அறிவிப்பைத் தள்ளி வைக்கச் சொன்னதன் மூலம் அவசரப்பட்டு தவறு செய்து விட்டோமோ என்ற கலக்கத்துடன் இருந்திருக்கிறார் அப்துல்லா.
ஆனால் திங்கள் வெளிவர வேண்டிய அறிவிப்பு எப்படி ஞாயிறு மதியமே வந்தது.?
இங்குதான் ஒரு தலைவரின் உன்னதமான தலைமைப்பண்பு வெளிப்பட்டிருக்கிறது.
முதல்வரின் தனிச் செயலர் விசயத்தை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்.
"தேர்வா முக்கியம்.?
எவ்வளவு பொறுப்பான பதவியைக் கொடுக்க இருக்கிறோம்.?
எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் கட்சிக்குள்ளேயே.?
அப்படி இருக்கும்போது இவர் தேர்வெழுத வசதியாக நாம் காத்திருக்க வேண்டுமா.?
இவரது தேர்வுதான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட முக்கியமா.?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கலாம் அவர்.
ஆனால், மாறாக, "நாளைக்குத் தேர்வா? அடடா!
மாநிலங்களவை குறித்த படபடப்புடன் எப்படி நிம்மதியாகத் தேர்வை எதிர்கொள்ள முடியும்?
நாம் இன்றே அறிவிப்பை வெளியிடுவோம்.
அவர் நிம்மதியாகத் தேர்வை எதிர்கொள்ளட்டும்" என்றிருக்கிறார் முதல்வர்.
இப்படித்தான் பொதுச்செயலாளர் பெயரில் அறிவிப்பு வரும் வரையிலும் கூடக் காத்திருக்காமல் தலைவர் பெயரிலேயே அந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கேட்டுக் கொண்டிருந்த எனக்கே மயிர்க்கால்கள் சிலிர்த்து விட்டன.
அப்துல்லாவின் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
ஆனால் என்னால் ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மாநிலங்களவை உறுப்பினராகப் போகிறவருக்கும் சரி,
அந்தக் கட்சியின் தலைமைக்கும் சரி கல்வியின் அருமை புரிந்ததானேலேயே இது சாத்தியமாகியிருக்கிறது என்றால் அது நிச்சயம் மிகையாகாது.
ஒட்டு மொத்தமாகவே ஓர் இயக்கம் கல்வியின் அருமையைத் தொடர்ந்து வலியுறுத்தி அதனைச் சமூகநீதி கொண்டு நடைமுறைப்படுத்த முனைவதால், தொடர்ந்து அதற்குப் பாடுபடுவதால்,
தலைமையும், தொண்டனும் ஒரே நேர்கோட்டில் இங்கு செயல்பட்டிருப்பதில் வியப்பேதுமில்லை.
இதுவே நிதர்சனமான உண்மை.
சிறந்த மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்த முதல்வர் #ஸ்டாலின் க்கும்,
தமிழக நலனுக்காகக் குரல் கொடுக்கவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் #அப்துல்லா விற்கும் நல்வாழ்த்துகள்!
ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள்.
உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டு பிடிக்கிறீர்கள்.
அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்கு அந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞர் ஒருவரையே அழைக்கிறீர்கள்.
அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட.
நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டு பிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள்.
சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டு பிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்கிறார்.
பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.
உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.?
உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்.?
அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா.?
உருசியா நாட்டை சேர்ந்தவர் நிஸ்னி நவ்கிரோட் என்கிற கிராமத்தில் 1868 மார்ச் 28ந்தேதி பிறந்தார் மாக்சிம் கார்க்கி.
அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் தான் இவரது இயற்பெயர்.
5 வயதில் இவர் தந்தை இறந்து போக, தாய் உயிருடன் இருந்த போதும் தாயன்பு கிடைக்காமல் பாட்டி அக்குலினாவிடம் வளர்ந்தார்.
குடும்பத்தில் வறுமை.
விளைவு, பள்ளிக்கு போவதை 7 வயதிலேயே நிறுத்தி விட்டார்.
8 வயதிலேயே வேலைக்கு சென்றார். அங்கு பல தரப்பினரோடு பழகினார், அதோடு கொஞ்சம் படித்து வைக்கலாம் என தனிப்பட்ட முறையில் படிக்கத் துவங்கினார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளை கற்றுக் கொண்டார்.
1892ல் இவர் முதல் சிறுகதை மகர் சுத்ரா என்கிற தலைப்பில் மாக்சிம் கார்க்கி என்கிற பெயரில் எழுதினார்.
அது வெளி வந்தபின் தொடர்ந்து அந்த பெயரிலேயே எழுதத் துவங்கினார்.
1899ல் இவரது முதல் நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சியை எதிர்த்து புரட்சிக்கர கட்டுரைகளை எழுதி வந்தார்.
ஆளவந்தாரின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இலைகள் உதிர்ந்துபோன மொட்டை மரம் ஒன்று இருந்தது.
அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், “இந்த மரத்தை ஏன் இப்படியே வைத்திருக்கிறீர்கள்?”
“அது வீட்டுக்குப் பின்னாடி தானே கிடக்கட்டும்‘னு விட்டுவிட்டோம்.” என்று பதில் சொன்னார் ஆளவந்தார்.
“மொட்டை மரத்தை இப்படி விட்டு வைப்பது கூடாது. அது நல்லதல்ல.
மேலும் அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டிய பிறகும் நீங்கள் உபயோகிக்கக் கூடாது.
ஏதாவது மோசமான சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே அந்த மரத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெளியே வீசி விடுங்கள்" என்றான் பக்கத்து வீட்டுக்காரன்.
அவன் யோசனைப்படியே, ஆளவந்தாரும் மறுநாள் மரத்தை வெட்டித் தள்ளினார். சிறு துண்டுகளாக்கி வெளியே தூக்கிப் போட்டார்.
அந்த மரத் துண்டுகள் வெளியே வந்து விழுந்த சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரன் தன் இரு மகன்களுடன் சிறு துண்டு துண்டுகளாக கிடந்த அந்த மரத்துண்டுகளை உடனே எடுத்துப் போனான்.